‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48

பகுதி ஐந்து : விரிசிறகு – 12

சம்வகை நெடுந்தொலைவில் முதல் கொம்பொலியை மிக மெல்லிய செவித்தீற்றலென கேட்டாள். அது வானில் ஒரு பறவை புகைத்தீற்றலென, ஒளிச்சுழல்கை என வளைந்து செல்லும் அசைவுபோல் அவளுக்குத் தோன்றியது. அவளைத் தவிர அங்கு காவல்மாடத்தில் நின்றிருந்த எவரும் அதை கேட்கவில்லை. அவள் மீண்டுமொரு கொம்பொலி எழுவதற்காக விழியும் செவியும் கூர்ந்தாள். அவ்வொலியை தன் விழிகளால் பார்த்ததாக அவளுக்குத் தோன்றியது. அவள் படிகளில் இறங்கி கீழே வர சுதமை அவளை நோக்கி ஓடி வந்தாள். “கொம்பொலியை நான் கேட்டேன். அணுகிக்கொண்டிருக்கிறார்” என்றாள். “ஆம், அணிவகுப்பை பிறிதொரு முறை சீர்நோக்குக! அது பிழையற்றிருக்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். “ஆணை தலைவி, அதைத்தான் செய்யவிருக்கிறேன்” என்று சுதமை சொன்னாள்.

முழுக் கவசஉடையில் நின்றிருந்த சம்வகை உள்கோட்டை முற்றத்தில் நான்கு நிரைகளாக அணிவகுத்து நின்றிருந்த கவசப் படைவீரர்களையும், அவர்கள் அருகே வலப்பக்கம் நீள்நிரையென நின்ற அணிச்சேடியரையும் இடப்பக்கம் நின்றிருந்த இசைச்சூதர்களையும் பார்த்தாள். அவர்கள் அனைவருமே அஸ்தினபுரிக்கு புதியவர்கள். அங்கு முன்பு நிகழ்ந்த எந்த அரச வரவேற்பு நிகழ்ச்சியையும் பார்க்காதவர்கள். அவர்களுக்கு இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஒவ்வொரு முறையும் பயிற்சியில் ஏதேனும் ஒன்றை பிழையாகவே செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என்ன நிகழவேண்டும் என்பது புரிந்திருந்தது. ஆனால் எப்போதும் சடங்குகளை உடல்கள் கற்று மறந்து சலித்து பின் தன்னியல்பாக இயற்றுகையிலேயே ஒழுங்காக அமைந்தன.

பிழையின்றி ஒன்று இருக்காது என்று அவள் அறிந்திருந்தாள். அது அவர்கள் மட்டுமே அறிந்ததாக, நிகழ்கையில் அரசி அறியாது கடந்து செல்வதாக அமையும் என்றால் அது வெற்றி. ஆனால் எப்பிழை நிகழும் என்று அங்கே நின்று மீளமீள நோக்கியபோது கண்டுபிடிக்க முடியவில்லை. கைவிடுபடைகளும் படைத்திரளும் எந்நிலையிலும் நிகழவிருக்கும் பிழையொன்றை தன்னுள் முன்னரே கொண்டிருக்கின்றன என்றன அரசநெறிநூல்கள். அது மிகத் திறமையாக மறைந்திருக்கிறது. அவ்வாய்ப்பு ஏன் விழிகளுக்குப் படுவதில்லை? நிகழும் வரை அது எங்கிருக்கிறது? அது எவருடைய உள்ளத்தில் முளைத்துக்கொண்டிருக்கிறது? பொருளில் அது வெளிப்படுவதில்லை. பொருளில் வெளிப்படுகையில் மட்டுமே உள்ளத்தில் அது நிகழ்ந்திருப்பது தெரிகிறது.

அனைத்து வீரர்களும் உள்ளம் கிளர்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் வாழ்வின் முதன்மையான தருணம் ஒன்றை இயற்றவிருப்பதாக எண்ணினர். ஆனால் மீளமீள அளிக்கப்பட்ட பயிற்சிகளால் சலிப்பும் அடைந்திருந்தனர். ஆகவே இருநிலை கொண்டிருந்தனர். அந்த அலைவால் அவர்களால் அந்தத் தருணத்தை முழுமையாக நிறைக்க முடியவில்லை. பயின்று பழகிய முந்தைய வீரர்கள் அத்தருணத்தில் முற்றிலும் ஆர்வம் இழந்தவர்கள்போல, முழுமையாக வேறெங்கோ உளம்சென்றுவிட்டவர்கள்போல இருப்பார்கள் என சுரேசர் சொல்வதுண்டு. அவர்களிடம் தெரியும் அந்த ஆர்வமின்மை சடங்கு தொடங்குவதற்கு முன்புவரை பதற்றம் அளிப்பது.

