பத்ம விருதாளர்கள்

இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் மிக முக்கியமான பலர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஊடகங்களால் உலகுக்குக் காட்டப்படாதவர்களே பலர் அவர்களில் உள்ளனர்.

 

தமிழகத்தில் பத்மவிருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் காந்திய சூழலில் அறியப்பட்டவர். அமர்சேவா அமைப்பை நடத்திவரும் ராமகிருஷ்ணன் அவர்களும் ஓரளவு புகழ்பெற்றவர். ஆனால் தமிழகத்திற்கு வெளியே பத்ம விருது பெற்ற பலர் அறியப்படாதவர்கள். அவர்களில் காடுகளைப்பற்றிய அறிவின் களஞ்சியமான பழங்குடி அன்னையும் உண்டு.

 

பொதுவாக இவர்கள் பற்றிய கவனம் நம் சூழலில் இருப்பதில்லை. அது நம் செய்திபற்றிய் அடிப்படை மனநிலையில் உள்ள சிக்கல். செய்தி என்றால் அது எதிர்மறைச் செய்திதான் என ஆகிவிட்டிருக்கிறது. செய்தி எப்போது விற்பனைப்பொருளாக ஆகியதோ அப்போதே இந்த கண்ணோட்டம் வந்துவிட்டது. அல்லது நம் ஆழுள்ளத்து சபலங்களை தூண்டுவது, பகற்கனவுகளைச் சீண்டுவதுதான் செய்தி.

 

அதோடு நுட்பமான ஓர் உளச்சிக்கலும் இதில் பொதிந்துள்ளது. செய்திகளில் கொடுமைகளை, அவலங்களை காண்கையில் நாம் நம் வாழ்க்கைபற்றிய ஆறுதலை அடைகிறோம். நம்மைப்பற்றிய பெருமிதம் உருவாகிறது. அது ஒருவகையான விடுதலை உணர்வு. ஓர் எதிர்மறைச் செய்தியை வாசித்துவிட்டு என்ன உலகமோ என்று பிலாக்காணம் வைக்கும்போது நம்முள் இருந்து ஒன்று நிறைவடைகிறது.

ஆனால் பெரும் தியாகங்கள் , பெரும் சாதனைகள், நீண்ட அர்ப்பணிப்புகள் நம்மை சிறிதாக நமக்குக் காட்டுகின்றன. நாம் அமைதியிழக்கிறோம். ஏற்கனவே நம்மை சிறியவராக நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். இச்செய்திகள் அந்த உணர்வை மேலும் கூட்டுகின்றன. இது ஒருவகை உளவியல் ஊகமாகவே இருந்தது. இன்று எல்லா உளநோய்களையும் அப்பட்டமாகக் காட்டும் சமூக ஊடகம் இவ்வுணர்வுநிலையை ஆவணப்படுத்திக் காட்டுகிறது. எந்த ஒரு மேன்மையும், எந்த ஒரு சாதனையும், எந்த ஒரு தியாகமும் உடனே முகமிலிகளால், அல்லது ஆளுமையிலிகளால் சிறுமை செய்யப்படுகிறது. அவதூறு செய்யப்படுகிறது. நையாண்டியாக ஆக்கப்படுகிறது. அதற்குப்பின் இருக்கும் உளவியல் சாமானியனின் நஞ்சு. சராசரியின் கீழ்மை.

 

இதற்குப் பலமுகங்கள். ஒன்று தன்னை மேலும்தீவிரமான ‘கொள்கைகள்’ கொண்டவனாக கற்பனைசெய்துகொள்வது. அதைச்சார்ந்து நின்றுகொண்டு அது அல்லாத எல்லாவற்றையும் இழிவுசெய்வது. அப்போது இழிவுசெய்வதன் குற்றவுணர்ச்சியும் இல்லாமலாகிறது. மேலான ஒன்றுக்ககாகத்தானே இதைச் செய்கிறோம் என்னும் நிம்மதி கிடைக்கிறது. இன்னொன்று, தன்னை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட கலகக்காரனாக, பொறுக்கியாக பாவனைசெய்துகொள்வது. இந்த கலகர்களும், பொறுக்கிகளும், பணியவேண்டிய இடங்களில் பணிந்து, குழையவேண்டிய இடங்களில் குழைந்து, ஒளிந்து ,நெளிந்து வாழ்ந்துகொண்டிருக்கும் எளிய ஆத்மாக்கள்தானே ஒழிய எந்த சமூகப்பாதுகாப்பும் அற்று தெருவில் வாழ்பவர்கள் அல்ல.

