அன்புள்ள ஜெ
புத்தகக் கண்காட்சி பற்றி மனுஷ்யபுத்திரன் எழுதிய இந்தக்குறிப்பு என் மனதைப் பெரிதும் கவர்ந்தது. இதிலுள்ளது ஓர் உண்மையான உணர்ச்சி. உண்மையிலேயே அறிவியக்கத்துள் இருக்கும் ஒருவரின் உள்ளம் இது
*
போன வருடம் வாங்கிய படித்த புத்தகங்கள், இந்த வருடம் வாங்கிய புத்தகங்கள் என பலரும் இடும் பட்டியல் தமிழ் அறிவுப்பரப்பு எவ்வளவு பெரியது என்பதை நினைவூட்டுகிறது. அந்தப் பட்டியல்களை நான் கவனமாக சேமித்துக்கொள்கிறேன். இன்னும் நாம் படிக்க விரும்பி படிக்காத புத்தகங்கள் , வாங்க ஆசைப்படும் புத்தகங்களின் பட்டியல்களும் முக்கியம்தான்.
எந்த நம்பிக்கையும் இல்லாத ஒரு சூழலில் எழுதிக்கொண்டும் பதிப்பித்துக்கொண்டும் வாசித்துக்கொண்டும் ஒரு இரகசியப்படை இங்கு செயல்படுகிறது. புதிதாக வெளிவந்த தன் புத்தகத்தை அன்று முழுக்க எடுத்து தடவிப்பார்க்கும் எழுத்தாளனும் புதிதாக வாங்கி வந்த புத்தகங்களை அடுக்கிவைத்து அவற்றைக் கனவுகாணும் வாசகனும் ஒரே மனநிலையால் பிணைக்கப்பட்டவர்கள். இந்த பைத்திய நிலை இருக்கும்வரைதான் இங்கே அறிவார்ந்த பண்பாடு என்று ஒன்று இருக்கும்.
நேற்று ஒரு பதிப்பக ஸ்டால் எங்கே இருக்கிறது என்று கண்காட்சியில் கேட்ட பார்வையற்ற மனிதனுக்கு வழிசொன்னேன். அறிவின் ஒளியே கண்களின் ஒளி.
இதற்கெல்லாம் வெளியே ஒரு கும்பல் கண்காட்சி, பதிப்பாளன், எழுத்தாளன், புத்தகங்கள் என அனைத்திற்கும் எதிராக ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் அடுத்தவாரம் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் நாம் இருப்போம்.
மனுஷ்யபுத்திரன்
ஆனால் இணையத்தில் ஒருசாரார் நூல்களுக்கு எதிராக ,வாசிப்புக்கு எதிராக எழுதும் கேலிகளையும் கிண்டல்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த மனநிலை எங்கிருந்து வருகிறது? இதில் எழுத்தாளர்களும் பலர் உள்ளனர்.
ஆர், மகேந்திரன்
***
அன்புள்ள மகேந்திரன்
நான் 20 ஆண்டுகளுக்கு முன் பேராசிரியர்.வேதசகாயகுமாரின் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அவர் பெரிய வாசகர், விமர்சகர். அவருடைய ஆசிரியத்தோழர் ஒருவர் என்னிடம் சொன்னார். “நான் ஒண்ணுமே படிக்கிறதில்லீங்க. சொந்தமா அறிவிருக்கறவன் படிக்க வேண்டாம். இல்லாதவன்தான் படிச்சு தேறணும்..”
இதுதான் தமிழகத்தின் பொதுவான உளநிலை. அறிவியக்கத்தை, அது எதுவாக இருந்தாலும், தமிழ் பாமர உள்ளம் அஞ்சுகிறது. அதன்முன் தாழ்வுணர்ச்சி கொள்கிறது. ஆகவே அதை ஏளனம்செய்து கடக்க முயல்கிறது, இதைச் சந்திக்காத எந்த வாசகரும் இருக்க முடியாது.
“வாசிச்சா பைத்தியம் புடிச்சிரும்” “வாசிச்சா படிப்பு வியாபாரம்லாம் பாதிக்கும்” “வாசிக்கிறவன் உலகம்தெரியாதவன்” இந்த வகையான எத்தனை சொற்களைக் கேட்டிருப்போம். உண்மையில் இலக்கியவாசிப்பைப் பற்றி மட்டுமல்ல எந்தவகையான வாசிப்பைப் பற்றியும் இதே எண்ணம்தான் இங்குள்ளது. நாளிதழ்களை தொடர்ச்சியாக வாசிப்பவரைக்கூட ஏளனமாகத்தான் நம் சமூகம் பார்க்கிறது.
