‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா

 

முழு மஹாபாரதம் -அரசன் – இணையதளம்

கோவைக்கு மீண்டும் மீண்டும் சென்றுகொண்டிருக்கிறேன். கோவை என்பது ஒரு மையம்தான். ஈரோடு நாமக்கல் கரூர் சேலம் உள்ளிட்ட கொங்கு வட்டாரம்தான் அது. திருச்சி பாண்டிச்சேரி சென்னை என பல ஊர்களிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள். நான் காலை 8 மணிக்கு சென்று சேர்ந்தேன், ரயில் ஒருமணிநேரம் தாமதம். ரயில்நிலையத்திற்கு நண்பர்கள் வந்திருந்தனர். ராஜாநிவாஸ் மாளிகைக்குச் சென்றபோது அங்கே  ஏற்கனவே பத்துநண்பர்கள் வந்திருந்தனர்.

காலையிலேயே ‘அரங்கம்’ கூடிவிட்டது. எப்போதுமே நண்பர் கூடுகைகள் வேடிக்கைப் பேச்சும் அப்படியே இலக்கியம், பண்பாடு, வரலாறும் எனச் சென்றுகொண்டிருக்கும் உரையாடலால் ஆனவை. சினிமா, அரசியல் இரண்டையும் கூடுமானவரை தவிர்ப்பது வழக்கம். ஏனென்றால் எங்கும் விவாதமாக இருப்பவை அவையே , இங்கே மட்டுமாவது இலக்கியம் முதலியவற்றைப் பேசுவோம் என்றுதான். நண்பர்கள் பலர் வழக்கறிஞர்கள் என்பதனால் சட்டம் சார்ந்த விவாதம் அவ்வப்போது எழும்.

இம்முறை ஆச்சரியம், இளம்வாசகராகிய ராகுல். இப்போது எட்டாம் வகுப்பு படிப்பவர். சதுரங்க விளையாட்டில் தேர்ச்சி கொண்டவர். வெண்முரசு பிரயாகை வரை சென்ற சிலமாதங்களாக வாசித்து வந்துசேர்ந்திருக்கிறார். மகிழ்ச்சியான ஒரு தருணம் அவரைச் சந்தித்தது. என் வாசகர் சரவணக்குமார் அவர்களின் மகன்.

பாண்டிச்சேரி நண்பர்கள் முன்னரே வந்துவிட்டிருந்தனர். ஈரோட்டிலிருந்து கிருஷ்ணனும் கும்பலும் 11 மணிக்கு வந்தனர். ஒவ்வொருவராக வருந்தோறும் பேச்சு அரங்கு பெரிதாகிக்கொண்டே சென்றது. அருட்செல்வப் பேரரசனும் அவர் நண்பர் ஜெயவேலும் முந்தையநாள் அந்தியிலேயே வந்துவிட்டனர். அவர்களுக்கு விஜய்பார்க் விடுதியில் அறை. ராஜகோபாலன் பேச்சாளர் ஆதலால் அவருக்கும் வேறு விடுதியில் அறை.

அரசனும் அவர் சித்தியும்

மதிய உணவுக்கு ஐம்பதுபேர் இருந்தனர். பொட்டலங்கள் கொண்டுவரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன. இப்போதெல்லாம் பொட்டலங்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் கொண்டு வருகிறார்கள். இவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன என நம்புகிறேன். கோவை வாழையிலை நிறைந்த மாவட்டம். ஏன் வாழையிலைப் பொட்டலங்களாக உணவைக் கொண்டு செல்லக்கூடாது?

வாழையிலை ஆரோக்கியமானது. எனக்கு வாட்டிய வாழையிலையின் மணம் மிகவும் பிடிக்கும். அந்தக் காலத்தில் நாங்கள் வாழையிலையை வாட்டி அதில் சோற்றை இறுக்கமாக பொட்டலம் கட்டி தாளில் சுற்றி கல்லூரிக்குக் கொண்டு செல்வோம். மதியம் வாழையிலை மணத்துடன் இருக்கும் சோறு ஒரு அழகிய நினைவு.

பிளாஸ்டிக் டப்பாக்களில் சூடான பொருட்களை வைத்து உண்பது நல்லதல்ல, உடலில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலக்கும் என்கிறார்கள். வாழையிலையை சரியாக பொட்டலம்கட்டும்படி ஏதாவது வகையில் மேம்படுத்தலாம். கமுகுப்பாளை தட்டுகளாக ஆவதுபோல. இயற்கை உணவு போன்றவற்றுக்கு வழிகாட்டியாக திகழும் கோவை நகர் இதிலும் ஒரு முன்னோடியாக ஆகலாம்.

