இரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்

அன்புடன் ஆசிரியருக்கு

சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் ஒரு பரபரப்பன நகரில் இருக்கிறோம் என்ற பிரக்ஞை தவிர்க்க முடியாததாக இருக்கும். குறைந்த தூரமே பயணிக்க வேண்டி இருந்தாலும் இரண்டு மூன்று பேருந்துகள் மாறிப் பயணிக்கும்படியாகும். ஒவ்வொரு பேருந்தின் எண்ணாக சரியாகப் பார்த்து ஏறும்படி இருக்கும். ‘நடந்தே வந்திருக்கலாமோ’ என்று நினைக்கும்படி ஐந்து கிலோமீட்டர் தூரத்தை பேருந்தில் கடக்க ஒரு மணிநேரம் ஆகும். இவற்றை மனதில் கொண்டே சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒரு தெளிவான பயணத் திட்டத்துடன் வருவேன். அந்த பயணத் திட்டங்கள் ஒருமுறை கூட இதுவரை பிசகியதில்லை. இந்த கணக்கீடும் ஓட்டமும் மிகச் சோம்பலாக இயங்கும் ஒரு சிறிய நகரில் வேலை செய்கிற என்னைப் போன்றவனுக்கு சற்று உவப்பானதுதான். ஆனால் வெள்ளிக்கிழமை காலை மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கியது முதல் என் நண்பர் ஜெயவேல் மெட்ரோவில் என்னை ஏற்றி கிண்டிக்கு அனுப்பும் வரை இந்த இரண்டு நாட்களும் சென்னையில் இருந்த உணர்வே எழவில்லை.

ஒன்றரை வருடம் கழித்து சென்னை வருகிறேன். இப்போது மேலும் விரிவடைந்து மேலும் பரபரப்பாகி இருக்கிறது. எனினும் இந்த இரு நாட்களில் ஒரு கணம் கூட மனம் இந்த பரபரப்புகளுடன் தன்னை முடிச்சிட்டுக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. மாம்பலம் ரயில் நிலையத்தில் சுனிலும் இறங்கினார். இருவருமாக ஃபிரெண்ட்ஸ் பார்க் வந்தோம்.

முதலில் மூன்றாம் தளத்தில் ஒரு அறையில் இருந்தோம். அந்த அறையை காலி செய்து கொண்டு கீழே வந்த போத நீங்கள் வந்துவிட்டிருந்தீர்கள்.கிருஷ்ணன் உருவகம் (metahor),படிமம்(image), குறியீடு(symbol) சார்ந்து ஒரு நல்ல விவாதத்தை தொடங்கினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தை சொல்லிக் கொண்டிருந்த போது அவற்றுக்கு இடையேயான தொடர்புகளையும் வேறுபாடுகளையும் நீங்கள் தெளிவுபடுத்தியது முக்கியமானது. இந்த விவாதத்தை முகாந்திரமாகக் கொண்டு கலைச்சொற்களை தெளிவான அர்த்தத்தில் பயன்படுத்துவதில் இருக்கும் அவசியத்தை கூறினீர்கள்.

நானும் இதை கவனிக்கிறேன். ஒரு படைப்பு குறித்து துல்லியமாக பேசுவது செயற்கையான ஒரு dissection செயல் என்ற ஒரு பலகீனமான வாதம் இங்கு திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகிறது. துல்லியப்படுத்திக் கொள்ளுதல் அந்த படைப்பை மேலும் அணுகி அறியவையே உதவும் என்று விளங்கிக் கொண்டேன். ‘ஒரு படைப்பு கிளர்த்தும் உணர்வுகள் அருவமானவை’ , ‘படைப்பினை ஒரு வாசகன் முழுமையாக உணர்ந்துவிட முடியாது’ – இதுபோன்ற சொற்றொடர்களை இலக்கிய விவாதங்களில் இப்போது அடிக்கடி கேட்க முடிகிறது. இவை ஒரு படைப்பினை கடந்த வாசகர்களால் சொல்லப்படுவதில்லை. படைப்பினை துல்லியமாக நெருங்க இயலாதவர்களாலேயே இப்படி பேசப்படுகின்றன. இதுபோன்ற ‘உன்னத தீர்ப்புகள்’ படைப்பின் மீது மேற்கொண்டு நிகழ்த்தப்படும் விவாதங்களை தடுத்து அதனை உறையச் செய்து விடுகின்றன. அதேநேரம் வெறுமனே நுண்தகவல்களில் துல்லியம் தேடிக் கொண்டிருப்பதிலும் பொருள் இல்லை. அதன் கலைத்தன்மையை எவ்வாறு நிறுவிக் கொள்ள வேண்டும் என்பதிலேயே ஒரு வாசகனின் பிரதான அக்கறை இருக்க வேண்டும். ஒரு நுண்தகவல் அந்த படைப்பின் ஆதார கலைத்தன்மையுடன் முரண்படும்வரை அல்லது அதன் கலைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வரை நுண்தகவல் பிழைகளை பொறுத்துக் கொள்ளலாம் என்றே எண்ணுகிறேன்.

