‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 73

பகுதி ஏழு : பெருசங்கம் – 5

சுதமன் நகருக்குள் செல்ல விரும்பவில்லை. உப்பரிகையில் நின்று அவர் நகரை நோக்கிக்கொண்டிருக்கையில் ஓர் அச்சத்தை உணர்ந்தார். அவ்வச்சம் எதனாலென அவருக்கு தெரியவில்லை. உயரமான பாறையில் நின்று கீழே கொந்தளிக்கும் கடலை பார்ப்பதுபோல தோன்றியது. மீண்டும் தன் அறைக்குச் சென்று தன் கைகளுக்குள் நிற்கும் சிறு அலுவல்களில் மூழ்கிவிடவேண்டும் என்று விழைந்தார். உப்பரிகையிலிருந்து விழுந்துவிடுவார் என்று அஞ்சியவர்போல அவர் கைப்பிடிகளை பற்றிக்கொண்டார்.

அவர் நெடுநாட்களாக விழைந்தது தலைகால் புரியாமல் வெறிகொண்டு வேலை செய்வதை, வேலையின் முடிவில் அடையும் இனிய களைப்பின் நிறைவை, தானே என நின்று ஆற்றும் பொறுப்புகளை, பிறர் மேல் ஆணைகளைச் செலுத்தும் இடத்தை, அதன் தோரணைகளை, மிடுக்கை. ஒவ்வொருமுறை அஸ்தினபுரியின் அமைச்சர்களை பார்க்கையிலும் ஒருநாள் அதைப்போல தானும் தலைஎழுந்து விழிகூர்ந்து மஞ்சலில் அமர்ந்து செல்லவேண்டும் என்று கனவுகண்டார். அவர்களின் பாவனைகளை கூர்ந்து நோக்கினார். அவர்களிடம் சலிப்பும் கூர்மையும் ஒன்றெனக் கலந்திருந்தன. அவர்கள் விலகியவர்கள் போன்ற உடலசைவுகளும் உள்ளே ஊடுருவிக்கலக்கும் ஆணைகளும் கொண்டிருந்தனர்.

ஆனால் அவர் அஸ்தினபுரியின் அலுவல்பணிக்கு வந்தபின் அவருக்கு பொறுப்பான பணி ஏதும் அளிக்கப்படவில்லை. அவர் முதலில் அலுவலர்கணக்குப் பொறுப்புக்கு அமர்த்தப்பட்டார். நாளெல்லாம் ஊழியர்களின் பெயர்களையும் நிலைகளையும் ஓலைகளில் பொறித்து ஓலைத்தொகைகளை கட்டுகளாக்கி அக்கட்டுகளை மேலும் கட்டுகளாக்கி அவற்றை பேழைகளில் இட்டு அப்பேழைகளுக்கு எண்களிட்டு அடுக்கினார். பெயர்கள் கூட திரும்பத்திரும்ப வந்தன. எதைச் செய்தாலும் ஏற்கெனவே பலமுறை செய்ததுபோலத் தோன்றியது. அரைத்துயிலிலேயே அதை செய்யமுடிந்தது. ஆகவே எப்போதும் அவர் உடலில் துயில் இருந்துகொண்டிருந்தது.

அதன்பின் அவருக்கு பணிமேம்பாடு அளிக்கப்பட்டது. கருவூலத்தின் கணக்கர். அங்கே நுழைகையில் அவர் கிளர்ச்சி அடைந்திருந்தார். கருவூலத்தின் செல்வக்குவைகளுக்கு அவரே பொறுப்பு என்று. ஆனால் அவர் அங்கே குறைவாகவே செல்வங்களை பார்த்தார். கருவூலச்செல்வங்கள் எங்கோ இருக்க அவை பொறிக்கப்பட்ட ஓலைகளை கணக்கிட்டு அடுக்குவதையே அங்கும் அவர் மீளமீளச் செய்யவேண்டியிருந்தது. முன்பு அவர் மானுட முகங்களை நாளும் பார்க்கமுடிந்தது. கருவூலத்திற்குச் சென்றபின் அவர் காலடியில் நிலம் மறைய ஆழ்ந்து புதைந்தார். தன்னை ஒரு சிறு வேர் என உணர்ந்தார். எவருமே பார்க்காத, ஓசையோ வண்ணமோ இல்லாத ஒரு ஆழ்வு மட்டுமே. அவர் உடல் வெயில் படாமல் வெளிறியது. ஒளி காணாது விழிகள் மங்கலாயின. அமர்ந்து அமர்ந்து உடல் குடம் போலாயிற்று.

