பொதுவாக இலக்கியச் சண்டைகள் ஆர்வமூட்டுபவை. எம்.கோவிந்தனின் புகழ்பெற்ற சொற்றொடர் ஒன்று உண்டு ‘இலக்கியப்பூசல் என்பது உண்பதற்கு ஏற்பச் சமைக்கப்பட்ட இலக்கியச் செய்திகளின் தொகுப்பு’. மலேசிய இலக்கியம் பற்றிய செய்திகளை இந்த இலக்கியப்பூசலில் இருந்து எளிதாக உணர்கிறோம். ஆனால் தகவல் கட்டுரைகளின் சோர்வூட்டும் அறிவித்தல்முறை இவற்றில் இல்லை
ம.நவீன் இன்றைய மலேசிய இலக்கியத்தில் நிகழும் இரண்டு முதன்மையான பூசல்களை எதிர்கொள்கிறார். இரண்டுமே தமிழ் எழுத்தாளர் சாம்ராஜ் அங்கே கூலிம் இலக்கிய முகாமில் மலேசியக் கவிதைகளைப்பற்றிச் சொன்னவற்றுக்கான எதிர்வினைகளுக்குரிய எதிர்வினைகள்
பொதுவாக இத்தகைய எதிர்வினைகள் வழியாக அவற்றால் எதிர்கொள்ளப்படுபவர்கள் எதையும் கற்றுக்கொள்வதில்லை. அவர்கள் தேங்கிவிட்டவர்கள், மேலே செல்ல வழியில்லாதவர்கள். அதோடு விவாதம் ஆணவத்தை தொட்டு உசுப்புவதனால் உறுதியான நிலைபாடு எடுக்கவும் வேண்டியிருக்கிறது.ஆனால் இவற்றை பொதுவாக வாசிக்கும் இளம்வாசகன், அவன் அறிமுக நிலையில் இருந்தான் என்றால் பயனடைவான்
ஆகவே எந்த விவாதத்தையும் அவற்றை வெளியே நின்று கவனிக்கும், கற்றுக்கொள்ள ஆர்வம் கொண்ட இளம்வாசகனுக்காகவே நிகழ்த்தவேண்டும் என்பது முக்கியமானது