இந்த கலைச்சொல் பயன்பாட்டின் துல்லியத்தைத் தொடர்ந்தே உணர்வெழுச்சி (emotion), மிகையுணர்ச்சி (sentiment), நாடகீயத்தருணம் (dramatic moment) இவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளை பற்றிய பேச்சு வந்தது. இது குறித்து ஏற்கனவே நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறீர்கள். இந்த முறை அந்த வேறுபாட்டை மேலும் துல்லியப்படுத்திக் கொள்ள முடிந்தது. மதிப்பீட்டுடன் கூடிய உணர்ச்சியே உணர்வெழுச்சியாகிறது என்று சொல்லிவிட்டு ஒரு உதாரணம் கேட்டபோது சரியாக திஜாவின் கடன் தீர்ந்தது என்ற கதை நினைவுக்கு வந்தது. அக்கதை மிகச் சரியான உதாரணம் என்று உணர்கிறேன். தன்னுடைய செல்வத்தை இழந்த ஒருவர் யாரிடம் அதை பறிகொடுத்தாரோ அவன் மோட்சத்துக்கு செல்ல வேண்டும் என்று எண்ணுவதை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்று வாசகனை பறிதவிக்கச் செய்யும் அந்த இடம் உணர்வெழுச்சியானது. அதுபோல நாடகீயத்தருணம். அது யதார்த்த சித்தரிப்பாக இருக்க வாய்ப்பில்லை. டால்ஸ்டாய் புனைவுகளில் அப்படி ஒரு தருணத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் தஸ்தாவெய்ஸ்கி என்ற பெயரைச் சொன்னதும் ஆளுக்கொரு நாடகீயத் தருணத்தை சொல்லத் தொடங்கி விட்டோம். ஒரு தத்துவ விவாதத்தின் பகுதியாக மதிப்பீடுகளின் மோதலாக நிகழும் இத்தகைய தருணங்கள் நிச்சயமாக மற்ற அனைத்த வகையான தருணங்களை விட ஒரு படி மேலானவையே. The last temptation of Jesus Christல் இதுபோன்ற எண்ணற்ற தருணங்களை கண்டெடுக்க இயலும். கிறிஸ்துவுக்கும் யூதாஸுக்குமான விவாதங்கள்,கிறிஸ்துவுக்கும் மகதலீனுக்குமான உரையாடல்கள், கிறிஸ்துவுக்கும் அவருடைய Guardian angelக்குமான உரையாடல்கள் என பல பகுதிகள் நினைவுக்கு வருகின்றன.

தொடர்ந்து நகைச்சுவை எழுத்து குறித்து பேசினோம். எஸ்விவி விகேஎன் என்று ‘பழைய’ ஆட்களைப் பற்றி பேசினாலும் அவர்களுடைய நகைச்சுவைகள் மீண்டும் பேசப்படுவதற்கான காரணங்களை சொன்னீர்கள். மறுநாள் புத்தக கண்காட்சியில் விகேஎன் கதைகள் (சாகித்ய அகாடமி பதிப்பகம்) என்ற பெருந்தொகுப்பை சற்று சலுகை விலையில் வாங்கினேன். நண்பர்கள் சிலரும் வாங்கினார்கள். செயற்கையாக சூழ்நிலைகளை கட்டமைக்காமல் அன்றாடத்தின் சிரமங்களில் இருக்கும் நகைச்சுவையை தொட்டெடுப்பது எப்போதும் நம்மை புன்னகைக்க வைக்கிறது. தொடர்ந்து எழுத்தாளர்களின் குணநலன் சார்ந்து எழும் நகைச்சுவையை சொன்னீர்கள்.தோப்பில் பற்றி நீங்கள் சொன்ன ஒவ்வொரு தகவலும் ஆச்சரியமளித்தது.

