‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 11

கோட்டைவாயிலில் காத்து நின்றுகொண்டிருந்தபோது யுயுத்ஸு முதன்முறையாக தன் உள்ளம் ஊக்கம் கொண்டு எழுந்திருப்பதை உணர்ந்தான். மீள மீள அக்கோட்டைவாயிலில் எவரெவரோ உள்ளே நுழைவதற்காக அவன் காத்திருந்த நினைவுகள் எழுந்தன. இளமைப்பருவத்தில் எல்லாக் காத்திருப்புகளும் உள்ளத்தை பொங்கி எழச் செய்வதாக இருந்தன. ஒவ்வொன்றும் நகருக்குள் எதையோ புதிதாக கொண்டுவந்தன. அக்கோட்டைவாயில் சிப்பியின் சிறு திறப்பு, உள்ளே வருபவை அங்கே முத்தென உருமாறுகின்றன என்று அரண்மனையில் சொல்லப்படுவதுண்டு. தீய செய்திகள்கூட கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வெறுமை நிறைந்த ஒருநாளில் வரவிருப்பது தீய செய்தி என்றால்கூட வரட்டும் என்றே சொல்லத்தோன்றும்.

கோட்டைவாயிலுக்கு மேலிருக்கும் அறிவிப்பு முரசு உரைப்பதென்ன என்பதை நகரமே எப்போதும் செவிகூர்ந்திருந்தது. அதன் முதல் தாளச்சொல்லையே நகர்மாந்தரில் பெரும்பாலானவர்கள் செவிகொண்டுவிடுவார்கள். அந்த முரசுக்கு வாயில்நாய் என்று பெயரிருந்தது. அதன் ஒலியும் ஒரு குரைப்பொலி எனவே செவிகளுக்கு கேட்டது. ஒவ்வொரு நாளும் அது உள்ளே வருபவர்களை கூவி அறிவித்தது. அயலவர்கள் நாளுமென வந்துகொண்டே இருந்தனர். வெளியே சென்றவர்கள் பெரும்பாலும் திரும்பி வரும்போது பிறிதொருவராக வந்தனர். ஒவ்வொரு முறை பீஷ்மர் நகருள் நுழையும்போதும் முற்றிலும் புதியவராக, விழிகளும் முகமும் தோற்றமும் மாறிவிட்டிருந்தார்.

ஒவ்வொரு நாளும் புதிய பொருட்களுடன் பெருவணிகரும், புதிய அலர்களுடன் பிறநாட்டு அரசத்தூதர்களும் வந்தனர். அனைத்துமே அஸ்தினபுரியில் செய்தியாயின. அரசமுறையினர் கோட்டையில் இருந்து அரண்மனைக்குச் சென்று சேர்வதற்குள் அவர்கள் ஏன் வந்தார்கள் என்றும், அதன் விளைவுகள் என்ன என்றும் பேசிக்கொள்ளத் தொடங்கியது நகர். அவர்கள் பேசிப் பேசி தங்கள் உலகை உருவாக்கிக்கொண்டனர். அக்கோட்டையிலிருந்துகொண்டு ஒளிக்கீற்றுகளை வீசி சூழ்ந்திருக்கும் வெளியை நோக்கி, மேலும் மேலும் கற்பனை செய்துகொண்டு தங்கள் நிலத்தை அவர்கள் படைத்துக்கொள்வதாக அவனுக்குத் தோன்றியது. அவர்கள் வாழ்ந்தது அந்நிலத்தில்தான்.

அஸ்தினபுரியின் தொல்குடிகளில் இடம் பெயர்ந்து வெளிச்செல்பவர்கள் மிகக் குறைவு. அங்கிருக்கும் வேளாண்குடியினருக்கு விளைநிலங்கள் அஸ்தினபுரியின் ஆட்சிக்கு உட்பட்ட தொலைநிலத்து ஊர்களில் இருந்தன. அங்கிருந்து அவர்களுக்கு குத்தகைச்செல்வம் வந்துகொண்டிருந்தது. ஆயர்கள் அதற்கும் அப்பால் காட்டு எல்லைவரை பரவியிருந்த மேய்ச்சல் நிலங்களில் பெருமந்தைகளை வைத்திருந்தார்கள். அவர்களுக்கு ஏழு நாட்களுக்கு ஒருமுறை நெய்ப்பணம் வந்தது. கைவினைஞர் குடிகள் ஒவ்வொன்றும் அவர்களின் குடியினரால் திறைப்பணம் அளிக்கப்பட்டன. அந்தணர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் அவர்களுக்குரிய இறையிலி நிலங்கள் இருந்தன. ஒவ்வொருநாளும் வண்டிகளில் அவர்களுக்குரிய பங்கு நகரை வந்தடைந்தது.

