சத்- தர்சன்- ஆனந்தகுமார்

புத்தாண்டு

புத்தாண்டு, சத்- தர்சன் — கடிதங்கள்

அன்புள்ள ஜெ. வணக்கம்

தங்கள் வரவு நல்வரவானது..

சற்றே தாமதமான இந்த நன்றிக் கடிதத்தை எவ்வாறு உங்கள் தளத்தில் எழுதுவது எனும் முறை தெரியவில்லை.

விருந்தினர்கள் உபயோகிக்கும் வகையில் இக்கட்டிடத்தை சீராக்கி முடிப்பதில் கடுமையான பணி அழுத்தம் இருந்ததே தாமதத்திற்குக் காரணம்.. இந்த இடம் எப்போதும் தீவிர உடல், மன உழைப்பைக் கோருகிறது. இது போன்ற காரியங்களில், சில வேலைகளை தொடர்ந்து முன்னோக்கிச் சுழற்றவில்லையென்றால், அது பின்னோக்கி நகர்ந்துவிடும் பொறியியக்கத்தைக் கொண்டிருக்கிறது.

சத்தர்ஷன் எனும் இந்தக் கற்றல் மையத்திற்கு உங்களின் அன்பான வரவும் , இருப்பும் ஒளியூட்டியது. இம்மையத்தைக் குறித்து தங்கள் தளத்தில் விரிவாகப் பதிந்தமைக்கு எங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சார்பில் எல்லையற்ற அன்பும், நன்றியும் சார்.

தொடர்ந்து தங்களுடைய கலைகள் , இலக்கியம், மெய்யியல் மற்றும் படைப்பு சார்ந்த முகாம்கள் மற்றும் பகிர்வுகளை இங்கே நிகழ்த்த வருமாறு இதயப் பூர்வமாக அழைக்கிறோம்.

நண்பர்கள் கடைபிடிக்கும்வண்ணம் சில எளிய விதிகள் தவிர இங்கே வேறு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

 

பல வருடங்களாக என்னைத் தொடர்பு கொள்ளும் படைப்பாளி நண்பர்களில் பலர் இவ்விடத்தை சிக்கலான விதிகள் நிறைந்த ஒரு ஆசிரமமாகக் கருதுகின்றனர்.  இது ஒரு ஆசிரமம் அல்ல.  அவ்வாறு சுற்றியுள்ள கிராம மக்களால் புரிந்து கொள்ளப்படுவதாலும், குறிப்பிடப்படுவதாலும் அப்பெயர் பெற்றது.  இது ஒரு ‘தொடர்கற்றல் மையம்’ மட்டுமே.  எனவே படைப்பாளிகள் மற்றும் தீவிர வாசிப்பாளர்கள் இதனை எவ்வித மத அடையாளமாகவோ , ஒரு குறிப்பிட்ட ‘சிந்தனைப் பள்ளி’ அல்லது தியானப் பயிற்சி மையமாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

காலையும், மாலையும் இங்கே மேற்கொள்ளப்படும் மௌனம் என்பதும் நம் அடிப்படை நுண்ணுணர்வை மீட்டெடுக்க மட்டுமே.  மற்றபடி குறிப்பிட்ட தியானப் பயிற்சிகளோ, சாதனா முறைகளோ, எதையோ அடைவதற்கான அக நோக்கங்களோ இம்மையத்திற்கென்று சுயமாக இல்லை. அவ்வப்போது இங்கே பயின்று பார்க்கப்படும் பல்வேறு விதமான ஆன்மீகப் பட்டறைகள் மற்றும் மாற்று வாழ்வியல் சிந்தனைகளைத் தவிர.

இம்மையத்தின் இயங்காதாரத்திற்காக சில சமயங்கள் தியானம், யோகா, நல்லுணவு தொடர்புடைய  புத்தியிராக்கப் பயிற்சிகளும் பல்வேறு நண்பர்களால் அவ்வப்போது ஒருங்கிணைக்கப்படுகிறது.

மற்றபடி இங்கே எவ்வித தத்துவத் தேக்கமும் இல்லை.  ஆனால் அனைத்தும் வந்துபோவதற்குமான விசாலமான இடமுண்டு.  ஒரு யோகி தன்னுடைய உடற் சார்ந்த பயிற்சியை முடித்துவிட்டு அவருடைய யோகப் பாயை சுருட்டி எடுத்துக் கொண்டு சென்றுவிடுவதைப் போலவே இங்கு வருபவர்கள் அவரவர் பயிற்சி முறைகளை எடுத்துச் சென்று விடுவர். மீண்டும் மீண்டும் இவ்விடம் காலியாகவே விடப்படும். வெவ்வேறு சாதனா முறைகளும், பயிற்சிகளும், தத்துவங்களும், நூல்களும் , கோட்பாடுகளும் இங்கு வந்தமர்ந்து பின் அவை விட்டுப் போன வெட்டவெளியையே இங்கே சாரமாகப் பயின்று பார்க்கப்படுகிறது. இங்குள்ள புத்தர் சிலைகள் மற்றும் ஓவியங்கள் கூட மௌனத்தின் குறியீட்டைத் தாண்டி வேறு அர்த்தங்கள் கொள்ளப்படுவதில்லை.

