தனிமையின் முடிவில்லாத கரையில்…

வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற நீலவெளிச்சம் என்னும் கதையின் திரைவடிவம் 1964ல், எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது வெளிவந்தது. பார்கவி நிலையம். ஒளிப்பதிவாளர் ஏ.வின்செண்ட் இயக்கியது.இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி.பாஸ்கர் ராவ்.. எழுத்து வைக்கம் முகம்மது பஷீர். பஷீர் எழுதிய ஒரே படம். அவருக்கு ஒரு நிலமும் வீடும் அமைந்தது இந்த சினிமா வழியாகத்தான்.

இது மலையாளத்தின் ஒரு ‘கல்ட் கிளாஸிக்’ எனப்படுகிறது. முதன்மையான காரணம் இன்றும் மலையாளிகளின் நாவில் திகழும் பாடல்கள். பாபுராஜ் இசையமைப்பில் பி.பாஸ்கரன் எழுதியவை. கஸல் தன்மைகொண்ட தாமசமெந்தே வருவான் பிராணசகி என்றே முன்னில்” அவற்றில் மிகப்புகழ்பெற்றது. பெரும்பாலான குடிக்கேளிக்கைகளில் எவராவது அதைப் பாடி அந்த இரவை நிலவொளி மிக்கதாக ஆக்குவார்கள்

நான் நீலவெளிச்சம் கதையை வாசித்திருக்கிறேனே ஒழிய இந்தப்படத்தை பார்த்ததில்லை. முன்பு யூடியூபில் ஒரு வடிவம் இருந்தது, மிக மோசமான தரத்தில். இன்று தற்செயலாக இந்த வடிவத்தைக் கண்டடைந்தேன். மிகச்சிறந்த காட்சித்தரம்.

உண்மையில் சிலகாலமாகவே வண்ணத்திரைப்படங்களைப் பார்த்துச் சலித்துப் போயிருக்கிறேன். வண்ணம் என்பது மொட்டையாக இருப்பதுபோல தோன்றுகிறது. எந்தக் காணொளியும் வண்ணத்தில் கண்ணைப் பறிக்கின்றன. எல்லாமே வண்ணமயமாக இருக்கையில் வண்ணம் ஓர் அதிகப்பிரசங்கம்  என்று தோன்றிவிடுகிறது. அதிலும் டிஜிட்டல் இம்ப்ரூவிங், கிரேடிங் எல்லாம் எப்படிச் செய்கிறார்கள் என்று பார்த்தபின் வண்ணம் என்றாலே சின்னப்பிள்ளைகளுக்குரிய ஒருவகை செப்பிடுவித்தை என்று படுகிறது.

கருப்புவெள்ளையில் காட்சிகளுக்கு ஒரு கனவுத்தன்மை அமைகிறது. முகங்களுக்கு சிற்பத்தன்மை வந்துவிடுகிறது. இரவுக்காட்சிகள் வண்ணப்படங்களில் எந்தவகையான அழகும் இல்லாமல் அபத்தமாக உள்ளன. இரவின் ஒளி, நிலவு, பனிப்புகை ஆகியவை கருப்புவெள்ளையில் அற்புதமாகத் தெரிகின்றன. ஆகவே கனவுச்சாயல்கொண்ட படங்கள், பேய்படங்களுக்கு கருப்புவெள்ளையே மிகச்சிறப்பாக அமைகிறது. உதாரணம் டிராக்குலா படங்கள், அவற்றில் கருப்புவெள்ளை படங்களில் இருக்கும் கலையமைதி எவற்றிலும் இல்லை- பிற்காலத்தில் கப்போலா எடுத்த அகன்றதிரை படத்தில்கூட.

பார்கவி நிலையம் மலையாளத்தின் புகழ்பெற்ற பேய்ப்படம். அரைநூற்றாண்டு கழிந்து இப்போது பார்க்கையிலும் அதன் காட்சியமைப்பு, நடிப்பு எதுவுமே பழையதாகவில்லை. ஒரு மேலோட்டமான ஆர்வத்துடன் தொடங்கியவன் கூர்ந்து பார்த்து முடித்தேன். மலையாளப்படங்களுக்கே உரிய சாதாரணத்தன்மை கொண்டது.. பரபரப்போ பயங்கரமோ கிடையாது. அசாதாரணமாக எதுவும் நிகழவில்லை. இயல்பாகச் செல்லும் நிகழ்ச்சிகளால் ஆன திரைக்கதை அமைப்பு