அஸ்தினபுரி மாபெரும் வேள்விக்குளம் என்றனர் ஊர்க்குடிகள். அங்கே தழலென எரிபவர்கள் குடித்தலைவர்கள். தீராப் பசியே தழல். உண்ட அனைத்தையும் ஒளியென்று ஆக்குவது. உண்ண உண்ண பெருகிப் பெருகி மேலும் கோருவது. அவர்கள் தங்கள் அடையாளங்களால் மட்டுமே குடித்தொழிலுடன் தொடர்புகொண்டிருந்தனர். அத்தொழிலை அவர்கள் தங்கள் உள்ளத்தால் இயற்றினர். ஆகவே அது ஒருவகை ஆடலாக ஆகியது. அனைத்தும் அந்த ஆடற்களத்தில் அடையாளங்களாக, கருக்களாக ஆயின. ஆகவே அவை மேலும் விசைகொண்டிருந்தன. மேலும் உணர்வுச்செறிவை அடைந்தன. ஒரு கணுவும் விட்டுத்தரமுடியாத போட்டிகளாக நிகழந்தன.

குலத்தலைமை கொண்ட குடியினர் அங்கே வாழ்க்கையின் இன்பங்களை மட்டுமே அறிந்து வாழ்ந்தனர். துன்பங்கள் அவ்வின்பங்களை நிகர்படுத்தும் பொருட்டு அவர்களால் ஆடற்களங்களில் சமைக்கப்பட்டுக்கொண்டன. அஸ்தினபுரியின் அனைத்துக் குடிகளும் திண்ணை விளையாட்டுகளிலேயே பெரும்பொழுதை கழித்தனர். சூதாடல், நாற்களமாடல், தாயமாடல், பகடையாடல், பலநூறு வகையான பந்தயங்கள். நெடுங்காலமாக ஆடி ஆடி அவர்களின் சொற்கள் எண்ணங்கள் கனவுகள் அனைத்தையும் அவையே உருவாக்கின. துயர்களும் இன்பங்களும் அக்களங்களிலேயே சமைக்கப்பட்டு கூர்கொண்டன. ஆகவே அவை பேருருக்கொண்டு எழுந்து விழுங்க வந்தன. விழிகளை சற்று விலக்கிக்கொண்டால் பொருளிழந்து அகன்றன.

அவர்களின் குடியினர் அவர்கள் அனைத்துச் சிக்கல்களையும் பேருருக்கொள்ளச் செய்து மிகையுணர்வுடன் அணுகுவதை வியப்புடன் கண்டனர். உச்சத்தில் அவற்றை அவர்கள் கைவிட்டுவிட்டு மறுகணமே மறந்து மேலே செல்வதையும் கண்டனர். “அவர்கள் தேவர்கள். தேவர்களுக்கு மானுட வாழ்க்கை என்பது நாற்களச்சூது மட்டுமே” என்றனர் தொலைநிலத்து மூத்தோர். “அவர்கள் வைத்தாடுவார்கள். போராடுவார்கள். கனவு கலைந்து பிறிதொரு கணமென நாம் வாழும் காலத்தைத் துறந்து தங்கள் மெய்யுலகுக்குச் செல்லவும் செய்வார்கள்.” இளையோர் “எனில் நாம் ஏன் அவர்களை பேணவேண்டும்?” என்றால் நகைப்புடன் “தேவர்களில் நன்றும் தீதும் அளிப்பவர்கள் உண்டு. இருவருக்கும் நாம் அவியிட்டு ஓம்புகிறோம்” என்றனர் முதியோர்.

அவர்கள் தங்கள் குடியின் தலைமையை அங்கிருந்து நடத்தினர். ஒவ்வொரு குடிக்கும் தலைமை அஸ்தினபுரியில் இருந்தாகவேண்டுமென்ற நெறி இருந்தது. அங்குதான் உறவுகளும் மோதல்களும் உருவாகி நிறைவு கொண்டன. அவையில் அமரும் தகுதிகொண்டவர்கள் நகரத்தில் இருந்து அரசின் ஆணைகளைப் பெற்று தூதர்களினூடாக தங்கள் குடிகளுக்கு அனுப்பவேண்டும். அங்கிருந்து வரும் செய்திகளை முறைப்படுத்தி அரசவைக்கு தெரிவிக்க வேண்டும். அரசச்சடங்குகள், முறைமைகள் அனைத்திலும் பங்குகொள்ள வேண்டும். அரசு கோரும்போதெல்லாம் வரி அளிக்க வேண்டும். வரி அளிக்க முடியாதபோது அதை மன்றாட்டென முன்வைக்க வேண்டும்.

