அமுதும் நஞ்சும் அணைந்ததொரு காதை – அருண்மொழி நங்கை

 நீலகண்டம் வாங்க

அருண்மொழியின் இலக்கியக் கருத்துக்கள் மேல் எப்போதுமே எனக்கு பெருமதிப்பு உண்டு. தன்னை முழுக்க முழுக்க வாசகியின் இடத்தில் நிறுத்திக்கொண்டு, ஒரு படைப்பு தனக்கு என்ன அளிக்கிறது என்பதை மட்டுமே முன்வைக்கும் கருத்துக்கள் அவை. எந்த நூலையும் வாழ்க்கைசார்ந்த தன் புரிதலுக்குள் கொண்டுவந்தே அவளால் பேசமுடியும்.

ஆனால் அவளுடைய கட்டுரைகளில் அவள் பேசுமளவுக்கு தெளிவு அமைவதில்லை, பயிற்சியின்மையின் குறை இருந்துகொண்டே இருக்கும் என்பது என் எண்ணம். ஆகவே அவள் எழுதிய எதையும் நான் பெரிதாகப் பாராட்டியதில்லை. அதில் அவளுக்கு உளக்குறை இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை இலக்கியத்தில் எது எழுதப்பட்டிருக்கிறதோ அதுவே அளவுகோல்.

சுனீல் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலுக்கு அருண்மொழி எழுதியிருக்கும் இந்த விமர்சனக்குறிப்பு அவள் தன்குரலையும் மொழியையும் கண்டடைந்துவிட்டிருப்பதன் சான்று. தெளிவான கச்சிதமான சொற்களில் தன்னம்பிக்கையுடன் தன் மதிப்பீட்டைச் சொல்வதோடு அப்படைப்பை  ஒரு வாசகர் அணுகுவதற்கான வழிகளையும் ஓர் இலக்கியவிமர்சகருக்குண்டான பார்வையுடன் முன்வைத்துச் செல்கிறாள்.

குறிப்பாக நீலகண்டம் ஓரளவு நல்ல வாசகர்களால்கூட சரியாக வாசிக்கப்படாத படைப்பு. அதன் மொழி, பல்வேறு புராண உட்குறிப்புகள் இன்றைய குழந்தைகளின் நவீனத் தொழில்நுட்ப உலகு ஆகியவை பின்னி ஒன்றாக்கப்பட்டிருக்கும் முறை  போன்றவை வாசகர்கள் பலரின் தலைக்குமேல் சென்றுவிட்டன. அவற்றுக்கான இடம் இப்புனைவில் என்னவாக இருக்கிறது என தொகுத்துக்கொள்ள பலராலும் இயலவில்லை. அது எந்த ஒரு புதுவகை எழுத்து உள்ளே வரும்போதும் நிகழும் சிக்கல் அருண்மொழியால் அனைத்தையும் முழுமையாகக் கருத்தில்கொண்டு இவ்விமர்சனம் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு படைப்புக்கு எழுதப்படவேண்டிய முதல்விமர்சனம் அமைந்த மொழி என ஐயமில்லாமல் சொல்வேன். ஆகவே முதல்முறையாக அருண்மொழியை ஒரு கட்டுரையாளர் என ஏற்றுக்கொள்கிறேன்.

சென்ற முப்பதாண்டுகளாக தொடர்ச்சியாக வாசிக்கும், தமிழிலும் உலக இலக்கியத்திலும் முதன்மையான ஆக்கங்களை கூர்ந்து அறிந்திருக்கும் அருண்மொழி போன்ற ஒருவரின் பாராட்டு – சற்று விமர்சனங்களுடன் என்றாலும், எந்த ஆசிரியரும் பெருமைகொள்ளத் தக்கதே. சுனீல் கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.

அமுதும் நஞ்சும் அணைந்ததொரு காதை – அருண்மொழி நங்கை – நீலகண்டம்


.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்

ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை

அருண்மொழியின் உரை

பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை

சோர்பா    எனும்   கிரேக்கன் – அருண்மொழி நங்கை  

முந்தைய கட்டுரைகோட்டயம் ஓவியம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரையேசுதாஸின் அப்பா