ஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்

கபிலன் ஷ்ருதிடிவி

 

ஸ்ருதி டிவி – யூடியூப் வலைத்தளம்

 

அன்புள்ள ஜெ,

 

நம் நண்பர்களின் எழுத்தாளர்களின் உரைகளை மீண்டும் ஒருமுறை கேட்டேன். விழா ஏற்பாடுகளிலும் வரவேற்பிலும் வெளியே நின்றிருந்ததால் ஹெச்.எஸ். சிவபிரகாஷ் அவர்களின் உரையைத் தவறவிட்டேன். குழந்தைகள் அடம்பிடித்ததில்  வெளியே சென்று நிற்க வைத்து ஆசுவாசப்படுத்தியதில் சு.வேணுகோபால் அவர்களின் உரையும் கேட்க முடியவில்லை. முன்பு இவ்வாறு தவறவிட்டால் பெரும் வருத்தமே எஞ்சும். ஆனால் இப்பொழுது அப்படி இருப்பதில்லை.

 

முன்பு சென்னையில் நடக்கும் இலக்கிய கூட்டங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கு தனியாக அமர்ந்திருப்பேன். அவ்வாறு தனியாக வந்த வேறு சிலர் உண்டு. அவர்களோடு மட்டும் உரையாடுவதுண்டு. அன்றைய உரைகள் குறித்தும் புத்தகம் குறித்தும் மேலோட்டமாக பேசுவதுண்டு. தொடர்நதுசென்றுகொண்டிருந்த கேணி கூட்டத்தலும் கூட இந்த நிலைதான். எழுத்தாளர்கள்  அன்றைய கூட்டங்களில் ஆற்றிய உரைகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் அவை நினைவில் ஓரளவு மட்டும் உள்ளன. அதை மீண்டும் மீட்டெடுக்க முடியாது. அது ஒரு குறையாக இருந்தது.

 

அதில் இன்னொரு பிரச்சனையும்  உண்டு. தொடர்ச்சியாக செல்லும் ஒருவன் எழுத்தாளர் தன் உரைகளில் சொன்னதையே திரும்ப சொல்வதைக் கேட்டு சலிப்படைந்துவிடுவான். எப்படியும் அறுபது பேர் வருகிற உரையில் ஐம்பது பேர் புதியவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த பத்து பேர் மட்டும் தொடர்ச்சியாக அனைத்து கூட்டங்களுக்கும் இலக்கிய குழு மனப்பான்மை இன்றி வருபர்கள். அவர்கள் ஒரு தருணத்தில் சலிப்படைந்துவிடுவர். பத்து கூட்டங்கள் தொடர்ந்து ஒரு எழுத்தாளரின் / படைப்பாளியின் உரையைக் கேட்டும் ஒருவர் பதினொன்றாம்  கூட்டத்தில் அந்த உரையே தானே ஆற்றிவிட முடியும் என்று சொல்லுமளவிற்கு ரிப்பீட் ஆகும்.  “கோயல் கீ அண்டா”  என்று த்ரி இடியட்ஸ் படத்தில் இஸ்திரி போடுபவன் கூட சேர்ந்து பேசுவது போல..

 

அதனால் சில கூட்டங்களில் வாழ்த்துரைப்பவர்களின் பெயர்களைக் கண்டதும் ஒரு சஞ்சலம் உண்டகும். அதில் ஒருவர் முக்கியமானவராக இருப்பார் மூன்றுபேர் என்ன பேசுவார்கள் என என்னால் சொல்லிவிட முடியும். அதனால் அங்கு செல்வதையே  தவிர்த்துவிட்டாலும் ஒரு வருத்தம் இருக்கும்.

 

அந்த தருணத்தில் தான் ஸ்ருதிடிவி வந்தது. அதன் வழியாக தவிர்த்த உரையை பார்க்க முடிந்தது ஒரு பெரும் வசதி. ஆனால்  இலக்கிய கூட்டங்களை இப்படி ஒளிபரப்பினால் பார்வையாளர்கள் குறைந்துவிடுவார்கள் என்று ஒரு கருத்து கிளம்பியது. அந்த வாதத்தின் அபத்தம் அடுத்த கணமே அனைவருக்கும் உரைத்தது. அதன்பின் அது தொடரவே இல்லை.

 

இதில் ஸ்ருதி டிவி பார்வையாளர்கள் மற்றும் விருப்பக்குறிகள் சந்தாதார்ர்கள் பின்னூட்டங்கள் போன்றவற்றை கண்டுகொள்வதும் இல்லை. அனைத்து கூட்டங்களுக்கும் அவர்கள் ஒரே முன்னுரிமை அளிக்கிறார்கள். மேலும்  கண்ணியமான பின்னூட்டங்களைத் தவிர கிண்டல்களை நீக்கியும் விடுகின்றனர். இது இலக்கியத்தின் பால் பெரும் அர்ப்பணிப்பு இல்லாவிடில் நிகழவே முடியாது. சில நேரங்களில் அதற்கான வருவாயும் கூட இருக்காது என்பது நமக்கே தெரியும். அவர்கள் எதுவும் வற்புறுத்துவும்  இல்லை. ஆனால் பதிலுக்கு அவர்களுக்கு அளிக்கப்படும் தொகை  ஒரு பிறந்தநாள் புகைப்படக்காரரின் இரண்டு மணிநேர ஊதியத்தை விடவும் குறைவுதான் என்றும் புரிகிறது.

 

ஸ்ருதி டிவியின் வருகைக்குப் பின்  இலக்கிய மேடை உரைகள்  மாறியிருக்கின்றன. சில உரைகளின் கீழே திரும்பவும் அதே பல்லவியா என்ற பின்னூட்டங்கள் வருகின்றன. அது பேசுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை அளிக்கின்றன. முன்னால் அமர்ந்திருக்கும் சொற்ப மனிதர்களைவிடவும் அந்த காமிரா வழியாக காணப்போகும் சமகால/வருங்கால வாசகர்களை மனதில் வைத்து பேச வேண்டியிருக்கிறது. அதன்பின் ரிப்பீட்டுகள் பெரும்பாலும் இல்லை என்பது என் கருத்து.

 

சங்க இலக்கியத்தில் கபிலனின் வருகைக்குப் பின் குறிப்படத்தக்க பாய்ச்சல் நிகழ்ந்ததாக படித்தருக்கிறேன். அது எந்தளவு உண்மையோ அறியேன். ஆனால் நவீன இலக்கிய மேடைகளில் கபிலனின் வருகைக்குப் பின்  பெரும் மாற்றம் நிகழ்வதை கண்கூடாகக் காண்கிறேன். ஸ்ருதி டிவி கபிலன் அவர்களுக்கும் குழுவினருக்கும் வாசகனாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

அன்புடன்,

 

காளிப்ரஸாத்

 

கபிலன் பற்றி சமஸ்

ஷ்ருதி டிவி கபிலன் பேட்டி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53
அடுத்த கட்டுரைதன்னந்தனிநிற்பது – கடிதங்கள்