தம்மம் தந்தவன்- கடலூர் சீனு

நல்ல பல  புனைவுகளை,மிக நேர்த்தியான வடிவமைப்பில்,சர்வதேச தரத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நற்றினை பதிப்பகம், மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதக்கூடிய நாவலாசிரியரான விலாஸ் சாரங் எழுதிய தி மான் ஆப் தம்மா எனும் நாவலை தமிழ் மொழிபெயர்ப்பில் கொண்டுவந்திருக்கிறார்கள். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பரும், வாசகரும்,மொழிபெயர்ப்பாளரும்,எழுத்தாளருமான காளிபிரசாத் அவர்கள்.

 

தமிழின் மொழிபெயர்ப்பு சூழலில் இருந்து பேசத் துவங்குவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். தமிழில் ஒரு நல்ல புனைவு,நல்ல மொழிபெயர்ப்பில் வாசகனுக்கு கிடைப்பதற்கு,அந்த வாசகன் மொழிபெயர்ப்பின் மூன்று இடர்களை கடக்க வேண்டியது உள்ளது. முதல் இடர். பிரதிக்கு, பிரதியின் வாக்கியங்களுக்கு வார்த்தைகளுக்கு, நேர்மையாக செய்யப்படும் மொழிபெயர்ப்பு. நேர்மை  எனில் நீங்கள் நினைப்பதை விடவும் மேலான நேர்மை. வடிவேலு ரேஞ்சுக்கான ‘அநியாய’நேர்மை. அந்த தமிழ் மொழியாக்கத்தை கூகுளுக்கு கொடுத்தால்,மொழிபெயர்க்கப்பட்ட அந்த மூலப் பிரதி புல்ஸ்டாப் கமா கூட மாறாமல் அப்படியே கிடைத்து விடும்.

 

இரண்டாவது இடர்,இதே ‘அநியாய’நேர்மையை எழுத்தாளருக்கு அளிப்பது. மூல ஆசிரியரின் ‘த்வனி’யை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சி போன்றவற்றை அதன் உதாரணமாக சொல்லல்லாம். இரண்டாலும் நிகழ்ந்தது என்ன? எது நிகழ வேண்டுமோ,அந்த வாசகனுக்கும் அந்த எழுத்தாளருக்கும் இடையே நிகழவேன்டிய அந்தரங்க உரையாடல் நிகழாமலே போனது.மூன்றாவது இடர் மிக நல்ல மொழிபெயர்ப்பு,அதற்க்கான உத்வேகம்கொண்ட உழைப்பு அத்தனையும் கொண்டு,தமிழுக்கோ இந்தியாவுக்கோ சம்பந்தமே  இல்லாத சாரம்சத்தைக் கொண்ட புனைவுகளை மொழியாக்கம் செய்வது. இந்த மூன்று இடர்களைக் கடந்தே,ஒரு நல்ல புனைவு,நல்ல மொழிபெயர்ப்பில் தமிழ் வாசகனை வந்து அடைகிறது. அப்படிப்பட்ட மூன்று தடைகளையும் கடந்து வந்திருக்கும் நல்ல மொழிபெயர்ப்பிலான நல்ல நாவல் இந்த தம்மம் தந்தவன் நாவல்.

நல்ல மொழியாக்கம் என்றதுமே வாசகர் மனதில் நல்ல மொழியாக்கங்களைத் தந்தோரின் ஒரு வரிசை, யுவன் சந்திர சேகர்,சுகுமாரன்,யூமா வாசுகி  என சட்டென எழும். அவர்களின் மொழியாக்கங்களின் சரளத்துக்கும் சீர்மைக்கும் அழகுக்கும் அவர்கள் கவிஞர்கள், எழுத்தாளர்கள் என மொழியில் படைப்பாற்றலின் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் இந்த நாவலின் மொழியாக்கத்தைப் படித்தாலும் புறக்கணிக்க இயலாத இடத்தைக் கோரும் மொழியாக்கத்தை காளிப்பிரசாத் செய்திருக்கிறார். இதற்க்கு காளிப்பிரசாத் அவர்களுக்கு உறுதுணையாக நின்றிருப்பது,வெண்முரசு. இன்றைய சூழலில் மொழியின் உச்சபட்ச சாத்தியம் எதுவோ அவை வெளிப்படும் படைப்பு அது. கடந்த ஐந்து வருடங்களாக அந்த மொழியுள் திளைத்துக் கிடக்கும் வாசகர்களில் ஒருவர் காளிபிரசாத்.

