பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 6
அறைக்குள் இருந்த நகுலன் முற்றிலும் பிறிதொருவனாகத் தெரிந்தான். களைத்து உரு மாறி முதுமை கொண்டவன்போல. இரு கைகளையும் மடிமீது கோத்து தாழ்வான பீடத்தில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தான். யுயுத்ஸு அறைக்குள் நுழைந்து தலைவணங்கியதும் ஒருகணம் அவனை எவரென்று அறியாதவன்போல் பார்த்தான். பின்னர் அமரும்படி கைகாட்டினான். யுயுத்ஸு அமர்ந்ததும் எழுந்து முன் சரிந்து முகம் சுளித்து “உனக்கு உடல்நலமில்லையா?” என்றான். யுயுத்ஸு “ஆம். துயிலின்மை, உடற் களைப்பு. இன்று அது சற்று எல்லைமீறிவிட்டது” என்றான்.
“நீ என்றுமே வெறிகொண்டு செயலாற்றுபவன்” என்றான் நகுலன். யுயுத்ஸு “ஆம், ஆனால் இன்று பெருந்திரளின் ஓசையும் வெப்பமும் கடுமணங்களும் சேர்ந்து தலைசுழலச் செய்துவிட்டன. தாங்கள் நகர்நுழைந்துகொண்டிருக்கும்போது நான் கூட்டத்தின் நடுவே மயங்கி விழுந்துவிட்டேன். உடல் கிழியும்படி உமட்டல் எடுத்தது. என்னை ஏவலர் தூக்கிக்கொண்டு வந்தனர். மருத்துவர் அளித்த மண்ணுப்பு நீரை அருந்தி சற்று ஓய்வெடுத்துவிட்டு வருகிறேன்” என்றான்.
நகுலன் “மூத்தவருக்கும் உடல்நலமில்லை, ஓய்வெடுக்கிறார் என்று கேள்விப்பட்டேன்” என்றான். “இங்கு அனைவருமே கொந்தளிப்பில்தான் இருக்கிறார்கள். இந்நகரே வெறிபிடித்ததுபோல் தன்னைத் தானே கட்டிக்கொண்டிருக்கிறது. சிலந்தி வலைபோல ஒவ்வொரு நாளும் இது புதிதென பெருகிவிட்டிருக்கிறது. ஒவ்வொருமுறை வெளியே இருந்து நகரத்திற்குள் நுழையும்போதும் முற்றிலும் புதிய ஒரு நகரத்தை பார்க்கும் திகைப்பை அடைகிறேன். உண்மையில் இன்று நகரினூடாகச் செல்கையில் இந்நகரில் நான் கால் வைத்ததே இல்லை என்ற உளமயக்கு எனக்கு ஏற்பட்டது” என்று யுயுத்ஸு சொன்னான்.
நகுலன் “ஆம், நான் அறிந்த நகரே இல்லை இது. இங்கு எனக்கு தெரிந்த ஒரு முகம்கூட தென்படவில்லை என்று எண்ணிக்கொண்டேன். அரண்மனைகூட முற்றிலும் அயலாகத் தெரிந்தது. இங்கே இருக்கவே முடியவில்லை. ஆகவேதான் உன்னை வரச்சொன்னேன்” என்றான். யுயுத்ஸு “நான் இதற்குள் நிலைகொள்ளாமல் அலைகிறேன்” என்றான். நகுலன் “மூத்தவர் என்ன செய்கிறார்?” என்றான். “அவரை தாங்கள் இன்று உச்சிப்பொழுதுக்குமேல் தனியறையில் சந்திக்கலாம்” என்று யுயுத்ஸு சொன்னான். “அவர் அதற்குள் சற்றே தேறிவிடுவார் என நினைக்கிறேன். நீங்கள் வந்த நிகழ்வே அவரை தேற்றக்கூடும்.”