“நான் விழைவதெல்லாம் ஒரு புரவியின் வாலை பிடித்துக்கொண்டு ஓடுவதை… அது என்னை கல்லும் முள்ளும் நிறைந்த பாதைகளில் கொண்டு செல்லட்டும். பள்ளங்களில் தள்ளி கொன்றாலும் சரி… இப்படி அமர்ந்து அமர்ந்து துருப்பிடிப்பதைவிட அது மேல்” என்று அவர் தனக்கே சொல்லிக்கொண்டார். அவரிடம் உரையாட அங்கே எவருமில்லை. அவரே தன்னுடன் தான் பேசிக்கொண்டிருந்தார். அவர் தன்னுடன் பேசும் ஒருவனை தன் எதிரில் உருவாக்கிக்கொண்டார். அவனிடம் மீண்டும் மீண்டும் தன் விழைவை, தயக்கத்தை, சலிப்பை பற்றி சொல்லிக்கொண்டார்.

அறுந்து விழுந்ததுபோல ஒரே நாளில் அவர் அஸ்தினபுரியின் பெருஞ்சுழலுக்குள் வந்தார். வந்த அன்றே நூறுபேரை சந்தித்தார். ஆயிரம் ஓலைகளை படித்தார். அஸ்தினபுரியை இருமுறை சுற்றிவந்தார். திரும்பிச்சென்று தன் அறையை அடைந்தபோது மஞ்சத்தில் குழைந்து விழுந்து அக்கணமே துயின்றார். பின்னிரவில் உள்ளம் விழித்துக்கொள்ள எழுந்தபோது களைப்பு முழுமையாக அகன்றிருந்தது. உள்ளம் ஊக்கம் கொண்டிருந்தது. வெல்வதற்கு இதோ உலகம் எதிரே விரிந்திருக்கிறது. நீராடி ஆடைமாற்றி அலுவல் அறைக்குச் செல்கையில் அவர் சிறுவன்போல ஓடிக்கொண்டிருந்தார்.

ஆனால் மிகச் சில நாட்களிலேயே அவருக்குத் தெரிந்தது, அத்தகைய இடைவிடாத உழைப்பின் முதல் விளைவு என்பது அகம் என ஒன்றில்லாமல் ஆவதுதான் என. அவருள் ஓடிக்கொண்டே இருக்கும் சொற்பெருக்கு முற்றாக மறைந்தது. அவர் தன்னை தான் என உணர்ந்தே பல நாட்களாகின்றன என திகைப்புடன் ஒருமுறை எண்ணிக்கொண்டார். அகம் அற்ற ஒருவராக ஆகிவிட்டிருந்தார். இனிய பகற்கனவுகள் முழுமையாகவே அகன்றுவிட்டிருந்தன. அவருக்குள் எழுந்த எல்லா கனவுகளும் வெளியே அவர் செய்துகொண்டிருந்தவற்றின் நீட்சியாக, விடுபடல்களின் நிரப்புகைகளாக மட்டுமே இருந்தன. அவர் மீண்டுசெல்ல ஏங்கினார். தித்திக்கும் பகற்கனவுகளுடன், இனிய கதகதப்பான அவற்றின் அணைப்புடன் தனித்திருக்க ஏங்கினார்.

அவரைத் தேடிவந்த ஏவலன் பின்னால் நின்றான். சுதமன் திரும்பி அவனை பார்த்தார். “அமைச்சர் சுரேசரின் அழைப்பு” என்று ஏவலன் சொன்னான். சுதமன் பெருமூச்சுடன் கிளம்பினார். அந்த சில கணங்கள் மட்டுமே அவருக்கு ஓய்வு. இனி எப்போதாவது அவர் தன்னை தான் நோக்கி அமர்ந்திருக்கும் கணம் வாய்க்குமா? அதற்கு வாய்ப்பே இல்லை என்று பட்டது. அஸ்தினபுரி பெருஞ்சுழி ஒன்றின் கண் என ஆகிவிட்டிருக்கிறது. அதற்கு இனி ஒரு கணமும் ஓய்வில்லை. அவர் இடைநாழியினூடாக நடக்கும்போது அங்கே ஏவலர்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருப்பதை கண்டார். அவர்களின் காலடிகளும் பேச்சொலிகளுமாக அந்த அரண்மனை முழக்கமிட்டுக்கொண்டிருந்தது.

