தன்னந்தனிப்பாதை

கோவையில் இருந்து திரும்பி வந்து ஒருநாள்தான் வீட்டில் இருந்தேன். மறுநாள், பிப்ரவரி 4 இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸில் கிளம்பி திரிச்சூர் சென்றேன். கல்பற்றா நாராயணனின் மாணவரும் ஆற்றூர் ரவிவர்மாவுக்கு அணுக்கமானவருமான லத்தீஃப் பறம்பில் ஆற்றூர் ரவிவர்மாவின் நினைவாக ஒரு தொகைநூலை வெளியிட்டிருக்கிறார். காவியரூபன் – ஆற்றூர் ஓர்ம. நான் ஆற்றூரின் அஞ்சலிக்கூட்டத்தில் பேசிய உரையும் இடம்பெற்றிருக்கிறது. அதன் வெளியீட்டுவிழா திரிச்சூரில்.

 

லதீஃப் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். விழாவை திரிச்சூரில், ஆற்றூரின் நண்பர்கள் சூழ, வெளியிடலாமென நினைத்திருக்கிறார். ஏற்பாடுகளுக்கு திரிச்சூரின் நண்பர்களை நம்பியிருக்கிறார். லதீஃபும் கல்லூரி ஆசிரியர், நண்பர்களும் கல்லூரி ஆசிரியர்கள். ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். மாணவர்கள் இன்றைய பொறுப்பின்மையுடன் பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள். அதாவது ஒரு கூட்டம் நிகழவிருக்கும் செய்தியை கேரள சாகித்ய அக்காதமிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள், அவ்வளவுதான். வேறு எதையுமே செய்யவில்லை.

 

முதன்மையான காரணம் கேரளத்தில் இலக்கியம், பண்பாடு  சார்ந்த சூழலில் சென்ற இருபதாண்டுகளாக உருவாகிவரும் ஆர்வமின்மை. மேலும் இளைஞர்கள் நடுவே பெருகியிருக்கும் கட்டற்ற குடி. ஆகவே மொத்தமும் குளறுபடி. இது கேரளத்தில் எனக்கு மூன்றாம் முறையாக நிகழ்கிறது. இனி கேரளத்தில் பேசவேண்டியதில்லை என்னும் முடிவுக்கு வந்துவிட்டேன். முன்பே ஒப்புக்கொண்டபடி 13 ஆம் தேதி காலடியில் பேசவிருப்பதே கடைசிக் கூட்டம். அதுவும் குளறுபடியாகவே நிகழும் என்பதில் எனக்கு ஐயமே இல்லை. நானே எல்லா ஏற்பாடுகளையும் முன்னரே செய்தபின்புதான் கிளம்புகிறேன்.இனி ஒருபோதும் கேரளத்தில் மேடையேறப்போவதில்லை.

 

என்னிடம் திரிச்சூர் யாத்ரிநிவாஸ் என்னும் அரசு ஓட்டலுக்கு காலையில் செல்லவேண்டும் என்றும், அங்கே என் பேரிலேயே அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் சொன்னார்கள். அங்கே சென்றால் என் பேரில் அல்ல அமைப்பாளர்கள் உட்பட எந்தப் பேரிலும் அறை இல்லை. எல்லா அறைகளும் நிறைந்துவிட்டிருந்தன. ஏனென்றால் அது ஒரு மலிவுவிலை விடுதி. அருகேதான் சாகித்ய அக்காதமி, சங்கீதநாடக அக்காதமி முதலிய அரசு கலாச்சார அமைப்புக்கள். அங்கே ஏதோ நாடகப்பயிற்சி விழா, கருத்தரங்கு ஆகியவை நடந்துகொண்டிருந்தன

 

அதிகாலை ஐந்தரை மணிக்கு எங்கே சென்று அறைதேடுவதென்று தெரியவில்லை. அமைப்பாளர்கள் என தெரிந்தவர்களை தொலைபேசியில் அழைத்தால் எவரும் எடுக்கவில்லை. அவர்கள் கோழிக்கோட்டில் இருந்தனர். விடுதிகளிலெல்லாம் 12 முதல் மறுநாள் 12 மணிவரை என நாள் கணக்கு வைத்திருக்கிறார்கள். சில விடுதிகளில் 12 முதல் மறுநாள் 11 மணிவரை. இது ஒரு பெரிய மோசடி. ஓர் ஊருக்கு அதிகாலைச் சென்று இறங்கி மறுநாள் அதிகாலை கிளம்பினால் இரண்டு நாளுக்குண்டான அறைவாடகை கொடுக்கவேண்டும். [இதற்கு இந்திய சுற்றுலாத்துறை சட்டபூர்வமாக தடை விதிக்கவேண்டும். இந்தியச் சுற்றுலாவின் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது விடுதிகள் போடும் இந்த சட்டம்].

