நூறுநாற்காலிகள் -கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நூறு நாற்காலிகள் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் விலகமுடியாத வலியோடு எழுதுகிறேன். ஒரு எழுத்தின் மூலமாக இத்தனை வலிமிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இன்றுதான் உணர்கிறேன். கிராமத்தில் இருந்து முதல் தலைமுறையாக படித்து சமூகத்தில் ஒரு சக்தி மிகுந்த ஆளாக நகரத்தில் வாழ்ந்து வரும் ஆதிக்க சாதி மனிதர்களும், கிராமத்தில் வாழும் பெற்றோர்களால் நீங்கள் குறிப்பிட்ட சில சங்கடங்களை சந்தித்தே வருகின்றனர். ஆனால் “நூறு நாற்காலிகள்” வரும் “காப்பன்” நிலை மனிதனாக பிறந்த எவருக்குமே வரவேகூடாத அனுபவங்கள். தாழ்த்தப்பட்டவர்கள் சமூகத்தின் அதிகாரவர்க்கத்தில் உயர்ந்தாலும் அவர்கள் அதிகாரம் செல்லாது என்பதை ஒவ்வொரு வரியிலும் தெளிவாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டதை போல ஒரு நாற்காலி என்பது நூறு நாற்காலிகள் என்று ஆகும்போது நிச்சயம் நல்ல மாற்றம்வரும்.

என்றும் அன்புடன்,
கிருஷ்ணகுமார்
சவுதி அரேபியா

அன்புள்ள ஜெமோ,

சமூக விளிம்புநிலை மனிதனின் கதை என்று புறவயமாக ஆரம்பித்த ‘நூறுநாற்காலிகள்’, முடியும்போது நம்மைப் பற்றியதாக, சட்டென்று உருமாறி, அகவயமாக ஆழமாய்ப் பாய்ந்தது.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனக்கிலேசங்களை, நாம் தப்பியோடி மேலும் புனிதமாக்கும் ஆழ்மன வடுக்களை, தாட்சண்யமின்றி மீண்டும் மீண்டும் நேராய் எதிர்கொள்வதே அதிலிருந்து மீண்டு ‘அமர்வதற்கான’ வழி என்று காட்டிய அற்புதப் படைப்பு ‘நூறுநாற்காலிகள்’.

நன்றி,
வெங்கடாசலம் சண்முகம்.

மனதை அழுத்தி வைத்திருந்த பல விஷயங்களை சமீபத்தை கதைகளில் ‘vent ‘ செய்த பிறகு உங்கள் மனம் இப்போது லேசாகி விட்டதா? அது என்ன உங்கள் புனைவுகளில் மனித இழிவைக் காட்டப் புழுக்களை அடிக்கடிப் பயன் படுத்துகிறீர்கள்? விஷ்ணுபுரத்தில் ‘மாமிசத் துண்டில் அடர்ந்த புழுக்கள் போல மனிதர்கள்’, யானை டாக்டர் கைகளின் மேல் புழுக்கள், காப்பான் உறவினர்கள் செல்லும் வழியெங்கும் புழுக்கள்… நீங்கள் என்ன பட்டினத்தாரா?
உண்மையில், ஏழாவது உலகம் படித்து ஒரு மூன்று மாதங்களாவது என் நாசியில் துர்நாற்றம் அடித்துக் கொண்டிருந்தது. பிறகு யானை டாக்டர் படித்தபின் என் கைகளை இரண்டு முறையாவது கிருமி நாசினி சோப்பால் கழுவிக் கொண்டேன். இப்போது நூறு நாற்காலிகளுக்குப் பின் சோறே உள்ளே இறங்கவில்லை. ஒரே உக்கிரம். பதினைந்தாண்டுகளுக்கு முன்னிருந்த என் இளமையின் வறுமையிலும் கூட, இத்தனை சாக்கடைகளையும் அந்த மனிதர்களையும் பார்க்காமலேதான் கடந்து வந்திருக்கிறேன் என நினைக்கும்போது குற்ற உணர்ச்சிதான் மேலிடுகிறது.

