சத் -தர்சன் – ஒரு கடிதம்

சத்- தர்சன்- ஆனந்தகுமார்

புத்தாண்டு

புத்தாண்டு, சத்- தர்சன் — கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நான் தங்கியிருந்த வேறொரு ஆசிரமத்தில் இருந்த நண்பரின் வழியாக சத் தர்சன் குறித்து அறிந்தேன். அங்கே போவதற்காக முன்பதிவு செய்திருந்த போது தங்கள் வலைதளத்தில் சத்தர்சனில் தாங்கள் தங்கியிருந்த பதிவைப் பார்த்தேன். போவதற்கு முன்பு சென்னை பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் தங்களை சந்தித்து தெரிவித்தது நினைவிருக்கலாம். கோவையை விட குளிர் அதிகம் இருக்கும் என்றீர்கள் இருந்தாலும் நான் அதை மறந்து குளிருக்கான எந்த உடையும் எடுத்துப் போகவில்லை. முதல் நாள் மாலை முதலே குளிர் நடுக்கி எடுத்து விட்டது. இருப்பினும் ஆனந்தக்குமார் ஒரு சால்வை தந்தார். எஞ்சிய நாட்களை அதைக் கொண்டு ஓட்டினேன். இது போன்ற சிறிய கனிவுகளின் வழியாகவே தன் பயிலகத்தை நடத்திச் செல்கிறார் ஆனந்தக்குமார். அவர் அதை ஆசிரமம் என்று குறிப்பிட விரும்புவதில்லை என்றாலும் இத்தகைய இடங்கள் அவ்வாறான பொதுப் பெயர்களிலேயே அழைக்கப்படுகின்றன.

பெரும் எதிர்பார்ப்புகளின்றி தான் முதல் நாள் சென்றேன். உண்மையில் பயணங்களில் ஆசிரமங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தங்கியிருந்து அந்த சூழலுக்கு ஏற்ப பொருத்திக் கொள்ள ஓரளவு பழகியிருந்தேன். ஆனால் இன்னொரு வீட்டிற்கு வந்ததைப் போன்று உணரக்கூடிய இடங்கள் மிகக் குறைவு. அவ்வாறு நான் உணர்ந்த மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்று. இத்தகைய இடங்களில் நமக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். யாரென்றே நாம் முன்பின் அறியாத நண்பர்களுடன் நடை போவதும் ஊர் சுற்றிப் பார்க்க போவதும் நாம் இன்னும் திறந்த மனத்துடன் இருப்பதற்கு ஒரு சாட்சி. குடும்பத்தில் இருந்து தற்காலிகமாக விடுப்பெடுத்துக் கொண்டு மும்பையிலிருந்து வந்திருந்தார் ஒரு பெண். இதுவே ஒரு பெரிய சாதனை தான் நம் சூழலில்.

‘ஆசிரம’ தினசரி அட்டவணை என்பது இங்கே மிகக் குறைந்தபட்சமாகவே கோருகிறது. மிகக் கறாரான daily schedule உள்ள இடங்களை நான் அறிவேன். ஆனால் இங்கு அவ்வாறு எதுவும் இல்லை. காலை 25 நிமிடங்கள் மெளனமாக அமர்ந்திருத்தல். உண்மையில் இந்த சூழலில் இதை மிகச் சுலபமாகவே உணர்ந்தேன். பிறகு ஒரு மணிநேர சேவை ஏதேனும் ஒரு ஆசிரம வேலை மாலையில் சத்சங் எனப்படுவது கூட்டாக அமர்ந்து பேசுவதும் விவாதிப்பதும் தான். இந்த பயிலகத்திற்கென்று மையமாக ஒரு குரு இல்லை தத்துவம் என்றோ குறிப்பிட்ட சிந்தனைப் பள்ளி என்றோ குறிப்பாக யாரையும் எந்த மதம் புத்தகம் என்று எதையும் பின்தொடர்தல் என்பதெல்லாம் இல்லாத ஒரு கட்டற்ற தன்மை. பொறுப்புணர்வுடன் கூடிய சுதந்திரம் என்பதை எப்போதும் ஓஷோ வலியுறுத்தி வந்தார். அது போன்ற ஒரு அமைப்பு தான் இந்த பயிலகம்.

