கோட்டயம் ஓவியங்கள்.
அன்புள்ள ஜெயமோகன் சார்,
தங்களது ‘கோட்டயம் ஓவியங்கள்’ கட்டுரை எனது பழைய நினைவுகளைத் தூண்டியது. ஏனெனில் நான் நினைவறிந்து கண்ட முதல் பத்திரிக்கை ‘மங்களம்’ தான்.எனது தாயாரின் தாயாரின் இல்லத்தில். மதியத்தில் எல்லா வேலைகளும் ஒழிந்தபின் இளைப்பாறுதலுக்காக படிக்கும் பத்திரிக்கையாக எனது பாட்டிக்கு அதுஇருந்தது. அப்போது கோட்டோவியங்கள் கருப்பு வெள்ளையில் இருக்கும். காகிதங்களும் மிக மெல்லியவையாக இருக்கும்.
பின்னர் பதின் பருவத்தில் தாய்மொழியைஎழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்ட பின்னர் மீண்டும் சில முறை அதன் கதைகளை படித்துப் பார்த்தேன். வாசிப்பார்வம் தோன்றாததால் விட்டுவிட்டேன். தற்போதுசில வருடங்களுக்கு முன்னால் அந்த பத்திரிக்கையின் பெயர் நினைவுக்கு வர இணையதளத்தில் தேடிப் பார்த்தேன். ஆச்சரியமாக இன்னும் அதேவிதத்தில் வெளி வந்துகொண்டிருக்கிறது. இப்போது இணையப் பத்திரிக்கையாகவும் வெளிவருகிறது. பைங்கிளி இலக்கியம் தான் என்றாலும் என்னனவோ அலைகள் வந்து ஓய்ந்துவிட்ட பிறகும் இந்த வடிவம் அப்படியே தொடர்கின்றது.
அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.
அன்புள்ள ஜெ
கோட்டையம் ஓவியங்கள் ஓர் அரிய அறிமுகம். ஓவியம் வரையத்தொடங்கும் எனக்கு அதன் முக்கியத்துவம் தெரிகிறது. பொதுவாக கலை ஓவியங்களைத்தான் இன்றைக்கு அதிகமாக கவனிப்பார்கள். ஏனென்றால் அவற்றின் சந்தை மதிப்பு அதிகம். ஆகவே அவற்றுக்குச் செலவு செய்து ப்ரமோ செய்வார்கள் [ஓவிய உலகில் நீங்கள் பார்க்கும் எல்லா மதிப்புரைகளும் கட்டுரைகளும் பணம்பெற்றுக்கொண்டு எழுதப்படுபவைதான்] ஆனால் இந்த வகையான பாப்புலர் ஓவியங்களுக்கு அந்த இடம் இல்லை. ஆகவே இவற்றை எவரும் கவனிப்பதில்லை
இவற்றில் உள்ளது தொழில்நுட்பம் மட்டும்தான். நீங்கள் சொல்வதுபோல வாயரிசம்தான். ஆனால் இவை வெகுஜன ரசனையை கவர்கின்றன. ஆகவே இவற்றுக்கு ஒரு சமூகவியல் மதிப்பு உள்ளது. சமூகவியல் கோணத்தில் நீங்கள் சொல்வதுபோல ஒரு சமூகம் ஏன் இபப்டி தன்னை வரைந்துகொள்கிறது என்பது முக்கியமானது. இந்த ஓவியங்களில் உள்ள ஸ்கின்டோன் ஓர் உதாரணம். அதை ஒருவகையான சமூகமனநிலையின் வெளிப்பாடாகக் கருதலாம். குண்டான பெண்கள் பற்றியும் சொல்லியிருந்தீர்கள். பலவகையிலும் முக்கியமான ஒரு கட்டுரை
டி.எம்.பால்