அஸ்தினபுரியில் ஐவகை நிலங்களும் சொல் வடிவிலேயே திகழ்கின்றன என்று சூதர்சொல் உண்டு. அவை முன்பு கருவடிவில் சொல்லென இருந்து பருவடிவென வளர்ந்தவை. அங்கே அவை மீண்டும் சொல்லென மீண்டுள்ளன. ஒவ்வொரு நிலத்தையும் அதன் தலைவர்கள் தங்கள் குடிவழி வந்த கதைகளினூடாகவே கற்றிருந்தார்கள். மிகச் சிலரே நேரில் சென்று தங்கள் விளைநிலங்களையோ மேய்ச்சல் நிலங்களையோ கண்டிருந்தார்கள். அவர்கள் அதை அவ்வண்ணம் சுருக்கிக் கொண்டதனால்தான் எளிதாக அவற்றை கையண்டார்கள் என்று யுயுத்ஸு நினைப்பதுண்டு. ஆயர்குடியின் தலைவர்கள் தன் கொட்டிலில் வாழும் சிறு கன்றுகள் அன்றி எதையும் கண்ணால் பார்த்திராதவர். ஆகவே பல லட்சம் பசுக்கள் மேயும் பெரிய வெளிகளை அவர்கள் மிக எளிய நூல்கூற்றுகளாக சுருக்கிக்கொண்டார்கள். நம்பிக்கையுடன் தயக்கமின்றி அவற்றை அரசவையில் சொல்லென வைத்தார்கள்.

அவர்களின் குடியினரில் மேய்ச்சல் நிலத்தில் வாழ்க்கையை சந்திப்பவர்கள் பலநூறு வகையான இடர்களை கண்டனர் என்றாலும் அவர்கள் மேலிருந்து அவர்களுக்கு சொல்லப்பட்ட, எண்ணிஅடுக்கப்பட்ட சொற்களின் வடிவில் அவற்றை சுருக்கிக்கொண்டார்கள். கடலை சிமிழில் அள்ளிக்கொண்டு வருவதுபோல செய்திகளை அவர்கள் கொண்டுவந்தார்கள். ஆனால் கடலை அவ்வண்ணமன்றி வேறெவ்வகையிலும் கொண்டுவர இயலாது. குறைவாக அறிந்திருந்தமையாலேயே அங்கிருந்தவர்கள் தன்னம்பிக்கை கொண்டிருந்தனர். அத்தன்னம்பிக்கையாலேயே மெய்யை களம் நின்று அறிந்தவர்கள் மேல் சொற்கோன்மை அடைந்தனர். குடிபெருகி அங்கு வாழ்ந்தனர்.

அங்கிருந்து கிளம்பி அவர்கள் செல்வதை காணும்போது யுயுத்ஸு திகைப்புடன் எண்ணிக்கொண்டதுண்டு, அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று. அவர்கள் மீண்டும் தங்கள் மெய்நிலங்களுக்கு செல்கிறார்கள். ஏட்டிலிருந்து நிலங்களும் கன்றுகளும் மெய்யுரு கொண்டெழுந்து வளர்ந்து பெருகிச் சூழப்போகின்றன. அவர்கள் ஒருபோதும் அறியாதவை அவை. எவ்வண்ணம் அவற்றை அவர்கள் எதிர்கொள்ள முடியும்? எவ்வண்ணம் கையாள முடியும்? ஆனால் எவ்வகையிலோ அந்தச் சொற்தொகை அவர்களுக்கு உதவியாக இருக்கும். ஒன்றைப்பற்றி சற்றே அறிந்திருப்பது, அது தவறாக இருப்பினும் கூட, உதவியானதே. அது அறிதலை தொடங்கி வைக்கிறது. முற்றிலும் அறியாத ஒன்று அளிக்கும் திகைப்பைவிட அது மேல்.