முதல் நாள் சத்சங்கத்தின் போது நால்வர் மட்டுமே இருந்தோம். தியானம் குறித்த சில குறிப்புகளை கூறினார் ஆனந்த். இது நான் முன்பும் பல முறை அறிந்திருந்தேன் என்றாலும் அதை செயல்படுத்த முற்றாக என்னால் முடியாமல் இருந்தது. முயற்சியற்ற முயற்சி போன்றவை வெறும் சொற்களாகவே எஞ்சி இருந்தது. இங்கு அதற்கான சில தடைகள் உடைவதை உணர முடிந்தது. இரண்டாம் நாள் கூடுகையில் தம்மம் தந்தவன் சித்தார்த்தா நூல்களை முன் வைத்து சுருக்கமாக பேசினேன். ஆனால் விவாதத்தின் போது அது முற்றிலும் ஓஷோ குறித்ததாகவே மாறிவிட்டது. அன்று பல பின்னணியில் இருந்தும் பலர் வந்திருந்தனர். இன்றைக்கு ஓஷோ எனக்கு என்னவாக இருக்கிறார் என்றும் தெரிவித்தேன். என் பதின்ம வயதுகளில் அவருக்கு இருந்த இடம் இன்றில்லை. என்றாலும் இன்றும் அவரை என் மதிப்புமிக்க ஞானாசிரியர்களில் ஒருவராகவே உணர்கிறேன்.

அடுத்த நாள் ஜான் சுந்தரும் கிடாரி குயின் படங்களின் இயக்குனரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். உண்மையில் குழந்தைகளால் நிறையும் மையம் இயல்பாகவே கலகலப்பாகிறது. ஜான் சுந்தருடன் மாலை ஒரு கவிதை விவாதம் நடைப்பெற்றது பிறகு மாலை மயங்கும் வேளையில் சில அற்புதமான பாடல்களை பாடினார். மஹாராஷ்டிராவில் இருந்து வந்திருந்த நண்பர் கிரீஷிற்கு மொழி புரியாவிட்டாலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கவிதையும் எழுதுகிறார் பாடவும் செய்கிறார் என்று நினைத்திருந்த எனக்கு மறுநாள் இன்னும் ஒரு அதிர்ச்சி. ஜான் சுந்தர் ஓவியம் வரையப் போகிறார் என்றார் ஆனந்த். அங்கிருந்த ஒரு ஒற்றைப் பாறையை தன் விவிலிய ஓவியத்தால் உயிர் பெறச் செய்தார் ஜான் சுந்தர்.

பெரும்பாலும் ஆசிரமத்தை அதன் இயற்கை சூழல் கெடாதவாறு தான் வைத்திருக்கிறார் ஆனந்த். நீண்ட நாள் கழித்து மீண்டும் ஆற்றுக் குளியல். அது சென்ற ஆண்டு நம் குழும நண்பர்களுடன் தங்கள் நெல்லை உரைக்கு வந்திருந்த போது தாமிரபரணியில் குளித்ததை நினைவூட்டியது. நண்பர்களை நினைத்துக் கொண்டேன்.

சாதாரணர்கள் படைப்பூக்கம் கொண்டவர்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான இடமாக விளங்குகிறது இந்த கற்றல் மையம். இறுதி நாள் விடைபெறும் போது கனத்த இதயத்துடன் உணர்ந்தேன். வேறெங்கும் இவ்வாறு உணர்ந்ததில்லை. ஆனந்த் குருட்ஜிஎஃப் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். தமிழில் அவரைப் பற்றி எழுதப்பட்ட முதல் புத்தகம். வாசித்த பின் இது குறித்து விரிவாக எழுத வேண்டும். தேடுபவர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் படைப்பாளிகளுக்காகவும் ஆனந்த் ஏற்படுத்தியிருக்கும் இந்த வெளி வேறு வகையில் நாம் வாழும் அன்றாடங்களில் மிக அரிதானது ஆபூர்வமானவைகளில் ஒன்று.

சிவக்குமார் ஹரி

சென்னை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 63
அடுத்த கட்டுரைசெயல் -ஒரு கடிதம்