இன்றைய வாசிப்பு

படிப்பறைப் படங்கள்

புதிய வாசிப்பறை

வலி

வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் வெவ்வேறு இடமிருக்கவேண்டும் என்பது என் செல்லக்கொள்கை. ‘பெட் தியரி’. வாசிக்கும் இடத்தில் எழுதும் உளநிலை வருவதில்லை. எழுதும் இடத்தில் வாசிப்பதற்கும். வாசிக்கும் இடத்தை வேறெதற்கும் பயன்படுத்தக்கூடாது. வசதியான இடம், அழகான இடம், ‘இங்கே அமர்ந்து வாசிக்கலாமே’ என்று தோன்றும்படியான இடம், கடந்துபோகும்போதெல்லாம் வாசிக்கவேண்டும் என எண்ணச்செய்யும் இடம் தேவை.

ஆனால் வீட்டில் அதிக இடமில்லை.எல்லா இடத்திலும் புத்தகங்கள் படுக்கைகள் இன்னபிற. வீட்டை பெரிதாக்குவதில் பொருளில்லை என் பிள்ளைகள் இந்த ஊரில் இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனக்கென மாடியில் ஒரு படுக்கையறை, ஓர் எழுத்தறையை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.

எஞ்சியிருப்பது கீழிருந்து மேலே வரும் வழியருகே ஒர் இடைநாழி.. அங்கே ஒரு புதிய புத்தக அடுக்கை உருவாக்கியபோது அந்தச் சிறிய இடத்தில் வசதியான ஒரு நாற்காலியையும் மேடையையும் போட்டேன். சட்டென்று வாசிப்பதற்கான இடமாக மாறிவிட்டது.  நாற்காலி, சாயவும் ஆடவும் வசதியானது.அதன் விரிப்புக்கு இனிய செந்நிறம். வாசிப்பதற்கு நீலநிறம் உதவாது, அது துயில்வதற்குரியது. வெண்ணிறமும் பொருந்துவதில்லை.

2009-ல், இந்த மாடியறையை நான் உருவாக்கிக் கொண்டேன். இந்த வீட்டைக் கட்டும்போது ஒரு கொள்கை வைத்திருந்தேன், தேவைக்குமேல் பெரிய வீடு தேவையில்லை என. அது பல மலையாள வீடுகளைக் கண்டு எழுந்த பொருமலில் இருந்து உருவான கொள்கை. ஆகவே அன்று வெறும் 1500 சதுர அடி மட்டுமே வீட்டின் அளவாக இருந்தது. ஆனால் பின்னர் எனக்கென ஓர் இடம் தேவைப்பட்டது. மேலும் சினிமாவால் பணமும் வந்தது. ஆகவே மாடியைக் கட்ட திட்டமிட்டேன்.

மாடியை கட்டும்போது பல அனுபவங்கள். நீரூற்ற மேலேறி விழுந்து காலை உடைத்துக்கொண்டேன். அதைப்பற்றி வலி என்னும் கட்டுரை எழுதினேன். முதல் அமெரிக்க பயணம் அப்போதுதான். திரும்பி வந்தபோது அருண்மொழி வீட்டின் மேல் அடுக்கை கிட்டத்தட்ட முடித்திருந்தாள். கீழே ஏற்கனவே மூன்று புத்தக அலமாரிகள் இருந்தன. மேலே மீண்டும் இரண்டு. என் அறை என்னை நிறைய எழுதச்செய்தது என நினைக்கிறேன். இது ஒரு ஆழ்ந்த நிலையை அளிக்கிறது. இங்கிருந்து எழுதியவை மேலும் எழுதச்செய்யும் உளநிலையை உருவாக்குகின்றன. இன்று வெண்முரசு முழுக்கவே எழுதப்பட்ட அறை என இது எனக்கே தோற்றம் தருகிறது.

அங்கே கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் நூல்கள். வாசிக்கவேண்டியவை, வாசித்தவை, வாசிப்பவை. நாளும் கொஞ்ச நேரமாவது அங்கே அமர்ந்து வாசிக்கிறேன். வாசிக்கும் நேரம் கூடிக்கூடி வருகிறது. அங்கே அமர்ந்து வாசிக்கும் என்னை நானே கற்பனையில் பார்க்கப் பார்க்க அந்த விருப்பம் கூடிவருகிறது.

என் வாசிப்பே வேறுவகை. கண்டதையும் வாசிப்பது. இப்போது முன்புபோல அல்ல என்றாலும் விசித்திரமான வாசிப்புகள். கால்டுவெல் பற்றிய ஒரு நூல். நடுவே யோ.ஞானசந்திர ஜான்சனின் மில்லர் என்னும் மாமனிதர். அதனுடன் இணைந்து அ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள்.

சரி , இன்று என்ன வாசித்தேன். இதுதான், ஈரோட்டில் இத்தாலி. முத்துகாமிக்ஸ் வெளியீடு. நான்கு படக்கதைகள். பக்கம்பக்கமாகக் கொலைகள், துப்பறிதல். ஆமாம், இளைப்பாறுவதற்குக் கொலைகளைப் போல நல்ல வழி வேறென்ன? மேலும் ஈரோடு எனக்கு பிடித்தமான ஊர். பிடித்தமான கொலைகாரர்கள் இருவர் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.