குலம் என்பது என்றுமே தன் வரிசையை, தொன்மையை, தொடர்ச்சியை கைவிடுவதில்லை. கன்றென எதையும் கண்ணால் பார்த்திராத ஆயர்குடித் தலைவர்கூட கன்று பெருகிச்சூழ்ந்த தன் பெருங்குடிக்கு நடுவே தலைவர் என்றே கொள்ளப்படுவார். அவருள் இருக்கும் சொல் தன்னை சற்றே திருத்திக்கொண்டு ஆவென, கன்றென, ஊர் என, புல்வெளி என ஆகக்கூடும். அதை அவன் முன்பும் கண்டிருந்தான். அந்நகரில் புதிதாக வந்துசேரும் குடித்தலைவர்கள் மிகச் சில மாதங்களிலேயே அனைத்தையும் சொல்லென ஆக்கிக்கொள்வார்கள். சொல் என ஆகும் தன்மை இங்குள்ள ஒவ்வொன்றிலும் உள்ளது. மொழியென்பது பொருளின் பிறிதொரு வடிவம். பொருள் என்பது மொழிக்குள் உறைவது.

யுயுத்ஸு கண்முன் விரிந்த அஸ்தினபுரிக்காட்டின் மீது உள்ளம் பரவ, கண்களைச் சுருக்கி நோக்கியபடி, இடையில் கைவைத்து நின்றிருந்தான். அவன் அருகே நின்றிருந்த சகதேவன் அதற்கப்பால் நின்றிருந்த நகுலனிடம் “மூத்தவரின் வருகையைப்போல் உளம் நிறையச்செய்வது பிறிதொன்றில்லை. உண்மையில் சென்ற பல நாட்களாகவே நான் ஏங்கிக்கொண்டிருந்தது மூத்தவரின் கைத்தொடுகையை என்று இன்று காலைதான் உணர்ந்தேன். முதல் விழிப்பிலேயே இன்று மூத்தவர் நகர்புகுவார், தன் பெருங்கைகளால் என் தோள்தொட்டு அணைத்துக்கொள்வார் என்ற எண்ணம் எழுந்து உள்ளம் விம்மிதம் கொண்டது. நான் என் மூத்தவரைப்போல் இன்று இப்புவியில் அணுக்கம் கொள்வது பிறிதெவரிடமும் அல்ல” என்றான்.

நகுலன் “ஆம், நானும் அதை எண்ணிக்கொண்டிருந்தேன். அவருடைய தோள்கள்போல நாம் தேடுவது பிறிதொன்றில்லை. ஒருவேளை இந்நகர் மக்கள் அனைவரும் அவரைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் போலும். நேற்று பின்னிரவிலேயே நகரம் ஒலிகொள்ளத் தொடங்கியது. இன்று காலை மூத்தவர் நகர்புகுகிறார் என்பது உச்சநிலைக் கிளர்ச்சியை உருவாக்கியது என்று நான் உணர்ந்தேன். சாளரங்களின் சிறு திறப்பினூடாகவே நகரின் பேரோசை வந்து என் அறையை அதிரவைத்துக்கொண்டிருந்தது. அவர்கள் எவரும் மூத்தவரை நேரில் பார்த்தவர்களல்ல. அவர்களுக்கு அவர் கதைகளிலிருந்து எழுந்து வரும் தொல்தெய்வம்போல” என்றான்.

“ஆனால் ஆழத்தில் அவரை அறியாதவர் எவரும் இந்நகரில் இல்லை” என்று சகதேவன் சொன்னான். நகுலன் “உண்மை” என்றான். அவர்கள் சொற்களால் தங்கள் அகக்கொப்பளிப்பை பரிமாறிக்கொண்டனர். சொல்லிச்சொல்லி பெருக்கிக்கொண்டனர். ஒருகணத்தில் தான் கொண்ட உணர்ச்சிகள் அனைத்தும் அணைந்து சலிப்பு மேலெழுவதை யுயுத்ஸு உணர்ந்தான். “ஆம், அவை குலாந்தகனின் கைகள்” என்று அவன் சொன்னான். அச்சொற்களை அவன் நா அறியவில்லை. ஆனால் அவற்றை நகுலனிடமும் சகதேவனிடமும் சொல்லிவிட்டது போலவே உள்ளம் திடுக்கிட்டது.