நகுலன் அவன் மேலே சொல்லும்படி கூர்ந்து நோக்கி அமர்ந்திருந்தான். யுயுத்ஸு “நேற்றுமுன்தினம் பேரரசி நகர்புகுந்தார். அந்தியில் அரியணையில் முடிசூடி அமரும் நிகழ்வு. அரசரும் அரியணை அமர்ந்தார். அவை முழுக்க விழிகள். அவற்றில் பெரும்பாலானவை முன்னர் ஒரு பேரரசரை காணாதவை. கண்ணேறு பட்டிருக்கக் கூடும்” என்றான். நகுலன் மெல்ல முனகினான். “அவையிலிருந்து எழுந்து வெளியே செல்கையில் அரசரின் உடல் நடுங்கிக் கொண்டிருந்திருக்கிறது” என்று யுயுத்ஸு சொன்னான். “இருமுறை தள்ளாடியிருக்கிறார். அவரை பற்றிக்கொண்டிருந்த ஏவலன் உடல் வெம்மை கொண்டிருப்பதைக் கண்டு அவரை அறையில் படுக்கவைத்துவிட்டு மருத்துவரை அழைத்துச் சென்றிருக்கிறான். மருத்துவர் அளித்த பொடிமருந்தால் அக்கணமே துயின்று நேற்று விழித்துக்கொண்டிருக்கிறார்.”
“அதிலிருந்து உடலும் உள்ளமும் சோர்ந்தவராக இருக்கிறார். எதையும் கோவையாக எண்ணவோ பேசவோ அவரால் இயலவில்லை. காய்ச்சல் இறங்கிவிட்டது. ஆனால் அவர் மிக உளம் சோர்ந்தவராக, துயரம் கொண்டவராக, பல துண்டுகளாக உடைந்தவர் போலிருக்கிறார்” என்று யுயுத்ஸு சொன்னான். “நான் வந்தபோது அவரைச் சென்று பார்த்தேன். உண்மையில் அவரால் என்னை அடையாளம் காணவே இயலவில்லை. சிவந்த கலங்கிய விழிகள் என்னை நோக்கி அலைபாய்ந்தன. மூத்தவரே நான் யுயுத்ஸு இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அனைத்தும் நகருக்குள் வந்துவிட்டன என்றேன். ஆம் நான் கிளம்ப வேண்டியதுதான் என்றார்.”
நகுலன் மீண்டும் முனகினான். யுயுத்ஸு “இங்கிருந்து கிளம்ப வேண்டியதுதான் என்றார். அதையே சொல்லிக்கொண்டிருந்தார்” என்று தொடர்ந்தான். “கந்தமாதன மலைமேல். கந்தமாதன மலை என்பது ஒரு பெண். அனல் வடிவானவள். நான் அவளை பார்த்தேன். மெய்யாக அவளை பார்த்தேன். பெரும்பிலம்போல் திறந்த அவள் வாய். அனல் நிறைந்த பெரும்பிலம். அனலே இருளான வாய். உதிரிச்சொற்களில் இவையே எழுந்துகொண்டிருந்தன. மருத்துவர் நான் கிளம்பலாம் என்று கைகாட்ட தலைவணங்கி ஓசையின்றி பின் வாங்கினேன்” என்றான். நகுலன் “நான் அவரை பார்த்தாக வேண்டும்” என்றான். யுயுத்ஸு “நான் சுரேசரிடம் கேட்கிறேன். அவர் எண்ணுவதென்ன என்பதை உசாவி தங்களிடம் வந்து சொல்கிறேன்” என்றான்.
நகுலன் தன்னுள் ஆழ்ந்து மெல்ல சாய்ந்துகொண்டான். “இங்கு திரும்பி வரும் வரை நான் அடைந்த வெற்றிகளையே கணித்துக்கொண்டிருந்தேன். எண்ண எண்ண இவை நான் அடைந்த பெருவெற்றிகள் என்று தோன்றலாயின. உண்மையில் இங்கிருந்து கிளம்புகையில் உளக்கசப்பும் தனிமையும் கொண்டிருந்தேன். முதல் சில ஊர்களில் அரசர்கள் என்னை வந்து பணிந்து கொடையளித்து மீண்டபோது அதை பொருளற்ற ஒரு சடங்கு என்று எண்ணினேன். எங்கும் எதிர்ப்பு இல்லை என்பதே என்னை ஆர்வமிழக்கச் செய்தது. எப்போது திரும்புவோம் என்னும் ஏக்கமே ஆட்கொண்டிருந்தது. ஆனால் என்றோ ஏதோ ஒரு புள்ளியில் நான் மகிழத் தொடங்கினேன். என்னை மகிழ வைத்தவை நான் வென்றவர்களின் விழிகள். அதிலிருந்த நிகரற்ற பணிவு. அப்பணிவை மேலும் அடையும்பொருட்டு அவர்களை சிறுமைசெய்தேன். அவர்களை அச்சப்படுத்தி அவ்விழிகளைக் கண்டு உளம்பொங்கினேன்” என்றான்.
