சுரங்கப்பாதைக்கு அப்பால்…

ஒரு கவிஞனை நினைத்துக்கொள்வது

நள்ளிரவில் தனிமையில்
தொடர்பே அற்ற ஓரு பாடலினூடாக
மறைந்துபோன கவிஞன் ஒருவனை நினைத்துக்கொள்கிறேன்
இந்த இசையில் அவன் எப்படி வந்தான்?
இது நாற்பதாண்டுகளுக்கு முன் மறைந்த
இன்னொரு இசைக்கலைஞனின் குரல்

அவன் ஒரு நீண்ட குகைக்கு அப்பால் இருந்து
அல்லது முகில்திரைக்கு அப்பால் இருந்து
பாடிக்கொண்டிருக்கிறான்
அவன் குரலில்  மது கலந்திருக்கிறது
அவ்வப்போது உடைந்து
அவ்வப்போது பிசிறடைந்து
அவ்வப்போது உயிர்வீச்சு பெற்று
சுழன்றுகொண்டிருக்கிறது.
அவனும்  பித்துகொண்டவன்
துயரம் நிறைந்தவன்
நெடுந்தொலைவுகள் அலைந்தவன்
அவனும் முன்னரே முடித்துக்கொண்டான்
அவனும் தனித்தவனாகவும்
உற்றோர் சூழ்ந்தவனாகவும் திகழ்ந்தான்
அனைவரையும் புண்படுத்தினான்
ஒவ்வொருவரையும் நேசித்தான்

ஒவ்வொரு ஒற்றுமையாகத் தேடி எடுக்கலாம்
ஒரே வைரஸால் தாக்கப்பட்ட இருவர்
பாட வைப்பது
எழுதவைப்பது
கனவுகாணவைப்பது
இப்படி நள்ளிரவில் பிறரால்
எண்ணிக்கொள்ள வைப்பது
குரலினினூடாக
சொற்களினூடாக
நீண்ட குகைப்பாதையைக் கடந்துவந்து
முகில்களின் குளிருடன்
தொட்டு உள்நுழைவது

இரக்கமற்றது
நஞ்சுபோல்
அத்தனை இனியது

[சுறும எழுதிய மிழிகளே- பாபுராஜ் குரலில்]

சுறும எழுதிய மிழிகளே
பிரணய மதுர தேன் துளும்பும்
சூரியகாந்தி பூக்களே

ஜாலகத் திரச்சீல நீக்கி
ஜாலமெறியுவது எந்தினோ?
தேன் புரட்டிய முள்ளுகள்
நீ கரளில் எறியுவது எந்தினோ?

சுறும எழுதிய மிழிகளே
பிரணய மதுர தேன் துளும்பும்
சூரியகாந்தி பூக்களே

ஒரு கினாவின் சிறகில் ஏறி
ஓமலாளே நீ வரூ
நீல மிழியிலே ராக லகரி
நீ பகர்ந்நு தரூ

‘சுறும எழுதிய மிழிகளே’  ஜேசுதாஸ் பாடிய திரைவடிவம்

எழுதியவர் யூசஃப் அலி கேச்சேரி

பாடகர் கே.ஜே.யேசுதாஸ்

இசை பாபுராஜ்

படம் கதீஜா 1967

[தமிழில்]

மையெழுதிய விழிகளே
காதலின் இனிய தேன் ததும்பும்
சூரிய காந்தி பூக்களே

சாளரத் திரைச்சீலையை விலக்கி
ஜாலம் காட்டுவது எதற்காக?
தேன்பூசிய முட்களை
நெஞ்சில் வீசுவது எதற்காக?

ஒரு கனவின் சிறகில் ஏறி
அன்புக்குரியவளே நீ வா
நீல விழிகளால் காதல் மயக்கம்
ஊற்றி தருக

[சுறும- கண்மை, அரபி வார்த்தை]

*

பாபுராஜ்

1920 களில் கோழிக்கோட்டில் வாழ்ந்த இஸ்லாமியப் பிரபுக்கள் திருமண விழாக்களில் கஸல் இசைநிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. அதற்காக வடநாட்டிலிருந்து இசைக்கலைஞர்களை வரவழைப்பார்கள். அவர்கள் ஒரு ‘சீசன்’ முழுக்க கோழிக்கோட்டில் தங்கி பாடி பரிசில் பெற்று திரும்பிச் செல்வார்கள். அவ்வாறுதான் ஜான் முகம்மது கான் என்னும் வங்காளி பாடகர் கோழிக்கோட்டுக்கு வந்தார்.