இயக்ககோ சுப்ரமணியம் தலைமையுரை

பி.ஏ.கிருஷ்ணன் உரை
டி பாலசுந்தரம் வாழ்த்துரை
ராஜகோபாலன் வாழ்த்துரை
ஜெயமோகன் வாழ்த்துரை

தமிழகத்தில் எப்போதும் நான் கவனிக்கும் ஒன்று உண்டு, பாராட்டு விழாக்கள். எவரையேனும் எவரேனும் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நகரில் ஒருநாளில் எப்படியும் ஒன்றிரண்டு பாராட்டு விழாக்கள் நடைபெறும். ஆனால் மெய்யான சாதனையாளர்களை எவரும் பாராட்டுவதில்லை. மௌனமாகக் கடந்து செல்கிறார்கள். பல தருணங்களில் நாகர்கோயிலில் நான் லக்ஷ்மி மணிவண்ணனை அழைத்து “எவரெல்லாம் பாராட்டினார்கள்” என்று கேட்பேன். எவருமே எதுவுமே செய்யவில்லை என்ற பின்னர்தான் நாங்கள் ஒரு வாழ்த்துக் கூட்டம் ஏற்பாடு செய்வோம்.

இத்தகைய வாழ்த்துக் கூட்டங்கள் நமக்கு நாமே செய்து கொள்வனதான். நாம் தூக்கிப் பிடிக்கும் விழுமியங்களைக் கடைப்பிடித்த ஒருவரை வாழ்த்துவதென்பது நமக்கான உறுதிப்பாடும்கூட. தமிழ்ச்சூழல் ஒட்டுமொத்தமாக வேறொரு திசையில், அறிவுமறுப்பு பெருக்கு என சென்று கொண்டிருக்கிறது. எதிர்மறையாக சொல்வதும் செய்வதும் மட்டுமே கவனம் பெறுகிறது. நாம் நமது தனிவழியில் ஆக்கப்பூர்வமாக செய்து கொண்டிருக்கிறோம். அதை நாமே நமக்குள் அங்கீகரித்துக் கொள்கிறோம்

ஜான் சுந்தர்

விழாவுக்கு நான் முன்னதாகவே சென்றேன். அருட்செல்வப்பேரரசனை அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அழைத்துக் கொண்டோம். அவருடைய மனைவியும் சித்தியும் இன்னொரு விடுதியில் தங்கியிருந்தனர். அவர்கள் தனியாக வந்தனர். விழா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில். ஆறுமணிக்கெல்லாம் அனைவரும் வந்துவிட்டார்கள்.

ஜான் சுந்தர் அவருடைய கம்பீரமான குரலில் பாரதி பாடலுடன் விழாவை தொடங்கி வைத்தார்.பொதுவாக உரைகளில் ஏதேனும் ஒன்று சற்றே சரியாக அமையாமல் போவது ஒரு மரபு. இம்முறை எல்லா உரைகளுமே சிறப்பாக அமைந்தன. செல்வேந்திரனின் தொகுப்புரை முதல் அருட்செல்வப்பேரரசனின் ஏற்புரை வரை. டி.பாலசுந்தரம் அவர்கள் தகவல்செறிவுடனும் நகைச்சுவையுடனும் முதல் உரையை தொடங்கியது உகந்த ஒரு உளநிலைச்சூழலை உருவாக்கியது என நினைக்கிறேன்.

பி.ஏ.கிருஷ்ணன் மகாபாரதத்தின் அன்றாடத் தன்மையில் தொடங்கி இன்றைய சூழலில் அதன் இடம் வரை சுட்டி ஓர் உரையாற்றினார். பெருமுயற்சிகளின் தொடர் எப்படி என்றும் இந்நிலத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.ராஜகோபாலனின் உரையும் அவருடைய சிறந்த உரைகளில் ஒன்று. அருட்செல்வப்பேரரசனின் மொழியாக்கப் பணிகளின் முழுமை பற்றி பேசினார்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் வாழ்த்து

வானவராயர்,  நாஞ்சில்நாடன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், முன்னாள் மேகாலயா ஆளுநர் வி.ஷண்முகநாதன், கோவை கொடிஷியா புத்தகக் கண்காட்சி அமைப்பாளர் சௌந்தரராஜன், காலப்பிரதீப் சுப்ரமணியன் [லயம்]  என முதன்மையான பலர் அரங்கில் இருந்தனர். சென்னையிலிருந்து கல்கி உதவியாசிரியர் அமிர்தம் சூரியா உள்ளிட்ட பலர் வந்திருந்தார்கள்.

