பேய்ச்சி உரை -கடிதம்

 

அன்பின் அருணா

நலம்தானே!

நவீனின் பேய்ச்சி நாவல் குறித்தான தங்களின் 45 நிமிடத்திற்கும் மேலான உரையை  முழுவதும் கேட்டேன். அருமையாக இருந்தது. நாவலின் உள்ளடக்கம் முழுவதையும், நாற்றுப்பரப்பின் மீது அலைஅலையென தடவிச்செல்லும் காற்றைபோல மெல்ல வருடிச்செல்கிறீர்கள்.எனினும்  முழுக்கக்கேட்டதும் இனி வாசிக்கவேண்டியதில்லை என்னும் உணர்வு தோன்றாமல் நீங்கள் அதை சுவைபடகூறும் விதத்தினாலேயே பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டுமென்று தோன்றிவிட்டது.

முழு உரையையும் நினைவிலிருந்தே பேசுகிறீர்கள். இறுதி 5 நிமிடத்தில் ஒரே ஒருமுறை கண்ணாடியை போட்டுக்கொண்டு  குறிப்பை  பார்க்க எத்தனித்து பின்னர் அவ்வெண்ணத்தை புறக்கணித்து மீண்டும் உளளத்திலிருந்தே சொல்லத்துவங்குகிறீர்கள்

பேய்ச்சியை நீங்கள் விவரித்தவிதம் அழகோ அழகு. சின்னப்பிள்ளைகள் பள்ளியில் கதையையோ பாடலையோ சொல்லுவதுபோல அத்தனை அபிநயித்து லயித்து சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்

அரைமணிநேரத்திற்கு பின்னர் கொஞ்சம் களைப்படைந்து மூச்சுவாங்கினாலும் கதை உருவாக்கிய மகிழ்ச்சியும் உணர்வெழுச்சியும் உங்களை செலுத்த தொடர்ந்து பேசிக்கொண்டேஇருக்கிறீர்கள்

கதையை முழுதாக உள்வாங்கிக்கொண்டு  விரிவாக அவற்றைக்குறித்து பேசப்பட்ட பல உரைகளை கேட்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் பேய்ச்சி கதைக்களத்துக்குள் நின்று, கதையுடன் இரண்டறக்கலந்து கதையை எங்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தீர்கள். அந்த போடியத்தையே பேய்ச்சி கதையின் களமாக்கி, அதற்குள்ளேயே எங்களுக்கு உங்களின் அழகிய கைஅசைவுகளால் காட்சிகளை விவரிக்கிறீர்கள். தூரம் என்பதற்கு தொலைவில் கையைக்காட்டி, கிணறு என்று சொல்லுகையில் விரல்களால் ஒரு சிறு வட்டம் வரைந்து அக்கிணற்றைக் காட்டி, அங்கிருந்து இங்கிருந்து கொண்டுவந்ததையெல்லாம் அப்படி அபடியே கைகளைக்கொண்டு காட்டிக்காட்டி விவரிக்கிறீர்கள்

அங்கே ஓடை அங்கே மரங்கள் இங்கே கோவில் என்று உங்கள் கைகள் சுட்டிக்காட்டிய இடங்களிலெல்லாம் என் மனம் ஓடிஓடிச்சென்றுகொண்டே இருந்தது. நீங்கள் கதைக்குள்ளே சென்று சொல்வதல்லாமல் கேட்கும் என்னையும் கையைப்பிடித்து உள்ளே கூட்டிச்சென்று கதையை, அக்கதை மாந்தர்களை, நிகழ்வுகளை   விவரிக்கிறீர்கள்

அபாரமான நினைவாற்றல் உங்களுக்கு ஏராளமான கதாபாத்திரங்களின் பெயர்களை, அவர்கள் எங்கிருந்து வந்தார்களென்பதை  அவர்களின் இயல்புகளை  வரிசையாக சொல்லிக்கொண்டே போகிறீர்கள், கதையை மூன்று முக்கிய சரடுகளாக பிரித்துச் சொல்லி பின் உப சரடுடகளுடன் அவை பின்னப்பட்டதை சொன்னது மிகவும் சிறப்பு, இனி  பேய்ச்சியை வாசிக்கையில் இவ்விளக்கம் பெரும் உதவியாக இருக்கும். எல்லா நாவல்களையும் சில முறை வாசிக்கும் வழமை உள்ளவள் நான். பேய்ச்சியை அப்படியல்லாது ஒருமுறை வாசித்தாலே போதுமென்னும் அளவுக்கு உங்களின் விவரிப்பில் கதைகுறித்தான தெளிவான ஒரு முன்கட்டமைப்பு மனதினுள் உருவாகிவிட்டிருக்கிறது.

