விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய செய்திகளை கடிதங்களில் வாசித்துக்கொண்டிருந்தேன். முக்கியமான ஒரு விஷயம் விடுபட்டிருந்தது என்று தோன்றியது. அது அற்புதமான உணவு. இத்தகைய விழாக்களில் உணவு ஏற்பாடு செய்வது என்பது எவ்வளவு கடினம் என்று தெரியும் எனக்கு. என் தொழில் சில ஆண்டுகளுக்கு முன்பு இம்மாதிரியான விழாக்களை அமைப்பதுதான்.
உண்மையில் செலவைப்பற்றிய கவலையே இல்லை என்றால் எந்தப்பிரச்சினையும் இல்லை. இலைக்கு இவ்வளவு என்று சொல்லிவிட்டால் சமைத்துக்கொண்டுவந்து கொடுத்துவிடுவார்கள். அது இரண்டுமடங்கு விலையுடன் இருக்கும். அதோடு உணவின் சுவையும் கொஞ்சம் செயற்கையாக இருக்கும்.
விஷ்ணுபுரம் விழாவின் உணவு மிகமிகச் சிறப்பு. இந்தவகையான விழாக்களில் மூன்றுநாளைக்குச் சாப்பாடு போடும்போது சிலருக்கு வயிற்று உபாதைவந்தால்கூட பெரிய சிக்கல்தான். என்ன பிரச்சினை என்றால் சிலருக்கு சிறு வயிற்றுச் சிக்கல் ஏற்பட்டால்கூட அதை உணவினால் வந்தது என்று மாறிமாறிச் சொல்லி பரப்பிவிடுவார்கள். நல்ல உணவு, சுவையான உணவு, அடக்கவிலையில் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல.
இந்த விழாவில் அத்தனை வாசகர்களும் எழுத்தாளர்களும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதைக் கண்டபோது மனம் பூரித்தது. இலக்கியவிவாதம் என்பதெல்லாம் நல்லதுதான். ஆனால் சேர்ந்து சாப்பிடும்போது நாமெல்லாம் ஒரு குடும்பம் என்ற உணர்வு ஏற்படுகிறது. இன்னும் நீண்டநாள் கழித்து இப்படி இத்தனைபேர் ஒரு குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டார்கள், இலக்கியம் பேசினார்கள் என்பது நினைக்கவே ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது. ஏற்பாடு செய்த நண்பர்களின் கடுமையான உழைப்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி
டி.சண்முகசுந்தரம்
***
அன்புள்ள சண்முகம் அவர்களுக்கு
இந்த ஆண்டில் விழாவின் உணவு ஏற்பாடு, அரங்க ஏற்பாடு இரண்டுமே என் நண்பர் விஜய்சூரியனுடையது. சூரியன் சொல்யூஷன்ஸ் என்னும் நிறுவனத்தை நடத்துகிறார். ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் மிகத்தீவிரமான ஈடுபாடு காட்டுபவர். அவருடைய தனிப்பட்ட வெற்றி. உங்கள் பாராட்டு அவருக்குரியது. நன்றி
ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 – இரண்டாம்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி
விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி
விஷ்ணுபுரம் விருது விழா புகைப்படங்கள் – 27.12.2019
===============================================================================================