நீலவெளிச்சம் பலவகையிலும்  ‘பஷீரியம்’ எனப்படும் அழகியல் கொண்டது. கதை எழுத உள்ளூரின் பழைய இல்லத்திற்கு வந்து தங்குபவர் பஷீர்தான். பஷீரின் கதைகளில் அவர் அவ்வாறு வெவ்வேறு ஊர்களில் குடியேறிக்கொண்டே இருப்பதைக் காணலாம். பஷீரிடம் எப்போதும் அழுத்தமேறிய, எல்லைகளே இல்லாத ஒரு தனிமை உண்டு. அந்தத்தனிமைக்கு உகந்தது அந்த வீடு. டீக்கடையில் ஒரு கதையை கேள்விப்படுகிறார். அந்த வீட்டில் இருக்கும் பேய்பற்றி. அந்தத்தனிமையை பேயைக் கொண்டு நிறைத்துக்கொள்கிறார்.

பார்கவி அவர் கற்பனையால் உருவாக்கிக்கொள்ளும் ஆளுமைதான் .அந்த நீலவெளிச்சம் அவருடைய படைப்பூக்கத்தின், கனவின் அடையாளம். அவர் எழுதும் அந்தக் கதைக்குள் வரும் சசிகுமார் என்னும் காதலனும் அவரேதான். தன்னுடைய அதே குணச்சித்திரத்தை சசிகுமாருக்கும் அளித்திருக்கிறார் பஷீர். காதலி பற்றிய தன் கற்பனை உருவகத்தை பார்கவிக்கும்.

பஷீரை படித்திருப்பவர்களுக்குத் தெரியும் பார்கவி அவருடைய பலகதைகளில் வரும் கதைநாயகியரின் கலவை என. ‘ஒரு காமுகன்றேன் டைரி [அல்லது அனுராகத்தின்றே தினங்கள்] என்ற பஷீரின் தன்வரலாற்று நாவலின் கதைநாயகியைப் போலிருக்கிறாள் பார்கவி. கல்லூரி பேச்சுப்போட்டிக்கு பேச்சு எழுதித்தர பஷீரைத் தேடிவருபவள் அவள்தான். நேந்திரப்பழம் கொண்டுவந்து தருபவளும் அவளே.. பார்கவியும் சசிகுமாரும் சுவருக்கு இருபுறமும் நின்று காதலிக்கும் காட்சி பஷீரின் ‘மதிலுகள்’ என்னும் கதையில் உள்ளது. கடற்கரையில் நீராடும் பெண்ணைப் பார்க்கும் காட்சி பஷீர் எழுதிய நிலாவு காணும்போள் என்னும் கதையில் உள்ளது. அது வேறுபல கதைகளிலும் , தன்வரலாற்றுக் குறிப்பிலும் உள்ளது

பார்கவியின் அந்தக்காதலை ஒரு சோகக்கதையாக முடிக்கிறார். காத்துகாத்து இருந்து மறைந்து , மறைந்தபின்னரும் காத்திருக்கிறாள் பார்க்கவி. அவளுடைய அந்தக் காத்திருப்புதான்.இப்படத்தின் மையக்கரு- பேய்க்கதை என்பது அதன் இன்னொரு வடிவம். ஒரு மதிலுக்கு இருபுறமும் காத்திருக்கிறார்கள். இப்புறத்தில் இருந்துகொண்டு ‘தாமஸம் எந்தே வருவான் [வருவதற்கு ஏன் தாமதம்?] என்று ஆண் பாடுகிறான். மறுபுறம் ‘வாசந்த பஞ்சமி நாளில் வரும் எந்நொரு கினாவு கண்டு’ [வசந்தகால ஐந்தாம்நிலவு நாளில் நீ வருவாய் என ஒரு கனவு கண்டேன்] என்று பெண் பாடுகிறாள்.இரு காத்திருப்பின் முனைகளும் தொட்டுக்கொள்வதே இல்லை. பஷீரின் எந்தக்கதையிலுமே அவை இணைவதில்லை.