காமிக்ஸ்களை ஏன் வாசிக்கிறேன்? பல காரணங்கள். முப்பதாண்டுகளாக நான் இலக்கிய வாசகர்களைக் கூர்ந்து கவனித்து வருகிறேன். அவர்கள் இளமையில், அப்போதெழும் கனவின் நுரைப்பில், புனைவுகளை வாசிக்க வருகிறார்கள். புனைவினூடாக மாற்று உலகம் ஒன்றை சமைத்துக்கொள்கிறார்கள். அதில் திளைக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து வாசிப்பதனாலேயே அவர்கள் தங்கள் ‘கள்ளமின்மையை’ இழந்துவிடுகிறார்கள். ஆகவே புனைவில் திளைக்க இயலாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். புனைவு அவர்களுக்கு சலிக்கிறது. புனைவிலிருந்து வேறுசிலவற்றை கண்டடைய தொடங்குகிறார்கள். அவற்றைத் தேடுகிறார்கள்.

அரசியல் ஆர்வம் காரணமாக அரசியல் அமைப்புக்களினூடாக புனைவுக்குள் வருபவர்களை நான் இலக்கிய வாசகர்களாக கருதவில்லை – எந்த அமைப்பாக இருந்தாலும். அவர்களுக்கு புனைவு முக்கியமில்லை. புனைவில் அவர்கள் அரசியல்கருத்துக்களை, சொல்லப்போனால் அரசியல் நிலைபாடுகளை மட்டுமே பார்க்கிறார்கள். அவர்களிலும் புனைவின் வாசகர்கள் உண்டு. அவர்கள் புனைவுகளை வாசிக்கத்தொடங்கி அரசியல்கருத்துக்களைச் சென்றடைபவர்கள். அரசியல் வழியாக வந்தாலும் புனைவின் களியாட்டத்தைக் கண்டடைபவர்கள். அவர்கள் இலக்கியவாசகர்களாக ஆகக்கூடும்.

தொடர்ந்து வாசிக்கும் வாசகனிடம் இந்தச் சலிப்பை உருவாக்குவன முன்பு வாசித்த புனைவுகளே என்பது ஒரு முரண்பாடு. அவை அவ்வாசகனின் உள்ளே நிறைந்து விடுகின்றன. அவற்றை அவன் செரிக்க முடியவில்லை என்றால் கல்லாக மாறி செறிந்துவிடுகின்றன. வேறெதையும் உள்ளே வரவிடாமல் தடுக்கின்றன.  ‘முதிர்ந்த’ வாசகர்களில் ஒருசாரார் அவர்களைக் கவர்ந்த, அவர்களுக்குல் கல்லாகிவிட்ட படைப்புகளைக்கொண்டே புதியன அனைத்தையும் வாசிக்கிறார்கள். அனைத்தையும் தடுக்கிறார்கள். அவை கால்தளைகள் போல, தலைச்சுமைகள் போல ஆகிவிடுகின்றன. அவர்களுக்கு முன்னகர்வே இருப்பதில்லை, புதிய திறப்புகளே நிகழ்வதில்லை.

இன்னொன்று உண்டு, புனைவுகளில் தத்துவங்களை, தரிசனங்களைக் கண்டடைவது. தத்துவமும் தரிசனமுமே புனைவுகளின் சாரம். அவை இல்லாத புனைவுகள் வெறும் கனவுகள். ஆனால் அவை மட்டுமே புனைவு அல்ல. புனைவுவாசிப்பின் ஒரு கட்டத்தில் நாம் தத்துவங்களையும் தரிசனங்களையும் மட்டுமே வாசிப்பவர்களாக ஆகிவிடுவோம். இது எல்லாருக்கும் நிகழ்வது என்பதனால் பிழையும் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நாம் நம் ‘கள்ளமற்ற’ வாசிப்பை இழப்போம். புனைவில் திளைக்க முடியாதவர்களாக ஆகிவிடுவோம். புனைவு உருவாக்கும் மெய்நிகர் உலகின் களிப்பு நமக்கு வந்து சேராமலாகிவிடும்.

முப்பதாண்டுகளுக்கு முன் க.நா.சு வாழ்நாள் முழுக்க துப்பறியும் கதைகளை வாசித்தார் என்று சொல்லிக்கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. அத்தனை வாசிப்புக்குப் பின்னரும் அவருக்கு எளிய புனைவின்பத்தில் திளைக்க முடிந்திருக்கிறது. சுமைகளை இறக்கிவைக்க சிறுவனாக ஆக முடிந்திருக்கிறது. என்னால் இயலுமா என்று எண்ணிக்கொண்டேன். இயலுமென்று காட்டுகின்றன இந்த காமிக்ஸ் நூல்கள். சமீபத்தில் வாசித்துத் தள்ளியவை எளிமையான சாகசநூல்கள். பொன்னியின் செல்வன். நான் இன்னமும் கெட்டிப்பட்டுப் போகவில்லை என்று எனக்கு அவை எனக்குக் காட்டின.

புனைவுமேல் உருவாகும் சலிப்பு புனைவுகளை கோணலாக வாசிக்கச் செய்கிறது. அவற்றை வெறும் எண்ணங்களாகவோ கொள்கைகளாகவோ வாசிப்பது ஒன்று. வெறும் வடிவமாக வாசிப்பது இன்னொன்று. புனைவு வாழ்க்கையின் இன்னொரு வடிவம். வாழ்க்கையை செறிவாக மீண்டும் நிகழ்த்துவது. அது முடிவில்லாத ஒரு கனவின் களியாட்டும்கூட. புனைவில் இருக்கையில் அதன் சொற்களைக் கடந்து அது உருவாக்கும் மெய்மையில் திளைக்கமுடிவது பெரிய தகுதி.

வெண்முரசு முடிந்தபின் நீண்ட சில பயணங்களை திட்டமிட்டிருக்கிறேன். கூடவே கொஞ்சம் ’கண்டபடி’ வாசிப்பும்.

***

முந்தைய கட்டுரைநீலம் ஒரு புன்னகை!- இவான் கார்த்திக்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 69