சுரேசர் அறையில் வழக்கம்போல சுழற்றிச் சுழற்றி பறக்கச்செய்யும் அலுவல்களின் உச்சவிசையில் இருந்தார். அவர் வணங்கியபோது கையை வீசி அமரச் சொல்லிவிட்டு அவர் அருகே நின்றிருந்த தொலையமைச்சர் சுபதத்தரிடம் “அது எதிர்பார்த்ததுதான். துவாரகை இந்த விழாவில் கலந்துகொள்ள மறுக்கும். மதுராவும் இங்கே வர வாய்ப்பில்லை. ஆனால் இது ராஜசூயம், நாம் எவரை எவ்வண்ணம் அழைத்தோம், எவரை விட்டுவிட்டோம் என்பதெல்லாம் காவியங்களில் பதிவாகும். சொல்லில் நிலைகொள்ளும்” என்றார். சற்று குரல் தழைய “கிருஷ்ணை சுயோதனரின் மகள். அவர் தன் தந்தை கொல்லப்பட்டதை இன்னும் மறக்கவில்லை, எவ்வகையிலும் அச்செயலில் இருந்த அறமீறலை ஏற்கவில்லை” என்றார்.

சுபதத்தர் “செய்தியை நான் முழுமையாக அறிவிக்கக்கூட அரசி காத்திருக்கவில்லை. சீற்றத்துடன் அரியணையிலிருந்து எழுந்துவிட்டார். திரும்பிச் செல்க, திரும்பிச் செல்க என்று கூச்சலிட்டார். அது பழிபடிந்த முடி. அதன் நிழலும் நமக்குத் தேவையில்லை என்று கூறியதுமே குரல் உடைய அழுதார். நான் மேற்கொண்டு ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அரசர் சாம்பனும் ஒன்றும் சொல்லவில்லை. அவையிலிருந்தோர் அனைவரும் எழுந்துவிட்டனர். அமைச்சர்கள், குடித்தலைவர்கள் அத்தனைபேரும் சீற்றத்துடன் முழக்கமிட்டனர். வேண்டியதில்லை, அஸ்தினபுரியுடன் எந்த உறவும் வேண்டியதில்லை என்று அமைச்சர் ஒருவர் கூவினார். ஒருநாள் நாம் படைகொண்டு செல்வோம். அஸ்தினபுரியை அழிப்போம் என்று குடித்தலைவர் ஒருவர் கூச்சலிட்டார். அரசி திரும்பிச் சென்றுவிட அரசர் என்னிடம் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை அந்தணரே என்றார். நான் தலைவணங்கி எழுந்துகொண்டேன்” என்றார்.

“அது தெரிந்துதான் நாம் அழைப்பை அனுப்பினோம். அவ்வழைப்பின் மெய்மை ஒன்றே. அவர்கள் இங்கே எந்நிலையில் வைக்கப்படுவார்கள் என்பது. அவர்கள் வரவில்லை என்றாலும் அவர்களுக்கு நாம் அனுப்பியது முதன்மை ஷத்ரிய அரசுகளுக்கு நிகரான அழைப்பு என்னும் செய்தி இந்நேரம் அத்தனை ஷத்ரியர்களுக்கும் சென்றிருக்கும். அது நாம் இளைய யாதவருக்கு அளிக்கும் மறுமதிப்பு. இது அவருடைய வெற்றி, இவையனைத்தும் அவர் நமக்களித்த கொடை. யாதவர்களுடையதே இந்த நாநிலம் இன்று” என்றார் சுரேசர். சுபதத்தர் “மதுவனத்திலிருந்து ஒருவேளை அரசர் வரக்கூடும். விருஷ்ணிகளில் ஒரு சாராருக்கு இது அவர்களின் வெற்றி என்னும் எண்ணம் உள்ளது” என்றார்.

சுரேசர் “ஆம், இது விருஷ்ணிகளின் வெற்றி என்று அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் எவருமே அதை இன்று வெளிக்காட்டிக்கொள்ள முடியாது. அவர்களில் மூத்தோர் பலராமரின் சொல்காத்திருக்கிறார்கள். இளையோர் சாம்பன் முதலிய அரசர்களின் ஆணையில் இருக்கிறார்கள். நாம் செய்யக்கூடுவதொன்றும் இல்லை” என்றார். சுபதத்தர் “நான் எண்ணிக்கொண்டேன், அவர்கள் இத்தருணத்தில் அஸ்தினபுரியுடன் நின்றால் இன்னும் பல நூற்றாண்டுகாலம் பாரதவர்ஷமே நம்மிடம்தான் இருக்கும்” என்றார். சுரேசர் புன்னகைத்து “ஊழ் வகுக்கும் வழியே இன்று அவர்களின் நிலைப்பாடு என எழுகிறது” என்றார்.

