அ.மார்க்ஸ்,சாரு நிவேதிதா, அழகியல்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

அன்புள்ள ஜெ

இது அ.மார்க்ஸ் உங்களைப் பற்றி எழுதியது:

இன்றைய பொங்கல் சந்திப்பின்போது, கார்ல்மார்க்சின் “தீம்புனல்” எனும் புதிய நாவலை வெளியிட்டு அன்று பேசிய ஜெயமோகனின் நீண்ட உரையில் இருந்து என்னைப்பற்றி அவர் பேசிய ஒரு கருத்தை நண்பர்கள் செல்போனிலிருந்து ஒலித்துக் காட்டினார்கள். அது ஜெயமோகன் இன்றைய தமிழ் இலக்கியத்தின் பிதாமகராகத் தன்னைப் பாவித்துக் கொண்டு கார்ல்மார்க்ஸ் போன்ற இளம் எழுத்தாளர்களுக்குச் சொன்ன ஒரு முக்கியமான் அறிவுரை.

அதாவது:

“(புதிதாக எழுத வருபவர்கள்) சாருவிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ள முடியாது. அ.மார்க்சிடம் இருந்து ஒருபோதும் எதையும் பெற முடியாது..” – இதுதான் ஜெயமோகனின் அறிவுரை.

நன்றி.. நன்றி.. ஜெயமோகனுக்கு மிகவும் நன்றி.

சென்ற ஆண்டு ஜெயமோகம் அவரது நூல் ஒன்றை எனக்கு சமர்ப்பணம் செய்ததைக் காட்டிலும் இதுதான் மிகவும் சுவையான ‘ஸ்டேட்மன்ட்”

*

அ.மார்க்ஸ் புரிந்துகொண்டுதான் எழுதுகிறாரா இல்லை, வேண்டுமென்றா என தெரியவில்லை. ஆனால் இத்தகைய குழப்படிகள் பொதுவாக எந்த கருத்துக்கும் எதிர்வினையாக வந்துகொண்டுதா்ன் இருக்கின்றன. உங்கள் விளக்கம் இருந்தால் நல்லது என நினைக்கிறேன். ஏனென்றால் இதை என் நண்பர் ஒருவர் எனக்குச் சுட்டி அனுப்பி என் கருத்தை கேட்டிருந்தார்.

செந்தில்குமார்

 

அன்புள்ள செந்தில்குமார்,

அ.மார்க்ஸ் அவர்களுக்கு நான் ஒரு நூலை கொடை செய்திருந்தேன். அது அவருடைய வட்டாரத்தில் அவருக்கு பெரிய சங்கடத்தை உருவாக்கியிருக்கும் என ஊகிக்கிறேன். முன்பு என்னை ஒருவர் தாக்கிய நிகழ்வில் எந்த விதமான அடிப்படை அறிதலும் இல்லாமல் அவர் வெளிப்படுத்திய காழ்ப்பிலிருந்து அதை ஊகிக்கிறேன். அதுவும் அவருடைய ஆளுமையின் பகுதியே. அதையும் ஏற்றுக்கொண்டே அந்நூல் அவருக்குப் படைக்கப்பட்டது.

நான் பேசியது அழகியல் பற்றி. அழகியல் என்பது எழுத்தாளனின் தரப்பில் நின்று நோக்கினால் மொழியை, இலக்கியவடிவை அடைவதிலிருக்கும் செய்நேர்த்திதான். ஆனால் அது எவ்வண்ணம் செயல்படுகிறது என்று நோக்கினால் ஓர் உள்ளம் இன்னொரு உள்ளத்தைச் சென்று தொடும் நுட்பம் பற்றிய நுண்ணுணர்வு. அதன் வாய்ப்புகள் எல்லையற்றவை, இடறல்கள் அதைவிட எல்லையற்றவை. எந்தக் கலைஞனும் தன் கலையின் அழகியலைப் பற்றிய முடிவிலாத கூர்விவாதம் நிகழும் சூழலில் இருந்தாகவேண்டும். தொடர்ந்து கற்றுக்கொண்டாகவேண்டும். இல்லையேல் படைப்பெழுச்சியும் நுண்ணறிதலும் இருப்பினும் வெளிப்பாட்டில் படைப்பு சிதறிப்போய்விடும்.