கலைகள் மற்றும் இலக்கியத்தைப் பொறுத்தவரை, கதை சொல்லிகளின் எங்கோ தடையுற்றுத் தேங்கிய படைப்புகள் நீந்தி வெளிவரவும், படைப்புக்களை வாசிப்பவர்கள் அதை லாவகமாக உள்வாங்கிக் கொள்ளவும் இங்கு கடைபிடிக்கும் அரைமணி நேர மௌனம் பேருதவி செய்கிறது என்பது எங்கள் சுய அனுபவம்.

நிச்சயமாக ஒரு நல்ல படைப்பும், ஆழ்வாசிப்புமே ஒருவனுடைய நுண்ணுணர்வை மேன்மைப்படுத்தி விடும் என்றாலும் எதுவும் செய்யாத ஒரு சிறிய அன்றாட மெளனவெளி வாசிப்பையும், படைப்பையும் மேலும் ஆழம் செலுத்தும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

சிறு மௌனத்திற்குப் பின் நிகழும் வாசிப்பு நம்மை நகர்த்தியே தீருகிறது. அது வெறுமனே மனதளவில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி உடலையும் தொட்டு உசுப்புவதாக இருக்கவே செய்கிறது. ஒரு படைப்பை உச்சமாக உள்வாங்கிக் கொள்தல் என்பது, அது நம் மனதில் நிகழ்த்தும் ரசவாதத்தைத் தாண்டி உடலில் ஏற்படுத்தும் நெகிழ்வைக் கொண்டே அடையாளம் காண்போம்.

உதாரணத்திற்கு ஒரு உடலசைவற்ற மௌனத்திற்குப் பின் வாசிக்கப்படும் ‘வெள்ளை யானை…’ வயிற்றில் ஒரு குழைவும், கைகளில் சிறு நடுக்கமும், அசாதாரணமான இதயத் துடிப்பும் ஏற்படாமல் அதன் பக்கங்களை கடக்கவே இயல்வதில்லை.  வாசித்து முடித்தபின் அகத்திலும், புறத்திலும் ஏதோ ஒரு நுட்பமான வளர்சிதை மாற்றத்தைச் சந்திக்காமல் ஒருவனால் இன்னொரு படைப்பிற்குள் நுழையமுடியாது.

இதற்கு நேர்மாறாக ஒரு படைப்பு தவறியும் கூட எவ்வித இயல்பூக்கத்தயும் எற்படுத்தியிராத ஒரு சில வாசிப்பு எந்திரங்களையும் இவ்வெளியில் கண்டிருக்கிறோம்.

வெறுமனே சில கணங்கள் ஒன்றும் செய்யாத, முடிந்தவரை உடலசைவற்ற மௌனம் படைப்பவர்களின் சிறு தடைகளையும், விரக்தியையும்  உடைக்கிறது., வாசிப்பவர்கள் எந்த ஒரு படைப்பையும் அதன் அடியாழத்திலிருந்து சுத்தமாக உறிஞ்சிக் கொள்ளும் ஆற்றலைத் தருகிறது.

எதுவுமே இல்லையென்றாலும் குறைந்த பட்சம் கணினியின் வட்டு ஒருங்கமைத்தலைப் போல (Disk Defragmentation) உள்வாங்கிக் கொண்டைவைகளை, வாசிப்பவைகளை, சில அனுபவங்களை, வசதியாக அடுக்கிக் கொள்வதற்காகவாவது அசைவற்ற இம்மௌனம் உதவவே செய்கிறது.  எனவே படைப்பாளிகளும், வாசிப்பவர்களும் இம்மௌன அமர்தலைக் குறித்து எவ்வித முரணும் கொள்ளத் தேவையில்லை

மற்றபடி இங்கே ஒன்றரை மணி நேர சேவை என்பது எளிமையான சில அன்றாட வேலைகள் மட்டுமே. இது நம் அனைவரது செலவீனங்களைக் குறைத்துக் கொள்ளவும், நாம் அனைவரும் ஒன்றாக இம்மையத்தைச் செலுத்தும் உணர்விற்காகவே.

மௌனம் படைப்பின் ஆழ அகலங்களை விசாப்படுத்தி விடுதைப்போல , பல படைப்புக்களும் ஆழமான பிளவற்ற அமைதியை ஒருவனிடம் விட்டுப் போகும் என்பதில் உறுதி கொண்டிருக்கிறோம்.

இங்குள்ள காற்றில், நதியில், குறுவனத்தில், பெரும்படைப்பும், பேரமைதியும் தொடர்ந்து நிலவிச் சஞ்சரிக்க ஆசிர்வதியுங்கள்.

நன்றி.

 

ஆனந்தகுமார்

சத்-தர்சன் இணைய தளம்

 www.satdarshan.org

[email protected]

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி
அடுத்த கட்டுரைஒரு விடுதலைப்பாடல்.