பகுதி ஐந்து : விரிசிறகு – 14
யுதிஷ்டிரன் களைப்புடன் இருந்தார். சுரேசரை வரவேற்கக்கூட அவருடைய குரல் எழவில்லை. சுரேசர் அமர்ந்ததும் அவர் சம்வகையிடம் அமரச்சொல்லும்பொருட்டு திரும்பினார். இயல்பாகவே அவர் விழிகள் விலகிக்கொண்டன, அவர் அமரும்படி சொல்லவில்லை. சம்வகை சுவர் அருகே நின்றாள். சுரேசர் அவளை திரும்பி நோக்கிவிட்டு யுதிஷ்டிரனிடம் “பேரரசி விடுத்த ஆணை குறித்து செய்தி அனுப்பியிருந்தேன்” என்றார். “ஆம், அது அரசியின் ஆணை. நம் அனைவரையும் ஆள்வது அவள் சொல்” என்றார் யுதிஷ்டிரன். சுரேசர் “அதை சிந்துநாட்டுக்கு முறைப்படி தெரிவித்துவிட்டேன்” என்று சொன்னார்.
யுதிஷ்டிரன் “இதில் இனி நாம் செய்வதற்கு என்ன? நம் படைகளை அனுப்பவேண்டுமா?” என்று கேட்டார். “அரசே, நமது நான்கு படைகள் பாரதவர்ஷத்தை ஊடுருவியிருக்கின்றன. இதுவரை நூற்றிப்பதினேழு நாடுகளை அவை கடந்துள்ளன. ஓர் இடத்தில்கூட போர் என ஏதும் நிகழவில்லை” என்று சுரேசர் சொன்னார். “நம் நகரின் பெயரே ஒரு பெரும் படைக்கலம். நம்மை அஞ்சாதவர்கள் எவரும் இங்கில்லை. இனி நெடுங்காலம் அது அவ்வண்ணமே இருக்கும்.”
யுதிஷ்டிரன் புன்னகைத்தார். அவருடைய சோர்வு அகன்றதை சம்வகை கண்டாள். அவர் “ஆம், அதைத்தான் நான் விந்தையென எண்ணிக்கொண்டிருந்தேன். இளையோர் வென்றவை தொலைநாடுகள். சகதேவன் தெற்கே மலைகளையும் நதிகளையும் காடுகளையும் கடந்து சென்றிருக்கிறான். அங்கெல்லாம்கூட நம் மீதான அச்சம் சென்றடைந்திருக்கிறது” என்றார். “நாம் குருக்ஷேத்ரத்தில் வென்றது பாரதவர்ஷத்தைத்தான்” என்று சுரேசர் சொன்னார். “மெய், அதை இங்கிருக்கையில் ஒவ்வொரு செய்தியிலும் உணர்கிறேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.
சம்வகை சலிப்புடன் அவரை பார்த்துக்கொண்டிருந்தாள். அவருடைய சோர்வு எதனால் என அவளுக்கு அப்போது சற்றே புரிந்தது. அதை அவள் உணர்ந்ததை புரிந்துகொண்டவர்போல அவர் திரும்பி அவளிடம் “இன்று பேரரசிக்கு இந்நகர் பெரும் வரவேற்பை அளித்தது என்று அறிந்தேன்” என்றார். “ஆம் அரசே, மக்கள் கொந்தளித்தனர்” என்று அவள் சொன்னாள். “நன்று, எனக்கு வரவேற்பளித்ததுபோல நீ கடுஞ்செயல் எதையும் செய்ய நேரவில்லை” என்றார் யுதிஷ்டிரன். உடனே வாய்விட்டு சிரித்தபடி “அல்லது இதுவும் உன் கடுஞ்செயலேதானா?” என்றார்.
அவர் வாய்விட்டு நகைக்கும்போதும் விழிகள் நகைப்பில்லாமல் இருப்பதைக் கண்டு சம்வகை விழிவிலக்கிக்கொண்டாள். அவருடைய விழிகள் ஒருபோதும் நகைப்பதில்லை என்று அவள் அப்போது புரிந்துகொண்டாள். சுரேசர் ”இது மக்கள் திரண்டு எழுந்து அளித்த வரவேற்பு. நகரே மக்களால் நிறைந்துள்ளது. அவர்கள் எதையேனும் கொண்டாட விழைகிறார்கள்” என்றார். “ஆம், அவர்களுக்கு கொண்டாடுவதற்கு தெய்வங்கள் தேவை” என்றார் யுதிஷ்டிரன். “பேரரசி ஒருங்கிக்கொண்டிருக்கிறார், அவர் அவையமையும் பொழுது எழுகிறது” என்று சுரேசர் சொன்னார்.
