மீண்டும் சந்திக்கும் வரை…

யானைவந்தால் என்ன செய்யும்?

மீளும் நட்பு

நேற்று [24-1-2020] காலம் செல்வம் நாகர்கோயில் வந்து என் வீட்டில் ஒருநாள்  ‘நின்றார்’. அதற்கு முந்தையநாள் கருணாகரன். கூடவே கருணாகரன் எழுதிய நூலையும் செல்வம் எழுதிய சொற்களில் சுழலும் உலகம் நூலையும் வாசித்தேன். இரண்டுநாளாக ஒரே யாழ்ப்பாணத்தமிழ். மானிப்பாய், புங்குடுதீவு, சில்லாலை எல்லாம் கொல்லைப்பக்கம்தான் என்று ஒருபிரமை.

 

‘பேந்து’   மாலையில்  ‘வெளிக்கிட்டு’ தெங்கம்புதூரில் லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டுக்குச் சென்றோம். அவர் சற்று நோயுற்றிருக்கிறார். ஒருமாதமாக அவருக்கு நுரையீரல் தொற்று இருந்திருக்கிறது. பல சோதனைகளுக்குப்பின் காசநோய் தொற்று என தெரிந்திருக்கிறது. ஆரம்பநிலைதான், ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும். இப்போதுதான் வீடு, தொழில் என நிலைகொள்ள தொடங்கியிருக்கிறார். ஒரு சிறு சோதனை, மீண்டுவிடுவார்.

 

செல்வமும் நானும் அவருடன் உரையாடிக்கொண்டே நெடுநேரம் இருந்தோம். முழுக்கமுழுக்க சமையல்பற்றி மட்டும்தான் பேச்சு. யாழ்ப்பாணச் சமையலிலும் குமரிமாவட்டச் சமையலிலும் மரவள்ளிக்கிழங்கின் இடம் பற்றி என்று சுருக்கமாகச் சொல்லலாம். கூடவே வகைவகையான துவையல்கள் பற்றி. மரவள்ளிக்கிழங்குச் சமையலின் முறைகள் பற்றி என்றாவது ஒரு குட்டிநூல் எழுதவேண்டும். பிரேஸிலில் பிறந்து இந்தியா வந்து கேரள – குமரி மக்களை பஞ்சங்களிலிருந்து தடுத்தாட்கொண்ட தெய்வம் அது.

பொதுவாக நோய் உசாவச் செல்கையில் நான் நோய் பற்றிப் பேசுவதில்லை. அது எவ்வகையிலும் தேவையில்லை. நோயின் மிகமோசமான விளைவே நோய் பற்றி மட்டுமே அது எண்ணச் செய்துவிடும் என்பதுதான். நோயை எதிர்க்கும் வழியே மகிழ்ச்சியாக இருப்பதுதான். அதுவும் லக்ஷ்மி மணிவண்ணனிடம் இந்த முப்பதாண்டுகளிலில் இலக்கியம், பண்பாடு பற்றி அன்றி சாதாரணமாக உரையாடியதே இல்லை.

 

செல்வம் சென்றமுறை வந்திருந்தபோது நான் அவரையும் மனைவியையும் தேவசகாயம்பிள்ளை குன்றுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அன்று அவர் மனைவி ஏஏதோ வேண்டிக்கொள்ள அது நிறைவேறியமையால் நன்றிக்கடன் செலுத்த செல்வம் சென்றேயாகவேண்டும் என்று சொல்லிவிட்டார். ஆகவே மீண்டும் நானும் செல்வமும் சென்றோம். தெங்கம்புதூரில் இருந்து பறக்கை வழி காக்குமூரினூடாக தோவாளை சாலையில் ஏறி ஆரல்வாய்மொழி சென்றோம்.

அந்திசூழும் வேளை. ஓரிருவர் மட்டுமே இருந்தனர். எப்போதும்போல காற்று குளிரக்குளிர வீசிக்கொண்டிருந்தது. செல்வத்தின் அம்மா சொல்லும் பழைய ஜெபவசனம் ஒன்றை அங்கே சொல்லக்கேட்டு அவர் உணர்ச்சிவசப்பட்டார். நானும் அம்மாவை நினைவுகூர்ந்தேன்

 

இரவில் திரும்பிவந்து பேசிக்கொண்டிருந்தோம். போகனைச் சந்திக்க விழைந்தார் செல்வம். குறுஞ்செய்தி அனுப்பினேன், அவர் வேலைபப்ளுவில் இருப்பவர் என்பதனால் பார்க்கவில்லை போலும்.

