தாயார்பாதம் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், எங்களுக்காகச் சிரத்தை எடுத்துச் சிறுகதை வாசிப்பு பட்டறை நடத்துவதற்கு மிக்க நன்றி. அனைவர் சார்பிலும். தாயார் பாதம் மட்டும் படித்துள்ளேன். அது இன்னும் என்னுள் ஓடிகொண்டே இருக்கிறது. நான் இன்னும் நிறைய செரிக்க வேண்டியுள்ளது போலவே இருக்கிறது எப்போதும். கதையைப் படித்து என்னுள் தொகுத்துக்கொண்டு இரண்டு நாள் யோசித்து பின் வாசகர் கடிதங்களைப் படித்தேன். நான் யோசிக்காத கோணங்கள் நிறைய தெரிய வந்தது. அவர்களின் கடிதங்களுக்கும், அவற்றை பதிவு செய்ததற்கும் நன்றி. அதை பெண்ணின் பொறுமையாக பார்க்க முற்றிலும் தவறி இருந்தேன். அது இன்னும் சற்று கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் அது நியாயம் என்பதும் தெரிகிறது. இதை செரித்து முடித்தபின் அடுத்த கதை. ராமனின் தாத்த போல நிறைய ஆண்கள். ஏன் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆணுமே. என்னுள் அவர் இருப்பதை நிறைய முறை உணர்ந்து இருக்கிறேன். கடந்த 30 வருடங்களில் கிட்டத்தட்ட எல்லாருமே என்னை “ரொம்ப” நல்லவன்னு தான் சொல்லி இருக்காங்க. ஆனால் அது உண்மை அல்ல. என் அழுக்குகள் வெளியே தெரியாததுதான் ஒரே காரணம். ஆனால், இந்த நல்லவன் பட்டம் என்னை ஒரு சாதுவாக, எதற்கும், யாருக்கும் வளைந்து கொடுக்கும் ஒருவனாக, யாரையும் புன்படுத்தாதவனாக என்னை இருக்க நிர்பந்தித்தவண்ணம் இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு நான் இணக்கமானவன் இல்லை. ஆனால் அதை வெளிக்காடிக்கொள்ள முடிவதுமில்லை. என் தந்தை உட்பட, நான் உட்பட, நிறைய ஆண்கள் இப்படிதான். ஆனால் இந்த அழுத்தம் எங்காவது, எப்படியாவது வெளிப்பட்டே ஆக வேண்டிய ஒன்று. அதற்கு ஏதுவான இடம் வீடுதான். வளைந்து வளைந்து, அடிவாங்கி அடிவாங்கி ஈகோ தேய்ந்து கிடக்கும் ஒருமனம் நிமிர்ந்து நிற்கவேண்டி இருக்குகிறது. அது ஆனால் நிமிர்ந்து நிற்பதற்கான பின்விளைவுகளை எண்ணிப் பயப்படுகிறது. ஆனால் நமது சமூக அமைப்பு காரணமாக வீடு அதற்கு ஏதுவான இடமாக இருக்கிறது. அங்கே நான் நிமிர்ந்து நிற்கப் பார்க்கிறேன். அதில் எந்தவித நியாயம் இல்லாவிடிலும் கூட. ஏனனில் அதில் எனக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. ஒருவாசகர் எழுதிய, கருந்தேள் எட்டி பார்க்கிறது, கொட்டத் தயாராக. அப்படி நான் நிமிர்ந்து நிற்காவிட்டால், ராமனின் பாட்டி போல மனம்பிசகி அலைவேன் எங்காவது. இந்த இரண்டுமே (சாதுவான வெளி & சிடுசிடுக்கும் உள்) உண்மையான நான் கிடையாது. நிஜ நான் எங்கோ இதற்க்கு இடையில். ஆனால் அதை வெளிபடுத்த (அ) அறிவதற்கு நான் பக்குவப்படவில்லை. இல்லை, அந்த நிஜத்திற்கு பயப்படுகிறேன். இங்கே அமெரிக்காவில் குடும்பத்திற்கு அப்படி ஒரு உத்திரவாதம் இல்லை. என்னை கட்டிக்கிட்டியா, இனி என்கிட்டத்தான் என்கிற நிலை இல்லை. நான் இங்கு வந்த கடந்த 5 வருடங்களில் கல்யாணத்தைச் சிறையாகவும், மனைவியைக் கொடுமைக்கரியாகவும் ஒரு ஜோக் கூட யாரும் அடிக்கவில்லை. நான் விவரம் தெரியாமல் அடித்தபோதும் யாரும் சிரிக்கவில்லை. என்னைப் பாவமாகப் பார்த்தார்கள். இந்த உத்தரவாதமின்மை அவர்களை எப்போதும் காதலர்களாவே இருக்க வைக்கிறது போலும். தக்கவைதுக்கொள்ளுதல் ஒரு இயல்பான (பயம் அல்ல) உணர்வாகி விடுகிறது. கிட்டத்தட்ட எல்லா விலங்குகளும் அப்படிதானே. அது ஒருவர் இன்னொருவரை மதிக்க வைக்கிறது. காரியத்திற்காக இல்லாமல். நிஜமாகவே. அதனால் தன்னை வெளியே அதி நல்லவனாக காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. தன்னைச் சமன் செய்துகொள்ள வீடு தேவைப்படுவதுமில்லை. அதற்கு வீட்டில் இடமுமில்லை. எனக்கு ராமனின் தாத்தா போன்றவர்கள், அதிசயம் கிடையாது. அதுமட்டுமில்லை. நான் எங்காவது சாதுவான, எதையும் மறுத்துப் பேசாத, தனி ஆளுமை இல்லாதை யாரைப் பார்த்தாலும் அவரின் மனைவிமேல் பரிதாபம் வரும். வீட்டில் இந்த ஆள் என்ன கொடுமை பண்ணுவானோன்னு நினைக்க தோன்றும். ஒரு சொல் மூலமாகவோ, இல்லை எதுவும் சொல்லாமலோ. எங்களூரில் வெளியே மோசமாக, கரடு முரடாக இருக்கும் நிறையப்பேர், வீட்டிற்கு, மனைவிக்கு இணைவாக இருப்பதை பார்த்து இருக்கிறேன். இந்த சமன் எல்லாருக்கும் தேவை தானே. காட்டில் ஏமாந்த விலங்குகளை வேட்டையாடியும் மோசமான விலங்குகளிடம் இருந்து தப்பி ஓடியும் வாழ்ந்த இனம் தானே நாம். நன்றி கலந்த பாசத்துடன், கெளதம் கதைகள் பெருவலி மெல்லிய நூல் ஓலைச்சிலுவை நூறுநாற்காலிகள் மயில்கழுத்து   யானைடாக்டர் தாயார் பாதம் வணங்கான் தாயார் பாதம் மத்துறு தயிர் சோற்றுக்கணக்கு அறம்

முந்தைய கட்டுரைகணியான்கூத்து
அடுத்த கட்டுரைமார்ச் 11,12,13-டைரி