“இது குடியவையா என்ன?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “இல்லை அரசே, இது அரசவை மட்டுமே. எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் மட்டுமே இடம்பெறுகின்றன. பேரரசிக்கு அவைவணக்கம் செலுத்தும்பொருட்டு” என்றார் சுரேசர். “அவள் வென்று நகர்புகும் தருணம் இது. நன்று” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இத்தருணத்தைப் பாட நமக்கு கவிஞர்கள் தேவை. அரசி பழிமுடித்து கூந்தல்முடிந்து அவைபுகுந்ததை அவர்கள் பாடட்டும். அவள் அஸ்தினபுரியின் அரியணையில் அமர்ந்த தருணம் சொல்லில் நிலைகொள்ளட்டும்.”
சுரேசர் “ஆம், இது காவியத் தருணமே. ஆனால் நம்மிடம் உரிய முறையில் சொல்லெடுக்கக் கற்ற பாவலர் இன்றில்லை. நம் மொழி இங்கே மாறிக்கொண்டிருக்கிறது. சூதர்கள்கூட அயல்நிலத்தவர்” என்றார். “கேகயத்திற்கும் கோசலத்திற்கும் ஏவலரை அனுப்பியிருக்கலாமே?” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அதற்குப் பொழுதில்லை. ஆனால் இங்கே உருவாகி வந்துள்ள புதிய மொழியிலேயே பாட்டிசைக்கும் பாவலர்கள் சிலரை வரச்சொல்லியிருக்கிறேன். அவர்கள் பாடட்டும்” என்று சுரேசர் சொன்னார்.
“முச்சந்திப் பாடகர்களா?” என்று யுதிஷ்டிரன் முகம் சுளித்தார். “அமைச்சரே, இது பெருங்காவியங்களுக்குரிய தருணம். சொல்லிலக்கணமும் பொருளிலக்கணமும் அணியிலக்கணமும் அறிந்த நாவலர் பாடவேண்டிய பொருள் இது.” சுரேசர் “ஆம், ஆனால் இந்த வெற்றி வெறுமொரு போர்வெற்றி அல்ல. இது புதிய வேதம் எழுந்த வெற்றியும்கூட. புதியவை புதிய மொழியிலேயே பாடப்பட முடியும். அரசே, நீங்கள் கூறும் அந்தப் பழைய மொழி இலக்கணத்திற்கு பழகிவிட்டிருக்கிறது. இலக்கணம் மொழியின்மேல் யானையின் சங்கிலிபோல கிடக்கவேண்டும் என்கின்றது தொன்மையான அணிநூலான குசுமாலங்காரம். யானையை அது ஆளவேண்டும், ஆனால் அதை யானை ஆழத்தில் உணர்ந்திருக்கவும்கூடாது. அகத்தே சங்கிலியை உணர்ந்துவிட்ட யானை வெறும் ஓர் ஊர்தி மட்டுமே” என்றார்.
யுதிஷ்டிரன் “ஆனால் இந்த மொழி… இதை அங்காடிமொழி என்கின்றனர்” என்றார். “முன்பும் இச்சொல் எழுந்ததுண்டு. வேதங்களை ஆராய்ந்த முனிவர்களின் மொழியை கான்மொழி என்றனர் வைதிகர். ஆரண்யகங்கள் என அவற்றை விலக்கினர். ஆனால் ஆரண்யகங்களினூடாகவே வேதம் மலர்சூடி ஒளிகொண்டது என்பது வரலாறு. ஏற்கெனவே எழுதப்பட்ட மொழியில் பெருங்காவியங்கள் எழுவதில்லை. அவை புதுக்கருக்கு அழியாத மொழியிலேயே நிகழ முடியும். எங்கே கான்மொழியை நகர்மொழி அறிகிறதோ அங்கே. எந்த மொழியில் சேறும் பொன்னும் ஒன்றே என ஆகிறதோ அதிலேயே காவியம் பிறக்கும்” என்று சுரேசர் சொன்னார்.
“புது மொழியில் இந்நிகழ்வு பாடப்படட்டும். கட்டில்லாததாக, இலக்கணமற்றதாக அப்பாடல்கள் திகழட்டும். அவற்றை ஆளும் சொல்லுடன் பெருங்காவிய ஆசிரியன் ஒருவன் எழுவான். அவன் நாவில் இருந்து அழிவிலா நூல் பிறந்தெழும்.” யுதிஷ்டிரன் அவருடைய சொற்களை மறுக்க முடியாதவராக ஆனால் ஒப்புதலும் அற்றவராக திரும்பிக்கொண்டார். அவரிடம் அந்த ஒவ்வாமை மீண்டும் எழுந்தது. “நம் இளையோர் வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா?” என்றார். அவர் அப்பேச்சை மாற்ற முயல்கிறார் என்று உணர்ந்து சுரேசர் “ஆம் அரசே, நாளை மறுநாள் நகுலன் நகர்புகுவார்” என்றார்.