இளமையில் சுரேசர் ஒவ்வொரு முறையும் அந்தப் பதற்றத்தை அடைவதுண்டு என்றார். ஒருமுறை அவருடைய நிலைகொள்ளாமையைக் கண்ட அமைச்சர் கனகர் “அமர்ந்திருக்கும் பறவையைக் கண்டால் அது பறக்குமென எவராலும் எண்ண இயலாது. சிறகு விரிக்கையில் பறவை பிறிதொன்று என ஆகிறது” என்றார். அன்றைய சடங்கில் அர்ஜுனன் நகர்நுழைந்தபோது அத்திரள் வாழ்த்தொலி கூவியது. என்றும் அங்கே அவ்வண்ணம் வாழ்த்தொலி எழுப்பிக்கொண்டிருப்பதுபோல. பிறிதொன்றை அறியாததுபோல. அவ்வாழ்த்தொலியின் உணர்வுகளால் அள்ளிக் கொண்டுசெல்லப்பட்டது. அக்கணம் புதிதென நிகழ்ந்ததுபோல அங்கே நிறைந்து அலைகொண்டது.

அதை பின்னர் எண்ணிக்கொண்டபோது சுரேசர் ஒரு அறியாத் தெய்வம் வந்திறங்கி ஆடி பின்னடைந்ததாகவே கருதினார். “ஆம், அது அனைவரின் கனவுக்குள்ளும் கருவடிவில் உறங்குகிறது. அங்கிருந்து வந்தால் மட்டுமே அது இயல்பாக நிகழும், இல்லையேல் அது வெறும் நடிப்பு” என்றார் கனகர். “அந்த தெய்வம் இங்குள்ள அனைவரையும் வாழ்த்துகிறது. ஒருவரை வாழ்த்தும்போதும் வணங்கும்போதும் மட்டும் மானுடரில் வந்திறங்கும் ஒன்று உண்டு. மானுடரை மானுடர் வாழ்த்துவதில்லை என்று உணர்க! மானுடரில் எழுந்த பிறிதொன்றையே அவர்கள் வாழ்த்துகிறார்கள். வீரத்தை, தன்னளிப்பை, அழகை, மாண்பை, மூப்பை, இளமையை.”

“எந்த வாழ்த்தும் மெய்யாக எழுகையில் தான் எழும் நெஞ்சை கிளரச் செய்கிறது. வாழ்த்தப்படுவது அதிலும் வந்தமைகிறது. அவ்வுள்ளம் விரிவுகொள்கிறது. அதன் ஆழங்கள் வரை ஒளி நிறைகிறது. ஆகவேதான் நூல்கள் வாழ்த்துக என்கின்றன. மூத்தவரை, பெரியவரை, கடந்தவரை வணங்கி வாழ்த்துக! இளையவரை, எழுபவரை, சிறியோரை கனிந்து வாழ்த்துக! வாழ்த்து சொல்லில் எழும் ஒளி. வாழ்த்து நிறைந்திருக்கும் இடங்களில் இருள் திகழ்வதில்லை. வாழ்த்தொலிபோல் மங்கலம் பிறிதொன்றில்லை. இனிய இல்லத்தில் வாழ்த்தொலி ஒழியாதமைய வேண்டும். வெற்றிச்சிறப்புகொள் நகரில் வாழ்த்தொலி என்றும் நிறைந்திருக்க வேண்டும். வாழ்த்தச் சித்தமான மானுடர் தெய்வங்களால் வாழ்த்தப்படுகிறார்கள்.”

சம்வகை அதை முன்னரே கண்டிருந்தாள். வாழ்த்துகூவும் பொருட்டு சாலையோரங்களில் கூடியிருப்பவர்களை. அவர்கள் அரசப்படையினரால் திரட்டப்பட்டோர் என அவளுக்குத் தோன்றும். அமைப்போர் பதறி அலைவார்கள். எண்ணி எண்ணி ஒவ்வொன்றையும் ஆராய்வார்கள். வாழ்த்தொலிப்போர் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. சில தருணங்களில் அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருப்பார்கள். விரல்களாலோ படைக்கலங்களாலோ ஒருவரை ஒருவர் தொட்டு செய்திகளை சொல்லிக்கொள்வார்கள். விழிகள் ஒன்றையொன்று நோக்கி உரையாடிக்கொண்டிருக்கும். அத்திரளை நோக்காமல் செவி மட்டும் கூர்ந்தால் மெல்லிய காற்று உலாவும் புதர்போல் ஓசை எழுவதை கேட்க முடியும். அறியாத ஒருவர் அத்திரளைப் பார்த்தால் அது முற்றிலும் ஒழுங்கற்றது என்று தோன்றும்.