சுபதத்தர் “நம் இளவரசர் அங்கே நன்கு தேறியிருக்கிறார். அவருடைய நிலையை அரசரிடம் விளக்கும்பொருட்டு அங்கிருந்து ஒரு மருத்துவரையும் அழைத்துவந்துள்ளேன்” என்றார். “இளவரசரை நானே நேரில் பார்த்தேன். நன்கு உடல் கொண்டுவிட்டார். சில மாதங்களுக்கு முன் கையளவே இருந்தார் என்றபோது நம்பவே முடியவில்லை” என்றார். சுரேசர் “அது இவ்வகை குழந்தைகளின் இயல்பு. அவை உயிர்வாழும் வேட்கை கொள்கின்றன. பெரிய தீயை விட சிறிய தீ பற்றி எரிந்து ஏறும் வெறிகொண்டது என்பார்கள்” என்றபின் புன்னகைத்து “யார் கண்டார், அவர் அவருடைய பாட்டியைப்போல பெருந்தோள் கொண்ட மாமல்லராக வளரவும் கூடும்” என்றார்.

சுபதத்தர் “மைந்தனுக்கு ஐம்படைத்தாலி அணிவிக்கும்வரை அங்கேயே இருப்பது நல்லது என்பது மருத்துவர் கூற்று” என்றார். அவர் அப்போதுதான் சுதமனை பார்த்தார். சுரேசர் தலையசைக்க எழுந்து தலைவணங்கினார். சுதமன் “ஆணை எதிர்பார்த்து வந்தேன்” என்றார். சுரேசர் “செய்திகளை ஒன்றுவிடாமல் அரசருக்கும் அரசிக்கும் கூறுக, சுபதத்தரே! அனைத்தும் முறைப்படி செல்கிறது என்பது நிறைவளிக்கிறது” என்றார். “ஆம், இவ்வண்ணமே மங்கலமாகுக!” என்றபின் சுபதத்தர் வெளியே செல்ல சுரேசர் சுதமனிடம் சற்று பொறுக்கச் சொல்லிவிட்டு திரும்பி அப்பால் நின்ற ஒற்றர்தலைவன் சிம்மசேனனை அருகே வரசொன்னார். சொல்க என கைகாட்டினார்.

சிம்மசேனன் “ஒற்றர் செய்திகளை தொகுத்திருக்கிறேன்… ஆரியவர்த்தத்திலும் தென்னகத்திலும் கிழக்கிலும் யவனத்திலும் நாம் அழைத்துள்ள அரசர்களில் எவருமே வருவதற்கு மாற்று தெரிவிக்கவில்லை. வரிசை முறைமை குறித்து சில மாற்றுச்சொற்களை சொன்னவர்கள் கீழ்க்கலிங்கன், அமராவதியின் அரசன், பல்லவன் மூவரும் மட்டுமே. அவர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் கூடுதல் சொல் ஒன்றும் தேவைப்படலாம். வரவிருக்கும் அரசர்களின் பெயர்கள், வரும் நாள், உடன்வருவோர் பெயர்கள் ஆகியவை தனியாக தொகுக்கப்பட்டுள்ளன. அவை சிற்றமைச்சரிடம் அளிக்கப்படும்” என்றான். சுரேசர் சுதமனை நோக்க அவர் எழுந்து அப்பால் விலகி நின்றார். சிம்மசேனன் தாழ்ந்த குரலில் சுரேசரிடம் பேசி முடித்தான்.

அவன் சென்றபின் சுரேசர் திரும்பி சுதமனை அருகழைத்தார். “நீங்கள் உடனே கிளம்பியாகவேண்டும், அமைச்சரே” என்றார். “இன்று இரவுக்குள் நீங்கள் குருக்ஷேத்ரத்தை சென்றடையலாம். நாளை முதற்பொழுதில் அங்கிருக்கவேண்டும்.” சுதமன் தலைவணங்கினார். “அரசர் ஒரு புற்குழலை அளித்திருக்கிறார். அது அரசர் பீஷ்ம பிதாமகருக்கு அளிக்கும் பரிசு. உண்மையில் அதை அவரிடம் அளிக்கவே நீங்கள் செல்கிறீர்கள். ஆனால் இங்கே ராஜசூயம் நிகழும் செய்தியை முறைப்படி அறிவிக்கும்பொருட்டு நீங்கள் செல்வதாகவே அரசமுறைப் பதிவு இருக்கும். உங்களிடம் அரசரின் திருமுகச்செய்தி அளிக்கப்படும். முறைப்படி பட்டோலையை பீஷ்மரிடம் படித்துக்காட்டி நற்சொல் பெற்று திரும்புக!” சுதமன் தலைவணங்கினார்.