“நாளை நாளை என்கிறீர்கள். அவன் அணுகுவது பிந்திக்கொண்டே இருக்கிறது” என்று யுதிஷ்டிரன் சலிப்புடன் சொன்னார். “சகதேவனும் வந்துகொண்டிருக்கிறான் என்றீர்கள்.” சுரேசர் “அதற்கு அடுத்த நாள் அவர் வந்தணைவார். மேலும் இரு நாட்களில் பீமசேனனும் பார்த்தனும் நகர்புகுவார்கள். அவர்கள் வந்தமைந்ததும் நாம் ராஜசூயம் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம்” என்றார். யுதிஷ்டிரன் “ஏன் அதை இப்போதே அறிவித்தாலென்ன?” என்றார். “அஸ்வமேத நிறைவுக்குப் பின் அதை அறிவிப்பதே மரபு” என்றார் சுரேசர். யுதிஷ்டிரன் “மரபுகளை அவ்வப்போது தொட்டுக்கொள்கிறோம். நன்று” என்றார்.
ஏவலன் வந்து வணங்கினான். ”நாம் அவைக்கு கிளம்பவேண்டிய பொழுது” என்றார் சுரேசர். “ஆம், ஆனால் அவைகள் எனக்கு சலிப்பூட்டுகின்றன” என்று சொன்னபடி யுதிஷ்டிரன் எழுந்தார். ஏவலர்கள் அருகணைந்து அவருடைய ஆடைகளை சீரமைத்து அணிகளையும் ஒத்திசைவாக்கினர். “அவை என நான் எண்ணுவது சான்றோர் அமைந்தது. புலவரும் கலைஞரும் செறிந்தது. இந்த அவை ஒரு அங்காடிபோல் இருக்கிறது.” கசப்புடன் சிரித்து “அங்காடிமொழியில் காவியம் எழவும் வழியமைத்துவிட்டீர்கள். நன்று” என்றார். சுரேசர் “அங்காடியில் திருமகள் வாழ்கிறாள் என்பது மரபு. அரசவை, கருவூலம், அடுமனை, ஈற்றறை, அங்காடி, வயல், ஆநிலை, நீர்நிலை என்னும் எட்டு இடங்களில் திருமகள் நிலைகொள்கிறாள்” என்றார். “நான் பேச விழையவில்லை” என்றார் யுதிஷ்டிரன்.
இடைநாழி வழியாக நடக்கையில் “நகுலன் நகர்புகும்போது மேலும் திரள் இருக்கவேண்டும்” என்றார். “அதை நிகழ்த்துவதற்கு உரியவற்றை செய்க! இம்மக்கள் பொன்னை விழைகிறார்கள் என்றால் அதை அளிக்கவும் தயங்க வேண்டியதில்லை.” சுரேசர் ஒன்றும் சொல்லவில்லை. “அர்ஜுனன் நகர்நுழைகையில் அதுவரை காணாத கொண்டாட்டம் இங்கே நிகழவேண்டும்.” சுரேசர் “நாம் மக்களை ஆளலாம், அவர்களை நடத்தமுடியாது” என்றார். “மக்கள் என இங்கே திரண்டிருப்போர் யார்? எவருக்காக நாம் போரிட்டு வென்றோம்? எவர் பொருட்டு எல்லாவற்றையும் செய்தோமோ எவரும் இங்கில்லை. இருப்பவர்கள் எளிய மக்கள். விழைவுகொண்டு வந்தமைந்தோர்” என்றார் யுதிஷ்டிரன்.
“அரசே, அவர்கள் நம்மை முழுதேற்று வந்தவர்கள். புத்துலகொன்றை சமைப்பவர்கள்” என்று சுரேசர் சொன்னார். “மெய்யாகவே என்னால் ஏற்க முடியவில்லை. இந்த நகரைப்போல் எனக்கு அயலான பிறிதொன்று இல்லை. இதற்கும் எனக்கும் எந்த உறவுமில்லை. இதன் எந்த உணர்வும் எனக்கு புரியவில்லை. முற்றிலும் அயலான ஒரு நிலத்திற்கு வந்துவிட்டவன்போல் உணர்கிறேன்.” அவர் முதுமைகொண்டு புலம்புபவர் போலிருந்தார். சம்வகை அவருடன் நடந்தபடி அவருடைய மெலிந்த தோள்களையும் தள்ளாடும் சிற்றடிகள் கொண்ட நடையையும் நோக்கிக்கொண்டிருந்தாள்.
