மொழி 8,மலையாளம் என்ற தூயதமிழ்

எஸ்.வையாபுரிப்பிள்ளை

அன்புள்ள ஜெயமோகன்,

நூறுநாற்காலிகள் விமர்சித்து எழுதிய கடிதத்துக்கு பதிலளிக்கையில்

“தமிழ் தூய்மையாகும் தோறும் நல்ல மலையாளம் நோக்கி நகரும் என்பது என் எண்ணம்” என்று நீங்கள் கூறியுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து விட்டேன். காரணம் கடந்த அறுபத்து மூன்று வருடங்களாக சென்னைத்தமிழனாக, அதுவும் பேட்டைவாசியாக வாழ்ந்து சமீபத்தில் கேரளத்தில் குடியமர்ந்த எனக்கு தினசரி நடைமுறை வாழ்க்கையில் காதில்விழும் நல்ல மலையாச்சொற்கள் அனைத்தும் தூய தமிழ்ச்சொற்களாகவே தெரிகிறது. காலையில் காணும் நபரிடம் நலம் விசாரித்து எங்கேபோய் வருகிறீர்கள் என்றால் “தொழுதிட்டு” என்கிறார். மதியம் கேட்டால் “சோறு உண்டிட்டு “ என்கிறார்.இதையே நாங்கள் சென்னையில் “சாமி கும்பிட்டு” “சாப்டுட்டு” வரேன் என்போம்.இப்படியாக தெய்வம், தொழுதல்,உண்பது, குளம், சோறு, கூட்(டு)டான், நோக்கி, வெள்ளம், உறக்கம், சம்பிரதாயம், பந்துக்கள், மூத்தார்,சுகம்,துக்கம்,தாகம், கண்ணீர் என்று பெரும்பான்மை மலையாள சொற்கள் தூய தமிழாகவே தெரிகிறது.சென்னையில் நான் பேசும் தமிழாகிய “ இன்னாபா எப்டிகிறே ? கண்லியே காணோமே, பேஜாரு, கலீஜு, இஸ்துகினு, அம்பேல், ஜூட்,அலம்பல்,அப்பீட்டு,ஓபோடு,தல,காலி, வா நைனா, ஆகியவையெல்லாம் தமிழாகவே தெரியவில்லை.நாங்கள் வேறு ஏதோ மொழிதான் பேசுகிறோம் எனத்தோன்றுகிறது.இங்கு கேரள குக்கிராமத்தில் தூயதமிழில் பேசுகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. தமிழ் தூய்மையாகும் தோறும் நல்ல மலையாளம் நோக்கி நகரும் என்னும் உங்கள் வாக்கு நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். நீங்கள் கூறியதின் பிறகு வள்ளுவநாடன் மலையாளம் எனக்கு மிகத்தூய தமிழாகவே தெரிகிறது.மொழி மட்டுமல்ல, இந்த கிராமத்து மக்களிடையே உள்ள அந்த இயல்பு, எளிமை, நட்பு, இறைபக்தி, வறுமை,சுத்தம் ஆகியவை அன்றைய பண்டைய தமிழகத்தையே பிரதிபலிக்கிறது.

விடை தெரியாமல் இருந்த புதிருக்கு விளக்கமளித்தமைக்கு,

நன்றி! ஜெயமோகன். நன்றி !

அன்புடன்

கெ.குப்பன்

சிங்கப்பூர்

அன்புள்ள குப்பன்,

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவர் வெளிவந்த நாட்களில் ஒரு வினா எழுந்தது, அக்கால தமிழ் அப்படியா பேசப்பட்டிருக்கும் என. அதை வடிவமைத்தவர் டாக்டர் ராமச்சந்திரன், பழந்தமிழ், தொல்பொருள் பேரரறிஞர். அந்த தமிழ் யாழ்ப்பாணத்தமிழ் போல, மலையாளம் போல ஒலித்தது என்றார்கள். பலர் அறியாதது, பழங்குடிகளின் தமிழும் அப்படித்தான் இருக்கும். ஓரளவு மீனவர்களின் தமிழும் அந்த ஒலி கொண்டிருக்கும்.

தமிழ் இன்றுபேசப்படும் விதம் தெலுங்கு ஒலிகொண்டது. அதாவது தமிழை உருக்கி தெலுங்கு அச்சிலிட்டு வார்த்தது போல. ஏனென்றால் முந்நூறு வருடம் தமிழகம் தெலுங்கர்களால் ஆளப்பட்டது. அவர்கள் பெருமளவில் தமிழ்நாட்டுக்குள் குடியேறினார்கள். ஆனால் அன்னியர்களாக இல்லாமல் இச்சமூகத்துடன் கலந்தார்கள். இன்றும் தமிழ்நாட்டின் பெசும்செலவ்ங்களாக உள்ள ஏரிகளையும் சந்தைகளையும் ஆலயங்களையும் உருவாக்கினார்கள். அவர்களுக்கு இசைவாக தமிழ் மாறியது.

ஆனால் மலைகளால் பொத்தப்பட்ட கேரளம் அந்த பாதிப்பை பெறவில்லை. அதன் பாதிப்பு சம்ஸ்கிருதம். அது கீழே வராது. ஆகவே அடித்தளத்தில் பழந்தமிழாகவும் மேலே சம்ஸ்கிருதமாகவும் அது நீடித்தது. ஆகவே ‘தூய’ மலையாளம் என்பது அடித்தள மலையாளம். அது ஒரு வகை பழந்தமிழ்.

அதேதான் யாழ்ப்பாணத்தமிழும். அதேதான் பழங்குடிகள் மற்றும் மீனவர்களின் தமிழும். மொழிக்கலப்பற்ற தன்மையால் பல அசல் சொற்கள் பேணப்பட்டன. குமரிமாவட்டத்தில் பிறந்த ஒருவர் பழந்தமிழில் நுழைவது எளிது. எஸ்.வையாபுரிப்பிள்ளை பெரும்பாலான தூய மலையாள சொற்களை தமிழ் பேரகராதியில் சேர்த்துக்கொண்டார்.

இது சொற்கள் விஷயத்தில் மட்டும் அல்ல. சடங்குகள், ஆசாரங்கள், விழாக்கள் போன்ற பண்பாட்டுக்கூறுகளிலும்கூட உள்ளது. பழந்தமிழ் வாழ்க்கை அம்சங்களே அசலான கேரள பண்பாட்டை உருவாக்கியுள்ளன.

ஜெ

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு…