கடைசிக் கண்ணீரின் குரல்

பாபுராஜ்

தனிமையின் முடிவில்லாத கரையில்…

சுரங்கப்பாதைக்கு அப்பால்…

குடைக்கீழே…

ஒரு மொழியின் சிறந்த பாடகர் இன்னொரு மொழியில் பாடும்போது ஓர் அரிய அழகு உருவாகிறது அவருடைய உச்சரிப்பு விசித்திரமானதாக ஒலிக்கிறது. ஆனால் அவர் உள்ளுணர்ந்து பாடுவார் என்றால் அது மிக வேறுபட்ட ஒரு அனுபவமாக அமைகிறது. மிகச்சிறந்த இரு உதாரணங்கள் மலையாளத்தில் உண்டு. ஒன்று, மன்னாடே பாடிய ‘மான்ச மைனே வரூ” அது தமிழிலும் பிரபலமான பாடல். ஆனால் தலத் மஹ்மூத் பாடிய கடலே நீலக்கடலே அந்த அளவுக்கே புகழ்பெற்றது. அது தமிழ்நாட்டில் பலர் அறியாதது

த்வீப் என்றபடம் 1978 ல் வெளிவந்தது.விசித்திரமான படம் அது. செம்மீன் இயக்குநரான ராமு காரியட் அவருடைய வாழ்க்கையின் கடைசிநாட்களில் பல சோதனைரீதியான படங்களை எடுத்தார். அதில் ஒன்று. சந்திரன் என்னும் இளைஞன் வாழ்க்கையால் துரத்தப்பட்டு லக்ஷத்தீவுக்கு ஆசிரியராகச் செல்கிறான். அவனுடைய வாழ்க்கை.

செம்மீனை மீண்டும் முயன்றதுபோலவும் இருக்கும் படம் இது. கடல், அபாரமான ஒளிப்பதிவு. ஆனால் கதை எளிமையானது. பாபுராஜின் இசையமைப்பில் இந்தப்பாடல் பெரும்புகழ்பெற்றது. ஆனால் படம் கவனிக்கப்படவில்லை. பாடல் கவனம்பெற்றது முழுக்க வானொலியில்தான் அப்போது பாபுராஜ் இல்லை. இந்த காட்சியமைப்பையே மலையாளிகள் அறிந்திருக்க மாட்டார்கள்

இந்தப்படம் இசையமைக்கப்படுகையில் பாபுராஜ் இறுதிநாட்களில் இருந்தார். குடிப்பழக்கம், நோய், வறுமை. வாழ்க்கையின் எல்லா இருள்களையும் கண்டார். படம் தாமதமாக திரைக்கு வந்தது- அதற்கு முன்னரே அவர் சென்னை பொதுமருத்துவமனையில் இலவச சிகிழ்ச்சைக்காகச் சேர்ந்து உடன் எவருமில்லாமல் உயிர்விட்டார்

பாபுராஜின் கடைசிப்பாடல். அவருடைய அலறல் போல கேட்கிறது. கடலே உன் ஆத்மாவிலும் எரியும் எண்ணங்கள் உண்டா?

https://youtu.be/5qwo59gnovg

இசை பாபுராஜ்

பாடல் யூசஃப்அலி கேச்சேரி

பாடியவர் தலத் மஹ்மூத்

படம் த்வீப் 1978

கடலே நீலக்கடலே
கடலே நீலக்கடலே
நின் ஆத்மாவிலும் நீறுந்ந சிந்தகள் உண்டோ?
கடலே நீலக்கடலே
ஒரு பெண்மணியுடே ஓர்மயில் முழுகி
உறங்ஙாத ராவுகள் உண்டோ
கடலே நீலக்கடலே
தார மனோஹர லிபியில்
வானம் பிரேம கவிதகள் எழுதுந்நு
ஆரோமலாளே ஆரோமலாளே
அருகில் இருந்நு அது
பாடித்தருவான் நீ வருமோ?
கடல் அல பாடி கரளும் பாடி
கதனம் நிறையும் கானங்ஙள்
ஆகாசம் அகலே ஆசயும் அகலே
ஆரோமலாளே நீ எவிடே?
ஆரோமலாளே நீ எவிடே?
கடலே நீலக்கடலே
நின் ஆத்மாவிலும் நீறுந்ந சிந்தகள் உண்டோ?

தலத் மஹ்மூத்

கடலே நீலக்கடலே
கடலே நீலக்கடலே
உன் ஆத்மாவிலும் எரியும் எண்ணங்கள் உண்டா?
கடலே நீலக்கடலே
ஒரு பெண்ணின் நினைவில் மூழ்கி
உறங்காதிருக்கும் இரவுகள் உண்டா?
கடலே நீலக்கடலே
நட்சத்திரங்கள் எனும் அழகிய எழுத்துக்களால்
வானம் காதல் கவிதை எழுதுகிறது
அன்புக்குரியவளே அன்புக்குரியவளே’
அருகிலிருந்து அவற்றை பாடித்தர வருவாயா?
கடல் அலை பாடுகிறது
நெஞ்சமும் பாடுகிறது
துயர் நிறைந்த பாடல்களை
வானம் தொலைவில் ஆசைகளும் தொலைவில்
அன்புக்குரியவளே நீ எங்கே?
கடலே நீலக்கடலே
உன் ஆத்மாவிலும் எரியும் எண்ணங்கள் உண்டா?

முந்தைய கட்டுரைமுடிவிலாது தொடரும் கார்வை- வெண் முரசு நிறைவு-சுனீல் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைசெயல்வழி சென்றடைவோம் அவரவர் அகயிலக்கை-விலையில்லாமல் 200 தன்மீட்சி