தன்னந்தனிநிற்பது – கடிதங்கள்

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்

அன்புள்ள ஜெ,

 

சென்ற விஷ்ணுபுரம் விழாவில் உங்கள் உரையை இப்போதுதான் கேட்டேன். பலமுறை கேட்கவேண்டிய உரை. மிகமிக எளிமையாக, ஆனால் மிகமிக நுட்பமான ஒன்றைச் சொல்ல முடிகிறது உங்களால். சொல்லிச் சென்றடையாதது. ஆனால் ஏதோ ஒருவகையில் உணர்த்திவிடக்கூடியது. உங்கள் உரைகளிலேயே நல்ல உரை இது என்பேன். ஆனால் இயல்பாக அதைச் செய்திருக்கிறீர்கள்.

 

தன்னந்தனி நிற்பது என்ற வரியை சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அந்த வரியிலிருந்து அபி கவிதைகளின் தனிமை நோக்கி வரமுடிகிறது

 

ஆர்.எம்.பாஸ்கர்

 

அன்புள்ள ஜெ

 

விஷ்ணுபுரம் விருதுவிழா மேடையில் நகம்கடித்துக்கொண்டே இருந்தீர்கள். ஏன் என்று நானும் எண்ணிக்கொண்டே இருந்தேன். பதற்றமாகவே மேடைக்குப் பேசவும் வந்தீர்கள். அதற்கு ஒரு காரணமும் சொன்னீர்கள். ஆனால் அது உண்மை அல்ல என்று உங்கள் உரை காட்டியது. நீங்கள் களைத்திருந்தீர்கள். ஆனால் அதுவல்ல முக்கியமான காரணம். நீங்கள் வேறொரு மனநிலையில் இருந்தீர்கள். அந்தப்பேச்சு உங்கள் மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது என்றால் அதைவைத்துக்கொண்டு அந்த மேடையில் மற்றவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

 

அற்புதமான உரை. எளிமையான முறையில் மிகநுட்பமானவற்றைச் சொல்லமுடிவதுதான் ஆன்மீகமான ஒரு தெளிவுநிலை. அவர்களின் உரைகள்தான் முக்கியமானவை. உங்கள் உரையின் இந்த எளிமையும் அது இயல்பாக கூர்மை அடைந்து கிளாஸிக்குக்குள் செல்வதும் அற்புதமான அனுபவங்கள்

 

சுபத்ரா

முந்தைய கட்டுரைஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்
அடுத்த கட்டுரைமீண்டும் மலபார்