“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”

மூன்றுநாட்கள், இரண்டு நூல்வெளியீடுகள்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”… தீம்புனல் நாவல் வெளியீட்டு நிகழ்வில் நீங்கள் சொல்கிற இந்த ஒற்றைவரி இன்றைய நாள்முழுதையும் மீளமீள ஒரு கலையாழத்துக்குள் கொண்டுசெல்கிறது. ஜி.காரல் மார்க்ஸ் அவர்களின் ‘தீம்புனல்’ நாவல் வெளியீட்டு நிகழ்வு முடிந்த இருதினங்களாகவே அதன் காணொளிகளைக் காண காத்திருந்தேன். முழுக்க கலைசார்ந்த ஒரு பார்வையை முன்வைக்குமிடத்தில் தான் விமர்சனமும் ஒரு தனிக்கலையாகப் பரிணமிக்கிறது. இக்குரல் ஒருவகையில், சுந்தர ராமசாமி உள்ளிட்ட முன்னாளுமைகளை எனது நினைவுச்சுருளில் முகம்தோன்ற வைக்கிறது.

நீங்கள் நன்கு அறிந்த ஒரு தகவல்தான் இது. வீரப்பனோடு தொடர்புற்று, அதன்விளைவாக பல வழக்குவிசாரணைகளைச் சந்தித்து சிறையலடைக்கப்படுகிறார் ஏழுமலை. ஒன்பதாம் வகுப்புவரை படித்திருத்த முப்பதுவயது ‘தடா கைதி’ அவர். இலக்கியத்தின் மீது எவ்வித ஈடுபாடும் பற்றும் அற்றவர். ஒருகட்டத்தில், தான் தீவிரமாக நம்பிய சித்தாந்தமோ, தத்துவமோ, கொள்கைகளோ எதுவும் மனத்துணைக்கு வாராத நேரத்தில் யதேச்சையாக அவர் ஒரு கலைதரிசனத்தை கண்டடைகிறார். கடைசியில், அவர் தன் தவிப்புமனத்தை கலைவழியாகத்தான் ஆற்றுப்படுத்த முடிந்தது.

சுந்தர ராமசாமியின் ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு அவருக்கொரு கடிதம் எழுதுகிறார் ஏழுமலை. உடனடியாக சுராவிடமிருந்து பதில்கடிதம் வருகிறது. கலையை மைய இழையாக வைத்து ஐம்பத்தேழு கடிதங்களை தன்னை மீட்டெடுத்த எழுத்தாளருக்கு எழுதியனுப்புகிறார், சிறைக்குள்ளிருந்த அந்த தடா கைதி. ஒரு மெய்கலை நிகழ்த்தும் எளிய அற்புதமிது. தன் வாழ்வின் கடைசிகணம்வரை தன்னை கூர்தீட்டி நுட்பப்படுத்திக்கொள்ளும் விசாலமனம் உடையவர்களால்தான் கலையியக்கம் ஒரு அறிவுச்செயல்பாடாக முன்னகர முடியும். உங்கள் வார்த்தைகளில் சொல்லப்போனால், ‘மறுத்தும் நிரப்பியும் முன்செல்லல்’.

‘என்னுடைய மனம் உன்னுடைய மனதை சந்திக்கிற ஒரு நுட்பமான புள்ளியை நான் கண்டடைந்திருக்கிறேன். அது ஒரு நுட்பமான தருணம். அத்தருணத்தை நோக்கி தவம்செய்க!’

காலத்தின் ஊழ்சொல் என்பதாகவே அக்காணொளி உரையில் எழுகிற நிறைய சொற்களை நான் மனப்படுத்துகிறேன். இக்கணத்தின் எனக்கான சொல்லாகவும் இவைகள் இருக்கிறது. எங்கோ இருக்கிற ஒரு தவிப்புமனதைக் கண்டடைந்து, வாழ்வுபற்றிய முழுமைத்தரிசனத்தை படிப்படியான மாற்றங்கள்வழி நிகழ்த்திச்செல்லும் ஒப்பற்ற இலக்கிய அனுபவத்தை எங்களுக்கு வழங்குகிறீர்கள். இருதயத்து நன்றிகள் உங்களுக்காக!

இப்படிக்கு,

சிவராஜ்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 70
அடுத்த கட்டுரைராம்குமாரின் ‘அகதி’ – காளிப்பிரசாத்