“ஷத்ரியர்களுக்கு இவ்வாணவத்திலிருந்து விடுப்பில்லை. நான் அடைந்த பொருள் என் கருவூலத்தை நிறைக்க நிறைக்க உள்ளம் இறுகி உடல் நிமிர்ந்தது. விழிகளில் கூர்மையும் குரலில் அழுத்தமும் ஏற்பட்டது. நான் பேரரசனென மாறிவிட்டேன் என அமைச்சர்கள் சொன்னார்கள்” என்று அவன் தொடர்ந்தான். “மேற்கே யவனர்களின் பட்டுப்பாதையின் எல்லை வரை சென்று பொன்னும் பொருளும் கொண்டு மீண்டு வந்தேன். செல்லும் வழி எங்கும் பெற்ற பொருட்களை ஆங்காங்கே உரிய இடங்களில் கருவூலம் அமைத்து சிறு படையொன்றை காவலுக்கு நிறுத்திவிட்டுச் சென்றேன். எவர் வேண்டுமென்றாலும் அக்கருவூலத்தை கொள்ளையடித்து பொருட்களை எடுத்துச் சென்றிருக்க முடியும். ஆனால் ஒரு கணத்தில் தோன்றியது அவ்வாறு எவருக்கேனும் கொள்ளையடித்துச் செல்லவேண்டும் என்று தோன்றுகிறதா என்று பார்க்கவேண்டும் என்று. ஆகவே எப்பொருளையும் நான் முறையாக பாதுகாத்து வைக்கவில்லை.”
“அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியே என்னை பேரச்சத்தை அளிக்கும் தெய்வம் என மாற்றிவிட்டது என்று உணர்ந்தேன். ஒரு களத்தில்கூட எதிரிகளை நான் காணவில்லை. ஒரு படைக்கலம்கூட எனக்கெதிராக எழவில்லை. மீண்டு வரும்போது நான் ஈட்டிய பெருஞ்செல்வத்தையே எண்ணிக்கொண்டிருந்தேன். இந்நகரில் நுழையும்போது மூத்தவரிடம் கொண்டுசென்று காட்டுவதற்கு பேரரசொன்றின் கருவூலத்தைவிட பெருந்திரு என்னிடம் இருக்கிறதென்று தருக்கினேன். ஆனால் நகருள் நுழைந்து குடிகளின் வாழ்த்தைப் பெற்று வந்துகொண்டிருந்தபோது ஒரு சார்வாகரை கண்டேன்.”
யுயுத்ஸு “சார்வாகரா? இந்நகருக்குள்ளா?” என்றான். “ஆம்” என்றான் நகுலன். “நகரின் மையத்தில், மக்கள்திரளின் நடுவே.” யுயுத்ஸு பெருமூச்சுடன் “மெய்தான், அவர்கள் எங்கும் தென்படுகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் தளைகளோ தடுக்கும் வேலிகளோ எங்குமில்லை” என்றான். “ஏனென்றால் உலகியலாளர் அவர்களை தவிர்க்க இயலாது. உலகியல் கடந்தோர் அவர்களை உள்ளூர விரும்புகிறார்கள்.” நகுலன் “அவர் மதுக்கடை வாயிலில் சிறுகூட்டத்தில் ஒருவராக நின்றுகொண்டிருந்தார். ஒரு கணம் அவர் விழிகளை நான் பார்த்தேன். அவர் என்னிடம் ஏதோ சொல்லவருவதுபோல் தோன்றியது. விழியில் ஒரு மெல்லசைவு. வாயில் இரு சிறு சொல்நிகழ்வு” என்றான்.
“அவர் என்ன சொன்னார் என்று நான் உணர்வதற்குள் தேர் கடந்து சென்றது. உடல்களின் கொப்பளிப்புகள். குரல்களின் பேரலைகள். புழுதி, மலர்ப்பொடி, மஞ்சள்பொற்பொடி. மீண்டும் நெடும்பொழுது கழிந்தே அவர் சொன்ன சொல்லை நான் உணர்ந்தேன். அவர் நஞ்சு என்றார்” என்றான் நகுலன். “நஞ்சு என்றா?” என்று யுயுத்ஸு கேட்டான். “ஆம், நான் திகைத்து திரும்ப கேட்டேன். ஆம் ஆம் ஆம் என்றது என் உளம். நஞ்சேதான். நஞ்சென்றே அவர் சொன்னார். நஞ்சு நஞ்சு என்று. எதை சொன்னார் என என் உள்ளம் துழாவிக்கொண்டே இருந்தது. அதுவரை நடித்ததை தொடர்ந்து நடித்து இங்கே அரண்மனைக்குள் வந்தேன்.”
