அறிவெதிர்ப்பும் ஆணவமும்

பேசிக்கொண்டிருக்கும்போதே துப்பாக்கியுடன் வந்தார் – விகடன்

ஜெ

சென்ற ஆண்டு ஜூன் மாதம் நீங்கள் தாக்கப்பட்டபோது பாலபாரதி என்ற மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி முன்னாள் எம்.எல். எழுதியிருந்த ஒரு செய்தி அப்போது முகநூலில் பிரபலமாகச் சுற்றியது நீங்கள் கண்டுகொள்ளவில்லை. அதை இணைத்திருக்கிறேன். அதில் அவர் அகிம்சையின் உச்சத்தில் நின்று, நீதிநெறியின் உருவமாகவே தோற்றமளித்து நீங்கள் எப்படியெல்லாம் சட்டபூர்வமாக அணுகியிருக்கவேண்டும், என்னென்ன செய்திருக்கக் கூடாது என்றெல்லாம் ஆலோசனை சொல்லியிருந்தார்.

அப்போதே அந்த அரசியல்வாதியின் பந்தாவான ஆடம்பரக் கார்ப் பயணங்கள்,  அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி உங்களுக்கு எழுதியிருந்தேன். இப்போது வெறும் நாற்பத்தைந்து ரூபாய் டோல் கேட்ட ஊழியர்களிடம் சண்டையிட்டு மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். வீடியோவில் அவர் வெறிகொண்டு கத்துவது பதிவாகியிருக்கிறது முன்னாள் எம்.எல்.ஏ என்னும் மரியாதையை காட்டவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.

டோல்கேட்டில் இருந்தவர்கள் அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து சொல்லப்பட்டதையே செய்யமுடியும். எல்லா கார்களும் சிசிடிவிவில் பதிவாகின்றன. ஆகவே எவரையும் காசு வாங்காமல் விட அவர்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் மிகமிக மரியாதையாக மேடம் மேடம் என்றே பேசுகிறார்கள். இவர் பேசும் நியாயத்தை அவர்களிடம் பேசியிருக்கக் கூடாது. சொல்லவேண்டிய இடத்தில் சொல்லியிருக்கவேண்டும்  இதைக்கூட புரிந்துகொள்ளாமல் அங்கே ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு பிரச்சினை பெரிதானதும் தன்னை துப்பாக்கியால் சுடவந்ததாக அனைத்தையும் திசைதிருப்புகிறார். அங்கிருந்த காவலர் ஒருவர் தோளில் துப்பாக்கி இருந்ததாம். அதை கொண்டு அவரைச் சுடுவதற்கு அந்தக் காவலர் நினைத்தது இவருக்கு தெரிந்ததாம். கடைசியில் டோல்கேட்டில் நடக்கும் ஊழல்களுக்கு எதிராக பேசியதாக அதை மாற்றிச் சொல்கிறார்.

இந்த மனநிலை கொண்டவர்கள்தான் இங்கே எழுத்தாளர்களுக்கு ஆலோசனை சொல்ல வருகிறார்கள். ஒருமுறை எம்.எல்.ஏ ஆக இருந்தததற்கே இவருக்கெல்லாம் இத்தனை தோரணை என்றல் நாடறிந்த எழுத்தாளருக்கு, தமிழர் எவரும் பெருமைகொள்ளும் படைப்புகளை படைத்த ஒருவருக்கு எத்தனை தன்மதிப்பு இருக்கவேண்டும். எந்த தகுதியில் இவர்கள் இலக்கியவாதிகளுக்கு அறிவுரை கூறுகிறார்கள்? இவரைப் போன்றவர்களே தமிழ்ப் பண்பாட்டின் வெட்கக்கேடுகள்.

டி.ஜெயசீலன்

 

 

அன்புள்ள ஜெயசீலன்

இந்தப் பெண்மணியை பற்றி அப்போதே பலவாறாக கடிதங்கள் வந்தன. எந்தவகையிலும் மதிப்புக்குரிய அரசியல்வாதி அல்ல என்று புரிந்துகொண்டேன். ஊடகங்களால் உருவாக்கப்படும் ஒரு போலிப் பிம்பம் இவர்.

இவர் முன்பு எழுதிய அந்தக் குறிப்பைப் பார்த்ததும் எந்த ஆச்சரியமும் எழவில்லை. இவர் வாசிப்பையும் எழுத்தையும் அறிந்த அந்த பழங்கால கம்யூனிஸ்டுக்களின் சாயல் கொண்டவர் அல்ல. இன்றைய அரசியல்வாதி. இலக்கியம் போகட்டும் எழுத்து என்றால் என்னவென்றே அறிந்திருக்க மாட்டார். கூட்டம் சேர்ப்பது, வெறுப்பை வளர்ப்பது ஆகியவை மட்டுமே இவர்களின் தகுதிகள். மிகையான ஆணவம் இவர்களின் ஆளுமை. ஒருமுறை மக்கள் ஓட்டு போட்டுவிட்டார்கள் என்பதற்கு அப்பால் இவர்களின் தனிப்பட்ட தகுதி என ஏதுமில்லை, ஆனால் அதை இவர்களிடம் சொல்லிப் புரியவைக்க முடியாது

என் விஷயம் வேறு, குடிப்பழக்கம் பெருகியிருக்கும் தமிழகத்தில் அது எவருக்கும் நிகழும் ஒன்று. நான் எவருடைய கனிவையும் தேடவுமில்லை. எவரையும் நாடவுமில்லை. எனக்கு என் வாசகர்கள், நண்பர்கள் போதும்

ஆனால் எழுத்தாளர்கள் என்பவர்கள் பொதுவாகவே சற்று நிலையின்மை கொண்டவர்கள். மிகையுணர்ச்சிக்கு ஆளாகிறவர்கள். ஒரு நாகரீக சமூகம், வாசிப்பையும் எழுத்தையும் சற்றேனும் மதிக்கும் ஒரு சமூகம், ஒருபோதும் ஓர் எழுத்தாளரையும் இன்னொரு சாமானியரையும் நிகராக கருதாது. எழுத்தாளருக்கு ஒரு தனிச்சலுகையை கண்டிப்பாக அளிக்கும். அவருடைய எழுத்துக்காக அவருக்கு ஒரு மதிப்பை கொடுக்கும். எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் பிறருடன், சாதாரண தெருச்சண்டியர்களுடன், நிகராக வைத்து ‘இருபக்க நியாயம்’ பேசும் ஒரு சூழல் எல்லாவகையிலும் கீழ்மை நிறைந்ததுதான்.

அதிலும் தருணம்கிடைத்ததும் எழுத்தாளர் மேல் வஞ்சம் காட்டும், அதை ஒருவகை மக்கள் நியாயம் போல பாவலாவாக வெளிப்படுத்தும் இந்த பெண்மணியைப் போன்றவர்கள் இன்றைய தமிழ்ச்சூழலின் அறிவெதிர்ப்பு நிலைக்குச் சரியான உதாரணங்கள். என் சொற்களினூடாக இந்தப் பெண்மணியை இவ்வண்ணம்தான் எதிர்காலச் சமூகம் அறிந்துகொள்ளும்

ஜெ

***

முந்தைய கட்டுரைஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…
அடுத்த கட்டுரைஅருளப்படுவன…