அதையும்விடுங்கள், நேரடியாக பணமாக மாறாத ஏதாவது ஒரு திறமை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். மண்ணைப் பற்றி நீரைப் பற்றி வானைப் பற்றி ஏதேனும் அறிவு இங்கே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா? இசைக்கல்வி, மதக்கல்வி, மரபிலக்கியக் கல்வி கூட இன்று ஏளனத்திற்குரியதே.
நான் ரயிலில் அல்லது வேறு பொது இடங்களில் சந்திப்பவர்கள் என் கையில் நூல் இருப்பதைக் கண்டால் உடனே உபதேசத்தை தொடங்கிவிடுவார்கள். சமீபத்தில் பாண்டிச்சேரியிலிருந்து வந்தபோது ஒருவர் நக்கலுடன் “இப்டில்லாம் வாசிச்சா வாழ்க்கையிலே முன்னேற முடியுமா?” என ஆரம்பித்தார். ஏதோ வியாபாரம் செய்பவர். “உங்க வருஷ வருமானம் என்ன?” என்றேன். அவர் சொன்னதும் “அதை விட எட்டு மடங்கு கூடுதல் என் வருமானம். பொத்திட்டு இருய்யா” என்றேன். வாயை மூடிக்கொண்டார். இந்த மொழி மட்டுமே அவர்களுக்குப் புரியும்
இந்த உளநிலை இன்று இணையத்திலும் வந்துள்ளது. காரணம் ஜியோ. ஜியோ இணையசேவையை இலவசமாக்கி, செல்பேசியிலேயே அளித்தது. ஆகவே பொதுவாக எந்தவகையான அறிவார்ந்த தகுதியுமில்லாதவர்கள்கூட இணையவெளிக்கு வந்துவிட்டார்கள். ஆரம்பத்தில் இணையம் வாசிப்பு பரவ, நூல்களைப் பற்றிய செய்திக்ளை விரிவாக்க உதவியது. அதிலிருந்தவர்கள் ஓரளவு படித்த, உலகமறிந்த இளைஞர்கள். இன்று எல்லா வகையான பாமரக்குரல்களும் உள்ளே ஒலிக்கின்றன. அப்படியே நம் டீக்கடைத்தரம் அமைந்துள்ளது. இதுவே நீங்கள் காண்பது.
எழுத்தாளர்களில் எழுத்து, வாசிப்புக்கு எதிரான உளநிலை கொண்டிருப்பவர்கள் எவர்? இலக்கியவாதிகளாக தங்களை கருதிக்கொள்பவர்களில் பலர் ஒன்றோ இரண்டோ ஆண்டுகள் மட்டும் இலக்கியம் வாசித்தவர்கள். எழுதுவதற்கான ஒரு பொதுவான வடிவ அறிமுகம் கிடைத்ததும் எழுதத் தொடங்கிவிட்டவர்கள். அவர்களை விட இங்குள்ள பொதுவான இலக்கிய வாசகன மேலும் படித்தவன், மேலும் அறிந்தவன். ஆகவே அவன் இவர்களை பொருட்படுத்துவதில்லை.
”திரள்” என்பது இரக்கமற்றது. இதை சினிமாக்காரர்கள் அளவுக்கு அறிந்த எவரும் இருக்க மாட்டார்கள். அது எவருக்கும் எந்த கனிவையும் காட்டுவதில்லை. முக்கியமானவர்களா, பயனுள்ளவர்களா என்று மட்டுமே பார்க்கும். இல்லையென்றால் தூக்கிவீசிவிட்டுச் செல்லும். கொண்டாடியவர்களையே வீசிவிட்டுக் கடந்துசெல்லும்.
புத்தகக் கண்காட்சியில் வருவது திரள். அது ஒவ்வொரு எழுத்தாளரிடமும் அவர்கள் எவர் என இரக்கமில்லாமல் சொல்கிறது. அது மேலே சொல்லப்பட்ட ‘சிறிய’ எழுத்தாளர்களின் தன்முனைப்பை அடிக்கிறது. வீங்கி நீலம் பாரிக்க வைக்கிறது. அந்த பதற்றம், தவிப்பு, தனிமை மெல்லமெல்ல கசப்பாக ஆகிறது. தன்னை நிராகரிக்கும் ஒன்றை தான் நிராகரிப்பதே மனிதர்களின் இயல்பு. அதற்குத்தான் இந்த நக்கல் நையாண்டி எல்லாமே.என்றேனும் நானும் வெல்வேன் என தன்னுள் மெய்யாகவே சொல்லிக்கொள்பவனிடம் இந்த நையாண்டி எழுவதில்லை.