சுரேசர் “அந்தப் புற்குழல் எத்தகையது என்பது உடனிருக்கும் ஓலையில் சொல்லப்பட்டிருக்கும். அதை பீஷ்ம பிதாமகர் முன் படித்துக்காட்டலாம். அவர் ஆணையிட்டபடி செய்யலாம்” என்றார். சுதமன் அப்போதும் அது என்ன என்று எண்ணம் ஓட்டவில்லை. அஸ்தினபுரியில் அவரறியாத சடங்குகள் நடந்துகொண்டே இருந்தன. நகரில் வந்துகுடியேறிய அனைவருடைய சடங்குகளையும் நகர் ஏற்றுக்கொண்டுவிட்டிருந்தது. ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் முற்றிலும் மாறுபட்ட பல சடங்குகள் இருந்தன. அவை அனைத்தையுமே அவர்கள் செய்தார்கள். நாளடைவில் அவை உருகி இணைந்து ஒன்றாகக்கூடும். சுரேசர் “ஆணை பெற்றதும் உடனே இங்கு மீள்க! உமது செய்தியுடன்தான் இங்கே ராஜசூயம் தொடங்கும்” என்றார்.

 

சுதமன் கிளம்பும் வரை ஒரு நிலையின்மையில் இருந்தார். குருக்ஷேத்ரம் என்னும் சொல் அவரை துன்புறுத்தியிருந்தது. அந்நகரில் அச்சொல்லைப்போல ஈட்டி என வந்து குத்தும், நஞ்சென உடலில் ஊறிப்பரவும் பிறிதொன்றில்லை. இவ்வளவுக்கும் அங்கிருப்போரில் குருக்ஷேத்ரப் போரை சொல்லால் அன்றி வேறெவ்வகையாலும் அறிந்தோர் மிகச் சிலரே. பெரும்பாலானவர்கள் அதனால் இழப்பை அடைந்தவர்கள் அல்ல, ஈட்டியவர்கள் என்றே சொல்லலாம். ஆயினும் அனைவரும் அச்சொல்லை சித்தத்திலிருந்து விலக்க முயன்றனர். அச்சொற்களின்மேல்தான் அந்தப் பெருவிழவே அள்ளிக்கொட்டி மூடப்பட்டிருந்தது.

ஆனால் கிளம்பும் கணத்தில் அந்நகரின் பித்துவெறியில் இருந்து அகன்று செல்லப்போகிறோம் என்னும் எண்ணம் அவருக்கு உவகையை அளித்தது. ஓரிரு கணங்களிலேயே அவ்வெண்ணத்தை ஒரு கொண்டாட்டமாக வளர்த்துக்கொண்டார். அன்றிரவே சென்று மறுநாள் உச்சிப்பொழுதுக்குள் மீளப்போகிறோம் என்பதையே உளம்பதியச் செய்யாமல் என்றென்றுமென கிளம்புகிறோம் என நடித்துக்கொண்டார். விரைவாகச் செல்லும் விசைத்தேரில் ஏறிக்கொண்டு நகரின் சாலைகள் வழியாக சென்றார். நகர்ச் சாலைகளில் ஒன்று மட்டும் அரசுப்போக்குவரத்துக்காக முற்றிலுமாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிலும் தேர்களும் புரவிகளும் நெரிசலிட்டு சென்றுகொண்டிருந்தன. குளம்படியோசைகள் மொத்த நகரமே இடிந்து இடிந்து சரிவதுபோல ஒலித்துக்கொண்டே இருந்தன.

அவர் ஒரு குறுக்குச் சாலையை கடக்கும்போது அப்பால் முச்சந்தியில் ஒரு கூட்டத்தை பார்த்தார். தேர் உயரமான தட்டு கொண்டிருந்தமையால் அவர் கூட்டத்தின் நடுவில் நின்றிருந்த பெரிய சடைமகுடம் கொண்டவரை கண்டுவிட்டார். “நிறுத்துக!” என்றார். “அவர் சார்வாகர் அல்லவா?” தேர்வலன் கடிவாளத்தை இழுத்து தேரை ஓரமாக நிறுத்திவிட்டு “ஆம் அமைச்சரே, நகரிலெங்கும் அவர்கள் தென்படுகிறார்கள். தங்கள் கருத்துக்களை முச்சந்திகளில் கூவிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். சுதமன் நெஞ்சம் படபடப்பதை உணர்ந்தார். “அவர்கள் பேசுவதை நான் இதுவரை கேட்டதில்லை” என்றார். “அவர்களை நகருள் நுழைய ஒப்புவதில்லை அல்லவா?”