வைக்கம் முகம்மது பஷீர்- பழைய படம்

இந்தக்கதையின் அழகு என்பது பார்கவி கொடியபேய் அல்ல என்பதுதான். அவள் உயிருடனிருந்தபோது விளையாட்டுத்தனமான கள்ளமற்ற இனிய பெண்ணாக இருந்தாள். இறந்தபின் ஆவியாகவும் அப்படியே இருக்கிறாள். அவள் தன் சாவுக்குப் பழிவாங்கக்கூட இல்லை. அவளுக்கு சைக்கிள் ஓட்டவும் வேலைக்காரனுடன் விளையாடவும்தான் பிடித்திருக்கிறது

கதையெழுத அமரும் பஷீருக்கும் பார்கவிக்கும் இடையேயான இயல்பான உரையாடல்களும் கொஞ்சல்களும் அழகாக உள்ளன. பார்கவியின் உள்ளத்தில் சசிகுமாரின் இடத்திற்கு பஷீர் சென்று அமையும் இடம் கவித்துவமானது. பார்கவி பேயாக நீடிப்பது அவளுடைய துயரம் அழியவில்லை என்பதனால்தான் . அவள்  காத்திருக்கிறாள். சசிகுமாரே இன்னொரு வடிவில் எழுத்தாளனாக வந்துசேர்கிறான்.

மூலக்கதையில் நீலவெளிச்சமாக தோன்றும் பார்கவிக்கு பஷீர் அவளுடைய கதையை வாசித்துக்காட்டுகிறார். சினிமா மேலும் கொஞ்சம் செல்கிறது. மது பஷீரின் சாயலுடன் இருக்கிறார். நசீர்கூட எப்படியோ பஷீர்தானோ என எண்ணச்செய்கிறார். விஜயநிர்மலா பின்னாளில் பல அதிரடி தெலுங்கு சினிமாக்களை இயக்கியவர். அவருடைய இரண்டாவது சினிமா இது. இதில் நடிக்கையில் அவருக்கு இருபது வயதுகூட ஆகவில்லை. அந்த இளமை இப்படத்தின் அழகுகளில் ஒன்று.

பார்கவியின் விளையாட்டுத்தனமான  தோரணையை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். பஷீரின் ராஜகுமாரி. பூவம்பழம் கதையில் “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று உஸ்தாத் தன் இதயத்தை எடுத்து காட்டியபோது குடையை அலட்சியமாக கைமாற்றியபடி “அதுக்கு?” என்று கேட்ட அதே அழகான திமிர்கொண்டவள். அவருடைய இதயத்தை ஒரு ரோஜாப்பூவாக தன் பெட்டியில் வைத்திருப்பவள்.

”அந்தப்பூவை என்ன செய்தாய்? மிதித்துக் கசக்கிவிட்டாயா?”

“ஆமாம், ஏன்?”

“பரவாயில்லை அது என் இதயம்”

அந்த வசனம் மதிலுகள் கதையில் வந்தது. பஷீரின் உரையாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவர் ஒரு வகையான கற்பனாவாதக் கவித்துவத்தை முன்வைக்கிறார். ஆனால் அந்த கற்பனாவாதத்தை அவரே கொஞ்சம் பகடியும் செய்துகொள்கிறார். ஆகவே அவை செயற்கையாக அமைவதில்லை.

“நான் நகத்தால் கீறியது வலித்ததா?”

“இல்லை, நல்ல சுகம். அழகான உணர்வு”

என்பதுபோன்ற உரையாடல்களில் பஷீர் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.

“ஒரு பாவம் சாகித்யகாரன்” என்று தன்னை அறிமுகம் செய்துகொள்கிறான் கதைநாயகன். அவனுக்கு முன் தோன்றும் அந்த பேய் வடிவ ராஜகுமாரி அவனுடைய தனிமையை முழுமையாகவே நிறைத்துவிடுகிறாள். மூலக்கதையிலுள்ள முடிவுவரி சினிமாவிலும் வருகிறது. பஷீர் சொல்கிறார். “பார்கவி, நீயும் நானும் என்னும் யதார்த்தத்தில் இனி நான் மட்டும் மிச்சம்” பிறிதொரு கதையில் பஷீர் அல்லாவை நோக்கிச் சொல்லும் வசனமும் இதுவே. நேர் மாறாக ‘நீயும் நானும் என்னும் யதார்த்தத்தில் இனி நீ மட்டுமே எஞ்சுவாய்’