 

இந்த நாவலின் ஒரு கால் இந்த இரண்டாயிரத்திலும்,மற்றொரு கால் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தியும் அமைந்து நின்றிருக்கிறது. இந்த இரண்டு காலங்களுக்கும் இடையே நிகழும் பார்வைக் கோணத்தின் ஊஞ்சல் அசைவுக்கு , இந்த மொழியாக்கத்தில் பயின்று வரும் மொழி அதன் வார்த்தைகள் குறிப்பாக உளச்சான்று, புரவி போன்ற சொற்றேர்வுகள்  இசைவைக் கூட்டுகிறது. கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமன்யன் தம்மம் தந்தவன் குறித்த தனது அறிமுகக் கட்டுரையில், இந்த மொழியாக்கத்தில் இடரும் ஜெயமோகன் மொழியின் தாக்கம் குறித்து எழுதி இருந்தார். குதிரை என்றால்தான்  எனக்கு ஓடுகிறது.புரவி எனும் வார்த்தை எதையும் தூண்டவில்லை என குறிப்பிட்டிருந்தார். அவரது வாழ்க்கைப் பார்வை சார்ந்து,இலக்கிய விமர்சனக் கோணம் சார்ந்து அது சரியான விமர்சனம்.முக்கியமான விமர்சனம். ஆனால் அந்தப் பார்வையும் விமர்சனமும் இரண்டாயிரங்களை சேர்ந்தது. ஒரு குதிரையை காண டாகுமெண்டரி போதும் இல்லையேல்  சாலைக்கு சென்றால் போதும், கொஞ்சம் முயன்றால் குத்ரையேயேற்றம் கூட பயின்று விடலாம். அந்தக் குதிரையை காண இலக்கியம் தேவையில்லை. ஒரு இலக்கியவாசகன் மொழியில் திகழும் குதிரையை காண வந்தவன். அவனுக்கு குதிரை போதாமல்தான் புரவி ஏறுகிறான். பின்னர் அவனுக்கு புரவியும் போதாமலாகி ஈராருகால்கொண்டெழும் புரவியை தேடுகிறான். அந்த வகையில் இந்த மொழியாக்கத்தின் உட்கூறுகள் சிறப்பு வாய்ந்தன.

 

பொதுவாக புதியவர்களின்  ஒரு புதிய மொழியாக்கத்தில் ஒன்றைக் காண முடியும், மொழியாக்கத்தின் ஆரம்பத்தில் ஒரு உத்வேகம்,இடையே ஒரு சோர்வு,முடிவில் ஒரு அவசர அடி என அந்த மொழியாக்கப்பணி தொழிற்படும். இந்த மொழியாக்கம் அதிலிருந்து வெளியேறி, வயல்காட்டின் மீது தாழப் பறந்து செல்லும் கொக்கு போல முதல் துவங்கி இறுதிவரை சீராக பயணிக்கிறது. இந்த மொழியாக்கம் இந்த நாவலின் வருகை குறித்து கவிஞர் ஷங்கரராமசுப்ரமணியன் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் போன்ற முன்னோடிகள் தங்களது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள்.

 