ஆனால் உரிய தருணம் எழுந்ததும் அது மிக இயல்பாக செயல்களை செய்யத்தொடங்கும். அவர்களின் குரல்கள் வெடித்தெழும். களிகொண்டு கூச்சலிடுவார்கள். கூத்தாடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அதற்கென்றே வடிவமைக்கப்பட்டவர்கள்போலத் தோன்றுவார்கள். சம்வகை தன் தந்தையுடன் பலமுறை அணிவகுப்புகளை காண வந்திருக்கிறாள். மக்கள்திரளில் இருந்து பார்க்கையில் அங்கே ஒற்றை உயிர் ஒன்று முட்களுடனும் பீலிகளுடனும் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவே தோன்றும். அவளுடைய இளம்விழிகளுக்கு அது ஒரு விந்தைப் பெருவிலங்கென மாயம் காட்டும்.

சம்வகை மீண்டும் மீண்டும் கொம்புகள் எழுவதை கண்டாள். சுதமையிடம் கைகாட்டிவிட்டு அவள் தன் புரவியிலேறி கோட்டைக்கு வெளியே சென்றாள். வெளி முற்றத்தின் விரிந்த பிறைவடிவப் பரப்பில் முந்தையநாளே அங்கிருந்த அயலாரையும் வணிகர்களையும் விலக்கி மையவெளி ஒழித்து இடப்பட்டிருந்தது. அங்கு தங்கியிருந்தவர்கள் இருபுறமும் பிளந்து விலகி காடுகளை ஒட்டி திரண்டிருந்தார்கள். கங்கையிலிருந்து அஸ்தினபுரி வரைக்குமான நெடும்பாதை முழுக்க நிலம்நிறைத்து வந்துகொண்டிருந்த மக்கள்திரளுக்கு நடுவே ஒரு பலகைப்பாதை உருவாக்கப்பட்டிருந்தது.

ஒரே இரவில் அதை தென்னகத்து தச்சர்கள் அமைத்தனர். பலகைகளை நீள்வாட்டில் அமைப்பதே அஸ்தினபுரியில் வழக்கம். சிந்துகங்கை நிலம் முழுக்கவே அவ்வண்ணம்தான். தென்னகத்தார் அதை குறுக்காக அடுக்கினர். அது விந்தையெனத் தோன்றியது. ஆனால் அதை விரைவாகச் செய்ய முடிந்தது. எல்லா வகையான பலகைகளையும் அடுக்க முடிந்தது. பலகையின் ஒருமுனையில் தேர் ஏறும்போது மறுமுனை மேலெழுவதனால்தான் பலகைப்பாதை உடைந்து உருமாறுகிறது எனப் புரிந்தது. “தென்னகத் தச்சர்கள் திறன்கொண்டவர்கள்” என்றார் சுரேசர். “இச்சிறு உண்மை இங்குள்ள தச்சர்களுக்கு ஏன் தோன்றவில்லை?” என்று சம்வகை கேட்டாள். “இங்கே குடிகள் வேரூன்றிவிட்டிருந்தன. புதியவர்கள் எவரும் சேரமுடியாமல் குடிவாயில்கள் மூடப்பட்டிருந்தன. தென்னகம் வளரும் குழவி என ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டிருக்கும் நிலம்” என்றார் சுரேசர்.

சம்வகையும் காவல்படையும் கோட்டைமுகப்பில் வந்து நின்றதும் இரு மருங்கிலும் செறிந்துநின்று நோக்கிக்கொண்டிருந்த மக்கள் உரத்த குரலில் ஓசையிட்டனர். பலர் அவர்களை நோக்கி கைநீட்டி எதையோ கூறினர். பலர் நகைத்துக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். மீள மீளக் காண்பது அந்த நகைப்பு. தொடக்கத்தில் அவர்களுக்கு ஒரு பெண் அத்தகைய பொறுப்பிலிருப்பது உடன்பாடாக இல்லையோ என்று தோன்றியது. ஆனால் நகைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதை கண்ட பின்னர்தான் அது உவகை வெளிப்பாடுதான் என்றும், அவ்வாறு மட்டுமே அவர்களால் அதை வெளிப்படுத்த இயல்கிறது என்றும் தெரிந்தது. தன்னியல்பாக எழும் சிரிப்பு அது. அவர்களை அவள் பொருட்படுத்துவதில்லை எனினும் அவர்களின் நோக்குகளுக்கு முன்பாக வந்தவுடன் அவள் உடல்மொழி மாறத் தொடங்கியிருக்கும். ஒருபோதும் கடுமையான ஆணைகளை அவர்களை நோக்கி செலுத்த அவளால் இயலாது.