நன்றி — பாஸ்கி

அன்புள்ள பாஸ்கி

உங்களுடைய எதிர்வினையை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் யானைடாக்டர் உடபட இக்கதைகள் உருவாக்க எண்ணுவது, கதையை உள் நுழைந்து உணர்ந்தால் உருவாகக்கூடியது , அதற்கு நேர் எதிரான மனநிலைதான். நம்மை வெளியே நிறுத்திக்கொண்டால்தான், அவ்வனுபவங்களை பிறர் அனுபவங்களாக எண்ணினால்தான் டெட்டால் போட்டு கை கழுவும் உணர்வு ஏற்படும். எனக்கு அவ்வாழ்க்கைக்குள் நான் சென்ற உணர்வுதான். புழுவை ஒரு மிக நெருங்கி நோக்கும் உணர்வுதான் இருந்தது. வாசிப்பில் அது உருவாகவேண்டுமென்பதே என் எதிர்பார்ப்பு

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

உங்களுக்கு “நூறு நாற்காலிகள்” பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உணர்வு…. கதையை படித்த பிறகு அதன் தாக்கத்தை விட்டு சற்றே (இன்னமும் முழுமையாக இல்லை !!) வெளியே வந்த பிறகு “என்ன பெரிசாய் எழுதிடப் போறோம் ?” என்ற தயக்கம்… உங்களுக்கு வந்த சில கடிதங்களைப் படித்தப் பிறகு, கண்ணை துடைத்துக்கொண்டும் மூக்கை உறிஞ்சிக்கொண்டும் நாம் மட்டும் படிக்கவில்லை என்ற ஞானம் … மனதில் தோன்றும் நன்றி உணர்வை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற மீண்டும் ஒரு தீர்மானம் …. இதோ உட்கார்ந்து விட்டேன்….!!

நான் படித்தது மிகவும் சொற்பம்….!! 37 வயது ஆனாலும் – படித்து ரசித்த கதைகளையே திரும்ப திரும்ப படிக்கும் (கெட்ட) வழக்கத்தினாலும், ஆழ்ந்த படிப்புக்காக நேரம் ஒதுக்கும் பழக்கம் இல்லாததானாலும் , உங்கள் ஒரு சில கதைகளை ஏற்கனவே படித்தாலும் முழுவதுமாக புரிந்து கொண்டதாக சொல்ல மாட்டேன்…!! புத்தருக்கு ஒரு போதி மரம் போல எனக்கு இந்த கதை… நான் இந்த கதை படித்த சூழ்நிலையும் மன நிலையும் சற்று முன்னரே வாய்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது….

இது போன்ற சமூகங்கள் (நாயாடிகள்) இருப்பதே எனக்கு தெரியாது என்பது அவ்வளவாக அவமானமாய் இல்லை; அந்த கையாலாகாத கதாநாயகனை தோளோடு சாய்த்து தேற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரே ஒரு பிரச்னை…அவனுக்கு பலமாய் நான் இருப்பதை விட்டு விட்டு நான் கதறி அழுது விட வாய்ப்பு நிறைய உண்டு….. எந்த சம்மந்தமும் இல்லாமல் அவன் அம்மா ஏன் என் அம்மாவை நினைவு படுகிறாள் என்று புரியவில்லை. (இவள் போய் சேருவதற்குள் செய்ய வேண்டிய சில முக்கிய செயல்களை தீர்மானம் செய்து கொள்கிறேன்) அநாகரிகமாய் ரௌத்திரமாய் வாழும் அந்த அம்மாவையும் அதிர்ச்சியும் வெறுப்புமாய் கதறும் அந்த மனைவியும்… அவமானமாய் கையாலாகாத கழிவிரக்கமுமாய் அவனும் ரொம்ப நாள் மனத்தில் நிழலாடப் போகிறார்கள். ஒரு குழந்தைக்கு பரிவுடன் தாய் இட்ட பருப்பு சாதம் (நிறைய நெய் ஊற்றி !!) போலும் நீங்கள் எழுதிய இந்த கதை எனக்கு….!!