 

இம்மாதிரி தருணங்களில் கைகொடுப்பவர்கள் சினிமா தயாரிப்பு நிர்வாகிகள். ஆயிரம் கைகள் பல்லாயிரம் கண்கள் கொண்ட தெய்வ வடிவங்கள் அவர்கள். சினிமாத் தயாரிப்பு நிர்வாகி ஒருவர் இருபது நிமிடத்தில் சென்னையில் இருந்தபடியே ஓர் அறையை ஏற்பாடு செய்து தந்தார்.புதிய நல்ல விடுதி. சென்று படுத்து தூக்கம்போட்டேன். முந்தையநாள் ரயிலில் சரியாக தூக்கமில்லை. கேரளத்தின் ரயில்பயணங்களில் தூங்க முடியாது. எல்லா ஊர்களிலும் ஏறுவார்கள், இறங்குவார்கள்.

மதியம் ஆற்றூர் ரவிவர்மா வீட்டுக்குச் சென்று ஸ்ரீதேவி வர்மா அவர்களைப் பார்த்துவந்தேன். அறுபதாண்டுகாலம் ஆற்றூரின் அருகமைவில் வாழ்ந்தவர். ஆற்றூரின் எல்லா ரசனைகளிலும் பங்குண்டு. கவிதை, இலக்கியம், இசை, பயணம். முப்பதாண்டுகள் தவறாமல் சென்னை இசைவிழாவுக்கு ஆற்றூருடன் வந்திருக்கிறார். இருபதாண்டுகள் ஆண்டுதோறும் இமையமலைப் பயணமும் செய்திருக்கிறார். மலையாளக் கவிதையின் , சிந்தனையின் அரைநூற்றாண்டை நேரில் கண்டவர். பொதுவாக அதிகம் பேசமாட்டார். இனிய புன்னகையுடன் சரி. முப்பதாண்டுகளுக்கு முன் நான் நோயுற்றிருந்தால் நேராக அங்கேதான் செல்வேன். அன்னைபோல என்னை பார்த்துக்கொள்வார். அருண்மொழியை காதல்மணம் புரிந்துகொண்டதும் நேராக அங்கேதான் கூட்டிச்சென்றேன்.

 

ஆற்றூர் அவரை காதலித்து மணம் புரிந்துகொண்டார். “காதலித்தேயாகவேண்டிய கட்டாயம். அன்றெல்லாம் கம்யூனிசம், காதல், கவிதை ஆகிய மூன்றும் இளைஞர்களுக்கு இருந்தாக வேண்டும். ஆகவே காதலிக்க பெண்ணைத் தேடினேன். இவளுக்கு பக்கத்துவீடு. சின்ன பிள்ளையாக இருந்தபோதே நல்ல பழக்கம். இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது, நான் அரசியலில் ஈடுபட்டு ஊர் ஊராக ஓடிக்கொண்டிருப்பதனால் காதலிக்க பொழுதில்லை, என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டேன். அவளே காதலிப்பதாக சொன்னாள். அவ்வாறு காதலில் ஈடுபட்டு கல்யாணம் செய்துகொண்டோம்”. ஆற்றூரின் நினைவு.

 

இன்று வீடெல்லாம் ஆற்றூரின் நினைவுகள். படங்கள், நூல்கள், வந்துகொண்டே இருக்கும் இதழ்கள். ஆற்றூரில் மூழ்கி பிற நினைவே இல்லாமல் ஸ்ரீதேவி வர்மா இருக்கிறார். நான் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தேன். ஆற்றூரைப்பற்றிப் பேசவேண்டாம் என நினைத்தேன். ஆனால் எப்படியோ பேச்சு ஆற்றுர் பற்றியே வந்துகொண்டிருந்தது. வேறெதையும் பேசமுடியாது, எதைப்பேசினாலும் அவர் கவனிக்கமாட்டார் என்று உணர்ந்து ஆற்றூர் பற்றியே பேசினேன். அவர் முதலில் என்னைக் கண்டதும் சற்று பதற்றமாவதுபோலிருந்தது. பின்னர் நெகிழ்ச்சி அடைந்தார்.

