மானுட அன்பையே அறமாகப் போற்றும் கதைகள்.

ஒரே ஒரு வரியில் மொத்த கதையையும் நமக்குள் வேறொன்றாக மாற்றி புது தரிசனத்தைக் காட்டும் ஆசானின் எழுத்து காலமெல்லாம் கசிந்துருகச் செய்யும் பேரனுபவம் தான்.

 

கிடா, தீபம், நீரும் நெருப்பும், நிலம் ஆகிய சிறுகதைகளில் அப்படியாகத்தான் ஆசானின் மேதமை எழுதப்பட்டிருக்கிறது.

 

தீபம் கதையில் முடிவில் வரும் ஒரு வரி …

 

“இனிமே எங்கயானாலும் ஒரு சாதாரண வெளக்கே போதும். உன் முகத்தை நானே பார்த்துக்குவேன்” என்று தன் அத்தை மகளிடம் முருகேசன் சொல்வதது எளிய சொற்களின் வழி காதலின் பெரும் பிரவாகத்தையே நிகழ்த்திக் காட்டச் செய்துவிடுகிறார்.

 

கிடா கதையில் அந்தக் கிடாவெட்டுக்கு லாரியில் போகும் கூட்டத்தில் ஒராளாக நம்மை இருத்தச் , விவரணைகள். தம்பிக்கு அத்தை மகளை விட்டுக் கொடுத்து விட்டு படபடப்புடன் சிகரட்டை இழுக்கும் பழனியா தன்னைக் கேட்காமலேயே தன் திருமணத்தை முடிவு செய்த சிதம்பரமா யார் தான் அங்கே வெட்டப்பட்ட கிடாவுச் சமம் என்ற இருவேறு நோக்கில் யோசிக்கும் போது கதை ஒரு புதிய புதிய உச்சங்களைத் தொட்டு நம்மைக் கலங்கடிக்கிறது.

 

கைதிகள் கதை தான் தொகுப்பின் உச்சம். தவறிழைத்த குற்றவாளிகளா சட்டத்தை நிலை நாட்டும் பொறுப்பேற்றுக் கொண்டு அதன்படி இயங்க இயலா காவலர்களா யார் சூழ்நிலையின் கைதிகளென்ற தர்க்கம் நம் வாழ்வு முழுக்க நாம் கைதிகளாக அகப்பட்டுக் கொள்ளும் சூழல்களை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

 

பிழை கதை ஒரு சினிமாவின் வரலாற்றையே கண் முன் நிறுத்துகிறது. சொல்லப்படாத மீத வரலாற்றை நான் படித்தறிந்து கொண்டேன்.

 

சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியா எப்படியிருக்க வேண்டுமென்றும் நாட்டின் மறுமலர்ச்சி எந்த அடிப்படையின் மீது கட்டமைக்கப்பட வேண்டுமென்றும் காந்தி நினைப்பதை அவரின் உடல் நலச் சோர்வைப் போக்கிக் கொள்ள அவர் தேர்வு செய்த சிகிச்சை முறையைக் கொண்டே வகுத்துக் கொண்டார் எனக் காட்டுகிறது நீரும் நெருப்பும் கதை. தன் உடல் தான் இந்திய நிலமென்றும் அவர் நினைத்துக் கொண்டாரென்று படும்படியாகக் கூட பொருள் கொள்ளச் செய்கிறது.

 

குருதி – நிலமெங்கள் உரிமையென்ற அசுரர்களின் கதையை ஆதிக்கத்துக்கெதிராக ஓங்கிய அடிமைகளின் அரிவாளில் ரத்தம் வடிய வடியக் கொடுத்த கொடூர இழப்புகளைக் கொண்டு கதையாக்கிறார்.

 

வெண்கடல் – தாய்மார்களின் மார்பிலிறுகும் பால்கட்டுக்கான வைத்தியத்தைக் கதையாக்கிறார். படித்தறியுங்கள் வைத்தியத்தை.

 

நிலம் – பிள்ளைபேறற்ற வாழ்வில் சமூகத்தில் தன்னை ஒரு ஆளுமையாக நிலைநிறுத்திக் கொள்ள எதிர்த்து நிற்கத் திராணியற்ற அப்பாவிகளின் நிலங்களை அபகரித்துக் கொள்ளும் கதாநாயகன் பிள்ளைக்காக வேண்டி இன்னொரு மனைவி வேண்டாமென்றும் மனைவியிடமே காதலனாகத் தஞ்சம் புகும் அன்பையும் இருவேறு முகங்களாக விரியும் மனதைக் காட்டுகிறது.

 

விருது – விருதுகளின் மகிமைகளை மனிதர்களோ அல்லது மனிதர்களின் மகிமையை விருதுகளோ ஒருநாளும் நிறுத்துப் பார்த்துக் கூறிவிட முடியாத புதிரைப் பேசுகிறது.

 

அம்மையப்பம் – மிகப்பெரும் புகழையும் பேற்றையும் அடைந்திருக்க வேண்டிய திறமைகளைக் கொண்ட கலைஞர்கள் காலச் சூழலில் தம் வாழ்வை நகர்த்திக் கொள்ள தன்னைத்தானே மீளமுடியா மீச்சிறு தளைகளில் பலியிட்டுக் கொண்டதைக் கூறியுள்ளார். அம்மாவின் விரல்க்குழியிட்ட இட்லி இன்னொருவருக்கு விட்டுதர முடியாத அன்பின் அடையாளமாவதையும் நெகிழ்வாகக் கூறியிருக்கிறார்.

 

அனைத்து கதைகளும் தேவையான அளவு அத்தனை அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. பக்க அளவுகளையோ நீளத்தையோ எல்லாம் கணக்கிடாமல் சொல்ல வந்ததை வாசகன் வாசித்துத் தனக்குள்ளாகவே கண்டுணரும் வண்ணம் அந்ததந்தக் களத்துக்கான மொழியொடும் தகவல்களோடும் தன் அனுபவப் பேறறிவு கொண்டும் மேதமை எழுத்தாற்றல் கொண்டும் என்றென்றைக்கும் போற்றுதலுக்குரிய கதைகளாக்கியிருக்கிறார்.

 

“ஒரு கதையின் மிக சுவாரஸ்யமான பகுதி ஒரு நல்ல சிறுகதை” என்ற என்னறிவுக்கு எட்டிய சிறுகதை இலக்கணத்துக்கு ஒரு மாற்றுக் குறையாமலிக்கிறது இத்தொகுப்பின் சிறுகதைகள்.

 

கார்த்திக்

 

https://karthikgpakkangal.blogspot.com/

முந்தைய கட்டுரைஇமையத்தின் ‘பெத்தவன்’ – உஷாதீபன்
அடுத்த கட்டுரைபூனைசாட்சி