அவர் “இந்நகரில் இனி என்ன நிகழ்ந்தால் எனக்கென்ன? இந்நகரில் இனி என் ஆணையும் செல்லாதென்று நினைக்கிறேன். அவள் தனக்குரிய நகரில் தனியரசு காண்பாள் என்றார்கள். இன்று இதோ இந்நகரமும் அவளுக்கென பொங்கி எழுகிறது. அங்கே இந்திரப்பிரஸ்தம் அவளையே அன்னையென எண்ணுகிறது என்றார்கள். என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை. நான் கிளம்பி துறவுபூணவேண்டும் என்று நினைக்கிறேன். என் இளையோர் வரட்டும். அவர்களில் ஒருவர் அரசனாகட்டும். எனக்கு இந்த அரியணை ஒரு பொருட்டே அல்ல. நான் விழைவது விடுதலை… உண்மையில் எப்போதும் அதை மட்டுமே நான் விழைந்து வந்திருக்கிறேன். பிற அனைத்துமே எனக்கு பொருளில்லாமல்தான் தோன்றியிருக்கிறது” என்றார்.
அவைக்கு அருகிலிருந்த சிறு கூடத்திற்குள் அவர்கள் நுழைந்தார்கள். அங்கே அவர் அமர்வதற்கான பீடம் வெண்ணிறப் பட்டு விரிக்கப்பட்டு ஒருக்கப்பட்டிருந்தது. அவர் அமர்ந்துகொண்டு ஏவலனை நோக்கி “இன்நீர்… சற்று சூடாக” என்றார். அவன் கொண்டுவந்த இன்நீரை அருந்தியபடி பெருமூச்சுவிட்டார். சுரேசர் “அங்கநாட்டிலிருந்து இளவரசர் வந்துகொண்டிருக்கிறார். இங்கே ஒரு சொல் உலவிக்கொண்டிருக்கிறது, ஒருவேளை அவரை நாம் அரியணைக்குரியவராக தெரிவுசெய்யலாம் என்று” என்றார். யுதிஷ்டிரன் “அதெப்படி? அவர்கள் அங்கநாட்டுக்கு அல்லவா இளவரசர்கள்?” என்றார்.
“ஆம், ஆனால் இங்கே மூத்தவரின் மைந்தர் அவர்” என்றார் சுரேசர். “அவ்வண்ணம் சொல்லலாம். ஆனால் அவன் ஷத்ரியன் அல்ல. அவன் அன்னை சூதப்பெண். அந்த அடையாளத்தை நம்மால் மாற்றமுடியாது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “புதிய வேதத்தின் பிறப்பு என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் மெய்யாக ஒன்றுண்டு, அது ஷத்ரியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது. ஷத்ரியர்கள்கூட இன்று ஏற்றுக்கொள்வார்கள், அசுரரும் அரக்கரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சூதமைந்தனை அஸ்தினபுரியின் அரியணைக்குரியவனாக ஆக்கினால் இப்பேரரசு அவன் கண்ணெதிரே சிதறும். இதை ஈட்டியது அவ்வண்ணம் அழிப்பதற்காகவா என்ன?”
“நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று மட்டும் சொன்னார் சுரேசர். “நாம் முன்னரே முடிவுசெய்துவிட்டோம், அஸ்தினபுரியின் முடிக்குரியவன் பரீக்ஷித். அவன் துவாரகையில் வளர்கிறான். அவன் உடல் தேறிவருகிறது என செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அவன் ஆற்றல்மிக்கவனாக வந்து இந்நகரில் கோலேந்தி அமர்வான்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அவன் நிஷாதகுடியின் அன்னைக்கு ஷத்ரிய குடியில் பிறந்தவன். யாதவ குடியின் அன்னையின் பெயர்மைந்தன். ஆகவே அத்தனை குடிகளாலும் ஏற்கப்பட்டவன். ஆகவே அவனே இந்தப் பெருநகரை ஆளமுடியும். வேறு எண்ணமே தேவையில்லை.”
“பேரரசி திரௌபதி வருகை” என ஏவலன் உள்ளே வந்து வணங்கி அறிவித்தான். யுதிஷ்டிரன் “வருக!” என்றபின் மேலாடையை சீரமைத்தார். சம்வகை வெளியே கிளம்ப “நிற்கலாம். இங்கே அரசமுறைச் சந்திப்புக்கு அப்பால் யாதொன்றுமில்லை” என்றார் யுதிஷ்டிரன். அவள் சுவர் சாய்ந்து நின்றாள். யுதிஷ்டிரன் திரும்பி சுரேசரிடம் “அவள் எந்த அணிகளையும் கொள்ளவில்லை என்றார்கள். இன்று அவையமர்கையிலும் அவ்வண்ணம்தான் அமரவிருக்கிறாளா?” என்றார். “அவர் என்ன செய்கிறார் என அறியேன். அங்கே ஒற்றரை வைப்பது உகந்தது அல்ல என்று எனக்குத் தோன்றியது” என்றார் சுரேசர்.
