‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 9

சகதேவனின் படைகள் நகரை அணுகிவிட்டதை அறிவிக்கும் முரசொலிகள் எழுந்ததும் கோட்டைமுகப்பின் சிற்றறைக்குள் அமர்ந்திருந்த நகுலன் எழுந்து தன் உடைவாளை எடுத்து இடையில் பொருத்திக்கொண்டு “செல்வோம்” என்று யுயுத்ஸுவிடம் சொன்னான். யுயுத்ஸு அருகே சுவர் சாய்ந்து நின்றிருந்தான். தலைவணங்கி சொல்லின்றி அவனுடன் நடந்தான். அவர்கள் தெற்குக் கோட்டைமுகப்பை சென்றடைந்தனர். அணிப்படையினரும், மங்கலச் சேடியரும், இசைச்சூதரும், வேதியரும் முகப்பில் நிரைகொண்டு சகதேவனை எதிர்நோக்கி நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னால் நகுலன் சென்று நின்றான். வலக்கை அருகே யுயுத்ஸு நின்றான்.

நகுலன் “தென்னகத்தில் இருந்து அவன் கொண்டு வருவனவற்றில் மிக மதிப்பு வாய்ந்தது உடன் திரட்டி வரும் படையே. சிறு படையுடன் சென்றவன் பதினெட்டு மடங்கு பெரிய படையுடன் வருகிறான்” என்றான். “ஆம், செல்லுமிடமெங்கும் அஸ்தினபுரியின் படையில் இணைவதற்கு மறவர் திரண்டு வந்தனர் என்று அறிந்தேன்” என்றான் யுயுத்ஸு. “அவர்கள் வெற்றியை விரும்புபவர்கள்” என்று நகுலன் சொன்னான். “அதைவிட ஒரு செய்தி நிலமெங்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இங்கு புது வேதமொன்று எழுந்துள்ளது, அது குடிப்பிறப்பை ஒழித்து இயல்பையும் செயல்திறனையும் மட்டுமே கருத்தில் கொள்கிறது என்று. இளைய யாதவரின் சொல் என ‘நான்கு வர்ணங்களும் எனது இயற்றல், செயலும் இயல்பும் சார்ந்து’ எனும் இரண்டு வரியை இன்று பாரதவர்ஷத்தில் அறியாதவரே இல்லை என்று சொன்னார்கள்” என்றான் யுயுத்ஸு.

நகுலன் “ஆம், அவர்கள் அனைவரும் கனவு கண்டிருந்த புத்துலகம். பல பல தலைமுறைகளுக்கு முன்னரே அவர்களின் மூதாதையரால் காணப்பட்டது. விழிநீருடன், கனவின் தவிப்புடன், துயருடன் மீள மீள சொல்லப்பட்ட நுண்சொல் அது. எங்கோ அது காலத்தில் இழைக்கப்பட்டது, இதோ பேருருவன் ஒருவனின் சொல்லில் எழுந்து வந்துள்ளது” என்றான். பெருமூச்சுவிட்டு “நாம் நம் கண்முன் இதைக் காணும் பேறுபெற்றோம். யுகமாறுதலை காணாதவர்களுக்கு பதிந்த வாழ்க்கையின் அமைதி கிடைக்கிறது, காண்பவர்கள் பொருளுடைய வாழ்க்கையை அழுதும் சிரித்தும் கண்டடைகிறார்கள்” என்றான். யுயுத்ஸு மெய்ப்பு கொண்டான். பின்னர் அகத்தே ஒரு வெற்றுச் சிரிப்பை அடைந்தான். இத்தகைய சொற்களை சொல்லிச் சொல்லி கடக்கவேண்டியவைதான் எவ்வளவு!

பேச்சை மாற்றும் பொருட்டு யுயுத்ஸு “இப்போது படையென வருபவர்கள் பயின்ற போர்வீரர்கள்தானா?” என்று கேட்டான். “போர்வீரனுக்குரிய முதன்மைப் பயிற்சி என்பது தன் தனித்தன்மையை இழந்து படைத்திரளின் பகுதியென்றாவதே. அது அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒற்றைக்கனவு. அதுவே அவர்களுக்கு போதுமானது. அது இன்னும் பல தலைமுறைகளுக்கு இங்கே மாண்பையும் வெற்றியையும் அளிக்கும்” என்று நகுலன் சொன்னான். “என் படைகளில் சேர்பவர்களை நான் கூர்ந்து பார்ப்பதுண்டு. ஐயமின்றி அளிக்க, எச்சமின்றி கலக்க அவர்களால் இயல்கிறது.” யுயுத்ஸு அதைத் தொடர்ந்த சொற்களில் “தயக்கமின்றி உயிர்விடவும்” என்றான். தன் சொல் எழுந்துவிட்டதோ என அஞ்சினான். என்றோ ஒருநாள் உள்ளம் சொல்லென எழவிருக்கிறது. அன்று அனைத்தையும் இழக்கவிருக்கிறோம்.