ஆனால் அந்தத் தருணத்தில் அவர்களின் சிரிப்பு சிறு ஒவ்வாமையை உருவாக்கியது. அவர்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடும் என்று அவள் அஞ்சினாள். பொதுமக்களுக்கும் முற்றத்தின் திறந்த வெளிக்கும் நடுவே படைவீரர்கள் தங்கள் வேல்களாலும் ஈட்டிகளாலும் ஒரு வேலியை உருவாக்கியிருந்தனர். ஆகவே அவர்கள் முற்றம் நோக்கி பிதுங்கி வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் அவ்வீரர்கள் அனைவருமே புதியவர்கள். அவர்களுக்கு படைக்கலப் பயிற்சி இருந்தது, படைப்பயிற்சியும் இருந்தது, ஆனால் அவை பிறிதொரு நிலத்தில் பிறிதொரு படையில் இணைவதற்கான பயிற்சி இல்லை. அஸ்தினபுரியின் நிலத்தில் அமைந்த அந்தப் புதிய படையில் அவர்கள் இன்னும் தங்களை முழுமையாக பொருத்திக்கொள்ளவில்லை.

சம்வகை காத்து நின்றாள். அத்தகைய தருணங்களில் காலம் துளித்துத் துளித்து சொட்டத் தொடங்கிவிடுகிறது. உள்ளம் பதறிப்பதறி சூழப் பறந்து பின் சலித்து அமர்கிறது. மிகத் தொலைவில் ஒரு முரசொலி. நீரில் ஒரு கொப்புளம்போல தோன்றிய கணமே மறைந்தது. ஒரு கொம்பொலி. ஓர் அலையெனத் தோன்றி மறைந்தது. அவள் நெஞ்சு படபடத்தது. எத்தனை பெரிய தருணம்! பேரரசி நகர்புகுகிறாள். பாரதவர்ஷத்தின் மும்முடியை சூடவிருப்பவள். அழியாச் சொற்களில் இங்கே வாழவிருப்பவள். ஆனால் அவளன்றி எவரும் அதை அப்போது உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதை உணரும் தனிமை அவளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் மீண்டும் முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. அதை அத்திரள் கேட்டுவிட்டிருந்தது. அவர்கள் அமைதியடைந்தனர். கோட்டை மேலிருந்த பெருமுரசு முழங்க கொம்புகள் தொடுத்துக்கொண்டு நீளொலியாகி எழுந்து சுழன்றன. கோட்டை பிளிறி நெளிவதாகத் தோன்றியது. அவள் திரும்பி நோக்கினாள். நீர்ப்பரப்பென ஒளியலைகள் பரவிய வெண்ணிறக் கோட்டை. அதற்கு முகில்கோட்டை என்று பெயர் வந்துவிட்டிருந்தது. அதற்கு ஐராவதீகம் என சூதர்கள் பெயரிட்டிருந்தனர். வெண்களிற்றுயானைநிரை. “முகில்களே யானைகளென்று எழுந்த கோட்டை. தேவர்கள் வந்திறங்குவது அந்த வெண்மதில்களுக்குமேல் என உணர்க!”

கோட்டைக்கு வெண்மை பூசப்பட்டபின் ஒவ்வொரு நாளும் பலநூறு பறவைகள் வந்து அதில் முட்டிமுட்டி இறகொடிந்து விழுந்துகொண்டிருந்தன. அவற்றின் உடல்கள் சருகுகள் என கோட்டைக்குக் கீழே கிடந்தன. யானைகள் கோட்டையைக் கண்டதுமே பிளிறியபடி உடல்குறுக்கி நின்றன. துதி நீட்டி துழாவி உடல் அதிர்ந்தன. காளைகளும் அத்திரிகளும் விழிசுருக்கி நின்று மெய்ப்புகொண்டன. நகரில் நிறைந்திருந்த ஒளி அனைத்து நிழல்களையும் அழித்திருந்தமையால் மக்கள் கோட்டையருகே வருவதை தவிர்த்தனர். பெருஞ்சாலைகள் மேலும் பெரிதாகத் தெரிந்தன. அங்கிருந்த கூழாங்கற்கள்கூட ஒளிகொண்டன. ஆனால் சில நாட்கள்தான். விரைவிலேயே அது விழிகளுக்குப் பழகியது. என்றும் அவ்வண்ணமே இருந்தது எனத் தோன்றியது.