திரௌபதியின் முதன்மைச் சேடி உள்ளே நுழைந்து “அஸ்தினபுரியின் அரசி!” என கட்டியம் சொன்னாள். அவள் தன் கையில் இருந்த மங்கலத்தாலத்துடன் முன்னால் வந்து அதை பீடத்தில் வைத்தாள். தொடர்ந்து திரௌபதி உள்ளே வந்தாள். சுரேசரும் சம்வகையும் தலைவணங்கினர். திரௌபதி எந்த அணியாடையும் நகைகளும் அணிந்திருக்கவில்லை. சிறிய செந்நிற மலர்களால் ஆன கரை கொண்ட வெண்ணிற ஆடையை மட்டும் அணிந்திருந்தாள். அதன் நுனியை தலைமேல் வளைத்து கொண்டையை மூடியிருந்தாள். கைகளும் தோள்களும் செவிகளுமெல்லாம் ஒழிந்திருந்தன.
யுதிஷ்டிரன் ”வருக, அரசி!” என முறைமைச்சொல் கூறினார். “அமர்க… இது தங்களின் நகரம், தங்களின் அவை. தாங்கள் வஞ்சினநிறைவு கொண்டு அரியணை அமரவிருக்கும் நாள் இது.” அந்த வேளையில் அந்த முறைமைச்சொல் அவப்பேச்சு என சம்வகைக்கு கேட்டது. திரௌபதி பீடத்தில் அமர்ந்து மேலாடையை மடிமேல் இழுத்து வைத்துக்கொண்டாள். மறுமொழியாக அவள் ஏதும் சொல்லவில்லை. யுதிஷ்டிரன் அதை எதிர்பார்த்து சற்று இடைவெளிவிட்டார். அறியாமல் விழிதூக்கி சம்வகையைப் பார்த்துவிட்டு “நீண்ட பயணம்… இன்றே அவைச்சந்திப்பை வைத்துக்கொள்ளவேண்டாம் என்று எண்ணினேன். ஆனால் நாளை ஒருவேளை நகுலன் நகர்புகக்கூடும். அது மிகப் பெரிய நிகழ்வு. அதில் இந்த அவைநிகழ்வு மறைந்துவிடக்கூடாது…” என்றார்.
திரௌபதி புன்னகைத்தாள். “இந்நகரையும் அரண்மனையையும் பழைய காலத்திலிருந்து மீட்டு எடுத்தேன். அரண்மனையிலுள்ள ஓவியங்களை அரசி பார்த்திருக்கலாம். அனைத்தும் புதியவை. தொல்கதைகளைக் கூட புதியவை என வரைந்திருக்கிறோம்” என்றார். “நகரமே விழிகொண்டுவிட்டிருக்கிறது… நான் நகரில் நுழைகையில் ஒவ்வொரு மாளிகையும் என்னை நோக்கி புன்னகை செய்தது.” அவர் அப்பேச்சினூடாக அதுவரை இருந்த இறுக்கத்தை இழந்து இயல்படைந்தார். அவரில் ஒரு சிறுவன் தோன்றினான்.
“உண்மையில் நான் பழைய நகரை மறக்க விழைந்தேன். அங்கே எனக்கு கசப்பான நினைவுகளே இருந்தன என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் இன்று இதை மாற்றியமைத்த பின் உணர்கிறேன், நான் அந்தப் பழைய நகரை முற்றாக இழந்துவிட்டேன். இனி அதை திரும்ப கொண்டுவர முடியாது. இவையனைத்தையும் அகற்றினாலும்கூட காலத்தில் முன்னால் நகரவே முடியும். இன்று திரும்பி நோக்கும்போது என் நினைவுகள் இனிக்கின்றன. இங்கே இளமைந்தனாக உலவியிருக்கிறேன். இளைஞனாக வாழ்ந்திருக்கிறேன். இளமைக்காலம் இனியது, அதில் நிகழ்ந்த துயர்களில்கூட இனிமை கலந்திருக்கிறது…”
“அன்னை நகர்நுழையக்கூடுமா?” என்று திரௌபதி கேட்டாள். அதை யுதிஷ்டிரன் எதிர்பார்க்கவில்லை. “அன்னையா?” என்றார். “ஆம், அன்னை” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “இல்லை, அன்னை நாங்கள் அனுப்பிய எந்தச் சொல்லுக்கும் மறுமொழி அளிக்கவில்லை. அவர் விதுரரின் குடிலில் அவருக்குப் பணிவிடைகள் செய்தபடி தங்கியிருக்கிறார். அவர் சொல்லடங்கும் தவத்திலிருக்கிறார்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இன்று அவர்களின் உலகில் நாங்கள் இல்லை. அன்னை இனி இந்நகரில் நுழைய வாய்ப்பே இல்லை.”