“வரவேற்புகள் முடிந்து இங்கே அமர்ந்திருக்கும்போது சற்று முன்னர்தான் அவர் சொன்னது எது என்று எனக்குத் தெரிந்தது. அது நான் படைகொண்டு சென்ற வடமேற்குப் புலத்தில் என்னிடம் இருந்து தப்பிச்சென்ற வடமேற்குச் செம்புலத்தின் குடித்தலைவர்களில் ஒருவரை படைகள் அழைத்து வருகையில் அவர் என்னிடம் கூறியது. எதற்காக தப்பியோடினீர் என்று நான் கேட்டேன். நச்சுக்கலம் பொறிக்கப்பட்ட கொடியுடன் தென்னகத்திலிருந்து கொடிய படையொன்று வருகிறது என்றார்கள், அந்த நச்சு எங்கள் நிலத்தையும் ஊற்றுகளையும் நஞ்சாக மாற்றிவிடும் என்றார்கள், ஆகவே விலகி ஓடினேன் என்றார். அதை அவைப்பழிப்பென்று எண்ணி அக்கணமே கைகாட்டி அவர் தலைகொய்ய ஆணையிட்டேன்.”
“திகைப்புடன் முகம் உறைந்திருந்த அவர் தலை துண்டுபட்டு தரையில் விழுந்து கிடந்தது. திறந்த அவ்விழிகளைப் பார்த்தபோது ஒரு மெல்லிய திடுக்கிடலுடன் உணர்ந்தேன், மெய்யாகவே அது நஞ்சுதானா? அல்ல என்றிருக்கலாம். எனினும் இனி அவர் அதை பிறிதொன்றென உணரப்போவதில்லை. ஆகவே அவர் வரைக்கும் அது நஞ்சேதான்” என்றான் நகுலன். “அவ்வுணர்வு என்னை உலுக்கியது. என் உடல் நடுங்கத் தொடங்கியது. இருமுறை உடலுமட்டி வாயுமிழ்ந்தேன். மருத்துவரை வரச்சொல்லி நானும் ஒரு பொதி மருந்துப்பொடி அருந்தினேன். துயிலில் ஆழ்ந்து விழித்து மீண்டும் அப்பொடியை உண்டேன். துயின்று துயின்று காலத்தைக் கடந்து அதிலிருந்து மீண்டேன். எத்துயர் எக்கசப்பு எவ்விழப்பு ஆயினும் எவ்வகையிலேனும் காலத்தைக் கடத்திவிட்டால் மீண்டுவிடலாம் என அறிவேன்.”
யுயுத்ஸு “அந்த மருந்துப்பொடி கசந்ததா?” என்றான். “ஆம், இங்கும் அப்பொடியையே உண்டேன். சற்றுமுன்னர் என்னிடம் மருத்துவர் அப்பொடியில் ஒரு சொட்டு சுட்டுவிரலால் தொட்டு நாவில் வைத்து எச்சுவை என்றார். கசப்பு என்றேன். கூறுக என்று மீண்டும் கேட்டார். ஊறிப்பெருகும் கடுங்கசப்பு என்றேன். அரசே தங்கள் வாயில் நான் வைத்தது தேன் கலந்த பொடி என்றார். நான் அவரை வெறித்துப் பார்த்தேன். தேன் கசக்கிறது எனில் உங்கள் வாயில் கசப்பு நிறைந்திருக்கிறது என்றே பொருள். கசப்பு எழுவது உங்கள் நாவிலிருந்து. நாவுக்கப்பால் இருக்கும் இரைப்பையிலிருந்து. இரைப்பையை தாங்கி இருக்கும் குடல்களிலிருந்து. குடல்கள் சென்று முடியும் மூலாதாரத்திலிருந்து. இத்தருணத்தில் நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே. பெண்ணிடம் காமம் கொள்ளாதொழிக! தங்கள் உடலிலிருந்து நஞ்சை அவளுக்கு அளித்துவிடுவீர்கள் என்றார்.”
