குடைக்கீழே…

பழைய மலையாளப் பாடல்களுடன் ஏதோ ஒரு நினைவு இணைந்திருக்கிறது. இந்தப்பாடலை இதற்கு முன் கேட்டது முன்பு ஒரு முறை லட்சத்தீவுக்கு படகில் செல்லும்போது. ஆனால் அப்போது இது என் இளமைக்காலத்தைய நினைவாகப் பதிந்துவிட்டிருந்த ராமகிருஷ்ணன் ஆசாரியுடன் இணைந்திருந்தது. அவருக்கு பிடித்தமான பாடல். சுருள்முடி நெற்றியில் தொங்கி அசைய, மரத்தை இழைத்தபடி இதைப் பாடுவார்.  “கேட்டோ கொச்சே, இந்தப் பாட்டை நம்ம பெண்ணு சேர்ந்து பாடுவா”

அழகன், பாடகன், மிகமிக மென்மையானவன். கனவுகளிலேயே வாழ்ந்தவன். இந்த உலகம் மென்மரங்களுக்குரியதல்ல. ஆசாரி சொல்வதுண்டு அதை.  “தேக்குக் கட்டையானா இங்க நாற்காலியா இருக்கலாம் பிள்ளே. முருக்கும் முருங்கையும் விறகுக்கும் ஆகாது” தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அவருடைய பெண் அவரை ஓரிரு நாளில் மறந்து நானறிந்த இன்னொரு ஆசாரியின் மனைவியாகி ஏழெட்டு பிள்ளைகளைப் பெற்றாள்

இந்த வயதில் இங்கே அமர்ந்து இப்பாடல்களினூடாக இன்றிலாது ஆன முகங்களையும் சூழல்களையும் உணர்ச்சிகளையும் மீட்டெடுக்கிறேன். ஏன் இங்கே மானுடர் வந்து இவையெல்லாவற்றையும் நடித்து மறைகிறார்கள் என்ற பெரும்பிரமிப்பை அடைகிறேன். அர்த்தமற்ற ஒர் அலைவு. அல்லது அர்த்தமென ஒன்று உண்டு என்றால் நாம் அறியவே முடியாதது. எத்தனையோ நாவுகளால் மூச்சுகளால் பாடப்பட்ட பாடல். ஆசாரியும் ஒரு துளி அதற்கு அளித்திருக்கிறார்

ஆசாரி மறைந்து நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று எவரேனும் அவரை நினைவுகூர்கிறார்களா? நான் நினைவுகூர்வேன் என எவரேனும் எண்ணியிருக்கக் கூடுமா? இந்த இரவில் குளிர் என உடலில் பரவுகிறது ஓர் எண்ணம்.அன்று இழைப்புளியை செலுத்தியபடி குழல்கற்றைகள் நெற்றியில் விழ தலையை அசைத்துச் சுண்டி பின்தள்ளியபடி ஆசாரி பாடியது இதை இவ்வண்ணம் இவ்விரவில் நான் எண்ணிக்கொள்வேன் என்பதற்காக மட்டும்தானா?

குறுமொழி முல்லப்பூ தாலவுமாயி
குளிச்சு தொழுது வருந்நவளே
புதுமழ கொள்ளேண்ட
பொன்வெயில் கொள்ளேண்ட
பச்சில குடக்கீழில் நிந்நாட்டே
என்றே பச்சிலக் குடக்கீழில் நிந்நாட்டே

ஆரெங்கிலும் வந்நு கண்டாலோ?
அர்த்தம் வச்சு சிரிச்சாலோ?
ஞானில்ல ஞானில்ல ஞானில்லா

புதுமழ கொள்ளேண்ட
பொன்வெயில் கொள்ளேண்ட
பச்சில குடக்கீழில் நிந்நாட்டே
ஞானில்ல ஞானில்ல ஞானில்லா

நின்றே கினாவின்றே இளநீர் ஏதொரு
நீலக்கார்வண்ணனு நேதிச்சு ?
நின் ப்ரேம பூஜா புஷ்பங்கள் ஆருடே
அம்பல நடையில் பூஜிச்சு?

மற்றொரு தேவன் எனிக்கில்ல
மற்றொரு ஸ்ரீகோவில் இல்ல

புதுமழ கொள்ளேண்ட
பொன்வெயில் கொள்ளேண்ட
பச்சில குடக்கீழில் நிந்நாட்டே
ஞானில்ல ஞானில்ல ஞானில்லா

தொடுந்நதெல்லாம் பொன்னாகும் நின்
தாமர வளைய கைவிரலால்
என் மனோராஜ்யத்தே தேவாலயத்திலே
மண்விளக்கு எந்நு கொளுத்தும் நீ?

விருச்சிக விரதமொந்நு கழிஞ்ஞோட்டே
விவாக மோதிரம் அணிஞ்ஞோட்டே

1966 ல் வெளிவந்த கூட்டுகார் என்ற படத்திற்காக வயலார் ராமவர்மா எழுதி பாபுராஜ் இசையமைத்த பாடல். ஏசுதாஸ்- எஸ்.ஜானகி பாடியது. கூட்டுகார் இந்து -முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றிய முக்கியமான படம் என கருதப்படுகிறது [ https://www.thehindu.com/features/cinema/koottukar-1966/article2233264.ece]

ஏசுதாஸ்
ஜானகி

வயலார் ராமவர்மா
பாபுராஜ்

[தமிழில்]

குறுமொழி முல்லைப்பூ தாலத்துடன்
குளித்து ஆலயம் தொழுது வருபவளே
புதுமழை நனையவேண்டாமே
பொன்வெயில் படவேண்டாமே
பச்சையிலை குடைக்கீழே வந்துநின்றாலென்ன?
என் பச்சையிலைக் குடையின்கீழ் வந்துநின்றாலென்ன?

யாராவது வந்து பார்த்துவிட்டால்
அர்த்தம் வைத்து சிரித்துவிட்டால்?
நானில்லை நானில்லை நான் வரவில்லை

உன் கனவின் இளநீர் எந்த
நீலக்கார்வண்ணனுக்கு படைத்தாய்?
உன் காதல் மலர்களை எவருடைய
ஆலய வாயிலில் பூசை வைத்தாய்?

மற்றொரு தேவன் எனக்கில்லை
மற்றொரு திருக்கோயிலும் இல்லை

தொடுவதெல்லாம் பொன்னாகும் உன்
தாமரை வளைய கைவிரலால்
என் கனவுலகின் ஆலயத்தின்
மண்விளக்கு என்று நீ ஏற்றுவாய்?

கார்த்திகை விரதம் முடியட்டுமே
கல்யாண மோதிரம் அணிந்துகொள்கிறேனே

*

முந்தைய கட்டுரைகோழிப்பிராண்டல்!
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 62