கோட்டையிலிருந்து முரசுகள் பேரொலி எழுப்பத் தொடங்கின. மங்கல வாத்தியங்களை இசைத்தபடி இசைச்சூதர் சீரடி வைத்து முன் சென்றனர். அவர்களுக்கு முன்னால் அணிச்சேடியர். அவர்களுக்கு முன்னால் வேதியர். அவர்களுக்கு எதிரே கவச உடையணிந்த சகதேவனின் கொடிமுதல்வன் அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியுடன் முதலில் வந்தான். சகதேவனின் அன்னப்பறவைக் கொடியுடன் அடுத்த வீரன் அவனைத் தொடர்ந்து வந்தான். தொடர்ந்து இசைச்சூதர்கள் ஏறிய திறந்த தட்டுள்ள தேர் மங்கல இசைமுழக்கமிட்டபடி வந்தது. முரசுகளின் முழக்கமும் படைவீரர்களின் ஆர்ப்பொலியும் அணுக கோட்டையிலிருந்து முரசுகளும் கொம்புகளும் இணைந்துகொண்டன. இரு யானைகள் சந்தித்துக்கொண்டதுபோல என யுயுத்ஸு எண்ணிக்கொண்டான்.

சகதேவனின் தேரைக் கண்டதும் நகுலன் அறியாது யுயுத்ஸுவின் கையைப்பற்றி “அவனைப் பார்த்து நெடுநாளாகிறது. அவனைப் பார்க்காத தவிப்பு என்னுள் எவ்வளவு இருந்ததென்று இப்போது உணர்கிறேன்” என்றான். அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. யுயுத்ஸு அதுவரை தன்னுள் இருந்த ஆர்வம் அனைத்தும் வடிந்து பொருளற்ற சோர்வொன்று திரள்வது போலுணர்ந்தான். அந்தக் கையை நகுலன் தன் உடலில் இருந்து எடுத்துவிட வேண்டுமென்று விரும்பினான். நகுலன் அவன் கையை உலுக்கியபடி “இனியவன். அவன் எப்போதும் நோக்குக்கு அழகியவன். உடனிருக்கையில் உளம் நிறையச்செய்பவன். இப்புவியில் எனக்கு முதன்மையானது பிறிதொன்றில்லை” என்றான்.

“அவர் தங்கள் மறுபாதி” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், மெய்யாகவே உணர்வும் உடலும் அவனிலேயே பாதி இருக்கின்றன. அவனில்லாதபோது நான் உணரும் தனிமையை எவரும் உணர்ந்துவிட இயலாது” என்று நகுலன் சொன்னான். பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தபோது அவன் முகத்தில் தெரிந்த உணர்வுகள் என்ன என்பதை யுயுத்ஸுவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது துயர் போலவும், தவிப்பு போலவும், அவ்வப்போது எழுந்து அணையும் சீற்றம் போலவும் இருந்தது. யுயுத்ஸு “அவரும் அவ்வாறே உணர்வார்” என்றான். அது பொருளில்லா வெற்று முகமகிழ்ச் சொல். ஆனால் நகுலன் மேலும் உளமெழுந்தான். யுயுத்ஸுவின் கையை வலுவாக உலுக்கியபடி “ஆம், அவனும் ஒவ்வொருநாளும் என்னையே எண்ணிக்கொண்டிருப்பான். பிறிதொன்றை எண்ணியிருக்க மாட்டான்… மெய்யாகவே அவன் என்னுடன் மட்டுமே நிறைவுடனிருப்பான்” என்றான்.

நகுலனின் தொடுகை யுயுத்ஸுவை மேலும் ஒவ்வாமை கொள்ளச்செய்தது. அவன் தன் உடலை எவரும் தொடுவதை விரும்பியதில்லை. சிற்றகவையிலிருந்தே அவனுள் அமைந்த ஒவ்வாமை அது. அவனை திருதராஷ்டிரர் அரிதாகவே தொட்டார். குழவியாக அவனை பலரும் தொடுவதுண்டு. அதை அன்று அவன் விரும்பியிருந்தான். பின்னர் உணர்ந்தான், அரசமைந்தரை அவ்வாறு எவரும் தொட்டுக் கொஞ்சுவதில்லை என்று. தன்னை மட்டும் ஏன் கொஞ்சுகிறார்கள் என அவன் நோக்கலானான். அவர்கள் தன்னை வளர்ப்பு விலங்கை வருடிவிளையாடும் உளநிலையுடன் தொடுகிறார்கள் என உணர்ந்தான். அவன் தலையில் அவர்கள் கைவைத்தனர். தோளையும் முதுகையும் தட்டினர். அதன்பின் அவன் அவர்களின் தொடுகையை தவிர்க்கும்பொருட்டு அகன்று நின்றான். கைதொடு தொலைவை முன்னரே கணித்துவிடுவான்.

