மீளும் நட்பு

நட்புகள்

‘யாரும் திரும்பவில்லை’

இன்று இலங்கை நண்பர் கருணாகரன், ஆஸ்திரேலிய எழுத்தாளர் தெய்வீகனுடன் வீட்டுக்கு வந்திருந்தார். மதுரை ஆலயத்தைப் பார்த்துவிட்டு மதியம் வந்துசேர்ந்தார்கள். உடன் தெய்வீகனின் குடும்பமும் வந்திருந்தது.

கருணாகரனை நான் 1990 முதல் அறிவேன். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில், அதன் பண்பாட்டு இதழான  ‘வெளிச்சம்’ – த்தின் ஆசிரியராக இருந்த காலம் முதல். எங்களுக்கிடையே அணுக்கமான கடிதத்தொடர்பும் குடும்ப உறவும் இருந்திருக்கிறது. அவருக்கு குழந்தைகள் பிறந்த செய்தி, எனக்கு மணமான செய்தி எல்லாமே கடிதம் வழியாகத்தான். என் கவிதைபற்றிய நூலான ‘உள்ளுணர்வின் தடத்தில்’ அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அவர் முள்ளிவாய்க்காலில் பிடிபட்டு சிறையிலிருந்தபோது பலவழிகளினூடாக முயன்று அவரிடம் தொலைபேசியில் பேசினேன்.

நேரில் சந்தித்தது மேலும் பலகாலம் கழித்து10.01.2015 ல் சென்னையில். அன்றுதான் அவர் என்னையும் அஜிதனையும் சைதன்யாவையும் பார்த்தார். நடுவே இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துசென்றுவிட்டிருந்தன. அருண்மொழி பிசிராந்தையார் நட்பு என்று கேலிசெய்வதுண்டு. அவர் அருண்மொழியை இப்போதுதான் பார்க்கிறார்.

தெய்வீகனின் இரண்டு நூல்களை தமிழினி பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. அவர் என் படைப்புக்களை வாசித்திருக்கிறார். ஆனால் நேரில் சந்தித்ததில்லை. 2009ல் நான் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது அவர் அங்கேதான் இருந்திருக்கிறார். ஆனால் அப்போது ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் தீவிரமாக இருந்திருக்கிறார். இயல்பான நகைச்சுவை கொண்ட நடையுடன் , நுண்ணுணர்வுடன் எழுதும் படைப்பாளி என்று அவர் கட்டுரைகளை வாசித்தபோது தோன்றியது.

இலக்கியம், ஈழ அரசியல் என பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் வேடிக்கைகள், பேச்சு கொஞ்சம் தீவிரமடையும்போது மீண்டும் வேடிக்கைகள். அவர் மாலை ஐந்தரை மணிக்குக் கிளம்பிச் சென்றபோது ஆழ்ந்த இழப்புணர்வை அடைந்தேன். பிரிவு என்பது நட்பின் அடிப்படையான இன்பங்களில் ஒன்று.

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55
அடுத்த கட்டுரைஅ.மார்க்ஸ்,சாரு நிவேதிதா, அழகியல்