அருட்செல்வப் பேரரசனுக்கு நான் ஒரு புத்தர் சிலையை பரிசாக அளித்தேன். பாண்டிச்சேரி நண்பர்கள் சார்பில் வெள்ளிப் பதக்கம் பொறிக்கப்பட்ட வாழ்த்துப் பலகை அளிக்கப்பட்டது. பாராட்டுரைகள் எல்லாமே உளம் நிறைந்தவையாக இருந்தன. விழா இறுதியில் நிறைந்திருந்த அவை எழுந்து நின்று ஐந்து நிமிடம் கைதட்டலோசை எழுப்பி அவரைப் பாராட்டியது நிறைவூட்டும் ஒன்றாக இருந்தது.

பாண்டிச்சேரி நினைவு விருது

அருட்செல்வப்பேரரசன் ஆற்றியது பெரும்பணி, ஆனால் அதை தமிழ்ச்சூழலில் சொல்லிப் புரியவைப்பது கடினம். செல்வேந்திரன் அவர் அழைத்துப் பேசிய பலரும் “அதான் ஏகப்பட்ட மகாபாரதம் இருக்கே” என்று சொன்னதாகச் சொன்னார். உண்மையில் மகாபாரதத்தின் முழுவடிவம் தமிழில் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது [ம.வீ.ராமானுஜ ஆச்சாரியார் மொழியாக்கம்] என்பதும் அதுவும் எழுபதாண்டுகள் அச்சில் இல்லாமல் இருந்து இப்போதுதான் கிடைக்கிறது என்பதும், அதுவுகூட சிலநூறு பிரதிகளே அச்சிடப்பட்டுள்ளன என்பதும் தெரியாது. பலவகையான சுருக்கங்களையே அவர்கள் மகாபாரதம் என நினைக்கிறார்கள்.

மகாபாரததத்தின் கலைக்களஞ்சியத் தன்மை பற்றிய புரிதலே எவரிடமும் இல்லை. அதற்கான தேவை குறித்து சொன்னாலும் புரிவதில்லை. அறிஞர்கள், ஆய்வாளர்கள் அன்றி எவரிடமும் இப்பெரும்பணியின் முதன்மையை விளக்கிவிட முடியவில்லை. ஆகவேதான் இத்தகைய பணி முடிந்தபின் எழுந்த ஏற்பும் பாராட்டும் இத்தனை குறைவாக உள்ளது. வழக்கம்போல வருங்காலத்தை நம்பி இதைச் செய்யவேண்டியதுதான்..

ஒரு நண்பர் கேட்டார். கோவையில் ஒரு மகாபாரதக் கதை சொல்லி வந்துபேசினால் இரண்டாயிரம் பேர் வருகிறார்களே, இங்கே ஏன் அவர்களில் ஒருவர் கூட இல்லை என்று. நான் சொன்னேன்  ‘ஹீலர்’ வந்து பேசினால்  மேலும் ஆயிரம்பேர் வருகிறார்கள். அதில் ஓர் உலகியல் அம்சம் உண்டு. நம் மக்களில் அனேகமாக அனைவருமே உலகியலில் திளைப்பவர்கள். அப்பால் ஒன்று உண்டு என்றே அறியாதவர்கள்.

ஆகவே இத்தகைய விழாக்கள் வழக்கமான பக்தர்களுக்கு அல்லது அரசியலுக்கு உகந்தவை அல்ல.  இதிலுள்ள உலகியலுக்கு அப்பாற்பட்ட ஓர் அம்சம் அவர்களைப் பயமுறுத்துகிறது. விலக்குகிறது. அதை அக்கூட்டத்திற்கு வந்தவர்களைப் பார்த்தும் உறுதிசெய்து கொண்டேன். முழுக்க முழுக்க இலக்கிய வாசகர்கள். பிறருக்கு இப்பணியின் மதிப்பும் இடமும் புரிவதில்லை.