ஆனால் துரியோதனன் எப்போதுமே அவனை கையைப் பிடித்து இழுத்து அணைத்துக்கொள்வான். மதுமயக்கில் இருந்தால் தோள்மேல் தூக்கிச் சுழற்றுவான். வீசி எறிந்து பிடிப்பான். அவன் வளர்ந்து இளைஞனாகிய பின்னரும்கூட அவனை முத்தமிடுவான். மறுஎண்ணமின்றி அவன் தன் உடலை துரியோதனனிடம் அளித்தான். அவனுடைய தொடுகைக்காக ஏங்கினான். கனவுகளில் அவனுடைய எடைமிக்க கைகள் வந்து சூழ்வதை கண்டான். அவனுடைய அணைப்புக்காகவே அவர்களின் கள்விளையாட்டுகளின்போது சென்று அமர்ந்துகொண்டான். துரியோதனனின் முகம் நினைவில் எழ அவன் மெய்ப்பு கொண்டான். இயல்பாக என கையால் நகுலனின் கையை விலக்கிவிட்டு ஒரு படைவீரனுக்கு ஆணையிடுவதுபோல சற்று விலகிநின்றான்.

சகதேவனின் வெள்ளிப்பட்டைத் தேர் அணுகி வந்து விரைவழிந்து நிற்க வேதியர் பொற்கலங்களில் கங்கைநீருடன் காத்து நின்றனர். தேரின் கதவு திறந்து சகதேவன் கூப்பிய கைகளுடன் வெளியே வந்து தன் கால்களை மண்மீது வைத்தான். வேதியர் கங்கைநீர் தெளித்து, அரிமலர் தூவி, வேதம் ஓதி அவனை வாழ்த்தினர். வணங்கிய கைகளுடன் அவர்களின் வாழ்த்தை ஏற்று முன்னால் வந்தபோது அணிச்சேடியர் தாலமுழிந்தனர். மங்கலஇசை முழங்கியது. நகுலன் இரு கைகளையும் விரித்தபடி விரைந்து சென்று சகதேவனை அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். இருவரும் இறுகத்தழுவி அச்சூழலிலேயே தங்களை முற்றிலும் மறந்து ஓருருவாகி நின்றனர். சற்றே விலக ஒருவர் முற்பட இன்னொருவர் மீண்டும் இறுகத்தழுவிக் கொண்டனர்.

யுயுத்ஸு அருகே சென்று நகுலனின் தோளைத் தட்டி “செல்வோம். அணிநிரை ஒருங்கியிருக்கிறது” என்றான். “ஆம்” என்றபடி நகுலன் விலகிக்கொண்டான். பின்னர் “தோள் பெருத்துள்ளாய்” என்று சகதேவனிடம் சிரித்தபடி சொன்னான். உரக்க நகைத்தபடி மீண்டும் அள்ளி தன் நெஞ்சோடு இறுக்கிக்கொண்டான். அவர்கள் கண்ணீர் கசிய நகைத்தனர். யுயுத்ஸு அவர்கள் இருவரும் பிரிவதற்காக பொறுமையிழந்து காத்திருந்தான். அவர்கள் பிரியக் காணாதபோது மீண்டும் சகதேவனின் தோளில் தட்டி “கிளம்புவோம், அரசே” என்றான். “ஆம்” என்றபடி சகதேவன் தன் தேரில் ஏறிக்கொண்டான். நகுலனும் அதே தேரில் ஏறிக்கொண்டான். “தங்களுக்கு வேறு தேர்…” என்று யுயுத்ஸு சொல்ல “இதே தேரில்தான் நான் வரப்போகிறேன். என்னால் அவனை இனி பிரிந்திருக்க இயலாது” என்று நகுலன் சொன்னான். “எங்களை இருவராகக் காணவே எவரும் விழைவார்கள்” என்றான் சகதேவன். இருவரும் தேரில் ஏறிக்கொள்ள அணித்தேர் முன்னால் சென்றது. யுயுத்ஸு “நானும் இத்தேரிலேயே ஏறிக்கொள்கிறேன்” என்றபடி பின்னால் சென்று ஏவலர் அமரும் சிறு பீடத்தில் தொற்றிக்கொண்டு அமர்ந்தான்.