அவரே பெருமூச்சுடன் தொடர்ந்தார். “மூதரசி காந்தாரியும் நகரை மறந்துவிட்டிருக்கிறார். அவர்கள் இருவரும் காட்டில் தங்கள் நினைவுகளுடன் தனித்திருக்கிறார்கள். அவர்களுடன் ஓர் இரும்புச்சிலை உள்ளது. முன்பு துரியோதனன் செய்த பாவை அது. அதை அவர்கள் கொண்டுசென்றிருக்கிறார்கள். அவர் காட்டில் நடக்கையில் அதுவும் உடன் செல்கிறது என்று ஒற்றர்கள் சொன்னார்கள். அவர் அதனுடன் பேசிக்கொண்டே காட்டில் உலவுகிறார். அவர்களுக்குக் காவலாகவும் அவர்களால் பேணப்படும் மைந்தனாகவும் அது உடனிருக்கிறது. அவர்கள் அதை தங்கள் இருவருக்கும் நடுவே படுக்கவைத்துக்கொள்கிறார்கள். அதை அருகிருத்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”
திரௌபதி “அவர்களுக்கு விடுதலை இல்லை” என்றாள். யுதிஷ்டிரன் உரக்க “எவருக்கும் விடுதலை இல்லை” என்றார். “இந்த நற்பொழுதில் ஏன் இதை நான் நினைவுகூர்கிறேன்? ஏன் துயரடைகிறேன்? எனக்கு இதிலிருந்து விடுதலையே இல்லை. அந்தப் பாவையை எண்ணிய மறுகணமே என் மைந்தர் நினைவிலெழுந்தனர். அவர்களையும் அவ்வண்ணம் பாவையெனச் செய்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். இனி அவர்களை அவ்வாறு செய்யமுடியாது. அவர்கள் மறைந்துவிட்டனர். இத்தனை விரைவில் அவர்கள் நம் கண்ணில் இருந்தும் கைகளிலிருந்தும் கரைந்தழிவார்கள் என எண்ணியிருக்கவே இல்லை. ஆனால் சாவென்பது அதுதான். எச்சமிலாதாகுதல். எச்சமென எஞ்சுவதெல்லாம் எச்சமல்ல, அவை வெறும் நடிப்புகள். வெறும் ஏமாற்றுக்கள்…”
அவர் சினம்கொண்டு எழுந்தார். “ஏன் இப்போது அதை கேட்டாய்? சொல், ஏன் அந்தப் பேச்சை எடுத்தாய்?” அவர் குரல் உடைந்தது. “நீ அறிவாய், என் நெஞ்சு எவ்வண்ணம் என நீ அறிந்ததுபோல் அறிந்தோர் எவருமில்லை. என் நெஞ்சை தொட்டு உலுக்க உனக்கு ஒரு விழியசைவே போதும். நீ அன்னையைப் பற்றிக் கேட்டது அதனால்தான். அங்கே தொடங்குமென நீ அறிவாய். இத்தருணத்தில் நான் கொண்ட இந்த மகிழ்ச்சியை அழித்தாகவேண்டுமென முடிவெடுத்தே அதை கேட்டாய்.”
அவர் விம்மலோசையுடன் மீண்டும் அமர்ந்தார். தலையை தன் கைகளால் பற்றிக்கொண்டார். “நான் இங்கே இதை நடித்துக்கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியை, வெற்றியை, நிறைவை நடித்து நடித்து எனக்குள் அதை செலுத்திக்கொண்டிருக்கிறேன். நீ ஒரு கணத்தில் அதை அழித்தாய். பெண்களில் உன்னைப்போல் இரக்கமற்றவளை இப்புவி இதற்கு முன் கண்டிருக்காது” என்றார். திரௌபதி ஒரு சொல்லும் கூறாமல் அவரை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். அவர் மெல்ல மூச்சடங்கி உடலை ஒடுக்கி தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
திரௌபதி திரும்பி சம்வகையிடம் மெல்லிய குரலில் “அவை கூடிவிட்டதா?” என்றாள். “ஆம் அரசி, அவைநிறைவை அறிவிக்கும் கொம்பொலி எழுந்தது” என்று சம்வகை சொன்னாள். “நாம் கிளம்பவேண்டியதுதான்” என்றாள் திரௌபதி. யுதிஷ்டிரன் சீற்றத்துடன் “இல்லை, நான் அவைக்கு வரப்போவதில்லை. அங்கே சென்று அமர்ந்து நடிக்க என்னால் இயலாது. நீயே முடிசூடுக! இது உன் வஞ்சம், உன் குருதிப்பசியின் நிறைவு. நீயே கொண்டாடுக!” என்றார். “ஆம், எல்லாக் குருதியும் எனக்காகவே” என்றபடி திரௌபதி எழுந்தாள். அவள் முகத்திலிருந்த கனிவு சம்வகையை குழப்பியது. அது கனிவா என்ன? எனில் அதன் பொருள் என்ன?