அவள் கோட்டையின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்தாள். அது வீசிய ஒளியில் அவள் நிழல் காலடியில் விழுந்து மண்ணில் கரைந்ததுபோல் தெரிந்தது. அந்நிழல் முரசொலியில் அதிர்ந்தது. இக்கணத்தில் என் அகம் இத்தனை எண்ணங்களாகப் பிரிவது ஏன்? இதன் கூர்மையை ஏன் இப்படி தவிர்க்கிறேன்? இக்கோட்டையின் கற்கள் என, இந்த அறியா மக்கள் என, இவ்விலங்குகள் என ஏன் இத்தருணத்தில் மிதந்து நிற்க என்னால் இயலவில்லை? அறிந்தோர் அறிவின் சுமை பொறுத்தாக வேண்டிய பொறுப்பை கொள்கிறார்கள். அறிந்தோர். அறிந்தோர். அறிந்தோர். அது முரசொலியின் தாளம். அறிந்தோர் அறிந்தோர் அறிந்தோர் என ஓசையிடுகின்றன தொலைவில் முரசுகள்.

உடைவாளின் பிடியில் கைவைத்தபடி நிமிர்ந்து நின்றாள். அவளுடைய அசைவே ஆணையென்றாக அவளுக்குப் பின்னால் அணிப்படையினர் வெள்ளி மின்னும் கவசங்களுடன் நான்கு நிரைகளாக சீர் நடையிட்டு வந்தனர். தனக்குப் பின்னால் அவர்களின் ஓசைகள் திரள்வதை அவள் கேட்டாள். அவ்வோசையிலிருந்தே அவர்களின் அணிநிரையை உணர முடிந்தது. இசைச்சூதர்கள் இடப்புறமும் மங்கலச்சேடியர் வலப்புறமுமாக திரண்டனர். உள்ளிருந்து நூற்றெட்டு அந்தணர்கள் நிறைகுடங்களுடன் வந்து முகப்பில் மூன்று நிரைகளாக அணிவகுத்தனர். அவள் தலையைத் திருப்பி அவர்களை பார்க்கவில்லை. ஆனால் அந்த அணிவகுப்பு முற்றிலும் சீராக அமைந்திருப்பதை ஓசைகளிலிருந்து உணர்ந்தாள்.

முழுமை, பிழையின்மை, முழுமை. பிழையெழுவது அம்முழுமையின்மேல்தான். பெருமரத்தில் நாய்க்குடை என அது முளைக்கிறது. அவள் கவலை பெருகி வந்தது. அவள் பெருமூச்சுடன் தன்னை எளிதாக்கிக்கொண்டாள். தொலைவிலிருந்து முரசொலியும் கொம்பொலிகளும் பெருகி எழுந்து வந்தன. கோட்டைச்சுவரில் அறைந்து திரும்ப அதே விசையுடன் எழுந்தன. கோட்டையை அவள் ஒருகணம் திரௌபதியின் பார்வையில் பார்த்தாள். அங்கு அவள் எதிர்பார்க்கக்கூடியது கரிய இருட்திரை என்று எழுந்து நின்ற தொன்மையான கோட்டையை. மகாமரியாதம் என்று அது சூதர்களால் அழைக்கப்பட்டது. கருங்களிற்றுயானைநிரை. அதன் மீதமைந்த மரத்தாலான காவல்மாடங்களை. இரும்புக் கீல்களும் உருளைகளும் கொண்டு கல்லென்றே மாறிவிட்டிருந்த கதவுகளை.

இதோ வெண்ணிற ஒளியுடன் புதிய கோட்டை நின்றிருக்கிறது. “பாற்கடலின் அலையொன்று எழுந்து நின்றதுபோல!” என்று அதை ஓர் அயல்நிலத்துச் சூதன் பாடினான். “ஒரு மாபெரும் புன்னகை. ஒளிரும் பல்நிரை” என்றான் அவன் தோழன். “மண்மகள் அணிந்த வெண்பட்டு மேலாடை” என்றான் இன்னொருவன். அதன் காவல்மாடங்கள் அரக்கு மின்னும் மரத்தாலானவை. அனைத்துக் கீல்களும் குமிழ்களும் பொன்னென மின்னின. உள்ளே நகரத்தெருக்களின் இருமருங்கும் அன்று கட்டப்பட்டவை போன்ற கட்டடங்கள். அவை பீதர்நாட்டு ஆடிகளால் விழிகள் கொண்டன. அஸ்தினபுரி சற்று முன்னர் கருவூலத்திலிருந்து எடுத்து வெண்பட்டுத் துணியால் துடைத்து பீடத்தின்மேல் வைக்கப்பட்ட அருநகை போலிருந்தது.

நகர் மாறிவிட்டிருப்பதை பேரரசி அறிந்திருப்பாள். ஆனால் அவள் விழிகள் இயல்பாக பழைய நகரையே தேடும். புதிய நகர் அவளை துணுக்குறச் செய்யும். அவள் எதை காண்பாள், எவ்வண்ணம் உணர்வாள்? ஒருகணம் அவள் விழி விரிவதை தான் காணவேண்டும் என்று சம்வகை எண்ணினாள். அத்தனை நாட்கள் அங்கு பணியாற்றியதன் உளநிறைவை அப்போது அவள் அடையக்கூடும். இந்திரப்பிரஸ்தத்தை எழுப்பிய அரசியின் முன் இந்நகரின் புதுமை ஒன்றும் பெரிதல்ல எனினும்கூட அந்த ஒருகண விழியசைவே போதுமானது.