யுயுத்ஸு பெருமூச்சுவிட்டான். “இந்த மருந்து உங்கள் உடலுக்குள் மெல்லிய இனிமையொன்றை செலுத்துகிறது. நாங்கள் செய்வது ஒன்றே. இவ்வினிமையை துளித் துளியென உங்கள் உடலுக்கு அளித்துக்கொண்டிருக்கிறோம். உடல் அதை முதலில் செறுக்கும். முழுமையாக மறுக்கும். ஆனால் அதற்கு வாழவேண்டும் என்று விருப்பிருந்தால் ஏதோ ஒரு புள்ளியில் அதை ஏற்றுக்கொள்ளும். அதனூடாக மீண்டெழும். அரசருக்கும் அதையே அளித்தேன் என்றார்.” “எனக்கும்” என்று யுயுத்ஸு சொன்னான்.
நகுலன் “அரசரை பார்த்து வருக! நான் எப்போது அவரை சந்திக்கலாம் என்று கூறுக!” என்றான். “சுரேசர் தங்களை பார்க்க வருவார். அவர் முடிவெடுக்கட்டும்” என்று யுயுத்ஸு சொன்னான்.
சுரேசர் அறைக்கு வெளியே வந்து நின்றிருப்பதை ஏவலன் அறிவித்தான். யுயுத்ஸு எழுந்து கைகூப்பியபடி வணங்கி நின்றான். சுரேசர் அறைக்குள் வந்து நகுலனுக்கு தலைவணங்க அவன் அமர்ந்திருந்தபடியே அவர் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டான். சுரேசர் அமர்ந்துகொண்டு “தங்கள் வருகையை அவருக்கு அறிவித்திருக்கிறோம். தங்களைச் சந்திக்க விருப்புடன் இருக்கிறார். எப்போது வருகிறான் என்று பலமுறை கேட்டுவிட்டார்” என்றார். “அவருடைய தன்னினைவு கூர்கொண்டிருக்கிறதா?” என்று நகுலன் கேட்டான். சுரேசர் “ஆம், ஓரளவு நலம் பெற்றிருக்கிறார் என்றார்கள். ஆனால் உடல் இன்னும் நைந்த நிலையிலேயே இருக்கிறது” என்றார். நகுலன் “அவர் நா இனிப்பை அறிகிறதா?” என்றான். சுரேசர் புன்னகைத்து “தனக்கு அளிக்கப்படுவது இனிப்பு என்று தெரிந்திருக்கிறது” என்றார். “ஐயம் வேண்டாம், அவர் மீண்டுவிடுவார். அவர் உள்ளிருந்து இனிப்பை நோக்கி தாவும் ஒரு நாக்கு உள்ளது. அது ஒருபோதும் அவரை கைவிடுவதில்லை.”
நகுலன் கைகளைக் கட்டி மீண்டும் சாய்ந்துகொண்டு “என்ன நிகழ்கிறதென்று தெரியவில்லை. இந்நகரம் ஏதோ அயலவரின் ஊர்போல ஆகிவிட்டிருக்கிறது. அறியா முகங்கள், அறியமுடியாத இடங்கள். இங்குள்ள ஒவ்வொரு பரு மணலும் மாறிவிட்டதுபோல் தோன்றுகிறது. இந்நகரில் நான் வாழமுடியும் என்றே எனக்குத் தோன்றவில்லை” என்றான். “இங்கு இச்சடங்குகள் அனைத்தும் முடிந்ததும் பிறிதொரு பயணத்துக்கு கிளம்ப வேண்டுமென்று தோன்றுகிறது. வேறெங்கோ ஓரிடத்தில் நான் அகன்று வந்த அனைத்தும் இருக்கின்றன என்று தோன்றுகையில் மட்டுமே என்னால் சற்றேனும் அமைதிகொள்ள முடிகிறது” என்றான்.
சுரேசர் “அரசே, தாங்கள் தங்கள் திசைவெற்றிப் பயணத்தில் வென்று கண்டு அடைந்ததென்ன?” என்று கேட்டார். “பொருள், பெரும்பாலும் பொன். உடன் அருமணிகள். அரிய தெய்வச்சிலைகள், விந்தையான படைக்கலங்கள்.” அவன் புன்னகைத்து “அழகிய பணிப்பெண்களும் உண்டு” என்றான். சுரேசர் “அவை எதிர்ப்பார்க்கக் கூடியவைதான்” என்றார். “பேரரசர் யுதிஷ்டிரனுக்கு தாங்கள் அளிக்கும் தனிப் பரிசென்ன?” நகுலன் திகைப்புடன் நோக்க “அவர் உள்ளத்தில் விழைவை எழுப்புவது. நாவில் மீண்டும் தித்திப்பை நிகழ்த்துவது. அவ்வண்ணம் எதையேனும் தாங்கள் கொண்டு வந்தீர்களா?” என்றார்.