“அவர்கள் நுழையலாகாது என்று முறைமையோ ஆணையோ ஏதுமில்லை. ஆனால் அவர்கள் ஒற்றர்கள் அல்ல என்று உறுதி செய்யவேண்டும் என்பது பொதுவான நடைமுறை. ஆகவே அவர்களை தடுத்து நிறுத்தி ஒற்றர்கள் என கூறி திருப்பி அனுப்பிவிடுவார்கள் காவலர்” என்று தேர்வலன் சொன்னான். “பொதுவாக அவர்கள் நகருள் நுழைவதை மக்களும் விரும்புவதில்லை. அவர்கள் மங்கலமற்றவர்கள் என்னும் எண்ணம் உள்ளது. குடியை அழிப்பவர்கள், திருவை பழிப்பவர்கள், அரசை எதிர்ப்பவர்கள், தெய்வங்களுக்கு ஒவ்வாதவர்கள். அவர்கள் நோக்கு பட்டால் விதைநெல் பதராகும் என்கின்றனர் வேளிர். அவர்கள் சொல் கேட்டால் பசுக்கள் கருவழியும் என்கின்றனர் ஆயர். அவர்கள் உடல்தொட்ட காற்று பட்டால் பசும்பொன் கருமைகொள்ளும் என்கின்றனர் வணிகர்.”

சுதமனின் நெஞ்சத்துடிப்பு மேலும் கூடியது. “அங்கே செல்வோம்” என்றார். தேர்வலன் “நாம் சென்றுவிடுவதே உகந்தது, அதை சொல்வது என் கடன்” என்றான். “அந்தணர்கள் அவர்களை விழிகொண்டு நோக்குவதே பழி அளிப்பது. பஞ்சகவ்யத்தால் உடல்கழுவி, வேதச்சொல் கொண்டு உளம்கழுவி, ஒருநாள் உணவொழிந்து தூய்மைப்படவேண்டும் என்று நெறி உள்ளது. அத்தனை குலங்களிலும் அவர்களை மைந்தர்கள் நோக்கலாகாது என்னும் நம்பிக்கை உண்டு. அவர்கள் உளம்கட்டும் நுண்சொல் அறிந்தவர்கள். மைந்தர்களை அவர்கள் விழியொடு விழி நோக்கிவிட்டால் அவர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவிவிடுவார்கள். அவர்களுக்கு தடைகளேதுமில்லை, ஆகவே சார்வாகர் என்னும் சொல்லையே அன்னையர் அஞ்சுகிறார்கள். தந்தையர் அவர்களை எண்ணி எண்ணி கவலைகொள்கிறார்கள்.”

தேர்வலன் அவர்களைப்பற்றிப் பேச மேலும் விழைந்தான். “அவர்களிடமிருக்கும் சொற்களெல்லாம் நஞ்சில் புடமிட்டவை என்கிறார்கள். மீனெறி துரட்டிமுனை என அவர்களின் நோக்கு இளமைந்தரின் உள்ளங்களில் தைத்து கோத்துவிடும். அவர்கள் மைந்தர்களை இழுத்துச்சென்றுவிடுவார்கள். சென்றவர்கள் பின் மீள்வதில்லை. எந்தச் சொல்லும் எவர் விழிநீரும் அவர்களை சென்றடைவதில்லை. அரசும் முடியும் குலமும் குடியும் அவர்களிடமிருந்து ஒழிகின்றன. அவர்களின் தெய்வங்கள் கைவிட்டு அகல்கின்றன. அவர்களை அதன்பின் சார்வாகர் கூடிய சுடுகாடுகளில் சாம்பல் பூசி, பெருச்சாளி கோவணம் அணிந்து, சடைமுடிக்கற்றையுடன் சார்வாகர்களாகவே காணமுடியும்.”