“தன் உடன்பிறந்தார் அனைவரையும், அவர் மைந்தரையும் கொன்று குவித்த குருதி படிந்தவை அக்கைகள். அதன் பொருட்டு ஒருநாளேனும் துயில் நீக்காதவை. ஒரு சொல்லேனும் வருந்தி உரைக்காதவை.” அச்சொற்கள் ஒலிக்கின்றன என்றே அவன் அகம் படபடத்தது. ஒருவேளை துயிலற்றிருக்கலாம், வருந்தியிருக்கலாம். அவற்றை நாம் அறியாமலிருக்கலாம். இல்லை, அவ்வண்ணமல்ல. ஒரு அணுவளவேனும் துயரோ குற்றஉணர்வோ கொண்டார் எனில் விழிகளில் அது தெரியும். அவை விலங்குகளின் விழிகள். முதுகுரங்கின் விழிகள். அவை அறிந்தது காட்டை மட்டுமே. அவன் மூச்சுத்திணறினான். உடலை எடையென உணர்ந்தான், கால்மாற்றி நின்றான்.

அங்கு நின்றிருக்கக் கூடாதென்றும், எதையேனும் ஒன்றைச் சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட வேண்டுமென்றும் அவன் விழைந்தான். என்னால் ஒருபோதும் அவரை எதிர்கொள்ள முடியாது. நான் துரியோதனனின் இளையோன். நான் துரியோதனனை அன்றி எவரையும் என் உடலிலும் உள்ளத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாதவன். நெறி என்றும் அறம் என்றும் எண்ணி இப்பக்கம் வந்தேன். இங்கு திகழ்வதும் அதுவே என்று உணர்ந்தேன். அச்சொற்கள் எவ்வகையிலும் பொருளற்றவை என்று கண்டு தெளிந்தேன். இங்கு நின்றிருக்கும் நான் முற்றிலும் சொற்களால் தோற்கடிக்கப்பட்டவன்.

அங்கிருந்து எதை சொல்லி கிளம்பிச்செல்வது என்று யுயுத்ஸு எண்ணினான். முறைப்படி அவன் அங்கு நின்றிருக்க வேண்டியதில்லை. அரசகுடியினரென நகுலனும் சகதேவனும் வந்து கோட்டைமுகப்பில் நின்றிருப்பதே போதுமானது. அவன் கோட்டைக்குள் சென்று ஆட்சிப் பணிகளை நிகழ்த்தலாம், நகரெங்கும் இரு மருங்கிலும் நெருங்கி தெருவை குறுக்கிவிட்டிருக்கும் பெருந்திரளை ஒழுங்கு செய்யலாம், அரண்மனையில் அனைத்தும் முறையாக நிகழ்கின்றனவா என்று பார்க்கலாம். அவன் மெல்ல அடியெடுத்து பின்னால் வைத்தான். சகதேவன் திரும்பிப்பார்த்தபோது அவன் உடல் அசைவிழந்தது.

அக்கணம் தொலைவில் கொம்போசை எழுந்தது. முழவுகள் பெருகி ஒலித்தன. அதை கேட்டதுமே அவர்களுக்குப் பின்னால் அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பில் அறிவிப்பு முரசு முழங்கியது. அதை ஏற்று அனைத்துக் காவல்மாடங்களிலும் முரசுகள் ஒலி எழுப்பத் தொடங்கின. கொம்புகள் உடன் எழ பல்லாயிரக்கணக்கான குரல்கள் இணைந்த பெருமுழக்கம் ஓங்கி வானை அறைந்தது. திரும்பி நோக்கியபோது இழுத்துக்கட்டிய வெண்திரைபோல அக்கோட்டையே ஓசையால் அலைபாய்ந்துகொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் உடல் முழுக்க அவ்வோசையின் துடிப்பு நிறைந்தது. விரல்நுனிகள் இசைக்கலன்களில் கம்பிகள்போல அதிர்வு கொண்டன. அவன் அவ்வோசையால் தள்ளி முன் செலுத்தப்படுவதுபோல் உணர்ந்தான். கண்களை மூடியபோது நீரின் நுண்ணலைகள் என காற்றின் அலைகளை கண்களுக்குள் பார்க்க முடிந்தது.