நகுலன் “அவருக்குள் திகழ்வது விழைவதென்ன என்று எனக்குத் தெரியவில்லை” என்றான். “தாங்கள் அங்கு பெற்றவற்றிலோ கைப்பற்றியவற்றிலோ எப்பொருளை முதலில் கண்டதுமே அவரை நினைவுகூர்ந்தீர்கள்? இது அவருக்கு உகந்தது என்று எடுத்து வைத்தீர்கள்?” என்று சுரேசர் கேட்டார். நகுலன் “ஆம், அவ்வாறொன்று உள்ளது” என்றபடி எழுந்தான். “அது ஒரு தொல்நூல். மெல்லிய பொற்தகடுகளில் பொறிக்கப்பட்டது. ஆக அறுபத்தெட்டு தகடுகள் உள்ளன. எழுபத்திரண்டு இருந்திருக்கவேண்டும். நான்கு அழிந்துவிட்டன” என்றான். “ஆம், எப்போதும் அது அவ்வாறுதான். நெறிநூல்கள் முழுமையாக எஞ்சுவதே இல்லை. அது மானுட ஆழம் அவற்றின்மேல் கொண்ட வஞ்சமாக இருக்கலாம்” என்றார் சுரேசர்.
“அதை நான் நோக்கினேன். அவ்வெழுத்துகள் மிகத் தொன்மையானவை. வடக்கே இரு பெருநதிகளுக்கு நடுவே இருக்கும் மிகத் தொன்மையான நிலம் ஒன்று உள்ளது. சமாரிய நிலம் என அதை சொல்கிறார்கள். அதை ஆண்ட தொல்மன்னர் ஒருவரின் ஆணைகள் அவை. பாலை நிலத்தின் தொன்மையான இயற்கைக் குகை ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை. அவ்வரசர் தெய்வ ஆணையை விண்ணிலிருந்து பெற்று தன் மக்களுக்கு நெறிநூல்களை வகுத்தளித்தவர் என்கிறார்கள். மிகத் தொன்மையான நூல். அது ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு அங்கே கல்லில் வெட்டப்பட்ட பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.”
“அதை என் வீரர்கள் கொண்டுவந்து காட்டியபோதே மூத்தவர் விரும்புவார் என்று நினைத்தேன். அவர் அதை தொட்டுத் தடவி நெஞ்சோடணைத்திருப்பதை பலமுறை உள்ளத்தில் கண்டுவிட்டேன்” என்றான் நகுலன். சுரேசர் “ஒருவேளை அவர் அதைக் கண்டு மீளக்கூடும்” என்றார். யுயுத்ஸு “ஆம், அவருக்கு உகந்த பரிசு அது” என்றான். “இந்நூல் மேற்கு நிலத்தில் உருவான நெறிநூல்களில் தொன்மையானது என்கிறார்கள்” என்று நகுலன் சொன்னான். “அங்கிருந்து இன்று நாம் புழங்கும் நெறிவரை மாறாச் சரடொன்று வருகிறது என்கிறார்கள். அதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் அங்குள்ளோர் அனைவருக்கும் ஏற்கெனவே நினைவில் இருக்கும், அதை அவர்களின் செவி கேட்கையில் உள்ளம் அதன் பொருளை எடுத்து முன்வைக்கும்.”
“அதை கொண்டுவரச் சொல்க! அரசருக்கு அதை பரிசளிப்போம்” என்று சுரேசர் சொன்னார். நகுலன் எழுந்துகொண்டு கைதட்ட ஏவலன் உள்ளே வந்து தலைவணங்கினான். “அரசருக்குரிய அப்பொன்நூலை எடுத்துகொண்டு வருக!” என்று அவன் ஆணையிட்டான். பின்னர் திரும்பி “அதை மட்டும் இங்கு கொண்டுவந்து என் அறையிலேயே வைத்திருக்கிறேன். என் அருகிலிருந்து அதை அகற்றியதே இல்லை” என்றான். “நெறிநூல் என்பதனால் போலும், அது ஒரு காவல்தெய்வம் என எனக்குத் தோன்றியது. அந்தப் பேழையை நான் திறப்பதே இல்லை. அப்பேழையே எனக்கு அந்நூல் என ஆகிவிட்டது.” சுரேசர் “உடலை நாம் ஆத்மா என நினைப்பதுபோல” என்றார். நகுலன் புன்னகைத்தான்.