“சார்வாகன் என்று ஒரு மைந்தன் சென்றுவிட்டால் அவனுக்கு நீரும் அன்னமும் அளித்து பலியிட்டு இறந்தோன் என்று சடங்குகளை முடிப்பதே வழக்கம். இல்லையேல் அவன் சொல்லும் தெய்வப்பழியும் அவன் ஈட்டும் குலப்பழியும் அக்குடிக்கே வந்துசேரும்…” சுதமன் மெய்ப்பு கொண்டார். “விந்தை என்னவென்றால் அவர்கள் பழிப்பது முதன்மையாக அந்தணர்களை. ஆனால் அவர்கள் முதன்மையாக நாடுவதும் அந்தண இளைஞர்களையே. அதோ அந்தச் சார்வாகர்கூட முதற்பிறப்பில் அந்தணராக இருக்கவே வாய்ப்பு மிகுதி…” அவரை நோக்கி புன்னகைத்து “நீங்கள் அஞ்சுவது தெரிகிறது, உத்தமரே. அவர்முன் செல்லாமலிருந்தால் போதும். அவர் நோக்கை நாம் காணாமலிருந்தால் நம்மை அவர் ஒன்றும் செய்ய முடியாது” என்றான் தேர்வலன்.

சுதமன் “நான் அவர் சொற்களை கேட்டாகவேண்டும்” என்று தேரிலிருந்து இறங்கிக்கொண்டார். “உத்தமரே, தங்களுக்கு அரசகடமைகள் உள்ளன” என்றான் தேர்வலன். “ஆம், அரைநாழிகைப் பொழுது. அவ்வளவுதான். அதனாலொன்றுமில்லை” என்றார் சுதமன். “உத்தமரே, இது எவ்வகையிலும் உகந்தது அல்ல” என்று தேர்வலன் சொன்னான். “நான் அந்தணன். அறிபவை அனைத்தையும் அறிந்து கடந்தாகவேண்டியதை குலப்பொறுப்பாகக் கொண்டவன். அவருடையதும் மெய்வழிகளில் ஒன்றே. நான் கற்ற அரசுசூழ்தல் நூல்கள் அனைத்திலும் சார்வாக மெய்மை என ஒரு தரப்பு கற்பிக்கப்பட்டுள்ளது. சார்வாகம் அறியாமல் அரசுக்கல்வி நிறைவுறுவதில்லை என்றே சொல்வார்கள். ஆனால் நான் கற்றது சார்வாகமா அன்றி சார்வாகப் பழிப்பா என எனக்கே ஐயமுள்ளது. அதை அவரிடமிருந்தே கேட்டு அறிந்துகொள்கிறேன்” என்றார்.

தேர்வலன் “அவர்கள் வேதப்பழிப்பு கொண்டவர்கள். வைதிகரின் நோன்பை முறித்து நெறியை அழிப்பவர்கள்” என்றபடி அவருக்குப் பின்னால் வந்தான். தன் சொற்களாலேயே சுதமன் மேலும் தூண்டுதல் கொண்டுவிட்டார் என்பதை அவன் உணர்ந்துவிட்டிருந்தான். தானறிந்த ஒன்றை சொல்லிவிடவேண்டும் என்னும் எழுச்சியால் பிழை இழைத்துவிட்டோம் என பதற்றம் கொண்டிருந்தான். “சம்புகரே, வேதமறிந்தவன் வேதப்பழிப்பையும் அறிந்திருக்கவேண்டும். அவர்கள் முறிக்கும்படி என் நோன்பு இருக்குமென்றால் அது நோன்பே அல்ல. அவர்கள் அழித்தால் அழியுமென்றால் அது நெறியும் அல்ல” என்றபின் சுதமன் முன்னால் நடந்தார்.

தேர்வலன் தத்தளிப்புடன் தேர் அருகே நின்றுவிட்டிருந்தான். சுதமன் தயக்கமான காலடிகளுடன் நடந்தார். செல்லச்செல்ல அவர் காலடிகள் விசைகொண்டன. அப்போது பெருமுரச ஓசையை கேட்டார். நின்று செவிகொண்டார். சற்று அப்பால் முரசமேடையில் அது ஓசையிட்டது. அது அமைந்ததும் நகரமே முற்றாக அடங்கியது. கடல் கற்பரப்பாக ஆனதுபோல. முரசறைவோனின் அருகே நின்ற நிமித்திகன் “வெற்றி எழுக! விளங்குக மங்கலம்!” என்று கூவினான். அவன் குரல் தெளிவாக ஓங்கி ஒலித்தது. உரத்த குரல் எழுப்புவதற்கு குலமுறையாகவே பயின்றவன். அது பெண்குரலோ என ஐயுறச்செய்யும் வெண்கலத்தன்மை கொண்டிருந்தது.