மீண்டும் மீண்டும் அறிவிப்பு முரசு முழங்கியது. “குருகுலத்துத் தோன்றல்! ஹஸ்தியின் கொடிவழியன்! பாண்டவ இளையோன்! பெருங்காற்றின் மைந்தன்! வெற்றிகொள் வீரன்! பெருந்தோள் மாமல்லன்! வடபுலம் வென்று திரும்பும் பீமசேனன் நகரணைகிறார்! வெற்றி! வெற்றி! வெற்றி!” அவன் குமட்டலுடன் வாயில் எழுந்த வறுஞ்சுவை எச்சிலை சற்று நேரம் வைத்திருந்து உமிழ முடியாமல் விழுங்கினான். நஞ்சை விழுங்குவதுபோல் உடல் உலுக்கிக்கொண்டது. வெற்றி என்னும் சொல்லை எவ்வண்ணம் இவர்களால் சொல்ல இயல்கிறது? அதற்கு ஏதேனும் பொருள் உள்ளதென்று எண்ணுகிறார்களா? வெற்றி! எதன் மீதான வெற்றி? எதை அடைந்ததனால் அடையும் வெற்றி? ஆயிரம் மடங்கு அளித்து சிறு அணுவொன்றை பெறுவதனால் இத்தனை தருக்க முடியுமா என்ன?

இவர்களின் வெற்றி இருப்பது சொல்லில் மட்டுமே. வெறும் சொல்லில். எனில் இன்பமும் அவ்வாறே. அறமும் அவ்வாறே. அவ்வாறெனில் இழப்பும் துயரும் வெறுமையும்கூட வெறும் சொற்களென்றே ஆகலாம். சொற்களால் துரத்தித் துரத்தி குளவிக்கூட்டம்போல் கொட்டப்படும் சிற்றுயிர் நான். திரும்பிநோக்கி அச்சொற்களை துரத்த என்னால் இயலவில்லை. இவர்கள் அனைத்தையும் சொல்லாக்கி, ஆடற்களத்தில் கருக்களாக்கிவிட்டிருக்கிறார்கள். நான் நிலத்தில் நின்றிருக்கிறேன். பெருங்காற்றுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன். வான்வெம்மையால் எரிகிறேன்.

அவன் பெருமூச்சுடன் சால்வையைச் சீரமைத்து கைகூப்பி காத்து நின்றிருந்தான். பீமனின் தேர் அணுகி வருவது தெரிந்தது. அஸ்தினபுரியின் அமுதகலக் கொடி முகப்பில் வந்தது. அதை கோட்டையின் கொடிவீரன் சென்று எதிர்கொண்டு முறைமை செலுத்தினான். வைதிகர் வேதம் ஓதி வரவேற்றனர். இசைச்சூதரும் மங்கலச்சேடியரும் பீமனை எதிர்கொண்டு வணங்கினர். ஒவ்வொரு முறைமைச் சடங்கும் அதற்குரிய முறையில் நிகழ்ந்தது. நகரம் முறைமைகளுக்கு முற்றாக பழகிவிட்டிருந்தது. முன்பு நிகழ்ந்தபோதிருந்த சிறு தடுமாற்றங்களும் குழப்பங்களும் இன்றி காற்றில் இலைகள் அசைவதுபோல இயல்பாக, என்றும் அவ்வண்ணமே நிகழ்வதுபோல, ஒவ்வொன்றும் நிகழ்ந்தன.

மங்கல இசைகள், மங்கலச் சடங்குகள், மங்கலப் பொருட்கள். மங்கலம் மங்கலம் என எவரிடம் வேண்டுகிறார்கள்? எதை அகற்றிக்கொள்கிறார்கள்? குருதியைப்போல் ஒரு மங்கலம் இல்லை என்பார்கள் தொல்குடியினர். அவன் பீமன் உடலை தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். அதில் அந்த விசையற்ற மெல்லசைவு நிகழ்ந்துகொண்டிருந்தது. அவன் கண்ட மானுடரிலேயே ஆற்றல் மிக்கவன். அதில்தான் விசையின்மை ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டது. தசைகள் மிக மெல்ல நெளிந்து அமைந்தன. பெருங்கைகள் பொருளற்றவையென தோளில் தொங்கிக்கிடந்தன. யானையின் அசைவு. துதிக்கையின் மெல்லிய நெளிவு.