விழாவின் இறுதியில் அனைவருக்கும் இரவுணவு வழங்கப்பட்டது. மிகச்சிறப்பான உணவு ஆங்காங்கே நின்று கூடிப் பேசி உணவுண்டோம். பொதுவாக இத்தகைய விழாக்களில் உணவு தேவையில்லை என்பது என் எண்ணம். ஆனால் நண்பர்கள் விரும்பினார்கள். ஆனால் ஒரு விழா முடிந்ததும் அவசர அவசரமாகக் கலைவதற்குப் பதிலாக ஒரு விருந்துண்டு அளவளாவுவது ஒரு தனி நிறைவை அளிப்பது உண்மை.

 

அருட்பேரரசன் துணைவி லக்ஷ்மிக்கு மரியாதை செய்தபோது

இரவு ஒன்றரை மணிவரை இலக்கியம் கொஞ்சம் பேய்க்கதை என்று பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் காலை எழுந்து பேசியபடியே டீ குடிக்கச் சென்றோம். அதே டீக்கடை. ராஜஸ்தானி பவனுக்கு அருகே உள்ளது. ராஜஸ்தானிபவன், குஜராத்திபவன் வழியாகச் செல்லும்போது அங்கே நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாக்கள் நினைவிலெழுந்து ஓர் ஏக்கம் வந்து மூடுவது வழக்கம். ஒருமாதம்தான் கடந்திருக்கிறது என்றாலும் அபி விருதுவிழாவே அந்த ஏக்கத்தை உருவாக்கியது.

கோவை இன்னும் குளிர்விலகாமல் அழகாகவே இருந்தது. நண்பர்கள் எப்போதும் ஒரு கலவையான விகிதத்தில் இருப்பார்கள். நன்கு அறிந்த வழக்கமான கூட்டம் ஒரு பகுதி. அன்று புதிதாக வந்தவர்கள் ஒரு பகுதி. புதியவர்கள் ஒருவகை திகைப்புடன் பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள். பழையவர்கள் கேலியும் கிண்டலுமாகக் கொப்பளித்தபடி இருப்பார்கள்.

டைனமிக் நடராஜன் நன்றியுரை

டீக்கடைக்காரர் உற்சாகமாக வரவேற்றார். இருபத்தாறு டீ காப்பியை தனித்தனியாகவும் ஒட்டுமொத்தமாகவும் ஆணையிடும் கூட்டம் நாங்கள்தான். எங்களை ஒரு மர்மமான தீவிரமான கூட்டமாக அவர் நினைத்திருக்கக்கூடும். அல்லது உருவாகிவரும் ஒரு புதிய அரசியல் கட்சியாக எண்ணியிருக்கலாம்.

“கோவையில் அடுத்த நிகழ்ச்சி எப்ப சார் ?” என்று ஒரு நண்பர் கேட்டார்.   “கோவையில் இப்போதுதானே ஒரு நிகழ்ச்சி வைத்தோம்?” என்றேன்.  “அது போன வருஷம்ல?” என்றார். இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் கூடிவிட்டன. விஷ்ணுபுரம் விழா முடிந்ததுமே சென்னையில். உடனே இங்கே. இனி உடனே ஊட்டி. அடுத்து குமரகுருபரன் விழா. அது முடிந்ததுமே அடுத்த விஷ்ணுபுரம் விருது பற்றியப் பேச்சுக்கள் தொடங்கிவிடும்.

அருட்செல்வப்பேரரசன் ஏற்புரை

அரசனின் மொழியாக்கத்தை முன்வைத்து மகாபாரதத்தின்முழுவாசிப்புபற்றிய ஒரு பேச்சு தொடங்கினால் நன்று என்னும் எண்ணம் எனக்கு உருவானது. மகாபாரத வாசிப்பின் இயல்பு என்பது பக்தி சார்ந்த பாராயணம் ஓர் எல்லையில் என்றால் இன்னொரு எல்லையில் அறிவார்ந்த ஆய்வுநோக்காகவும் அமையவேண்டியிருக்கிறது. அது நம்மை நாமே அறிந்துகொள்ள, நம் பழைமையின் அறுபடாத தொடர்ச்சியைப் பேணிக்கொள்ள, நம் ஆழுள்ளத்தை நம் மண்ணின் கனவுகளால் நிறைத்துக்கொள்ள இன்றியமையாதது.