இந்த நாவலின் முக்கியத்துவம் என்ன என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டால், இந்த நாவல் தமிழில் வந்திருப்பதே அதன் முதன்மையான முக்கியத்துவம் என்பதை அறியலாம். தமிழ் நிலத்தில் சங்ககாலத்தில் துவங்கிய பண்பாட்டு வளர்ச்சியின் வேர் சங்கம் மருவிய காலத்தில் ஆழம் கொள்கிறது. தமிழ்நிலத்தின் பண்பாட்டின் வேர் என்றே பெளத்தத்தை சொல்லலாம். வடபாரததில் துவங்கி,தென்பாரதத்தில் பரவி, அங்கிருந்து பாதி புவிப் பரப்பை போர்த்திச் செழித்த பௌத்தத்திற்கு, இந்திய அளவில் ஒரே ஒரு காப்பியம்தான் இருக்கிறது,அது தமிழில் இருக்கிறது.மணிமேகலை என்று ஜெயமோகன் குறிப்பிடுவார். மணிமேகலை துவங்கி,பௌத்த மறுமலர்ச்சிக்கு சிந்தித்த அயோத்திதாசர் தொடர்ந்து, பௌத்தம் குறித்து இன்று பேசிக்  கொண்டிருக்கும் ஸ்டாலின் ராஜாங்கம் வரை தொடரும் இந்த உரையாடலில், சுதந்திரத்துக்குப் பிறகு இன்று வரையிலான தீவிர இலக்கிய ஓட்டத்தில், நவீன இலக்கியம்  புத்தர் குறித்தோ,பௌத்தம் குறித்தோ,தமிழ் நிலத்தில் அது ஆக்கப்பூர்வமாகவோ எதிர் முறையிலோ உருவாக்கிய பண்பாட்டுத் தாக்கம் குறித்தோ, என்னவிதமான பார்வையை அக்கறையைக் கொண்டிருக்கிறது என்று கவனித்தால்,[ விஷ்ணுபுரம் நீங்கலாக] வெறுமையே மிஞ்சும். அவ்வப்போது ஹெர்மன் ஹெசி இன் சித்தார்த்தா போல ஏதேனும் மொழியாக்க முயற்சி கண்ணில் படும். இந்த பின்புலத்தில் நின்றே இந்த நாவலின் தமிழ் வரவு முக்கியத்துவம் கொண்டதாகிறது.

இந்த நாவலின் தனித்தன்மை, விலாஸ் சாரங் கைக்கொள்ளும் நவீனத்துவப் பார்வையின் விளைவாக உருவானது. தனிமனித அலகு,விமர்சனப் போக்கு,அறிவியல் பார்வை என நவீனதத்துவப் பார்வையின் அளவீடுகளை நாமறிவோம். அந்தப் பார்வையில் புத்தரின் பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரையிலான அவரது வாழ்வை அணுகிப் பார்க்கும் நாவல் இது. புத்தர் தந்தைக்கு,மகனுக்கு,மனைவிக்கு, என்னவாக இருதிருக்கிறார் அவர்களிடம அவரது நடத்தை என்னவாக இருந்திருக்கிறது ஒரு சங்கத் தலைவராக அவர் என்னவாக இருந்திருக்கிறார், குறிப்பாக அவரது தவ வாழ்வு இவற்றின் மீது, இந்த நவீனத்துவப்  பார்வைக்கே உரிய கூர்மை கொண்ட தளங்கள் இந்த நாவலில் பல உண்டு. உதாரணமாக நாவலுக்குள் பிம்பிசாரன் சிறைபட்டு பட்டினி போடப் படுகிறான்.தாள இயலாத பசி.தனது மலத்தை தானே உண்ணுகிறான்.அங்கே குறுக்கு வெட்டாக புத்தரின் தவ வாழ்வு அவனால் நினைக்கப் படுகிறது.

 

நாவலின் மையமான புத்தரின் வாழ்வுக்கு இணைகோடாக செல்லும் பிற விஷயங்கள் வாசகனின் கவனத்தைக் கொருவன. குறிப்பாக இந்த நவீனத்துவப் பார்வை தொட்டெடுக்கக்கூடிய அபத்தச் சூழல்கள். பசேனதி புத்தரை காண்பதற்கு முன் அரசன். பார்த்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்த பிறகே அவன் அறிகிறான்,இனியும் அவன் அரசன் அல்ல என்பதை. விதூதபனுக்கு அரசு பட்டம் கைக்கு வரும் சூழல் அடுத்த அபத்தம். அவன் அதற்காக எதுவுமே செய்யவில்லை. சும்மா பசேனதியின் ராணுவ தளபதி அவனை தேடிவந்து முடியை அளித்து, அவனுக்கு ராணுவ தளபதியாக மாறிக் கொள்கிறான். இதில் மற்றொரு அபத்தம் இந்த காரயான் எனும் படைத் தளபதியின் குணம். அவன் நினைத்தால் பசேனதி வசமிருந்து பறித்த செங்கோல் கொண்டு அவனே கோசலத்தின் அரசன் என அமர முடியும், அவன் ஏன் அதை விதூதபனுக்கு அளித்தான். இப்படி அபத்த சூழலில் மன்னனான விதூதபன் தனது அரசின் ஸ்தரத்தமையின் பொருட்டு எத்தனை குல குடிகளை அழித்தான் என்பதை இந்த நாவலுக்கு வெளியே சென்று வரலாற்றை வாசித்தால்,இந்த நாவல் பேசும் சூழலின் அபத்தம் புரியும்.