 

காலையில் ஒரு நடை சென்றோம். வேளிமலை அடிவரை. 25-1-2020 மாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் சென்னைக்குக் கிளம்பினார்.லண்டன் சென்று அங்கிருந்து கனடா செல்கிறார். ரயில்நிலையம் சென்று விடைகொடுத்துவிட்டுத் திரும்பினேன்.

 

மீண்டும் ஒர் இனிய சந்திப்பு. இருபதாண்டுகளாக நீடிக்கிறது இந்த அணுக்கம். இத்தகைய நட்புகளுக்கு இலக்கியச் சூழலில் தடைகள் மிகுதி. பெரும்பாலானவர்களுக்கு இந்த வகையான உறவின் ஆழம் புரிவதில்லை. தீயநோக்கம் இல்லாமலேயே நட்புகளை முறிக்க முயல்பவர்கள் உண்டு. நட்பு என்றால் அதில் ஏதோ தன்னல ஒப்பந்தம் உண்டு என எண்ணுபவர்களே மிகுதி

 

என் கருத்துக்களுக்கெல்லாம் செல்வம் வசைபாடப்பட்டிருக்கிறார். அதுவும் ஆண்டுதோறும் புதிது புதிதாக. மேடைகளில் நேரடியாகவே வசைபாடியிருக்கிறார்கள். எளிதாக என்னை கையொழிந்து அவற்றிலிருந்து தப்பித்திருக்கமுடியும்.அவர் செய்வதில்லை.

 

இந்த ஆண்டு முழுக்க பழையநட்புகளின் கொண்டாட்டமாகவே நாட்கள் செல்கின்றன. நட்புகள் துரோகம் செய்வதைப் பற்றி பலரும் எழுதுவதை காண்கிறேன். குறிப்பாகக் கவிஞர்கள். துரோகம் செய்யும் நட்புகளாகத் தேடிப்பிடிப்பார்கள்போல. அல்லது இவர்களைப் பார்த்தால் துரோகம் செய்து பார்ப்போமே என்ற சபலம் வருமோ என்னவோ.

 

நான் என் நினைவறிந்த நாள் முதல் நட்புகள் சூழ வாழ்பவன். என் ஆரம்பப்பள்ளி நண்பர்கள்கூட இன்றும் நண்பர்களே. எந்த ஆழ்ந்த நட்பும் முறியவில்லை. நட்பு ஒரு ஒப்பந்தம் அல்ல என்பதனால் அதில் துரோகம் என்பது இல்லை. மிகமிகச் சிலர் விலகிச் சென்றிருக்கிறார்கள், பின்னர் மீண்டும் அணுகியிருக்கிறார்கள்.

 

செல்வத்தை ரயிலேற்றிவிட்டு மீள்கையில் களிப்பும் துயரமும் வந்தன. ஒவ்வொருமுறை பிரிகையிலும் நாங்கள் கட்டித்தழுவி சற்றே கண்கலங்குவோம். அதிகம்போனால் ஓராண்டுக்குள் மீண்டும் சந்திக்கப்போகிறோம் என்பது இருவருக்குமே தெரியும்.

 

வீடு திரும்பினேன். அருண்மொழி “என்ன கண்கலங்கல் எல்லாம் முடிஞ்சாச்சா?” என்றாள். சைதன்யா சிரித்தாள். நான் வாழ்நாள் முழுக்க நீளும் நண்பர்களுடன் இருந்த என் அப்பாவை நினைத்துக்கொண்டேன்.

ஒரு கடலோர மரம்

காலம் செல்வம் வேளாங்கண்ணியில்…

காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு

டொரொண்டோவில்

செல்வம் பேட்டி

முந்தைய கட்டுரைமலேசியா- ஓர் இலக்கியப்பூசல்
அடுத்த கட்டுரைஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?