லக்ஷ்மி மணிவண்ணன் ஒருமுறை சொன்னார். குளச்சல் மு யூசுப்புக்கு பாராட்டுவிழாவை நாங்கள் ஏற்பாடு செய்தபோது. “இவர் கடுமையா உழைச்சிருக்கார். இருபது வருசம் பாடுபட்டிருக்கார். அதுக்கு ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. அதனால அவரை பாராட்ட நம்மாட்கள் கூடுதலா வரமாட்டாங்க. ஒண்ணுமே செய்யாத ஒருத்தருக்கு பட்டமோ பாராட்டோ கிடைச்சா வந்து கூடி புகழ்ந்து கொண்டாடிருவாங்க. ஏன்னா அதே பாராட்டுக்கு தாங்களும் எப்பவாவது வந்திடலாம்னு உள்ளூர ஒரு நப்பாசை இருக்கும். உண்மையான சாதனையாளர்களைக் கண்டா சாமானியர்களுக்கு பயம். பயத்திலே இருந்து வெறுப்பு”

 

லக்ஷ்மி மணிவண்ணன் குரூரமானவர் என்பது என் எண்ணம். ஆகவே உடனே சொல்லிவிடுகிறார். நான் கொஞ்சம் கனிந்து கொஞ்சம் தயங்கி கடைசியில் அங்கெயே வந்து சேர்கிறேன். அசாதாரணமான சாதனையாளர்களை நம் பாமரர் இழிவுசெய்கிறார்கள். ஆனால் எந்த தகுதியும் இல்லாதவர்களை கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் அவர்களும் இவர்களைப் போன்றவர்களே. இதுதான் நாம் செய்திகள் வழியாக நினைவு கொண்டிருக்கும் முகங்கள் பெரும்பாலும் சாதாரணர்கள் என்பதற்கு அடிப்படை

 

இந்தச் சாதனையாளர்கள் எப்படி செய்திகளில் வருகிறார்கள்? பெரும்பாலும் ஒப்புக்கு ஓர் அரைப்பக்கம் ஒதுக்கப்படுகிறது. சுவாரசியம் இல்லாத செய்திகள். அல்லது மிகை நெகிழ்வின் தேய்வழக்குகள். நாம் வாசித்து உள்ளம் பதியாமல் கடந்துசெல்வோம். மாறாக தீவிரமாக எழுதப்படும் கொலைகாரர்கள் அரசியல்வாதிகள் முகங்கள் நம்முள் ஆழப்பதிகின்றன

 

எப்படி இவர்களை பதியச்செய்வது? ஒன்று , திரும்பத் திரும்பச்சொல்வது. இன்னொன்று இளமையிலேயே மக்கள் உள்ளங்களில் பதியச் செய்வது.. யானைடாக்டர் கதை குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிவதைக்  காண்கிறேன். இவர்களே நம் புதிய காலகட்டத்தின் புராண நாயகர்கள். இவர்களே நம் வீரத்தலைவர்கள். புலவர்களால் எழுதி நிலைநிறுத்தப்பட வேண்டியவர்கள். நாம் வாழும் இக்காலகட்டத்தின் நடுகற்கள்

தமிழில் இத்தனை எதிர்மறைச்செய்திகள் குவிந்திருக்கின்றன. இணையமோ வெறுப்பு அலையடிக்கும் கடல். ஏன் இந்த நேர்நிலைச் சாதனையாளர்களைப் பற்றி நாம் மேலும் மேலும் எழுதக்கூடாது? இவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஒரு கட்டுரை எழுதி நூலாக்கக்கூடாது? கல்வி நிலையங்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய நூல் அதுதானே?

 

ஆண்டுதோறும் இப்பணி செய்யப்படவேண்டும். அதேசமயம் பத்ம விருதுகள் பெற்றமையாலேயே ஒருவர் தகுதி கொண்டவர் அல்ல. கலை, இலக்கியம்,சேவை துறைகளில் சாதனையாற்றியவர்களை மட்டுமே அவ்வாறு எழுதும் நூலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.நண்பர்கள் முயலலாம்

இவர்களைப்பற்றி எழுத  பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. தகவல்கள் எளிதாகவே கிடைக்கும். அவற்றை தொகுத்து படிக்கும்படி எழுதுவதே முக்கியமானது. பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதிய இன்றைய காந்திகள் அவ்வகையில் ஒரு முக்கியமான முன்னோடி நூல்

 

எழுதுவது அவர்களுக்காக மட்டும் அல்ல, அவர்க ள் கொண்டுள்ள ஊக்கம் வழியாக நாம் நம் அன்றாடத்தின் வெறுமையை, நம்மைநாமே உள்ளூர மதிக்காமலிருப்பதன் விளைவான எதிர்மறைத்தன்மையை கடந்துசெல்லமுடியும் என்பதனால் நமக்காகவேதான்,.

 

முந்தைய கட்டுரைகாடு- கதிரேசன்
அடுத்த கட்டுரைஎழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2