பஷீரின் கதைகளை வாசிக்கையில் நாம் சென்றடைவது அவருடைய அபாரமான தனிமையை. திகைப்பூட்டும் தனிமை. அவருக்கு கடல் பிடித்திருக்கிறது. காரணம் அதன் தன்னந்தனிமை. அந்தத் தனிமையில் இருந்தே பார்கவி எழுகிறாள். அற்புதமான ஒரு பாடல் இப்படத்தில் உள்ளது. பஷீரின் குரலாகவே ஒலிக்கும் பாடல் .’ஏகாந்ததயுடே அபாரதீரம்!” தனிமையின் முடிவிலாப்பெருவெளியிலிருந்து தோன்றிய ஒர் அழகான கனவு பார்கவி. பஷீரின் அனர்ஹநிமிஷம் என்னும் கதையிலிருந்து எடுக்கப்பட்ட வரிகளை பாடலாக்கியிருக்கிறார்கள். படியவர் என் உறவினரும் ஆன கமுமற புருஷோத்தமன் நாயர். அந்த இடத்தில்தான் தனிமையின் பெரும்வலியை கதைசொல்லி வெளிப்படுத்துகிறார். அங்கேதான் பார்கவி தோன்றுகிறாள்.

நீலவெளிச்சம் கதை வெளிவந்தபோது மார்க்சிய இலக்கிய விமர்சகரான ஜோசப் முண்டசேரி பஷீரிடம் கேட்டார். ‘பஷீர் பேயைப் பார்த்ததுண்டா?” பஷீர் சொன்னார். ‘ஆம் பார்த்திருக்கிறேன். இதோ உங்களைப் பார்ப்பதுபோல”. ஜோசப் முண்டச்சேரி கேட்டார். ‘எனக்கு காட்டித்தர முடியுமா?” சிரிக்காமல் பஷீர் சொன்னார். “இந்தப்பேய் இலக்கியவிமர்சகர்களின் கண்களுக்குப் படாது”

ஏகாந்ததையுடே மகாதீரம்
ஏகாந்ததையுடே அபார தீரம்

பின்னில்தாண்டிய வழி அதிதூரம்
முன்னில் அக்ஞாத மரண குடீரம்
இந்நு நீ வந்நெத்திய ஓரிடமோ
ஏகாந்ததையுடே அபார தீரம்

பலதும் தேடி பலதும் நேடி
நிழலுகள் மூடிய வழிகளில் ஓடி
ஒடுவில் வந்நெத்திய ஓரிடமோ
ஏகாந்ததையுடே அபார தீரம்

ஆதிமபீகர வனவீதிகளில்
நிலாவில் மயங்ஙிய மருபூமிகளில்
நூற்றாண்டுகளுடே கோபுரமணிகள்
வீணு தகர்ந்நொரு தெருவீதிகளில்
அறிவி முறிவுகள் கரளிலேந்தி
அனுபூதிகள்தன் சிறகில் நீந்தி
மோகாந்தத தீர்ந்நு எத்திய ஓரிடமோ
ஏகாந்ததையுடே அபார தீரம்

பாபுராஜ்

கமுகற புருஷோத்தமன் நாயர்

[தமிழில்]

தனிமையின் மகத்தான கரை
தனிமையின் முடிவில்லாத கரை

பின்னால் கடந்த வழி மிகத்தொலைவு
முன்னால் அறியமுடியாத மரணக்குடில்
இன்று நீ வந்து சேர்ந்த ஓர் இடமோ
தனிமையின் முடிவிலாக் கரை

பலவும் தேடி பலவும் அடைந்து
நிழல்கள் மூடிய வழிகளில் ஓடி
இறுதியில் வந்து சேர்ந்த இடமோ
தனிமையின் முடிவிலா கரை,

ஆதிபயங்கர வனப்பாதைகளில்
நிலவில் மயங்கும் பாலைநிலங்களில்
நூற்றாண்டுகளின் கோபுரமணிகள்
வீழ்ந்து உடைந்ந்த தெருவீதிகளில்
அறிவின் புண்களை நெஞ்சில் ஏந்தி
பரவசங்களின் சிறகுகள் கொண்டு நீந்தி
மோகக்குருட்டுத்தன்மை நீங்கி
நீ வந்து சேர்ந்த ஓர் இடமோ
தனிமையின் முடிவில்லா கரை

முந்தைய கட்டுரைவாழ்வறிக்கை – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77