அத்தனை விரைவாக அந்நகர் மீண்டெழுமென்று அப்பணிகளைத் தொடங்கியபோது அவள் எண்ணவே இல்லை. யுதிஷ்டிரன் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் சினம் கொண்டு விசையூட்டிக்கொண்டே இருந்தார். “அவர் என்ன எதிர்பார்க்கிறார்? ஒரு முழு நகரையும் ஏழெட்டு நாட்களில் திருப்பிக்கட்டுவதா?” என்று அவள் சொன்னாள். “இயலும், மீண்டெழுபவை மிகமிக விரைவாகவே எழுந்திருக்கின்றன” என்று சுரேசர் சொன்னார். “நம்மிடம் செல்வம் உள்ளது. கைகள் உள்ளன. காலம் ஒரு பொருட்டா என்ன?” அவள் எண்ணியதைவிட பலமடங்கு விசையுடன் அப்பணி நடந்தது. ஒவ்வொரு பணிக்கும் பத்துபேர் செய்யவேண்டிய இடத்தில் நூறுபேர் வந்தமர்ந்தனர். நூறு பேரும் திறன் மிக்கவர்களாக, அத்துறையில் தேர்ச்சிமுதன்மை கொண்டவர்களாக இருந்தனர். அஸ்தினபுரி தன்னை தானே பழைய அஸ்தினபுரியிலிருந்து கீறி வெளியே எடுத்துக்கொண்டது.

சம்வகை திரௌபதி அங்கு வந்து அவ்வரவேற்பை ஏற்று கடந்துபோவதை உள்ளத்திற்குள் ஒருமுறை நடித்துவிட்டாள். பின்னர் ஒருகணம் திகைப்பெழுந்து அதை திரும்பப் பார்த்தபோது அரசி அணிகளேதுமின்றி இருப்பதை தான் கண்டதைப்போல் உணர்ந்தாள். நெடிய மெல்லுடல் கொண்ட கரிய அன்னைவடிவம். நிமிர்ந்த தலை சற்றே சரிய, பெரிய குழல்சுருள்கள் தழைய, கடுமையும் கனிவுமென விரிந்த தெய்வ விழிகள் கொண்டு நோக்குபவள். உடலில் பொன்னென்றும் அணியென்றும் ஒரு துளி மின்கூட இல்லை. கருவறையில் முதற்புலரியில் அணியிலி கோலத்தில் நின்றிருக்கும் கற்சிலை.

அவள் படபடப்படைந்தாள். முந்தைய நாளே அனைத்து அணிகளையும் கங்கைக்கரைக்கு அனுப்பியிருந்தார்கள். துணையமைச்சர் சுதமன் அவ்வணிகளுடன் உடன் சென்றார். அவர் அங்கே தங்கி, அரசி வந்திறங்கியதும் நேரில் கண்டு, அனைத்து அணிகளையும் கொடுத்து அவை பேரன்புடன் யுதிஷ்டிரனால் அவளுக்காக தேர்ந்தெடுத்து அளிக்கப்பட்டவை என்று கூறவேண்டும் என பணிக்கப்பட்டிருந்தார். அவற்றை அணிந்தே அரசி நகர்புக வேண்டுமென்று அரசர் கனிந்து கோருகிறார் என்று கூற ஆணையிடப்பட்டிருந்தது. அவர் அங்கு சென்று காத்திருந்தார். முந்தைய நாள் அந்தியிலேயே அங்கு திரௌபதி வந்திருந்தாள். அவளிடம் அணிகளை அளித்த செய்தியும் வந்துவிட்டிருந்தது.

அரசி இரவு துயின்று புலரியில் எழுந்து கிளம்பியிருந்தாள். அவள் அணிநகை அணிந்திருக்கிறாளா என்பதை சுதமன் செய்தியென அனுப்பியிருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. அதை சுதமன் செய்ய இயலாது. அரசி தன் தனியறையில் அந்நகைகளை அணிந்திருக்கலாம். மூடுதேரில் அவளை நோக்க அவரால் இயலாமலிருக்கலாம். அந்நகைகளை அணிவிக்கும் பொருட்டு ஏழு அணிச்சேடியர் சுதமனுடன் அங்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் உசாவி அச்செய்தியை சுதமன் அஸ்தினபுரிக்கு அனுப்பியிருக்கலாம். ஒருவேளை அச்செய்தி சுரேசரை வந்தடைந்திருக்கலாம்.