நகுலனும் சகதேவனும் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு தோள்களை ஒட்டி அமர்ந்து சாலையின் இருபுறத்தையும் பார்த்து தலைவணங்கி அங்கிருந்து எழுந்த பெருங்கூச்சலையும் மலர்ப்பொழிவையும் ஏற்றுக்கொண்டு அஸ்தினபுரியின் தெருக்களினூடாகச் சென்றார்கள். யுயுத்ஸு இருபுறமும் எழுந்து எழுந்து அமைந்த மக்கள்திரளை பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் அந்நாட்களைக் கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இனி அங்கு எவர் வந்தாலும் அந்தக் கொந்தளிப்பு பெருகியே செல்லும். மேலும் மேலும் எனக் கேட்கும். எங்கோ ஒரு புள்ளியில் போதுமென்றாகும். ஒரு துளிகூட தேவையில்லை என்றாகும். அமுது நஞ்சாகும். அனைத்து விழவுகளும் கொண்டாட்டங்களும் அவ்வாறுதான்.

அது எந்தப் புள்ளி? ஒருவேளை அர்ஜுனன் நகர்புகுவதற்குள்ளாகவே அவ்வாறு நிகழ்ந்ததென்றால் என்ன செய்ய இயலும்? அவ்வாறு நிகழாது. அதற்குப் பின்னர்தான் ராஜசூய அறிவிப்பு வரும். யுதிஷ்டிரன் தன் கருவூலம் அனைத்தையும் அள்ளி வழங்கி கையொழிவார். இவ்வளவு கொந்தளிப்பும் அதன் பொருட்டே. இங்கு நிரை நிரையென வந்து நிறையும் வண்டிகளில் இருக்கும் பொருட்குவை அனைத்தும் ராஜசூயத்தின்போது கொடையென தங்களுக்கு அளிக்கப்படும் என்று அறிந்தமையே இவர்களை இவ்வாறு உவகைவெறி கொள்ளச் செய்கிறது.

அவன் அந்த முகங்களை பார்த்துக்கொண்டே சென்றான். பொருள் அளிக்கப்படவில்லை எனில் இவர்கள் இந்த உவகையை அடையக்கூடுமா? வேறு எதன்பொருட்டேனும்? ஒரு மெய்யறிதலின் பொருட்டு? முழு விடுதலையின் பொருட்டு? தெய்வமே பொருள் வடிவென இங்கு தோன்றவேண்டியிருக்கிறது. கேட்டதை அளிக்கும் கைகளுடன், அளித்தவற்றைக் காக்கும் படைக்கலத்துடன். அவ்வாறன்றி எதையேனும் எப்போதேனும் அரிதென, பெரிதென இவர்கள் உணரக்கூடுமா? பொருள் என இவர்கள் எண்ணுவது இவ்வுலகு. இவ்வுலகிலுள்ளவை அனைத்தும் கொண்டிருக்கும் பயன்மதிப்பே பொன்னென்று, மணியென்று மாறி கருவூலங்களில் குவிகிறது. இப்பொன் ஒருவருக்கு களியாட்டு, வேறொருவருக்கு குலமேன்மை, பிறிதொருவருக்கு மைந்தர்சிறப்பு, களிமகன்களுக்கு இன்று, குடித்தலைவர்களுக்கு நாளை. ஒவ்வொருவருக்கும் ஒன்று. அதுவன்றி பிறிதேதும் எவருக்கும் தேவையில்லை.

ஆனால் எத்தனை நடிப்புகள்! மெய்மையென்றும் விடுதலை என்றும் எத்தனை தன்னேய்ப்புகள்! அத்தனை நடிப்புகளினூடாக மறைத்துக்கொண்டால் ஒழிய பொருள் அளிக்கும் உவகையில் நாணமின்றி மானுடரால் திளைக்க முடியாது போலும். நான் மட்டும் ஏன் இவ்வளவு கசந்திருக்கிறேன்? என்னுள் ஓடும் இக்கசப்பு என் முகத்தில் தெரிகிறதா என்ன? தன் முகம் தெரியலாகாது என அவன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

 

தேர் அரண்மனைமுகப்பை சென்றடைந்தது. அங்கு சுரேசர் துணையமைச்சர்களுடன் காத்திருந்தார். அவர்கள் இருவரும் தேரிலிருந்து இறங்கியதும் சுரேசர் நகைத்தபடி அருகே வந்து “இதைத்தான் நான் எதிர்பார்த்தேன், இருவரும் ஒரே தேரில் வரவேண்டும் என்று கூறலாம் என எண்ணினேன். இயல்பாக அது நிகழட்டும் என்று தோன்றியது” என்றார். நகுலன் “இனி எப்போதும் அவ்வாறே எங்களை காண்பீர்கள், அமைச்சரே” என்றான். சகதேவனை முறைமைச்சொல் கூறி அவர் வரவேற்றார். “தங்களைக் காண அரசர் விழைவுகொண்டிருக்கிறார். வெற்றி என்னும் சொல்லின் விழிவடிவாக எழுந்தருளியிருக்கிறீர்கள்.”