“உருவாக்கப்படும் எழுத்து” சார்ந்த விவாதமும் முக்கியமானது. வாழ்க்கையுடன் ஒரு தொடர்பினை ஒரு படைப்பு வாசகனுக்கு ஏற்படுத்தவில்லை என்றால் அப்படைப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று சொன்னீர்கள். படைப்புச் செயலுக்கு பின்னிருக்கும் உத்திகளை மட்டும் பண்ணிப் பண்ணி பின்னப்படும் எழுத்தின் பயனின்மை குறித்து பேசியது உதவிகரமானது. வாசிப்பு சவாலினை அளிக்கும் படைப்புகளை உடைத்து உள்நுழைந்து புரிந்து கொள்ளும்போது ஒரு அகங்கார நிறைவு ஏற்படுகிறது. ஆனால் அப்போது வாசிப்பு என்கிற செயல்பாடு உயிரிழந்து விடுகிறது என்று எண்ணுகிறேன். எழுத்தாளனின் வெளிப்பாட்டில் இருக்கும் இயல்பான சிக்கல் மட்டுமே ஒரு படைப்புக்கு வடிவச் சிக்கலை அளிக்கலாமே தவிர மேற்கின் வடிவச் சிக்கலை போலி செய்வது அபத்தமானது.

மாலை நிகழ்வும் சிறப்பாக அமைந்தது. ஹெச் எஸ் சிவபிரகாஷ் கன்னட இலக்கியத்தை விமர்சனப்பூர்வமாக அணுகிப் பேசினார். கே சி நாராயணன் மலையாள இலக்கியத்தின் கவிதையியலில் நிகழ்ந்துவரும் புதுத்திறப்புகள் குறித்து பேசினார். அவர் வாசித்து நீங்கள் மொழிபெயர்த்த அசோகனின் (மலையாளத்தின் உள்மொழி ஒன்றில் அமைந்த கவிதை) கவிதையில் ஒரு துள்ளலும் கள்ளமின்மையும் தெரிந்தது. சு வேணுகோபால் நவீன தமிழ் இலக்கியம் குறித்த ஒரு கோட்டுச் சித்திரத்தை அளிக்க முற்பட்டார்.

தொடர்ந்து நான் கிரியின் தொகுப்பு குறித்து பேசினேன். இந்த முறை பேச்சாளர்களில் விஷ்ணுபுர மேடைகளில் நானும் சுனிலுமே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன்.மேலும் சிவபிரகாஷ் நாராயணன் ஆகியோரின் செறிவான உரைகளுக்கு பின் இந்த அறிமுக உரைகள் சிறுத்து விடுமோ என்ற ஐயம் இருந்தது. ஆனால் நண்பர்கள் அனைவரும் நன்றாகப் பேசினர். சுனில் ஒரு தேர்ந்த பேச்சாளர் ஆகிவிட்டதை இந்த அரங்கில் உணர்ந்தேன். ராஜகோபாலனின் ஆட்டத்தின் ஐந்து விதிகள் நூல் குறித்து விஜய் கிருஷ்ணன் அவர்களின் உரையை கடைசியாக அமைத்தது மொத்த நிகழ்விலும் மற்றொரு வண்ணத்தை சேர்த்தது. சிறப்பாக பேசினார். நீங்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறினீர்கள். ஒரே ஊர்க்காரர்கள். ஆனால் நானும் அருண்மொழி அக்காவும் இப்போதுதான் முதன்முறை பார்த்துக் கொள்கிறோம்! கொஞ்ச நேரமே என்றாலும் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தது மகிழ்வளித்தது.

இரவு திரும்பிய போது நண்பர்கள் அனைவரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சியும் பெருமிதமும் இருந்தது. தொடர்ந்து பேச்சு அறிவியல் புனைவகள் குறித்து திரும்பியது. தொடர்ந்து அறிபுனைவு வாசிப்பில் இருப்பதால் அது சார்ந்த உரையாடல் பயனுள்ளதாக அமைந்தது. மறுநாள் சுனிலின் பரிந்துரையில் ‘காலமே வெளி’ என்ற மொழியாக்க அறிபுனைவுத் தொகுப்பு ஒன்றைத் தமிழினியில் வாங்கினேன். வெள்ளிக்கிழமை இரவு காஞ்சி சிவாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். தூங்குவதற்கு மூன்று மணியானது. மறுநாள் காலை ஆறரை எழுந்து ஒரு சிறிய காலைநடை. நாஞ்சில் நாடன் அசோகமித்திரன் போன்றவர்கள் எழுதுவதற்கு தாள்களை சேமிக்கும் வழக்கத்தைப் பற்றிச் சொன்னீர்கள். ஒரு பழங்கதை போல ஒலித்தது!