அவ்வாறு வரும் பாடகர்கள் இங்கே தங்கும் நாட்களில் மிக ஏழைக்குடும்பங்களில் இருந்து பெண்களை திருமணம்செய்துகொள்வார்கள். செல்லும்போது சிறுதொகையை கொடுத்து கைவிட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஜான் முகமது கான் அவ்வாறு கோழிக்கோடு ஆக்கோடு பகுதியைச் சேர்ந்த பாத்திமாவை மணம்புரிந்தார். அப்போது பாத்திமாவுக்கு வயது பதினாறு .

பாத்திமாவுடன் ஜான் முகமது கான் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். முதல்குழந்தை முகமது சாபிர் பிறந்து ஓராண்டிலேயே இறந்தான். இரண்டாம் குழந்தை முகம்மது சபீர். அவருக்கு ஒரு தம்பி மஜீத். மஜீதை கருவுற்றிருக்கையிலேயே ஜான் முகமது கான் பாத்திமாவை கைவிட்டுவிட்டு வங்காளத்திற்கு திரும்பிச் சென்றார். அதன்பின் திரும்ப வந்தபோது தலைச்சேரியைச் சேர்ந்த ருகியாவை மீண்டும் திருமணம் செய்துகொண்டார். ஃபாத்திமாவையோ குழந்தைகளையோ விசாரிக்கவேயில்லை

முகமது சபீருக்கு ஐந்து வயதிருக்கையில் நோயுற்றிருந்த பாத்திமா இறந்தார். சபீரும் அவன் தம்பி மஜீதும் கோழிக்கோடு மானாஞ்சிறை மைதானத்தில் வயிற்றில் அடித்துப் பாடி பிச்சை எடுத்தார்கள்.  அவர்களிடம் இயல்பாகவே இசைத்திறமை இருந்தது.

ஒருமுறை தெருவில் பாடிக்கொண்டிருந்த சபீரை குஞ்ஞகம்மது என்னும் போலீஸ்காரர் கண்டார். அவனுடைய இசையில் ஆர்வம் கொண்டார். அவனை தன் மகனாக தத்து எடுத்துக்கொண்டார். அவரே அவனுக்கு இசை கற்பித்தார். அவர் கேரள இஸ்லாமிய நாட்டாரிசைப்பாடல்களான கெஸ் [மாப்பிளைப்பாட்டு] பாடுபவர். ஒரு இசைக்குழு நடத்தியிருந்தார். அவர்தான் புகழ்பெற்ற கெஸ் பாடகராகிய கோழிக்கோடு அப்துல்காதரையும் இதைப்போல தெருவில் கண்டெடுத்து அறிமுகம் செய்தவர்

குஞ்ஞகமது மறைந்த பின்னர் சபீர் கோழிக்கோட்டில் இருந்து கிளம்பி. இந்தியா முழுக்க ரயில்பாடகனா பிச்சைக்காரர்களுடன் ஒருவனாக,ஆர்மோனியத்துடன் அலைந்து திரிந்தான். இலங்கைக்குச் சென்று சிலகாலம் தெருப்பாடகனாக வாழ்ந்தான். இக்காலகட்டத்தில் முறைப்படி இந்துஸ்தானி இசையை பயின்றான். கஸல் பாடல்களில் தேர்ச்சி பெற்றான்.

மீண்டும் கோழிக்கோடு வந்த சபீர் தெருப்பாடகராக அலைந்தார்.அப்போதுதான் கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் சபீருக்கு தொடர்பு ஏற்பட்டது, இறுதிவரை கம்யூனிஸ்டுக்காரராகவே இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளில் பாடினார். அவர்களின் நாடகங்களுக்கு பாடல்களை அமைத்தார். கோழிக்கோடு அபுபக்கர் நாடக நிறுவனத்தில் இசையமைப்பாளரும் பாடகருமானார். அவர் இசையமைத்த முதல் நாடகம் 1951ல் வெளிவந்த ‘இங்குலாபின் மக்கள்’

சபீர் தன் பெயரை எம்.எஸ்.பாபுராஜ் என்று மாற்றிக்கொண்டார். நாடோடி வாழ்க்கையில் அவருக்கிருந்த பெயர்களில் ஒன்று. கேரளத்தின் பல புகழ்பெற்ற நாடகங்களுக்கு பாபுராஜ் இசையமைத்தார். டி.முகமது யூசுப்பின் ‘கண்டம் பெச்ச கோட்டு’  செறுகாடின் ‘நம்மளொந்நு’ தோப்பில் பாசியின் ‘யுத்தகாண்டம்’ பி.பாஸ்கரனின் கே.டி.முகமது எழுதிய வெள்ளப்பொக்கம் போன்ற நாடகங்கள். இவை அனைத்துமே கம்யூனிஸ்டுக் கட்சி முன்னெடுத்த பிரச்சாரப் படைப்புக்கள்.