முறைமைகள் முடிந்து சுரேசர் அவர்களை கூடத்திற்கு அழைத்துச் சென்றார். நகுலன் அரண்மனையை சுட்டிக்காட்டி “நீ என்ன உணர்கிறாய்?” என்று கேட்டான். சகதேவன் சுற்றி நோக்கிய பின் “எதையுமே உணரவில்லையே!” என்றான். மீண்டும் நோக்கியபின் “மீண்டு வந்ததன் நிறைவும் ஓய்வுணர்வும் அன்றி ஒன்றுமில்லை” என்றான். நகுலன் “மாறுதல் எதையும் நீ நோக்கவில்லையா?” என்றான். சகதேவன் மீண்டும் அரண்மனையையும் சுவர்களையும் படிகளையும் பார்த்துவிட்டு “இல்லையே” என்றான். “நமது கோட்டையைப் பார்த்தபோது என்ன வேறுபாட்டை நீ உணர்ந்தாய்?” என்றான் நகுலன். சகதேவன் “கோட்டை வழக்கம் போலவே இருந்தது. அதே கோட்டைச்சுவர், காவல் மாடங்கள், அதே போன்ற காவலர்நிரை” என்றான்.

“செல்லும்போது இருந்ததைவிட எந்த மாறுதலையும் நீ காணவில்லையா?” என்றான் நகுலன். “இல்லை. என்ன மாறுதல் செய்யப்பட்டுள்ளது?” என்றான் சகதேவன். “நன்று. மாறுதல்களை நீ பார்க்கவில்லை எனில் அதை தெரிவிக்க வேண்டியதில்லை” என்றான் நகுலன். ஐயத்துடன் திரும்பி யுயுத்ஸுவைப் பார்த்தபின் சகதேவன் சுரேசரிடம் “என்ன மாறுதல்கள்?” என்றான். சுரேசர் புன்னகைத்தார். அவன் மீண்டும் திரும்பி சுவரோவியங்களைப் பார்த்ததும் “ஆம், சுவரோவியங்கள் மாறியிருக்கின்றன” என்றான். மீண்டும் மறுபக்கச் சுவரோவியத்தை பார்த்து “அனைத்துச் சுவரோவியங்களையும் மாற்றிவிட்டீர்களா என்ன?” என்றான்.

“ஆம்” என்று சுரேசர் சொன்னார். “அரண்மனை பழுது பார்க்கப்பட்டிருக்கிறது. சற்று புதியது போலிருக்கிறது” என்று சகதேவன் சொன்னான். நகுலன் “கோட்டை வண்ணம் மாறியிருக்கிறது…” என்றான். “ஆம், கோட்டை வெண்ணிறமாக மாறியிருக்கிறது” என்றான் சகதேவன். “கோட்டை முன் இருக்கும் ஆலயங்களைப் பார்த்தாய் அல்லவா?” என்று நகுலன் கேட்டதும் சகதேவன் “ஆம், அவை கைவிடுபடைகளின் மேடைகள் அல்லவா?” என்றான். ஆனால் அவனில் வியப்பென ஏதும் வெளிப்படவில்லை “இந்நகரில் ஆலயங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. செடிகள் முளைப்பதுபோல” என்றான். “நான் பொதுவாக ஆலயங்களை நோக்குவதே இல்லை.”

“இங்கே அனைத்து மாளிகைகளும் மாற்றப்பட்டுள்ளன. இந்நகரே மீண்டும் கட்டப்பட்டதுபோல் பொலிவு கொண்டிருக்கிறது. நீ அவற்றை காணவில்லை என்பது விந்தைதான்” என்றான் நகுலன். சகதேவன் “நான் எனக்குத் தெரிந்தவற்றை மட்டுமே தொட்டுத் தொட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொன்றும் இங்குள்ளது இங்குள்ளது என்று என் உள்ளம் மகிழ்ந்துகொண்டிருந்தது” என்றான். நகுலன் “நான் வந்தபோது ஒவ்வொன்றும் மாறியிருப்பதையே கண்டேன். இங்கில்லை இங்கில்லை என்று உளச்சோர்வு கொண்டேன்” என்றான். சுரேசர் சிரித்தபடி “நன்று, இருவரும் இணைந்தால் வட்டம் முழுமையாகிறது” என்றார்.