நண்பர்களுடன் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். ஒரு வகையில் புறப்பட மனமில்லாமல் தான்.சென்னை நூற்காட்சியில் நான் முதன்முறையாக கலந்து கொள்கிறேன். வாங்கிய நூல்களைவிட பரிசாகப் பெற்ற நூல்கள் இருமடங்கு. ஒரு பெரிய திருவிழாவில் புகுந்து வெளிவந்த மனக்கொந்தளிப்பு. நிறைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. வருடாவருடம் வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்படாவிட்டாலும் முதல்நாள் நிகழ்ந்த தீவிரமான உரையாடல்களின் தொடர்ச்சியாக இப்படி புத்தகங்களில் மூழ்கி இருக்கும் பண்டிகை நிறைவானதே.

மதிய உணவுக்கு பெருந்தேவி அழைத்திருந்தார். கீரை வடை, muddar வடை, கேரட் அல்வா, பிரதமன் என வித்தியாசமானதொரு விருந்து ஈஷாவால் நடத்தப்படும் ஒரு உணவகத்தில். ஒன்றரை மணிநேரம் நானும் சுனிலும் அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய எதிர்காலத் திட்டங்கள் எங்களுடைய படைப்புகள் என்று பேச்சு நீண்டது. மாலை பெருந்தேவியின் ‘உடல் பால் பொருள்’ நூல் ஸ்டாலின் ராஜாங்கத்தால் வெளியிடப்பட்டது. அந்நிகழ்வை முடித்துக் கொண்டு கிளம்பினேன். பேருந்துக்கு இரண்டு மணிநேரம் இருந்தாலும் நந்தனத்தில் இருந்து தாம்பரத்துக்கு அந்த நேரத்தில் போய்ச்சேர முடியுமா என்று சந்தேகம் வந்துவிட்டது. மூன்று பைகள் கனக்க நூல்கள். என்னுடைய தர்மபுரி நண்பர்கள் ஜெயவேல்,வேலு அந்த பைகளை சுமந்து வந்து மெட்ரோ ரயிலில் ஏற்றிவிட்டனர். மெட்ரோவில் முதன்முறையாக ஏறினேன் என்றாலும் பத்து நிமிடத்தில் இறங்கும்படியானதால் எதையும் கவனிக்க இயலவில்லை. அங்கிருந்து மின்சார ரயிலில் தாம்பரம் அங்கிருந்து பெருங்களத்தூர் என்று திடீரென சென்னையில் இருப்பதை உணர்ந்தேன்.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததை சுனிலிடம் தெரிவித்ததுடன் இந்த இரு தினங்கள் முடிவுக்கு வந்தன. எதிர்பார்த்திராத உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் இந்த வருடம் தொடங்கி இருக்கிறது.

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

அன்புடன்

***

suresh pradeep on ra giridharan's short story collection

சுரேஷ் பிரதீப்

அன்புள்ள சுரேஷ்

எதையும் தெளிவாக்கிக்கொள்ளக் கூடாது என்ற ஒரு மொக்கை வாதம் எப்போதும் சிற்றிதழ் சூழலில் உண்டு. அது பெரும்பாலும் ஓரிரு ஆண்டுகளுக்குள் வாசிப்பை நிறுத்திவிட்டு இலக்கியவாதிகளாக உலவத் தொடங்குபவர்களுக்கு உகந்தது

தெளிவின்மை படைப்பூக்கம் மிக்கதே. அறிந்து அறிந்து சென்று நாம் திகைத்து நிற்கும் எல்லையில் அது இருக்கவேண்டும். மேலும் அறிவதற்கான அறைகூவலாக. கற்பனையும் நுண்ணுணர்வும் பறந்தெழுவதற்கான வெளியாக. அறியாமையின் இன்னொரு முகமாக அல்ல.

உலகமெங்கும் அழகியல் குறித்து , இலக்கியவிமர்சனம் குறித்து பேசப்படுவது இந்த அடிப்படையில்தான்

ஜெ

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49
அடுத்த கட்டுரைம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்