முதுசேடி உள்ளே வந்து தாலத்தை எடுத்துக்கொண்டாள். சுரேசர் “அரசே, எழுக!” என்றார். “இதற்கெல்லாம் என்னதான் பொருள், சுரேசரே?” என்று யுதிஷ்டிரன் சிலம்பும் குரலில் கேட்டார். “எவரால் அதற்கு மறுமொழி சொல்லமுடியும்?” என்றார் சுரேசர். திரௌபதி “பீஷ்ம பிதாமகர் எவ்வண்ணம் இருக்கிறார்?” என்று சுரேசரிடம் கேட்டாள். “அவரை கங்கர்குடி பிணிநோக்கி சூழ்ந்திருக்கிறது, அரசி. அவர் உடலில் நோய் முதிரவுமில்லை, தளரவுமில்லை” என்று சுரேசர் சொன்னார். “அவர் பேசுகிறாரா?” என்று திரௌபதி கேட்டாள். “ஆம், சிலமுறை விழிப்பு வந்துள்ளது. ஐவரில் பீமசேனனை மட்டும் உசாவுகிறர்” என்று சுரேசர் சொன்னார்.
யுதிஷ்டிரன் எதனாலோ சீற்றம்கொண்டவர்போல எழுந்துகொண்டு “கிளம்புவோம்… அவை கூடிவிட்டதென்றால் ஏன் இங்கே நின்றிருக்கிறோம்?” என்றார். திரௌபதி “ஆம், கிளம்பவேண்டியதுதான்” என்றாள். யுதிஷ்டிரன் அவளை நோக்காமல் சம்வகையிடம் “ஆணையிடுக… அனைத்தும் ஒருங்கட்டும்!” என்றார். அரசியும் அரசரும் இணையாக நடந்து அவைநோக்கி சென்றனர். சம்வகை வெளியே ஓடி கைகாட்ட காத்து நின்றிருந்த அவைக்காவலர் சங்கும் முழவும் மணியும் கொம்பும் சேங்கிலையும் என ஐந்திசை முழக்கத்தை எழுப்பினர். அவர்கள் இருவரும் மெல்ல அரசமென்நடையில் அவை நோக்கி சென்றனர்.
சம்வகை அவர்களுக்குப் பின்னால் சென்றாள். மங்கல இசையுடன் சூதர்கள் அவைநுழைந்தனர். தொடர்ந்து அணிச்சேடியர் சென்றனர். நிறைந்த அவையின் ஓசை முழக்கமென எழுந்து அவளைச் சூழ்ந்தது. அரசரும் அரசியும் அவை நுழைவதை அவள் ஓசையிலிருந்தே அறிந்தாள். “பேரரசி வாழ்க! அனல்மகள் வாழ்க! வெல்க கொற்றவை! வெல்க பாஞ்சாலக்குலமகள்!” என அவை முழக்கமிட்டது. அலையலையென வாழ்த்தொலி எழுந்தபடியே இருந்தது. அனைத்து இடைவெளிகளினூடாகவும் ஒலி பீறிட்டு காற்றில் அதிர்ந்தது. அவள் வாயிலில் நின்று அவைக்குள் நோக்கினாள். குடித்தலைவர்கள் அனைவருமே களிவெறிகொண்டு கூவிக்கொண்டிருந்தனர். அரிமலர்மழையால் அவை நிறைந்திருந்தது.
அந்த அவையிலிருந்த எவருமே அவளை அறிந்தவர்கள் அல்ல. அவர்கள் அஸ்தினபுரிக்கே புதியவர்கள். அந்நகரை கதைகளினூடாக வந்தடைந்தவர்கள். அவளையும் அவ்வண்ணமே அறிந்தவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் வஞ்சநிறைவின் பெருங்களிப்பை கொண்டிருந்தனர். கதைகளினூடாகவே அவர்கள் அடைந்த வஞ்சம். அவர்கள் ஒவ்வொருவரையாக அவள் பார்த்தாள். பீதர்முகங்கள் கண்கள் இடுங்க மரப்பாவைகள் என தெரிந்தன. கரிய தென்னிலத்து முகங்களில் வெண்விழிகள் துறித்திருந்தன. மேற்குநிலத்து யவனர் முகங்கள் குருதியெனச் சிவந்திருந்தன.