மங்கலச்சேடியர் நெற்றியில் செங்குறியிட்டு விலக நகுலனும் சகதேவனும் அருகே சென்றனர். பீமன் அவர்கள் இருவரையும் மாறி மாறி நெஞ்சோடு தழுவி கைகளால் முதுகை அறைந்தான். சகதேவன் குனிந்து விழிநீர் சிந்தினான். நகுலன் வேறுபக்கம் திரும்பிக்கொண்டான். நகுலன் அழுவதை பீமன் பார்த்தான். அவன் தோளைப் பிடித்துக் குலுக்கி சிரித்தபடி “என்ன?” என்றான். “இல்லை” என்று நகுலன் தலையசைக்க “வா” என சொல்லி மீண்டும் அள்ளி தன் நெஞ்சோடு அணைத்து இறுக்கிக்கொண்டான். சகதேவன் பீமனின் தோள்களில் தலைவைத்து கண்ணீர் சிந்தினான். பீமன் தன் பெரிய கைகளால் அவன் கன்னத்தை தட்டி விழிநீரைத் துடைத்து ஆறுதல்படுத்தினான். “வருக!” என்றபடி அவன் இருவரையும் இரு கைகளால் அணைத்துக்கொண்டு முன்னால் வந்தான்.

அவன் தன்னை பார்க்கக்கூடாதென்றே யுயுத்ஸு விரும்பினான். யுயுத்ஸு பின்காலடி வைத்து நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தான். ஆனால் அது அவன் உள்ளத்தில் நிகழ்ந்தது. உடல் அங்குதான் இருந்தது. அங்கு கொந்தளித்த பெருந்திரள் வாழ்த்தொலிகள் பீமன் தன்னை காணாமல் மறைத்துவிடக்கூடும் என்று யுயுத்ஸு நினைத்தான். அத்தனை பெரிய வாழ்த்துக்கூச்சல் அவனை கதைகளினூடாக அறிந்தவர்களிடமிருந்தே எழ முடியும். அங்கு முன்பிருந்த குடிகள் ஒருபோதும் அத்தகைய முற்றுவகையை, முழுதுள்ளத்து வாழ்த்தை அவனுக்கு அளிக்க இயலாது. அவர்களிடம் கசப்புகள் எஞ்சியிருக்கும். துயர்கள் அறியாமல் எழுந்து வரும். அங்கிருந்த குடிகள் தசையுடலிலிருந்து எழுந்த தெய்வத்தை என அவனை பார்த்தனர்.

அவர்களின் கண்கள் பீமனை தொட்டுத்தொட்டு உழிந்தன. ஒருகணம் கன்றை நக்கும் பசுவின் நாக்கு. மறுகணம் புது மண்ணை முகர்ந்து முகர்ந்து வெறிகொள்ளும் ஓநாய். மறுகணம் மலர்களை முத்தமிட்டு முத்தமிட்டு திளைக்கும் வண்டு. பெருந்திரளிடம் எழும் உணர்வுகள் கூடிக்கூடி பேருருக்கொள்கின்றன. அத்தனை விழிகளும் இணைந்து மாபெரும் விழி என ஆகி அவனை நோக்கி மலைத்தன. அவனை காதலுடன் தழுவித்தழுவி கொண்டாடின. அவ்விழிகள் அவனை தெய்வமாக்கின. அத்தகைய பல்லாயிரம் நோக்குகளுக்கு முன் எந்த மானுடனும் தெய்வமென்றே தன்னை உணர முடியும். தெய்வங்கள் நோக்குகையில் மானுடருக்கும் புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும் இடையே வேறுபாடு தெரிவதில்லை. தங்கள் நிமிர்வால், கடத்தலால், ஓங்குதலால் அந்நோக்குகளை அதன்பின் தெய்வங்களே உருவாக்குகின்றன. கல்லில் சிலையை தெய்வங்கள் எழுப்புகின்றன. விலங்குகளிலும் மானுடரிலும்கூட அவை தெய்வங்களை நிகழ்த்துகின்றன. தெய்வங்கள் மானுடரை ஆளும் ஆணையை மானுடரிடமிருந்தே பெற்றுக்கொள்கின்றன.

அவன் பீமனின் விழிகளை பார்த்தான். அங்கு எழுந்த வாழ்த்துகள் எதையும் அவன் அறியாதவன் போலிருந்தான். ஒருகணத்தில் அவன் யுயுத்ஸுவை பார்த்தான். இரண்டு எட்டு எடுத்து முன்னால் வந்து யுயுத்ஸுவின் தோள்களை வளைத்து தன் உடல் நோக்கி சேர்த்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். “நன்று, இளையோனே நன்று” என்றான். யுயுத்ஸுவின் உடல் உலுக்கிக்கொண்டது. “நன்று! நன்று!” என்று அவன் செவிக்குள் பீமன் குரல் ஒலித்தது. அவன் மெய்ப்புகொண்டான். தொண்டை கரகரப்பு அடைந்தது. மூச்சை அடக்க முயன்றபோது விம்மலோசையுடன் அதுவே வெடித்தது. அவன் பீமனின் நெஞ்சில் தோள் வைத்து அழத்தொடங்கினான். பீமன் அவன் கன்னத்தைத் தட்டி தோளை உலுக்கி “நன்று! நன்று!” என்றான். அவனை உலுக்கி “வருக!” என்று கொண்டு சென்றான்.