யுயுத்ஸு “அரசே, மூத்தவருக்கு அளிப்பதற்கென்று தாங்கள் தங்கள் தனிக்கொடையாக கொண்டுவந்தது என்ன?” என்றான். சகதேவன் திரும்பிப்பார்த்து “ஏன்?” என்றான். சுரேசர் அவ்வினாவின் நோக்கத்தை உணர்ந்து “தங்கள் மூத்தவர் உடல்நலமின்றி இருக்கிறார். நேற்று சற்றே உடல்நிலை மேம்பட்டது. இன்று மீண்டும் சோர்ந்துவிட்டார்” என்றார். “என்ன ஆயிற்று?” என்றான் சகதேவன். “அவர் உடலுக்கு பெரிதாக ஒன்றுமில்லை. உள்ளம் சோர்ந்திருக்கிறது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அது உள்ளிருந்து எழும் விடாய் போன்ற ஒன்று. அதை புறத்திருந்து நிகர்க்கும் ஒன்றே தணிக்க முடியும். ஆகவே புறம்நோக்கி அவர் உள்ளம் அலைந்துகொண்டிருக்கிறது” என்றார் சுரேசர்.

சகதேவன் குழம்பியவனாக நகுலனை நோக்கினான். நகுலன் “அவர் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்” என்றான். சுரேசர் “இந்நாட்களில் அவர் தன் முழு உயிராலும் உடன்பிறந்தார் திரும்பிவரும்போது நிகழ்வனவற்றை எண்ணி அகம் விரிந்துகொண்டிருந்தார். இப்போது அதிலிருக்கும் விடாய் அதனுடன் இணைந்ததே என்று தோன்றியது. இளையோர் கொண்டுவரும் பரிசில்களால் அவர் உளம் நிறையக்கூடுமென்று எண்ணினோம்” என்றார். சகதேவன் “அவருக்கு அரிய பரிசொன்றை நான் கொண்டுவந்தேன்” என்றான். எழுந்துகொண்டு “நான் தென்னிலத்தில் படைகொண்டு செல்கையில் அரியன என்று உணரக்கூடிய அனைத்தையும் கொண்டுவருக என்று ஆணையிட்டிருந்தேன். பல பொருட்கள் வந்தன. அவற்றில் வெண்ணிறப் புலிக்குருளையும் வெண்ணிற யானைக்கன்றும்கூட உண்டு. விந்தையான பட்டுகள், முத்துச்சரம், சந்தனச் செதுக்கு சிலைகள். அவற்றில் ஒன்று இது” என்றபடி சென்றான்.

தன்னுடன் கொண்டுவந்திருந்த மரப்பேழை ஒன்றை திறந்தபடி “இதை தென்னிலத்தில் ஓர் எளிய மூதன்னை எனக்கு அளித்தார். நான் படைகொண்டு சென்றுகொண்டிருக்கையில் அவர் என்னைக் காண விழைவதாக கூறக் கேட்டு இரு படைவீரர்கள் அழைத்து வந்தார்கள். முதுமகள், முலைகள் தொங்கி வயிறு தொட்டன. என்னை வணங்கி நான் தொல்முனிவர் அகத்தியரின் மாணவ மரபில் வந்த பேரறிஞர் பூராடனாரின் மைந்தர் சீராளரின் துணைவி. அவர் உயிர்நீத்து நெடுநாளாகிறது. என் கடன் ஒன்றை ஆற்றும்பொருட்டு உயிர்வாழ்கிறேன். அதன் பொருட்டே உங்களை பார்க்கவந்தேன் என்றார். கூறுக அன்னையே என்றேன். என் கொழுநர் மண்மறைகையில் என்னிடம் ஒரு பொருளைக் கொடுத்து அதை அவருடைய தந்தை அளித்ததாகச் சொன்னார். அது அவருக்கு அவருடைய தந்தை அளித்தது என்றார். அதை கொண்டுவந்தேன் என்றார்.”

“பேரறிஞனும் அறத்தில் நிலைகொள்பவனுமாகிய ஒருவனிடம் இதை அளிக்கவேண்டும் என்று என் கணவர் சொன்னார். உகந்தவர்களைத் தேடி இதுநாள்வரை வாழ்ந்தேன். என்னிடம் யுதிஷ்டிரனைப் பற்றி கூறினார்கள். அவரே தகுதியுடையவர் என்னும் கணியர்களின் வழிகாட்டலால் இங்கு வந்தேன் என்று அம்முதுமகள் சொன்னார்” என்றான் சகதேவன். “என்ன அது?” என்று சுரேசர் கேட்டார். “இது விந்தையானதோர் உயிர்… பல நூறாண்டுகள் உயிர் வாழ்வது” என்று சொல்லி உள்ளிருந்து பிறிதொரு வெண்கலப் பேழையை சகதேவன் எடுத்தான். யுயுத்ஸு அருகே சென்று நோக்கினான்.