அதற்கு மகாபாரதம் என்னும் மாபெரும் புராணதொன்மவரலாற்றுக் கலைக்களஞ்சியம் முழுமையாகவே கிடைக்கவேண்டும். சுருக்கங்கள் உதவாது. உண்மையில் சுருக்கமான மகாபாரதங்கள் எவையாயினும் அவை மகாபாரதத்திற்கு நியாயம் செய்வதில்லைஅவை ஏதேனும் ஒரு கோணத்திலேயே சுருக்கப்பட்டிருக்கும். அருட்செல்வப் பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் இன்றைய மொழிநடையில் அமைந்திருக்கிறது. முழுமையானது. அது அத்தகைய பெருவாசிப்புக்கு மிக உதவியானது.

இரண்டாம் தேதி பகல் முழுக்க ராஜாநிவாஸில்தான். பகலில் இருபது பேர் இருந்தோம். தொடர்ச்சியாக இலக்கியம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பல்வகையான பேச்சுக்கள். விமர்சனங்கள். இத்தகைய ‘கட்டற்ற’ உரையாடல் வழியாக நிகழும் கல்வி ஒன்று உண்டு. அது முன்பெல்லாம் மிகுதியாக இருந்தது. இன்று அருகி வருகிறது.

மாலையில் தான் கிளம்பினேன். ஒவ்வொரு நண்பராக விடைபெற்றார்கள். அந்தியில் என் ரயில். இம்முறையும் உளநிறைவே. செய்யவேண்டிய ஒன்றை முறைப்படிச் செய்தோம் என்னும் எண்ணம். அருட்செல்வப்பேரரசரின் பெரும்பணியை பிற ஊர்களிலும் நண்பர்கள் அடையாளம் கண்டு முன்வைக்கவேண்டும் என விரும்புகிறேன்.

அரசன் பாரதம் நூலாக, அச்சுவடிவில் வெளியாகவேண்டும். இணையத்தில் அது இலவசமாகவே கிடைக்கிறது. மின்நூலாகவும் உள்ளது. ஆனால் அச்சுவடிவம் என்பது ஒரு நூலுக்கு இன்றியமையாதது. இணையவடிவம் என்றேனும் ஏதேனும் நிகழ்வால் இல்லாமல் போய்விடலாம் என்னும் எண்ணம் எனக்கு இன்று உள்ளது. சமீபத்தில் மலேசிய அறிஞர் ஒருவர் சேகரித்த அரிய தகவல்கள், நூல்கள் கொண்ட அவருடைய இணையதளம் இல்லாமலாகி அனைத்துமே மறைந்துபோய்விட்டதைப்பற்றி நவீன் சொன்னார். அச்சில் என்றால் எங்கேனும் ஒரு பிரதியேனும் இருக்கும்.

இன்றைய சூழலில் இருநூறு பிரதிகள் வாங்குபவர்கள் இருந்தால் அச்சில் கொண்டுவர முடியும். இப்ப்டி ஒரு  பெரிய நூலை, ஒருவகையில் கலைக்களஞ்சியம் போன்ற குறிப்புநூலை , சாதாரண வாசகர்கள் வாங்குவார்கள் என்று சொல்லமுடியாது. சற்றே நிதிவசதி உள்ளவர்கள் கல்விநிலையங்கள், ஆசிரமங்கள் போன்றவற்றுக்கு வாங்கி அன்பளிப்பாக அளிக்கலாம்.

 

அரசன் பாரதம் நிறைவுவிழா புகைப்படங்கள்

 

=========================================================================================================

அருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…

அருட்செல்வப் பேரரசன் பேட்டி- கல்கி

அரசன் பாரதம் -குங்குமம் பேட்டி

அருட்செல்வப்பேரரசன் அந்திமழை பேட்டி

=================================================================

ஆதி பர்வம் – முழுமஹாபாரதம் – 1 – ₹.190.00

புத்தகத்தை இந்தியாவில் வாங்க –  https://www.amazon.in/dp/B079R8SK5V வெளிநாடுகளில் வாங்க –  https://www.amazon.com/dp/B079R8SK5V

===============================================================

மகாபாரதம் இந்தியாவின் பண்பாட்டுச் செல்வம்: எழுத்தாளர் ஜெயமோகன் 

முந்தைய கட்டுரைஅழகியபெரியவன் கதைகள் – காளிப்பிரசாத்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 67