அவள் காலையிலிருந்து சுரேசரை பார்க்கவில்லை. கோட்டையையும் அரண்மனையையும் முழுமையாக சுற்றி அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தானே சீர்நோக்கிவிட்டு அவள் கிழக்குமுகப்பிற்கு வருவதற்குள் இளவெயில் வாளொளி கொண்டிருந்தது. அஸ்தினபுரிக்குள் பேரரசி அணியேதும் இல்லாமல் நுழைவதைப் பற்றி அவளால் எண்ணிப்பார்க்க இயலவில்லை. அது அங்கு திரளென கூடியிருக்கும் அனைத்து விழிகளையும் ஏமாற்றம் அடையச்செய்யும். எளிய குடியினர் மானுடரை அரசரென்று பார்ப்பது அணிகளினூடாகவே. முடிசூடுகையிலேயே அரசர்கள் தெய்வச் சாயல் கொள்கிறார்கள். ‘அகல் விளக்குக்கு சுடர் என அரசருக்கு மணிமுடி’ என்று சூதர் பாடல் உண்டு. சுடரிலா விளக்கு ஒரு வெற்றுச் சிமிழ் மட்டுமே.

அணிகள் இன்றி ஓர் அரசி மணிமுடிசூடி அமர்ந்தது முன்பெப்போதேனும் நிகழ்ந்திருக்கிறதா என்று அவள் எண்ணிப்பார்த்தாள். அரசநூல்கள் எவையும் அவ்வண்ணம் சொன்னதாக அவள் நினைவுக்குப் படவில்லை. முன்பு தேவயானியும் தபதியும் தமயந்தியும் சத்யவதியும் அவையமர்ந்தபோது சூடிய அணிநகைகளின் நீண்ட அட்டவணையையே நூல்கள் கூறின. அவர்கள் மண்ணில் உள்ள அனைத்து அழகுகளையும் நகைகளாக்கி தங்கள்மேல் அணிந்திருந்தனர். தளிர்களை, மலர்களை, கற்களை, நீரை, நெருப்பை, முகிலை. ‘நிலம் அனைத்து அழகுகளையும் சூடுவதுபோல பெண்டிர் நகைகொள்கிறார்கள்’ என்று அதை அரசநூல் கூறியது.

அவள் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்ற எண்ணத்தை அடைந்தாள். இந்திரப்பிரஸ்தத்தின் மின்படைக்கலக் கொடியுடன் தொலைவில் முதல் வீரன் வருவதை பார்த்தாள். அக்கொடி மட்டும் ஒரு பொன்னிறப் பறவை என வருவதாகத் தோன்றியது. தொடர்ந்து கவசஉடை அணிந்த புரவிவீரர்கள் அணிவகுத்து அணைந்தனர். அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியும் பாஞ்சாலத்தின் விற்கொடியும் நெருங்கி வந்தன. வாழ்த்தொலி எழுப்பியபடி சூதர்கள் நிறைந்திருக்க தட்டுத்தேர் முதலில் வந்தது. இசைச்சூதருடன் இன்னொரு தேர். அவை வளைந்து இருபுறமும் விலக நடுவே புரவிவீரர்களால் காக்கப்பட்ட திரௌபதியின் தேர் தொலைவில் அணுகி வந்தது.

இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடியுடனும், அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியுடனும், பாஞ்சாலத்தின் விற்கொடியுடனும் வந்த மூன்று கவசவீரர்கள் ஒளிரும் வெள்ளிக் கவசமணிந்த புரவிகளில் மூன்று அம்புகள் பாய்ந்துவருவதுபோல் சுடர் கொண்டு அணுகினர். விரைவழிந்து புரவிகள் நிரைகொள்ள அவர்கள் கொடியை ஊன்றி உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். “பாஞ்சாலத்தின் அனல்மகள், இந்திரப்பிரஸ்தத்தின் தலைவி, அஸ்தினபுரியின் அரசி, குருகுலத்தின் அன்னை, குடிகளின் தெய்வம், பேரரசி திரௌபதி அணுகுகிறார்!” என்று கூவினர்.

அங்கு கூடிநின்ற படைவீரர்கள் அனைவரும் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி “பேரரசி வாழ்க! பேரரசி வாழ்க! வெல்க பாஞ்சாலப் பேரரசி! வெல்க கொற்றவை! வெல்க திருமகள்! வெல்க கலைமகள்!” என்று கூவினர். கொடிவீரர்கள் இருபுறமும் விலகி அகல திரௌபதியின் தேர் அணுகி புரவிகள் குளம்புகள் மாற்றி மிதித்து நிலைகொள்ள விசையழிந்து கரையணுகும் படகென அசைந்தாடி நின்றது. வேதியர் பொற்குடங்களில் கங்கை நீருடன் வேதம் ஓதியபடி மூன்று நிரைகளாக தேரை அணுகினர்.