சகதேவன் அதை மெல்ல திறந்தபோது உள்ளே கையளவேயான ஒரு சிப்பி இருந்ததை அவர்கள் கண்டனர். “முத்துச்சிப்பி” என்றபடி நகுலன் அருகணைந்து குனிந்து பார்த்தான். “ஆம், இது தொன்மையான முத்துச்சிப்பி. நன்னீரில் வாழ்கிறது. ஈரமண்ணிலும் வாழும். இது அரிதினும் அரிது என்கிறார்கள்” என்றான் சகதேவன். “இது பேரறத்தான் ஒருவனின் கை தொடுகையில், அவனுடைய ஒரு சொல்லை வாய்திறந்து பெற்றுக்கொண்டு கருக்கொள்ளும். முத்து விளைந்ததும் தானாகவே திறந்து அதை வெளிவிடும். அந்த முத்து அவனுக்கு மெய்மையை உணர்த்தும். அப்போது அவனுக்காக விண்ணிலிருந்து தேவர்கள் மணித்தேருடன் இறங்கி வருவார்கள்” என்று சகதேவன் சொன்னான். “ஆம், அரிய பரிசுதான்” என்று சொன்ன சுரேசர் சகதேவனை நோக்கி “ஒருவேளை யுதிஷ்டிரன் இதனூடாக மீள முடியும்” என்றார்.

நகுலன் ஐயத்துடன் அதை பார்த்து “அறத்தான் என எவ்வண்ணம் ஒருவரை இது தெரிவுசெய்கிறது?” என்றான். “அதை நானும் அம்மூதாட்டியிடம் கேட்டேன். இதை தொடுபவர் பழிகொண்டவர் எனில், அவருக்கு இப்பிறவியில் மீட்பில்லையெனில் அவர் தொடுகையில் கைகளில் நீலக்கறை படியும் என்றார். நான் தொட்டேன் என் கையில் அந்த நீலக்கறை இப்போதும் உள்ளது” என்று விரலை காட்டினான். நகுலன் “இது எவரோ நம்முடன் ஆடும் ஒரு விளையாட்டாக இருக்கலாம்” என்றபடி கைநீட்டி அதன் ஓட்டுப்பரப்பை தொட்டான். கையை எடுத்துப் பார்த்தான். அவன் கையில் நீலக்கறை படிந்திருந்தது. அதை தன் மேலாடையில் உரசினான். பின் பீடத்தின் பரப்பில் தேய்த்தான். அது எங்கும் படியவில்லை. அவன் கையிலேயே தங்கிவிட்டிருந்தது.

“அது நாளடைவில் மறைகிறது, மற்றபடி எந்த உப்பாலும் காரத்தாலும் அதை கழுவ இயலவில்லை” என்று சகதேவன் சொன்னான். நகுலன் சுரேசரிடம் சிரித்தபடி “தொட்டுப் பாருங்கள், அமைச்சரே” என்றான். சுரேசர் மேலும் நகைத்து “அதை தொட்டுப் பார்க்கலாகாது என்று அறியும் அளவிற்கு மெய்யறிதல் எனக்கு என் தந்தையால் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றார். பின்னர் “இதை அரசருக்கு அளிப்போம். இதை அவர் தொடும்போது அவர் மகிழ்வார்” என்றார். யுயுத்ஸு “ஒருவேளை அவர் கைகளிலும் இந்தக் கறை படியுமென்றால் எஞ்சியிருக்கும் தன்னம்பிக்கையையும் இழந்து அவர் மேலும் பெரும் சோர்வில் விழுந்துவிடக்கூடும்” என்றான். நகுலன் “ஆம், நானும் அவ்வாறே எண்ணுகிறேன். அதுவே நிகழக்கூடும்” என்றான். “இது ஒருவேளை அதன் பொருட்டே எவராலோ அளிக்கப்பட்டதாக இருக்கலாம். இதை தொடுபவர் ஒவ்வொருவரும் தங்களை பழிசேர்ந்தவர்களாகவும் மீட்பில்லாதவர்களாகவும் உணரும்பொருட்டே இதை வடிவமைத்திருக்கலாம்” என்றான்.

“இது மெய்யாகவே உயிருள்ள முத்துச்சிப்பிதானா, அன்றி விந்தையான பொறியா என்று எனக்குத் தெரியவில்லை” என்றான் யுயுத்ஸு. “ நஞ்சில்லை என்பதற்கு நானே சான்று. இதை நான் தொட்டு பதினேழு நாட்கள் ஆகின்றன” என்று சகதேவன் சொன்னான். “என் படைவீரர் நூற்றைம்பது பேரை தொடச்சொன்னேன். எவரும் நலமிழக்கவில்லை.” சுரேசர் “நஞ்சல்ல. நஞ்செனில் அது உடலினூடாக வரும் நஞ்சல்ல” என்றார். “இதை நாம் அரசருக்கு அளிக்கத்தான் வேண்டுமா? நாம் எண்ணுவதற்கு மாறாக ஏதேனும் நிகழ்ந்தால் என்ன செய்வோம்?” என்று யுயுத்ஸு மீண்டும் கேட்டான்.