அவ்வபோது அடுத்து என்ன சொல்வதென்று கொஞ்சமே கொஞ்சம் தயங்கி பின்னர் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புடவைகளில் ஒவ்வொன்றாய் தொட்டுத்தொட்டுப்பார்த்து  வேண்டியதை தெரிவு செய்து உருவி எடுப்பதைப்போல ஒவ்வொரு சம்பவமாய் நினைவின் அடுக்குகளிலிருந்து தேடிஎடுத்து முகம் மலர சொல்கிறீகள். அப்படி சொல்லுகையில் முகம் சாய்ந்து,  கருமணிகள் விழியின் ஓரத்திற்கு சென்று கழுவிய  புறாமுட்டைகள் போல உங்களின் அகலக்கண்கள் இன்னும் பெரிதாக மலர்கின்றது.

கவண்கல்லில் ஆங்ஸாவையே சிறுவன் அடித்ததை சொல்லுகையில் அதை நீங்களே செய்துவிட்டதுபோல  மெல்ல கிளுகிளுத்து சிரிக்கிறீர்கள். மஞ்சள் பறவை ரத்தம் சிந்தி மரணித்ததை சொல்லுகையில் குரல் இறங்கி முகம் மாறுபட்டு அச்சோகத்தை கேட்பவர்களுக்கும் கடத்தினீர்கள். அப்போய் குறித்தும் நாய்க்குட்டியை குறித்தும் சொல்லுகையில் அத்தனை குதுகாலம் உங்களின் உடல்மொழியில். அப்போய் போன்ற சிறுவர்களின் கதாபாத்திரங்களை சொல்லுகையில் உங்களின் வாசிப்பின், அறிவின் விசாலம் தெரிகின்றது பதேர் பாஞ்சாலியிலிருந்து நடாஷாவின் தம்பி வரை அடுத்தடுத்து சொல்லுகிறீர்கள்.

அதுபோலவே புதிய நிலத்தில் தங்களைபொருத்திக்கொள்ள முடியாமல், அப்பதற்றத்தில் குடிக்குள் மூழ்கும் ஆண்களை நீரில் வேரின்றி மிதக்கும் பாசிக்கும், ஆண்கள் அப்படியிருப்பதால், உளவிசை கூடிய பெண்கள் வேர்பிடித்த ஆல் போல அங்கு ஊன்றி வளரத்துவங்குகிறார்கள் என்று ஒப்பிட்டது வெகு சிறப்பு.

உங்களின் உள்ளம் முழுக்க கதைக்களத்துக்குள் முழுமையாக ஒன்றியிருப்பதை கேட்பவர்கள் உணரமுடிகின்றது. ஈரமூக்கை கைகளில் வைக்கும் நாய்க்குட்டியை சிறுவன் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடிச்செல்லுவதை சொல்கையில் நீங்கள் மேடையிலிருந்து ஓடிசெல்லாமலிருந்ததுதான் வியப்பு. எத்தனை அர்ப்பணிப்புடன், ஆர்வத்துடன் கதையை சொல்லுகிறீர்கள்?

பேய்ச்சியை அடுக்கடுக்காக பிரித்து, அழகாய் எங்கள் முன்னே காட்டுகிறீர்கள், ஒரு மலரை அதன் பாகங்களை. ஆய்வுக்கூடத்தில் முதலில் புல்லிவட்ட இதழ்களை, பின்னர் அல்லிவட்ட இதழ்களை, பின்னர் சூலகம், மகரந்த காம்புகள் என ஒவ்வொன்றாக பிரித்து பிரித்து மாணவர்களுக்கு விளக்குவதை உங்களின் உரையுடன்  ஒப்பிட்டுக்கொண்டேன்

கதையை அதில் கூறப்பட்டிருக்கும் மக்களை நிலப்பரப்புக்களை மொழியை பின்னர் கதாபாத்திரங்களின் இயல்பை என ஒவ்வொன்றாக சொல்லிச்சென்றது மிக நன்றாக இருந்தது

கோழிகள், விலங்குகள், யட்சி ராஜநாகம் தாவரங்கள், மூலிகைகள் என கலந்துவரும் பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டும் என்னும் பெரும் விருப்பத்தை உங்கள் உரை ஏற்படுத்தியிருக்கிறது. இதோ வாங்கி வாசிக்கத் துவங்கிவிட்டிருக்கிறேன். எப்போதும் பொருத்தமாக பாந்தமாகவெ உடையணிவீர்கள். அப்படியே இந்த உரையின் போது அணிந்திருந்த ஆழ்நீலத்தில் இளம்பச்சை சரிகைக்கரையிட்ட புடவையும் உங்களின் கண்ணியமான தோற்றத்தை இன்னும் கூட்டிக்காட்டியது.

உங்களைப்போல இப்படி வரிவரியாக ஆழ்ந்து வாசித்து உணர்வெழுச்சியுடன் மணிக்கணக்காக  ஒரு கதையை பேசமுடியுமென்னும் அளவிற்கு ஒருவர், ஒரே ஒருவர் வாசிப்பார்களேயானால் அதன் பொருட்டு உயிரைக்கொடுத்தாவது ஒரு கதையை எழுதிவிடவேண்டும் என்று எனக்கே கூட தோன்றியது ):

புத்தாண்டு வாழ்த்துக்கள்

மிக்க அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைஉலகெலாம் -கடிதம்
அடுத்த கட்டுரைகதாபாத்திரப் பரிணாமம் ,விமர்சனம்