ஏவலன் கொண்டுவந்த பேழை வெள்ளியால் பெரிய மீன்போல அமைக்கப்பட்டிருந்தது. அதன் விழிகள் நீல வைரங்கள். செதில்களில் இளஞ்செந்நிற வைரப்பொடிகள் பதிக்கப்பட்டிருந்தன. வால் வளைந்து நின்றது. அது உயிர்த் துடிப்புள்ள மீனாகவும், அருமணி நகையாகவும் ஒரே கணம் தோற்றமளித்தது. “விண்ணிலெங்கோ இருக்கும் தேவ நதியொன்றில் நீந்தும் மீன் என்கிறார்கள்” என்றான் நகுலன். அவன் அதை மூன்று இடங்களில் அழுத்தி மெல்லிய சொடுக்கொலியுடன் திறந்தான். உள்ளே செம்பட்டில் பொதியப்பட்டு அச்சுவடிக்கட்டு இருந்தது. பொன்னாலான தகடுகள் இளந்தாழை மலரிதழ்கள் போலிருந்தன. அறையொளி பட்டதும் உருகத்தொடங்குவதுபோல் ஒளிகொண்டன.
நகுலன் அதை எடுத்து மெல்ல பிரித்து அவர்களுக்கு காட்டினான். அத்தகடுகள் மிக ஆழ்ந்த சொற்களால் எதையோ சொல்வனபோல ஓசையிட்டன. மென்மையான பொற்தகடுகள் பட்டுச் சரடால் கோத்து கட்டப்பட்டிருந்தன. பொற்செதுக்கு வேலைகள் என்று தோன்றுமளவுக்கு மிக நுணுக்கமான அழகிய எழுத்துகளால் அதன் பரப்பு நிறைக்கப்பட்டிருந்தது. “இதை விழி கொண்டு படிப்பது வழக்கமில்லை. விரல் தொட்டு படிப்பது எளிது” என்றான் நகுலன். “இந்த மொழி அறிந்த அறிஞர்கள் எழுவரை என்னுடன் அழைத்து வந்திருக்கிறேன். அவர்கள் இதை அரசருக்கு விளக்கக்கூடும்.”
யுயுத்ஸு அதை நோக்கி எழுந்து வந்தான். அவன் முகம் மலர்ந்தது. “பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படவேண்டிய சொற்கள் என எவருக்கோ தோன்றியிருக்கிறது. இயல்பாக அவ்வாறு தோன்றுவதில்லை. அச்சொற்களே அவ்வாணையை அவர்களுக்கு பிறப்பித்திருக்கவேண்டும்” என்றான். அதை தொடும்பொருட்டு அருகே வந்து கைநீட்டி பின் கையை திருப்பி எடுத்துக்கொண்டான். “நோக்குக!” என்று நகுலன் அதை நீட்ட “வேண்டாம். என் கைகளால் இன்று அதை தொட நான் விழையவில்லை” என்றான் யுயுத்ஸு.
“ஏன்?” என்று நகுலன் கேட்டான். “பிறிதொரு தருணம், பிறிதொரு தருணம் வரட்டும்” என்றான் யுயுத்ஸு. “முழுத் தகுதியுடன் இந்நூலை என் கைகளில் எடுக்கிறேன். அருள்க தெய்வங்கள்!” நகுலன் “உனக்கில்லாத தகுதி எது? கொள்க!” என்றான். “இப்போது வேண்டாம், மூத்தவரே” என்று யுயுத்ஸு பின்னடைந்தான். நகுலன் சுரேசரை நோக்க அவர் புன்னகையுடன் “அந்நூல் எனக்குரியதல்ல. எனது நூல்கள் எவை என்பதை என் ஆசிரியர்கள் முன்னரே முடிவு செய்துவிட்டிருக்கிறார்கள். குடிவழியாக நான் அதை அடைந்திருக்கிறேன். இந்நூல் எனக்கொரு அரிய அணி மட்டுமே” என்றார்.