அந்த அழகியல் சார்ந்த விவாதம் அ.மார்க்ஸிடமிருந்தோ சாரு நிவேதிதாவிடமிருந்தோ கார்ல் மார்க்ஸுக்கு கிடைக்காது. அதை ஒன்றும் பேசி நிறுவவேண்டியதில்லை. அவர்கள் இணையத்தில் எழுதிக் குவித்திருப்பவற்றில் எங்கேனும் அழகியல் குறித்து ஏதேனும் இருக்கிறதா என்று நோக்கினால் போதும். அழகியல் குறித்த பேச்சே மேட்டிமைத்தனம் எனக் கருதுபவர் அ.மார்க்ஸ். இதைச் சொல்வதில் என்ன பிழை இருக்கிறது? இதைச் சொல்லாமலிருப்பேன் என எப்படி எதிர்பார்க்கிறார் அ.மார்க்ஸ்?

அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதுமில்லையா? கண்டிப்பாக உண்டு. அ.மார்க்ஸிடமிருந்து ஒர் எழுத்தாளன் சமூகம் சார்ந்த தொடர் கவனிப்பை, நம்பிக்கையிழக்காத ஈடுபாட்டை கற்றுக்கொள்ளலாம். தன் கருத்தியல்களை செயல்தளத்திற்குக் கொண்டுவர அவர் கொண்டிருக்கும் வேட்கையைக் கற்றுக்கொள்ளலாம்.

அவரிடமிருந்து கற்பனவற்றைவிட பற்பல மடங்கு சாரு நிவேதிதாவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். நான் சாருவைச் சந்திக்கும்போதெல்லாம் ஒர் அதிர்ச்சியை அடைவதுண்டு. அவர் என் மனதில் இளைஞராக இருப்பார், நேரில் பார்க்கையில் அவர் சற்று முதியவரோ எனத் தோன்றி உருவாகும் அதிர்ச்சி அது. அந்த இளமைப் பதிவு என்பது அவருடைய எண்ணங்களில், எழுத்துக்களில் இருந்து வருவது. அவர் பாலியலை எழுதுவதனால் வரும் உளப்பதிவு அல்ல அது. நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சமகாலத்தின் இலக்கியத்தை, இசையை அவர் கூர்ந்து கவனித்து வருகிறார். எப்போதும் ‘டிரெண்ட்’டில் இருக்கிறார். எப்போதும் இன்றில் இருக்கிறார். அவரிடமிருந்து எழுத்தாளன் கற்றுக் கொள்ளவேண்டிய முதன்மைப் பண்பு அது

சாரு நிவேதிதா தொடர்ந்து அறிமுகம் செய்யும் இலக்கியவாதிகள், இசைக் கலைஞர்கள் முக்கியமானவர்கள். அவரினூடாக அவ்வறிமுகத்தைப்பெற்று முன்செல்லும் எழுத்தாளன் நிறைய அடையமுடியும். அவர் உருவாக்கும் அதிர்ச்சிகள் அவ்வாறே முக்கியமானவை. ஒருவன் தன்னைக் கலைத்து மீட்டமைக்க அவை உதவக்கூடியவை. அவ்வகையில் அவர் முக்கியமான ஆசிரியர், வழிகாட்டி என்றே எண்ணுகிறேன்.

நான் பேசியது புனைவின் அழகியல்நுட்பம் பற்றிய விவாதத்தைக் குறித்து மட்டுமே

ஜெ

***

 

முந்தைய கட்டுரைமீளும் நட்பு
அடுத்த கட்டுரைஎழுத்தாளனும் பெண்களும்