திரௌபதி திரைவிலக்கி தேரின் படிகளில் இறங்கி மண்ணில் கால் வைத்தாள். வேதியர் வேத முழக்கத்துடன் அவள் மேல் கங்கை நீர் தெளித்தனர். மஞ்சள் அரிசியும் மலர்களுமிட்டு அவளை வாழ்த்தினர். கைகூப்பி குனிந்து அவள் அந்த வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டாள். வேதியர் வாழ்த்தியபடி பிரிந்து அப்பால் விலக அணிச்சேடியர் மங்கலத்தாலங்களுடன் அவளை அணுகி வாழ்த்துரைத்தனர். “மங்கலச்செல்வி, பெருவளத்தாட்டி, விளைபெருகும் பெருநிலமென்றானவள், குடிகாக்கும் அன்னை, அஸ்தினபுரியின் பேரரசி திரௌபதிக்கு நல்வரவு” என்று மூத்த சேடி கூறினாள். அவள் மேல் மஞ்சள் நீர் மலருடன் தெளித்து வாழ்த்தி அவர்கள் இடப்பக்கமாக விலக இசைச்சூதர் இருபிரிவினராக பிரிந்து வழிவிட்டு நின்று மங்கல இசைமுழக்கினார்கள்.

சம்வகை சீர்நடையிட்டு முன்னால் செல்ல அவளுக்குப் பின்னால் கவசஉடை அணிந்த வீரர்கள் சீரான நடையோசையுடன் வந்தனர். அவள் அருகணைந்து தன் உடைவாளை உருவி நிலம் நோக்கி தாழ்த்தி தலைவணங்கினாள். திரௌபதி புன்னகைப்பதை அவள் நோக்காமலேயே உணர்ந்தாள். நிமிர்ந்தபோது அப்புன்னகையைக் கண்டு தானும் புன்னகைத்தாள். “உன் பெயர் சம்வகை அல்லவா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அரசி” என்றபோது சம்வகை மெய்ப்பு கொண்டாள். “உன்னைப்பற்றி யுயுத்ஸுவிடம் கேட்டறிந்தேன். அவன் விழிகளில் ஒரு சிறு மின்னலைக் கண்டேன்” என்றாள். சம்வகை நெஞ்சு படபடக்க நின்றாள்.

“நன்று” என்றபடி பேரரசி திரும்பும்போதுதான் அவள் அணி நகைகள் எதுவுமே அணிந்திருக்கவில்லை என்பதை சம்வகை கண்டாள். தேரிலிருந்து இறங்கி வரவேற்புகளையும் வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்ளும் போதெல்லாம் அது தெரியவும் இல்லை. அவள் முழுதணிக்கோலத்தில் இருப்பவள் போலத்தான் தோன்றினாள். எண்ணியிராக் கணத்தில் பின்னால் அணிவகுத்து நின்ற படைவீரர்களில் ஒருவன் நிரைமுறித்து முன்னால் பாய்ந்து தனது ஈட்டியை வான் நோக்கி வீசி “பேரரசி திரௌபதி வெல்க! பாரதவர்ஷத்தின் பேரரசி வெல்க! எரியெழுந்த மங்கை வெல்க!” என்று கூவினான். அணிவகுத்து நின்றிருந்த அனைத்து வீரர்களும் கலைந்து அவனை திரும்பிப்பார்த்தனர். சம்வகை திகைத்து உடல் செயலிழந்து நின்றாள்.

ஆனால் அதற்குள் இருபுறங்களிலும் கூடி நின்ற பொதுமக்கள் பெரும் வாழ்த்துக் கூச்சலுடன் தங்களைக் காத்து நின்றிருந்த படைவேலியை உடைத்தபடி முற்றத்தை நிறைத்து அவர்களை நோக்கி வந்தனர். கைகளை வீசி, துள்ளிக்குதித்து, வெறிகொண்டு வாழ்த்தொலி எழுப்பினர். கையிலிருந்த ஆடைகளை வான் நோக்கி வீசிப்பிடித்தனர். கண்ணீரும் சிரிப்பும் அழுகைகளுமாக முகங்கள் வெறித்து மிதந்து அலைந்து கொந்தளித்தன. ஒரு கணத்தில் அஸ்தினபுரி அதன் முந்தைய யுகத்தை சென்றடைந்தது. முதல் முறையாக அதில் குடிகள் உருவாகி வந்துவிட்டிருப்பதை சம்வகை கண்டாள். முதலில் எழுந்த பதற்றமும் திகைப்பும் அகல உளம் நிறைந்து விழிநீர் மல்கி அவள் புன்னகைத்தாள்.

முந்தைய கட்டுரைவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2