“அறிவிற்கு அவ்வண்ணம் எல்லைகள் உண்டா? என்றான் நகுலன். “அறிவிற்கு எல்லைகள் இல்லை. அறிதலின் திசைகள் என சில உண்டு. திசையிலா அறிதல் எல்லையிலா அறிதலை அளிப்பதில்லை” என்று சுரேசர் கூறினார். நகுலன் அதை மூடி மீண்டும் தன்னருகே வைத்துக்கொண்டு ஓர் எண்ணம் எழ உரக்க நகைத்தான். “நூலில் மயங்குபவர் நீங்கள் இருவரும். ஆகவே இரு நோக்கில் இதை அஞ்சுகிறீர்கள். நானோ புரவியொன்றின் வாய் திறந்து பல் பிடித்துப் பார்ப்பதுபோல் இதை கையாளுகிறேன்” என்றான். சுரேசர் உடன் நகைத்து “கள்ளமற்றவர்களை, அறியாதோரை எல்லா தெய்வங்களும் பொறுத்துக்கொள்கின்றன” என்றார்.
“நாம் கிளம்புவோம்” என்றான் யுயுத்ஸு. நகுலன் அதை கையிலெடுத்துக்கொண்டான். யுயுத்ஸு தன் ஆடையை சீர் செய்து அவர்களுக்குப் பின்னால் நடந்தான். இடைநாழியில் நடக்கையில் சுரேசர் “அரசர் எந்நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. எந்நிலையில் ஆயினும் வெற்றி எனும் சொல்லையே வெவ்வேறு முறையில் அவரிடம் சொல்லுங்கள். இன்று அவர் விழைவது நற்சொற்களை மட்டுமே. ஊக்கமூட்டும் சொற்களே அவரை எழுப்ப முடியும். அனலணைந்த வேள்விக்குண்டம் அவர் என்று மருத்துவர் கூறினார்கள்” என்றார்.
நகுலன் குறடுகள் ஒலிக்க நடந்தபடி “பேரரசி எங்ஙனம் இருக்கிறாள்?” என்றான். “முடிசூட்டுவிழாவுக்குப் பின் அவையமர்ந்து குடிகளின் சொற்களை அவர் கேட்டார். அரசர் நோயுற்று அறைமீண்ட பின்னரும் பின்னிரவு வரை அவை நீண்டது. குடிகள் அளித்த பரிசுகளை பெற்றுக்கொண்டார். அவர்களின் குறைகளை கேட்டார்” என்று சுரேசர் சொன்னார். “சிறந்த அவைக்கூடல் தொடக்கத்தில் மாறா நெறிகளுடனும் முறைமைகளுடனும் இருக்கும். மெல்ல மெல்ல அது கலைந்து அன்னையும் மைந்தரும் கூடி குலவுவது போலாகும். இறுதியில் அங்கிருப்பது பொருளேற்றம் அனைத்தையும் இழந்த வெறும் சொற்களின் கொப்பளிப்பு மட்டுமே.”
“அன்று அவையிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கையில் மைந்தருடன் விளையாடும் அன்னை புலியொன்றை கண்டதுபோல் தோன்றியதாம்” என்றான் யுயுத்ஸு. சுரேசர் “அறைமீண்ட பின் சற்றே ஓய்வெடுத்துவிட்டு புரவியிலேறி சூழ்ந்திருக்கும் நகரங்களுக்கு சென்றார். அனைத்து ஊர்களிலும் மக்கள் திரண்டு வந்து அன்னையே என்று அழைத்து வணங்கி அவரை வரவேற்றார்கள். இன்னமும் அவர் ஊர் திரும்பவில்லை. இன்றிரவு நகருக்குள் நுழையக்கூடும் என்று செய்தி” என்றார். நகுலன் “அவளுக்கு துயில்நீப்புநோய் இருக்கிறது” என்றான். “முன்னரே அவள் துயில்வது அரிது. போருக்குப் பின் முற்றிலும் துயிலின்மையை அடைந்திருக்கக்கூடும்.” சுரேசர் ஒன்றும் சொல்லவில்லை.
யுதிஷ்டிரனின் அறைமுகப்பில் நின்ற காவலன் தலைவணங்கினான். சுரேசர் அவனிடம் “பேரரசர் எவ்வாறு இருக்கிறார்?” என்றார். “நலம்பெற்று வருகிறார் என்றனர் மருத்துவர்” என்று அவன் சொன்னான். “அவர் நா சுவையுணர்கிறதா?” என்று சுரேசர் கேட்டார். “நலம்பெறக்கூடும் என்று மருத்துவர் சொன்னார்” என்றான் காவலன். “சென்று எங்கள் வருகையை அறிவி” என்று சுரேசர் கைகாட்டினார். அவன் உள்ளே சென்றதும் “நா சுவையறியவில்லை எனில் மொழியை உள்ளமும் அறிய வாய்ப்பில்லை” என்றார்.