ஒருமணி நேரம் கழித்து கிளம்பி வந்தேன். கேரளபாணி  ‘சின்னூண்டு’ கடை ஒன்றில் ‘கஞ்ஞி’ சாப்பிட்டேன். கூட மீன் வறுவல், மரவள்ளிக்கிழங்கு கூட்டு. அறைக்கு வந்து மீண்டும் ஒரு தூக்கம். நான்கு மணிக்குத்தான் கல்பற்றா நாராயணனும் நூலாசிரியரும் நண்பரும் கோழிக்கோட்டில் இருந்து வந்தார்கள். உள்ளூர் ஏற்பாட்டாளர் எங்கும் காணக்கிடைக்கவில்லை. அவர் தன் மாணவர்களிடம் அழைப்பிதழ்களை தபாலில் போடச் சொல்லியிருக்கிறார்கள். அறை பதிவுசெய்யவேண்டிய பையன் இன்னொரு பையனிடம் சொல்லிவிட்டு பதிவுசெய்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறான். அந்தப்பையன் அப்படியே ஊருக்குச் சென்றுவிட்டானாம்.  அழைப்பிதழ்களை தபாலில் அனுப்பவேண்டிய பையன் மறந்துபோய் நாலாம்தேதி இரவு ஏழுமணிக்குமேல்தான் அனுப்பியிருக்கிறான். மொத்தத்தில் எவருக்குமே செய்தி தெரியாது.

 

மாலையில் விழா  மொத்தமே எட்டுபேர்தான் அரங்கில். இரண்டுபேர் ஆற்றூரின் மகன் டாக்டர் பிரவீனும் மனைவியும். வெளியே கேரள இலக்கிய விமர்சகர், காந்தியசிந்தனையாளர் எம்.என்.காரச்சேரி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முழங்கும் இன்னொரு கூட்டம். எங்கள் அரங்குக்கு வந்திருந்தவர்களும் தற்செயலாக வந்தவர்கள்தான். அவர்களில் மூவர் நல்ல மதுபோதையில் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். ஒரு பெண் செல்பேசியிலிருந்து கண்களை எடுக்கவேயில்லை. இரண்டுபேர் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் கிழவர்கள். அரங்கில் ஒரு விழிகூட பேச்சை கவனிப்பதாக காட்டவில்லை. சுவரைநோக்கி பேசும் அனுபவம். இப்படி ஒன்று முதல்முறை எனக்கு.

 

ஆனாலும் கல்பற்றா நாராயணன் மிகமிகச் சிறப்பாகப் பேசினார். அது ஓர் அறைகூவல் போலவே தோன்றியது. பேசப்போகும் முன் “நான் உங்களுக்காகவே பேசுகிறேன்” என்று சொல்லிவிட்டுத்தான் எழுந்து சென்றார். ஆற்றூர் குறித்த நினைவுகள், அவருடைய கவிதைபற்றிய மதிப்பீடுகள், அரிய சொல்லாட்சிகள், கவிதைமேற்கோள்கள் என  மிக முக்கியமான உரை.

 

‘அன்றாடத்தின் கவிதை’ என்ற ஒன்றை உருவகிக்க முடியுமா என்ற வினாவே உரையின் மையம். கவிதைக்கென சில தருணங்கள், சில சொல்லாட்சிகள், சில தரிசனங்கள் வழிவழியாக வந்திருக்கின்றன. அவை எதுவுமே இல்லாமல் ஒரு கவிதை இயல்வதாகுமா? அப்படியொன்று எதற்காக தேவைப்படுகிறது? “ஒரு இனிப்பும் இல்லாத தண்ணீர்தான் அமுது என சொல்லப்படுகிறது இல்லையா?” தொடர்ச்சியான உவமை வரிகள். “பூவின்றி தளிரும் இன்றி, மணமும் வண்ணமும் இன்றி, வேர்களால் எழுதப்படலாகுமா கவிதை?” உரை என்றால் அதுதான். அதற்கிணையான ஓர் உரையை நான் இதற்குமுன் கேட்டதில்லை. அது ஒற்றை ஒழுக்கு. நினைத்து நினைத்துச் சொல்லப்படுவதல்ல. வந்தபடியே இருந்தது, தேன்விழுது இறங்குவதுபோல.