யுயுத்ஸு “என்னால் மறக்க முடியவில்லை, மூத்தவரே. மறக்கவே முடியவில்லை. நான் கௌரவர்களின் இளையோன். நான் துரியோதனனின் சிறுவன்… அவ்வுணர்வுகளை என்னால் கடக்க இயலவில்லை” என்றான். பீமன் அவனை சற்றே விலக்கி அவன் கண்களை நோக்கி “ஆம், நானும் கௌரவரில் ஒருவனே. நான் முதற்கௌரவனின் மறுபாதி” என்றான். திடுக்கிட்டு அவ்விழிகளைப் பார்த்து யுயுத்ஸு உடல் தளர்ந்தான். “நன்று. இவ்வண்ணமே நிகழும் எனில் எவர் என்ன செய்யக்கூடும்?” என்றபின் மீண்டும் யுயுத்ஸுவை அணைத்துக்கொண்டு “நன்று இளையோனே, வருக!” என்றான்.

கால்கள் தளர பீமனின் பெரிய கைகளால் கிட்டத்தட்ட தூக்கப்பட்டவன்போல அவனுடன் யுயுத்ஸு சென்றான். உடல் குலுங்க விழிநீர் உதிர அவன் விசும்பி அழுதுகொண்டிருந்தான். “நன்று” எனும் சொல்லே அவனுக்குள் ஒலித்தது. அது பீமன் அவனுக்கு சொன்னதல்ல. தனக்குத்தானே சொன்னது. அச்சொற்களை ஊழ்கநுண்சொல் என சொல்லிச் சொல்லி அதனூடாக அவன் மீண்டுகொண்டிருந்தான் போலும். அச்சொல் அவனை இருண்ட ஆழத்திலிருந்து தூக்கி கொண்டுவந்துகொண்டே இருக்கிறது போலும். “நன்று! நன்று!” எதை நன்றென்று கூறமுடியும்? எத்தனை பொருளில்லாச் சொல்! சொற்கள் பொருளிழக்கையில்தான் ஊழ்கநிலை கொள்கின்றன. பேராற்றலைப் பெறுகின்றன.

இவையனைத்தையும், இவ்வாறு நிகழ்வன அனைத்தையும், துயரென்றும் வெறுமையென்றும் களிப்பென்றும் வெற்றியென்றும் நிகழ்வன அனைத்தையும், விழிகளைச் சூழ்ந்திருக்கும் இப்பெருங்குரலை, அலைக்கும் இப்பெருந்திரளை, அதிரும் இக்காற்றை, காலையின் நல்லொளியை, இதோ இன்று புதிதாய் பிறந்து எழுந்து நிற்கும் இந்நகரை இச்சொல்லினூடாக கடந்துசெல்ல வேண்டும். “நன்று!” இந்நகரை ஒரு சொல்லென ஆக்கிக்கொள்ள வேண்டும். “நன்று.” சொல்லென ஆக்கிக்கொள்வது ஒன்றே வழி. “நன்று.” ஒற்றைச்சொல்போல் தெய்வம் என்று ஆவது வேறில்லை. “நன்று! நன்று!” இனிய சொல். அருமணியும் படைக்கலமும். அமுதும் நஞ்சும். என் ஆடற்களத்தின் கரு. என் ஆலயத்தெய்வம். “நன்று! நன்று!”

நகரின் வாழ்த்துக் கொந்தளிப்புகளினூடாக மஞ்சளரிசி, மலர்கள், பொற்பொடிப் புழுதியினூடாக முகில்களில் மிதப்பதுபோல் அரண்மனை நோக்கி சென்றுகொண்டிருக்கையில் பெருவிடாயுடன் அந்த ஒரு சொல்லை யுயுத்ஸு பற்றிக்கொண்டான். “நன்று! நன்று! நன்று!” என்று அவன் காலம் திகழ்ந்துகொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைஜே.ஜே.சிலகுறிப்புகள், திறனாய்வு, ரசனை
அடுத்த கட்டுரைதம்மம் தந்தவன்- கடலூர் சீனு