திராவிடவேதம்-கடிதம்

அன்பு நண்பர் திரு. ஜெயமோஹன் அவர்களுக்கு,

வணக்கம்.

நலம். நலமே விளைக.

வழக்கம்போல் இன்று உங்கள் தளத்தைப் பார்வையிடுகையில் முதல் செய்தியாக திராவிட வேதம் என்ற தளம் பற்றிய அறிவிப்பு இருந்தது. நன்று.

சிலதினங்களுக்கு முன் அடியேனும் ஒரு வார்த்தை தேடிப் பார்த்ததில் இந்தத் தளத்தின் லிங்க் வந்தது. உள்ளே சென்று பார்த்தேன். சற்று புன்முறுவல் பூத்தேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் செலவழித்து வைணவத் தமிழுக்காக அடியேன் உருவாக்கியிருந்த பிரபந்தம் டாட் காம் தளத்தின் அத்தனை பக்கங்களும் வார்த்தை மாறாமல் அப்படியே இருந்தன. பதம் பிரித்து வைத்திருந்த பாசுரங்கள், ஆழ்வார் கதைகள், ஆசார்யர்கள் வைபவம் என்று என்னென்ன உபதலைப்புகள் கொடுத்து வைத்திருந்தேனோ அப்படியே.

அறிமுகம் லிங்க்கில் போய்ப் பார்த்தால், பிரபந்தம் தளம் தோன்றக் காரணமாக அடியேன் குறிப்பிட்டிருந்த நிகழ்வுகள், எண்ணங்கள் அதுவும் பிரபந்தம் டாட் காம் என்று கட்டுரையின் உள்ளே ஓரிரு இடத்தில் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் எல்லாம் அப்படியே இருந்தன. யார் இது பார்ப்போம் என்று அவர்களைப் பற்றிய தகவல் பகுதிக்குச் சென்றால் சுட்டி இயங்கவில்லை.

ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், முன்னோர்களை ஒட்டி, இணையத்தில் வைணவத் தமிழ் பரப்புவதற்காக அடியேனும் செய்த அதே முயற்சியை இன்னொருவரும் அப்படியே செய்ய முயன்றிருப்பது… அதனால் வேறு எதுவும் விபரீதமாக யோசிக்கவில்லை. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டேன். அவர்கள் யார் என்பதையும், தங்கள் தளத்தில் இருந்து கையாள்கிறோம் என்றும் ஒரு மெயில் அனுப்பியிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். நீங்கள் அந்த நண்பர்களுக்கு இந்தத் தகவலைச் சேர்த்திடுங்கள்.

இன்னொன்று….

பிரபந்தம் தளத்தை ஜூம்லா கண்டண்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மூலம் பிஎச்பி தளமாக வடித்திருந்தேன். அதில் ஈ-மெயில், ஃபார்ம் சப்மிஷன், ஃபோரம் எல்லாம் வைத்திருந்தேன். எனவே தளத்தில் நிறையப் பேர் உலவி, சிலர் ஸ்பேம் மெயில் உருவாக்கி, சர்வர் லோடு அதிகமாகிவிட்டது என்று prabandham.com டொமெயினை சஸ்பண்ட் செய்துவிட்டார்கள் ஹோஸ்டிங் கம்பெனியார். பல முறை போராடிப் பார்த்தும் வேறு வழியின்றி, இன்னொரு கம்பெனியில் www.deivatamil.com தெய்வத் தமிழ் என்ற பெயரைப் பதிந்து சைவம்+வைணவத் தமிழ் என இரண்டையும் சேர்த்துச் செய்யும் விரிந்த பார்வையில் இப்போது ஈடுபட்டு வருகிறேன்.

பொறுமையாக இந்த மின்னஞ்சலைப் படித்ததற்கு என் நன்றி.

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்

[email protected]

முந்தைய கட்டுரைதிராவிட வேதம்
அடுத்த கட்டுரையானைடாக்டர், கடிதங்கள்