அந்தணர் வேதமோதி கங்கைநீர் தூவி அரியணையை வாழ்த்தினர். முதிய அந்தணர் வந்து அழைக்க திரௌபதி கைகூப்பியபடி சென்று அரியணையில் அமர்ந்தாள். அவள் அருகே யுதிஷ்டிரன் அமர்ந்தார். அந்தணர் அவர்களை நீரிட்டு வாழ்த்தினர். முதிய குடிகள் எழுவர் அஸ்தினபுரியின் தொன்மையான மணிமுடியை பொற்தாலத்தில் அரசமேடைக்கு கொண்டுசென்றனர். அதுதான் தேவயானியின் மணிமுடிபோலும் என சம்வகை எண்ணிக்கொண்டாள். குடித்தலைவர் அதை எடுத்து அவள் தலையில் சூட்டினர். அவள் முகம் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சிலையெனத் தெரிந்தது. அவையினர் எழுப்பிய வாழ்த்தொலியும் இசைமுழக்கமும் அவளை தொடவில்லை. வேறெங்கோ என அவள் குளிர்ந்து அமைந்திருந்தாள்.
அருகே அமர்ந்த யுதிஷ்டிரன் அவளை ஓரக்கண்ணால் நோக்கிக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் வியந்ததுபோல, அஞ்சுவதுபோல, ஒவ்வாமைகொண்டதுபோல உணர்வுகள் மாறிக்கொண்டிருந்தன. குடித்தலைவர்கள் கொண்டுவந்த ஹஸ்தியின் மணிமுடியை சூட்டினர். அவையின் வாழ்த்தொலிகளும் இசைமுழக்கங்களும் சூழ அவர்கள் அளித்த செங்கோலைப் பெற்று அவர் அரியணையில் நிமிர்ந்து அமர்ந்தார். அவையை நோக்கியபோது அவர் முகம் மலர்ந்தது. தோள்கள் விரிந்து நெஞ்சு நிமிர்ந்தது. செங்கோலை நாட்டிப்பற்றியபடி அவர் கனவு விரிந்த விழிகளுடன் அமர்ந்திருந்தார். அவர் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை சம்வகை கண்டாள்.
அவையினரின் வாழ்த்தொலிகளுக்கு நடுவே வெள்ளிக்கோலுடன் நிமித்திகன் மேடைக்கு வந்தான். அவன் கோலை மும்முறை சுழற்றியபோது அவை அமைதியடைந்தது. “வெற்றி சிறக்கட்டும்! வெற்றியே நிகழட்டும்! வெற்றியே என்றென்றும் தொடரட்டும்!” என்று அவன் உரத்த குரலில் கூவினான். “இந்நாளில் மகிழ்க தேவர்கள்! நிறைவடைக அஸ்தினபுரியின் மூதாதையர்! கொண்டாடுக குடிகள்! நினைத்து நினைத்து நெஞ்சுநிறைக நம் கொடிவழிகள்! இதோ கொற்றவை என நம் அரசி எழுந்தார். அவையில் உரைத்த வஞ்சம் முடித்து கொழுங்குகுருதி கொண்டு பழி துடைத்து நகர்நுழைந்தார். வெற்றிச்சிறப்புடன் அரியணை அமர்ந்தார்!”
“பாடுக பாவலர், புகழ் பாடுக சூதர்! இது தெய்வங்களின் தருணம். பொலிக அஸ்தினபுரியின் அரியணை! தேவயானியும் தபதியும் சத்யவதியும் அமர்ந்த பீடம் நிறைவுறுக! அன்னை அமர்ந்த இந்த மேடை என்றென்றும் ஆலயத்தூய்மை கொள்க! சொல்பெற்று அழிவின்மை சூடுக! ஆம், அவ்வாறே ஆகுக!” அவை வெறிகொண்டு ஆர்ப்பரித்தது. குடித்தலைவர்கள் எழுந்து கைகளை வீசி தொண்டைநரம்புகள் புடைக்க கூச்சலிட்டனர். கொம்புகளும் முரசுகளும் முழக்கமிட வெளியே முற்றத்தில் நின்றிருந்த இசைக்குழு அதை ஏற்று முழக்கமிட்டது. அதிலிருந்து பற்றிக்கொண்டு நகரமெங்கும் இருந்த காவல்கோட்டங்களில் முரசுகளும் கொம்புகளும் முழங்கின. நகரமே ஒரு இசைக்கலமென்றாகியது.
அதன் நடுவே திரௌபதி அயலவள் என அமர்ந்திருந்தாள். அவள் முகமும் விழிகளும் முற்றிலும் பொருளில்லாதவையாக இருந்தன. அந்நிகழ்வுகளின் மையமெனத் திரண்ட பொருளின்மை அது என சம்வகை எண்ணிக்கொண்டாள்.