பி.பாஸ்கரன் இயக்கிய திரமால என்னும் திரைப்படத்திற்கு விமல்குமார் என்னும் இசையமைப்பாளர் பணிபுரிந்தார். அவருக்கு பாபுராஜ் உதவிசெய்தார். அதன்பின்  1957 ல் செம்மீன் புகழ் ராமுகாரியட் இயக்கிய  மின்னாமினுங்கு என்னும் படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். முதல் படத்திலேயே புகழ்பெற்றார்

மலையாள திரையின் முதல்பெரும்  இசையமைப்பாளர் என்று புகழ்பெற்றார். பாபுராஜ் இசையில் பி.பாஸ்கரன் இசையமைத்த பாடல்கள் யேசுதாஸாலும் ஜானகியாலும் பாடப்பட்டு மலையாளிகளின் முதன்மை இசையாக மாறின. 1978ல் வெளிவந்த த்வீப் இவர் இசையமைத்த இறுதிப்படம். அதில் இடம்பெற்ற , தலத் மஹ்மூது பாடிய ‘கடலே நீலக்கடலே’அவருடைய ஆத்மாவின் குரல் என விமர்சகர்களால் கருதப்படுகிறது

பாபுராஜின் இசை ஹிந்துஸ்தானி ராகங்களை ஒட்டியது. கஸல் பாணியில் அமைந்தது. இன்றும் மலையாளக் கலாச்சாரத்தின் இனிய நினைவுகளாக நீடிக்கும் பல பாடல்கள் பாபுராஜால் அமைக்கப்பட்டவை. குறிப்பாக காதல்தோல்வியை, பிரிவின் வலியைச் சொல்லும் துயர்மிக்க பாடல்களில் அவர் பேருருக்கொண்டார்.

பாபுராஜ் வெற்றிமேல் வெற்றிபெற்றபோதிலும் தெருவாழ்கையிலிருந்து பெற்ற பழக்கங்களை விடமுடியவில்லை. கட்டற்ற ஊதாரித்தனம். அவரால் கையில் இருக்கும் பொருளை அக்கணமே அங்கிருக்கும் அனைவருக்கும் முழுமையாக பகிர்ந்தளிக்காமல் இருக்க முடியாது. கூடவே கட்டற்ற குடியும் அவரை அழித்தது. குடிப்பது, பாடுவது, மீண்டும் குடிப்பது என்பதே அவருடைய வாழ்க்கை. குறைவாகவே உணவுண்பவர்.

வெற்றிகரமான இசையமைப்பாளராகத் திகழ்ந்தாலும் பாபுராஜ் வறுமையில் வாடினார். தன் 49 ஆம் வயதில் ஈரல்நோயால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். 1978 அக்டோபரில்

பாபுராஜ் இசையமைப்பாளராகவே அறியப்பட்டார். அவருடைய குரலில் சினிமாவில் பாடவில்லை. ஆனால் கஸல் நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். மனோரமா மியூஸிக் என்னும் அமைப்பு சமீபத்தில் அவருடைய பாடல்களை அவரே பாடிய ஓரு பதிவை கண்டடைந்து வெளியிட்டது. அது மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

கேரள இசைரசிகர்கள் பாபுராஜின் பாடல்களை ஏற்கனவே யேசுதாசின் இனிய குரலில் கேட்டவர்கள். சற்றே போதை கலந்து பாபுராஜ் தன் கரடுமுரடான குரலில் அதைப் பாடக் கேட்பது அவர்களுக்கு ஒருவகை காலப்பயணம். அந்த ஆளுமை, அந்த வாழ்க்கையின் துயரநாடகம் அக்குரலில் உள்ளது. அதற்கப்பால் அவருக்குள் இருந்து ஏங்கிய கைவிடப்பட்ட ஆத்மாவின் பிரார்த்தனை அதில் ஒலிக்கிறது.

முந்தைய கட்டுரைராம்குமாரின் ‘அகதி’ – காளிப்பிரசாத்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71