 

அது உளம்சோர்ந்திருந்த எனக்கும் ஊக்கமூட்டியது. நான் கல்பற்றா நாராயணனுக்காக மட்டும் பேசினேன். என்னுடைய நல்ல உரைகளில் ஒன்று அது. இந்திய இலக்கிய மரபில், உலக இலக்கிய மரபில் தொல்யதார்த்தவாதம் எப்படி இயல்பாக உருவாகி வந்தது என்று சொன்னேன். ஹோமர், து ஃபு, வியாசர், சங்கப்பாடல்கள் என உதாரணங்களை அளித்தேன். அது எப்படி கற்பனாவாதத்திற்கு வழிவிட்டு விலகியது, கற்பனாவாதம் எப்படி இரண்டாயிரம் ஆண்டுகள் இந்திய கவிதைநிலத்தை ஆட்சி செய்தது என்று விளக்கினேன்

கற்பனாவாதத்திற்கு எதிரான முதற்குரல் நவீனத்துவக் கவிதையில் எழுந்தது. அது ஒட்டுமொத்த கவிதை மரபையே திரும்பிநின்று எதிர்க்கவேண்டியிருந்தது. மனிதன் முன்னிலைப்பட்டு விழுமியங்கள் உருவாகி வந்தபோது தொல்யதார்த்தவாதம் இருந்தது. விழுமியங்கள் ஓங்கி மானுடன் சிறிதானபோது கற்பனாவாதம் எழுந்தது. மீண்டும் மனிதன் முன்னிலைப்பட்டபோது யதார்த்தவாதம் உருவானது.

 

ஆற்றூர் எழுதிய பாயசம் என்னும் கவிதை அதற்கு மிகச்சிறந்த உதாரணம். அம்பலப்புழை பால்பாயசத்தை கற்பனாவாதத்துடன் ஒப்பிடுகிறார். கிருஷ்ணபக்தி என உட்குறிப்பு. ‘பூந்தானமும் செறுசேரியும் அதன் ஒரு துளியால் அல்லவா துள்ளிவிட்டார்கள்’ ஏளனம் முறுகிக் கூர்கொள்ளும் அக்கவிதை “டேய் சின்னப்பையா அந்த பெரிய உருளியை தூக்கி வீசு. நூறாக உடையட்டும் பாற்கடலின் கொப்பளிப்புகள்” என்று முடிகிறது. சின்னப்பையன் என்பதற்கு கிருஷ்ணனின் பெயர்களில் ஒன்றாகிய ‘கிசோரன்’ என்பதை பயன்படுத்துகிறார்

 

ஆனால் ஆற்றூர் தன் வாழ்நாளெல்லாம் ரசித்த கவிஞர்கள் கற்பனாவாதத்தின் உச்சியில் திளைத்தவர்கள். ‘அவர்களிடமே நல்ல சொல்லாட்சிகள் உள்ளன’ என்று ஆற்றூர் சொன்னார். ஆற்றூரின் இந்த ஊசலாட்டம் வழியாக யதார்த்தவாதத்தின் அக எல்லையையும் உணரமுடியும் என்று சொல்லிச்  சொற்பொழிவை முடித்தேன். கல்பற்றா மட்டும் கைதட்டினார். அவர் பேசி முடித்தபோது நான் மட்டுமே கைதட்டியிருந்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கிச் சிரித்துக்கொண்டோம்.

 

உண்மையில் மாலை ரயிலில் கிளம்பும்போது உற்சாகமாகவே உணர்ந்தேன். அபாரமான ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டது. கண்ணுக்குத்தெரியாத பேருரு ஒன்றுக்கு எதிராக நெஞ்சு நிமிர்த்தி நிற்பதுபோல. ஆற்றூர் என்றுமே தனித்தவர், விலகியவர். அவருக்கான கூட்டம் இப்படித்தான் நடந்திருக்கவேண்டுமா? அவருடைய முதன்மை மாணவர்கள் இருவர் தங்களுக்குள்தான் பேசிக்கொள்ளவேண்டுமா?

 

வாசகர்கள் , ரசிகர்கள் எல்லாம் நமக்கு எதற்கு? மந்திரம்போல் வேண்டும் கவிதை. நல்ல மந்திரம் என்பது நமக்குநாமே சொல்லிக்கொள்வது, நம் தெய்வங்கள் மட்டுமே கேட்கவேண்டியது அல்லவா?

முந்தைய கட்டுரைஅம்மையப்பம்- கடிதம்
அடுத்த கட்டுரைவானம் கொட்டட்டும்