மனுஷ்யபுத்திரன் சொல்வதுபோல அறிவியக்கம் என்பது பலவகையான உளக்கிளர்ச்சிகளால் ஆனது. இன்றும் புதியநூல்கள் எனக்கு பரவசத்தையே அளிக்கின்றன. அருண்மொழி புத்தகவிழாவில் வாங்கி வந்த நூல்களை நானே கைப்பட மாற்றிமாற்றி அடுக்கி வைத்தேன். என் வீடே ஒரு நூலகம். ஆனாலும் நூல்களை கொண்டுவந்தபடியே இருக்கிறேன். நூல்களை அடுக்கிவைப்பதில் பேருவகை அடைகிறேன்
நினைத்துக்கொண்டு ஒரு நூலை எடுத்துப்பார்ப்பது இன்னொருவகை கிளர்ச்சி. நேற்று முனைவர் யோ.ஞானசந்திர ஜான்சன் எழுதிய இராபர்ட் கால்டுவெல் நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். நடுவே சம்பந்தமே இல்லாமல் சுந்தரராமசாமி கட்டுரைகளை கொஞ்சம் வாசித்தேன். பி.கேசவதேவுக்கும் ஆரியசமாஜத்திற்கும் இடையேயான உறவை கொஞ்சம் புரட்டிப்பார்த்தேன். இந்தப்போதையும் கிளர்ச்சியும் அஸ்வலாயனரில், அரிஸ்டாட்டிலில் இருந்தே இருந்துகொண்டிருப்பது. மானுடம் உள்ளளவும் இருக்கும். இதுவே அறிவியக்கத்தில் இருப்பவர் அடையும் மகிழ்ச்சி. இதை வெளியே எவரும் உணரவே முடியாது.
எழுத்தாளர்கள் அன்றும் இன்றும் எனக்கு முக்கியமானவர்களே. கி.ராஜநாராயணனை சமீபத்தில் கைகளை தொட்டுப்பேசினேன். அந்த தருணத்தின் இனிமையை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன். எச்.எஸ்.சிவப்பிரகாஷின் அருகே அமர்ந்திருக்கையில் என் உள்ளம் கிளர்ந்தபடியேதான் இருந்தது. இளைய படைப்பாளிகளின் கைகளைப் பற்றிக்கொண்டு பேசுகையில் உவகை எழுகிறது. அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் கொப்பளித்தபடியே இருக்கிறேன். எந்தக் கேளிக்கையும் அதற்கு நிகர் அல்ல
அறிக, இந்தியாவில் ஒருவன் காணச்சாத்தியமான எல்லா உச்சகட்ட கேளிக்கையிடங்களிலும் நான் இருந்திருக்கிறேன். நானறியாத கொண்டாட்டங்கள் மிகமிகக் குறைவே. இங்கே சாமானியன் எண்ணி வாய்பிளக்கும் பல பேரழகிகளை நான் நேரில் அறிவேன். அவர்களெல்லாம் ஓர் இளம் எழுத்தாளனின், ஆர்வம்கொண்ட வாசகனின் மின்னும் கண்களுக்கு முன் ஒரு பொருட்டே அல்ல.
இந்தக் கிளர்ச்சியை அடையாதவரை நீங்கள் அறிவியக்கத்தில் இல்லை. இதை தக்கவைத்துக்கொள்ளும் வரைத்தான் அறிவியக்கத்தில் இருக்கிறீர்கள். மானுடருக்கு மண்ணில் அளிக்கப்பட்டுள்ள இன்பங்களில் தலையாயது இது என்கிறார் அரிஸ்டாட்டில்.எந்தப்பேரழகியின் காதல்நோக்கை விடவும் அறிவின், மெய்மையின் தேவதையான சோஃபியாவின் விழிகளே ஒருவனை ப் பித்தனாக்குபவை, முடிவிலாது தேடவைப்பவை, தவிப்பை அளிப்பவை, பிற அனைத்தையும் பொருளற்றவை என காட்டுபவை, பேரின்பத்தில் நிறைவுறச்செய்பவை.
அந்த கடைக்கண் அனைவருக்கும் உரியது அல்ல. அது அருளப்படாதவர்களின் நையாண்டி அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. அவர்களை தொடர்ந்து மன்னிப்போம். அவர்களை தொடர்ந்து கூர்ந்து நோக்குவோம். நம் வாசகர்கள் அல்ல அவர்கள், ஆனால் நாம் எழுதும் கதாபாத்திரங்களாக அவர்கள் ஆகக்கூடும் அல்லவா?
ஜெ
***