நகுலன் “வேண்டியதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது” என்றான். சற்று சலிப்பு கலந்த குரலில் “இத்தருணத்தில் எதை நம்பி நாம் இதை அளிப்போம்? போர்க்களத்தில் அவர் கொள்ளாத பழி என ஒன்றில்லை. அவரை அறத்தோன் என்றும், மெய்மையைச் சென்றடையும் வாய்ப்புள்ளவர் என்றும் எவர் சொன்னாலும் அதை முதலில் மறுக்கப்போவது அவர்தான். பாரதவர்ஷத்தில் ஆமென்று கூற ஒரு நாவு எழாது” என்றான். சுரேசர் சில கணங்களுக்குப் பின் “ஆனால் நம்மால் இதை அவரிடம் அளிக்காமலிருக்க இயலாது” என்றார். “ஏன்?” என்று யுயுத்ஸு கேட்டான். “நாம் அறிய விரும்புகிறோம், அவர் இதை தொட்டால் என்ன ஆகுமென்று” என்றார் சுரேசர்.

“அவர் கையிலும் கறையே எஞ்சும் என்று உறுதியாக சொல்லும்போதுகூட அவ்வாறு அன்றியும் இருக்கலாம் என்ற ஐயமும் நம் ஆழத்தில் உள்ளது. ஒரு வேளை இது அவரை அறத்தான் என்று கூறிவிடுமெனில் நாமும் நாம் இயற்றிய போர்ப்பழிகள் அனைத்திலிருந்தும் விடுபடுவோம். அவ்வாறு ஒரு வாய்ப்பிருக்கையில் இச்சிப்பியை நம்மால் வெறுமனே வைத்திருக்க இயலாது. பல நூறு முறை உள்ளத்தால் அவர் இதைத் தொடும் காட்சியை நடித்துக்கொள்வோம். ஒன்று நம்பிக்கையையும் பிறிதொன்று நம்பிக்கையிழப்பையும் உருவாக்க மீளா அலைக்கழிப்பில் இருப்போம். ஆகவே இதை அவரைக்கொண்டு தொடவைப்பதே மேல்” என்றார் சுரேசர்.

“ஒருவேளை நீலமெனக் காட்டிவிட்டால் அவர் உயிர்துறக்கவும் கூடும்” என்று சீற்றத்துடன் நகுலன் சொன்னான். யுயுத்ஸு “ஆம், நானும் அவ்வாறே எண்ணுகிறேன். இது இடரைவிட துயரை அளிப்பதற்கான வாய்ப்பு மிகுதி” என்றான். சகதேவனும் “நானும் அவ்வாறுதான் இப்போது எண்ணுகிறேன். இங்கு வரும் வரை அவ்வாறு தோன்றவில்லை. அறத்தான் என்ற சொல்லுக்கு நிகராக மூத்தவரே என் உள்ளத்தில் எழுந்தமையால் பிறிதொன்று எண்ணக்கூடவில்லை…” என்றபடி அந்தப் பேழையை எடுத்து “இதை வீசிவிடலாம்… அனலில் போடச் சொல்கிறேன்” என்றபடி ஏவலனை அழைத்தான். ஏவலன் உள்ளே வந்ததும் அப்பேழையை நீட்டி “இதை அடுமனையின் அனலில் போடுக!” என்றான்.

அவன் தலைவணங்கி அதை பெற்றுக்கொண்டான். நகுலன் கை நீட்டித் தடுத்து “பொறு” என்றபடி அதை திரும்பப் பெற்றுக்கொண்டான். “நாம் இதை மூத்தவரிடம் அளிப்போம்” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று சகதேவன் கேட்டான். “சுரேசர் கூறியதுதான். நம்மால் இந்த வினாவை இவ்வண்ணமே வைத்திருக்க இயலாது. வினா எழுந்துவிட்டால் விடையின்றி உளம் அமையாது” என்றான் நகுலன். “ஆனால் மூத்தவர்…” என்று சகதேவன் சொல்ல “உண்மையென்ன என்று அவர் அறியட்டுமே. அவருடைய தவிப்பும் ஒருவேளை மறையக்கூடும். அவர் பழிகொண்டவர் என்று அறிந்தாலும் சரி பழியற்றவர் என்று தெளிந்தாலும் சரி அவர் நிலைபேறு கொள்வார், நிறைவடைவார். இன்று அவரை நோயுறச் செய்யும் ஊசலாட்டம் நிலைக்கும்” என்றான் நகுலன்.

முந்தைய கட்டுரைவணங்குதல்
அடுத்த கட்டுரையுவால் – கடிதம்