“எழுக தெய்வங்கள்! மகிழ்க மூதாதையர்! பொலிக திசைத்தேவர்கள்! விளங்குக ஐம்பெரும் பருக்கள்! ஆகுக பெருமங்கலம்!” என்று அவன் கூவினான். “அறிக குடியினரே, யயாதியின் கொடிவழிவந்தவர், குருவின் குலத்தவர், ஹஸ்தியின் முடிசூடியவர், பிரதீபரின், சந்தனுவின், விசித்திரவீரியரின், பாண்டுவின் மைந்தர், அஸ்தினபுரியையும் இந்திரப்பிரஸ்தத்தையும் ஆள்பவர், பாரதவர்ஷத்தின் முதன்மைப் பேரரசர் யுதிஷ்டிரனின் அறிவிப்பு இது!” முரசு மீண்டும் ஒருமுறை முழங்கி அமைந்தது.

“கேளுங்கள், விண்ணளந்த மணிவண்ணனைப்போல தன் நான்கு கைகளையும் நான்கு புறமும் வீசி பேரரசர் யுதிஷ்டிரன் பாரதவர்ஷத்தை வென்றார். பனிபடு நெடுவரை வடக்கும், உருகெழு குமரியின் தெற்கும் கரைபொரு தொடுகடல் குணக்கும் தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதல் கட்டின் நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது ஆநிலை என இத்தொல்நிலத்தை முழுதும் வென்ற முதல் மன்னர் என்றானார். அவருடைய வேள்விப்புரவிகள் எதிர்ப்படைக்கலம் ஒன்றுகூட நில்லாமல் வென்று திறைச்சுமை கொண்டு திரும்பி நகரணைந்துள்ளன. அவை வெல்க! அவற்றின் குளம்புகள் பட்ட இந்நிலம் வெல்க! வெற்றிவேல் வீரவேல்!” முரசுகள் ஒலிக்க கூடவே நகரின் முழக்கமும் எழுந்தது. “வெற்றிவேல் வீரவேல்!” வெற்றிவேல் வீரவேல்!”

அறிவிப்பாளன் தொடர்ந்தான். “பரிவேள்வியின் நிறைவில் அரசநிறைவுவேள்வி இயற்றப்படவேண்டும் என்பது நெறி. இப்பெருநகரில் அரசப்பெருவேள்வி இதோ முறைப்படி அறிவிக்கப்படுகிறது. நாளை வான்கதிர் வடக்குமுகம் கொள்ளும் முதல் நாளில் எழுகதிர் வேளையில் வேள்விக்கு கால் நாட்டப்படும். வேள்விப்பந்தல் ஏற்கப்படும். வேள்விக்களிறும் வேள்விக்காளையும் வேள்விப்பசுவும் மங்கலம் செய்யப்படும். வேள்விமரம் நடப்படும். நாளை உச்சிப்பொழுதுக்குப் பின் பெருங்கொடையாட்டு தொடங்கும். கருவூலம் முற்றொழிய ஈந்து தன் கையொழிந்து தெய்வங்கள் முன் தன்னை நிறுத்துவார் அரசர். அதன்பின் வேள்விச்செல்வத்தை மட்டும் ஈட்டிக்கொண்டு மும்முடி சூடி அரியணை அமர்வார். வேதம் மழையென குளிர்ந்திறங்கும். அன்னமென பெருகிநிறையும். கன்றென பெற்றுபரவும். பொன் என ஒளிசூடும். மணியென விழிகொள்ளும். அனைத்து மங்கலங்களுமாகி இந்நகரை நிறைக்கும். ஆம், அவ்வாறே ஆகுக!”

மீண்டும் பெருமுரசம் முழக்கமிட அஸ்தினபுரியின் வாழ்த்தோசையும் உவகைக்கூச்சலும் உடலை அறைந்து அனைத்துப் புலன்களையும் மூடியது. சுவர்கள் அதிர்ந்தன. கற்தூண்கள் துடிதுடித்தன. விழிநோக்கை ஒலி மறைத்தது. பின்னர் மெல்ல மீண்டபோது சுதமன் மூச்சுத்திணறிக்கொண்டிருந்தார். விழுந்துவிடாமலிருக்க ஒதுங்கி கற்தூணை பிடித்துக்கொண்டு நின்றார். மீண்டும் தேருக்கே சென்றுவிடலாமா என்று எண்ணினார். திரும்பி காலடி எடுத்து வைக்கவிருந்தபோது சார்வாகரின் பெருஞ்சிரிப்பொலியை கேட்டார். சிரிக்கும் அம்முகத்தையும் கண்களையும் அருகெனக் கண்டார். திரும்பி அவரை நோக்கி நடந்தார்.

முந்தைய கட்டுரைஅழகியல்களின் மோதல்
அடுத்த கட்டுரைஉலகெலாம் -கடிதம்