ஊழும் பொறியியலும்

கோவை மேம்பாலம்

பார்வதிபுரம் பாலம்

 

பார்வதிபுரம், தொடுவட்டி மேம்பாலங்களுக்குப்பின் இங்கே வாகனநெரிசல் குறைந்திருக்கிறதா என்று ஒருவர் கேட்டார். கேட்கப்பட்டவர் யதார்த்தவாதி. “மேம்பாலங்களுக்கு மேலே நெரிசல் இல்லேண்ணுதான் சொல்லணும்” என்றார். என்ன ஆச்சரியம் என்றால் கேட்டவரும் யதார்த்தவாதிதான். “அப்டியா… கடுப்பத்திலே ஒரு சாயா” என்று அவரும் நிறைவடைந்துவிட்டார். எனக்குத்தான் ஒரு குழப்பம். நான்தான் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ?

 

பார்வதிபுரம் உட்பட சமீபத்தைய மேம்பாலங்களின் பொறியியல் நவீனமானது, ஆகவே புரிந்துகொள்ளச் சிக்கலானது, கடந்துபோவதிலும் அந்தச் சிக்கல் எதிரொலிப்பதில் ஆச்சரியமில்லை. உதாரணமாக பார்வதிபுரம் திருவனந்தபுரம் சாலையின்மேல் மேம்பாலம் y வடிவில் இருக்கிறது. ஜெயசேகரன் ஆஸ்பத்திரி சாலை ஒன்றும் பென்ஸாம் ஆஸ்பத்திரி சாலை ஒன்றும் வந்து டேவிட் ஆஸ்பத்திரிக்கு மேல் இணைந்து சுச்ருஷா ஆஸ்பத்திரி சாலை நோக்கிச் செல்கின்றன. இவை இரட்டைச்சாலைகள்

 

நேர்கீழே ஆழத்தில் பார்வதிபுரம் இருக்கிறது. இங்கே அதே ஜெயசேகரன் ஆஸ்பத்திரிச்சாலையின் இருகிளைகள், பென்ஸாம் ஆஸ்பத்திரிச் சாலையின் இரு கிளைகள் வந்து இணைகின்றன. மெர்லின் ஆஸ்பத்திரிச் சாலையின் கிளை ஒன்றும் பெருவிளையிலிருந்து வரும் டேவிட் ஆஸ்பத்திரிச் சாலையும் இவற்றுடன் இணைகின்றன. சாரதா நகரிலிருந்து வரும் சாலையும் இங்கே இணைகிறது

 

இவையும் மேலே செல்லும் மேம்பாலச் சாலைகளும் சிசுரூஷா ஆஸ்பத்திரிச் சாலையை நோக்கி செல்கின்றன. இந்த மொத்தச்சாலைகளும் கொத்தாக சென்று இணையும் இடம் கிருஷ்ணகுமார் ஆஸ்பத்திரிக்கு முன்னால். அங்கே இவையனைத்தும் ஒரு நகரப்பேருந்தின் அளவுக்கே அகலம் கொண்ட ஒரு சாலையாக மாறுகின்றன. அதாவது குப்பிக்கழுத்து. இங்கே குப்பி வாத்துபோல சற்றே நீளமான கழுத்து கொண்டது.

 

அந்தக் காலத்தில் நாறாணத்து பிராந்தன் என்னும் சித்தர் கேரளத்தில் இருந்தார். அவருக்கு வலக்காலில் யானைக்கால். அவருக்குமுன் பகவதி பேருருக்கொண்டு தோன்றி “சொல் பக்தா, நீ வேண்டுவதென்ன?” என்றார். “வலக்கால் வீக்கத்தை இடக்காலுக்கு மாற்றித்தரவேண்டும்” என்று அவர் கேட்டார். விதியை தெய்வம் என்ன செய்யமுடியும் என்பதைச் சுட்டும் கதை இது. பொறியியலாளர்களும் நம்மிடம் சொல்வது இதைத்தான் நாம் ஊழில் நம்பிக்கைகொண்ட நாடு. ஊழையும் கருத்தில்கொண்டு அமைக்கப்படும் பொறியியல் கட்டுமானங்கள் இவை.

 

பார்வதிபுரத்தில் சாலையோரக் கடைகளின் பாதிப்பங்கு சாலைக்குமேல்தான். அவற்றை அகற்ற முடியாது. ஏனென்றால் அவற்றை அகற்றினால் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கவேண்டியிருக்கும். அதை கொடுக்கமுடியாது, ஏனென்றால் அவர்கள் உரிமையாளர்கள் இல்லை. ஆகவே அப்படியே சாலையைப் போட்டுவிட்டார்கள். பேருந்துகள் பலசமயம் கடைக்குள் ஒரு சக்கரம் ஏறி சரிந்து செல்கின்றன. பரோட்டாக்களில் புகைமணமும் தூசுமணமும் இருப்பது பார்வதிபுரம் ரெஸிப்பி என ஏற்கப்பட்டுவிட்டது.

 

குன்னத்துகல் என்னும் ஊரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அது ஒரு ஊர் அல்ல, ஒரு பெருநிகழ்வு. அக்காலம் முதல் குன்னத்துகல் கதைகள் பிரபலம். இன்றும் குமரிமாவட்டத்தில் குன்னத்துகல் ஒரு ஞானமார்க்கமாக திகழ்கிறது- எல்லா ஞானமார்க்கங்களிலும் நுண்வடிவில் கலந்துவிட்டிருக்கிறது, அவ்வளவுதான்

 

குன்னத்துகல் காரர்களில் ஒருவர் ஒரு பெரிய பூசணிக்காயை வளர்த்தார். அதை எலி சாப்பிட்டுவிடக்கூடாது என்பதற்காக பிஞ்சிலேயே செம்புக் கலத்திற்குள் விட்டு வளர்த்தார். செம்புக்கலம் நிறைய பூசணிக்காய் வளர்ந்தபின் அதை என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆகவே  வயலிலேயே அடுப்புகூட்டி அந்தச் செம்புக்கலத்தை அதன்மேல் வைத்து அங்கேயே சமைத்து சாப்பிட்டார்.

 

கோவைக்குச் சென்றிருந்தபோது கோவையின் மேம்பால அற்புதங்களைப் பற்றிச் சொன்னார்கள். நான் மேலே சொன்ன கதையைச் சொன்னேன். நம் முன்னோர் ஒன்றும் மூடர்கள் அல்ல, வருவதை எதிர்கொள்ளடா என்றுதான் அவர்கள் பாடி வைத்திருக்கிறார்கள். நாம் எந்தச்சூழலிலும் வாழமுடியும். சிலவற்றை கூடுதல் வசதியாகக்கூட பயன்படுத்திக்கொள்ள முடியும். உதாரணமாக மேலே சொன்ன கோவை மேம்பாலத்தின் சுவர்களை பேருந்தில் சென்றபடியே வெற்றிலையில் நீவி மிஞ்சிய சுண்ணாம்பைத் தேய்க்க பயன்படுத்த முடியுமா இல்லையா?

முந்தைய கட்டுரைஹரிவம்சம் தொடக்கம் – அருட்செல்வப் பேரரசன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72