கதையின் போக்கு, கதா பாத்திரங்களின் நிலைகள் … மெல்ல மெல்ல என்னையும் அந்த கதாநாயகனின் (முந்தைய) முடிவை நோக்கியே இட்டுச் சென்றது… திடீர் திருப்பமாக அந்த கதை முடிவு ஏற்படுத்திய அதிர்ச்சி …. கதையின் தலைப்பை ஒழுங்காக உணர்ந்த அந்த தருணம் எனக்கு இந்த ஜென்மத்திற்கும் மறக்கப்போவதில்லை. இந்த மாதிரி ஒரு நெஞ்சை உலுக்கும் கதை இப்படி ஒரு positive தீர்மானத்துடன் முடிவது படிக்கும் என் போல பாமரனுக்கு பெரும் ஆசுவாசம் தரக்கூடியது தான்… ஆனாலும் ஒரு வேளை அந்த அம்மா பிழைத்துக் கிடந்தால் (திரிந்தால் ?) எந்த அளவு அந்த தீர்மானம் அவள் வாழ்க்கைக்குள் செயலாக்கம் பெறும் என்ற (அநியாயமான) சந்தேகம் வந்து தொலைக்கிறது.

இந்த கடிதத்தை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை …. !! இது போன்ற உன்னத அனுபவம் தரும் கதைகளை தேடித் தேடி படிக்க ஆரம்பிக்கப்போவது இனிமேல் தானே ? முழுவதும் வெளிப்படுத்தவே முடியாத நன்றி உணர்ச்சியும் அடி வயிற்றில் இன்னமும் மிச்சம் இருக்கும் கேவல்களுமாய்… கை கூப்பி என் வணக்கங்கள்.

கடிதத்தில் ஒற்றுப் பிழைகள் இருந்தால் மன்னித்தருள்க….

சுரேந்திரன்
சென்னை

அன்புள்ள சுரேந்திரன்

வாழ்க்கையில் எப்போதும் தர்க்கமே முன்னால் செல்கிறது. சிலசமயம் ஆவேசமான பாய்ச்சலில் தர்க்கத்தை மீறிய ஒன்று முன்னால்சென்று விடுகிறது. இக்கதையின் முடிவும் அதுவே. ஒன்றுக்கும் உதவாத வேலையை உதறுவது தர்க்கம். அதை தாண்டிச்செல்வது தர்க்கத்தை மீறிய நியாயம்

ஜெ

அன்பார்ந்த ஜெயமோகன்

உங்கள் கதைகள் அனைத்தையும் ஒரேமுச்சில் படித்துவிடுகிறேன் நடை அப்படி. நான் திரு. இளையராஜா அவர்களின் பாடல்கள் கேட்கும்போது அவர் சிறிய குழந்தையை கைபிடித்து அழைத்துசெல்லும் உணர்வு ஏற்படும். அதேபோல் உங்கள் எழுத்துகளை படிக்கும் போது ஏற்படுகிறது. மேலும் தங்கள் கதைகளில் வரும் அறவுணர்வு இன்றைய தேவையாய் இருக்கிறது.

இன்னும் எவ்வளவோ எழுத நினைக்கிறன் அதற்கும்மேலாக உங்கள் வாசகர்கள் எழுதிவிட்டார்கள்.
மழைகாலத்தில் அருவியில் குளிப்பதுபோல் ஒருசுகமான அனுபவம். நல்ல மனிதர்கள் நல்ல நினைவுகள் மேலும் மேலும் நமக்கு அறிமுகமாவதில் மிகுந்தமகிழ்ச்சி.

செந்தில்குமார்

கதைகள்

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


தாயார் பாதம்

மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

முந்தைய கட்டுரைஅதர்வம்-கடிதம்
அடுத்த கட்டுரைஅறிவுரைகள்