ஒரு வாசகர் இந்த நாவலைக் கொண்டு, நம்மிடம் இருக்கும் சித்தார்த்தா நாவலுடன் உரையாடிப் பார்க்கலாம். சித்தார்த்தா நாவலின் பார்வை என்ன என்பதை அறிவோம்,இரு உலகப்போர்களால் சிதைந்த நம்பிக்கைகள் அனைத்தும் கடந்து,இயற்கையுடன் இணைந்த வாழ்வே இனி ஒரு ஒரு தனி மனிதனுக்கும் மீட்சி என்று உருவான பார்வைக்குள் சித்தார்த்தனை  அணுகிப் பார்த்த நாவல். தம்மம் தந்தவனில் வரும் புத்தர் ஞான குரு அல்ல. தரைத் தளத்தில் நிற்கும் புத்தர் அவர். இந்த இரு புத்தர்களுக்கும்,இரு பார்வைகளுக்கும் இடையே ஒரு உரையாடலை வாசகன் நிகழ்த்திப் பார்க்கலாம். ஒரு மதிப்பீட்டு விமர்சகர் நம்மிடம் உள்ள புதுமைப்பித்தன்  முதலான சுரா அமி ஆ மாதவன் வரிசையில்,  வந்து சேரும் இந்த நவீனத்துவர் விலாஸ் சாரங் எந்த இடத்தில் பொருந்துகிறார், அந்த இடத்தின் படி அவரது பலம் பலவீனம் என்ன என்று ஒரு விமர்சகர் அணுகலாம். இப்படி வாசக கவனத்துக்கும், விமர்சன உரையாடலுக்குமான பாதைகள் பலவற்றைக் கொண்டது இந்த தம்மம் தந்தவன் நாவல்.

 

ஒரு வாசகனாக இந்த நாவல் எனக்களிக்கும் உண்மையின் ஆழம் சார்ந்து ஒரு விஷயத்தை சொல்லி இந்த சிற்றுரையை நிறைவு செய்வது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். நாவல் என்பது மேலான உண்மையை சொல்லவந்த கலை என்ற வகையில், இந்த நாவலில் நவீனத்துவப் பார்வை வழியே திரண்டெழும் உண்மை அதன் பலம். முக்கியமானதும் கூட.ஆனால் அந்த உண்மை ஏன் துணுக்குறச் செய்யும் உண்மையாக இருக்கிறது? உண்மைக்கு அப்படி ஒரு குணநலன் உண்டா என்ன? உதாரணமாக இந்த நாவல் வழியே அரசைத் துறந்த புத்தர் சாகும் வரையில் தனது சங்கத்தைத் துறக்கவில்லை எனும் துணுக்குறச் செய்யும் உண்மையை வாசகன் வந்தடையும் இடத்தை சொல்லலாம். இந்த உண்மை ஏன் இவ்வாறு ‘தோற்றம்’அளிக்கிறது  என்றால், எந்த உண்மையும் நிற்கும் அதன் சாரமான பகைப்புல உண்மை ஒன்றுண்டு. அந்த பகைப்புல உண்மையை இந்த நாவல் கணக்கில் கொள்ள வில்லை. நவீனத்துவப் பார்வையின் எல்லை எதுவோ அதுவே இந்த நாவல் வாசகனுக்கு அளிக்கும் உண்மையின் எல்லையும் கூட .

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61
அடுத்த கட்டுரைகோழிப்பிராண்டல்!