புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை
புத்தகக் கண்காட்சி – கடிதம்
அன்புள்ள ஜெமோ,
புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை பற்றிய செய்திகளை வாசித்தேன். எனக்கு இதுவே தோன்றியது. சென்ற பல ஆண்டுகளாகவே புத்தகக் கண்காட்சியைக் கைப்பற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன. புத்தகக் கண்காட்சியை எப்போதும் அரசுசார்பானவர்களே நடத்துவார்கள். நாளை திமுக வந்தால் இதுவே திமுக விழா போல ஆகிவிடும். இப்படி அரசியலை கலந்தால் நாளடைவில் இங்கே இலக்கியமோ அறிவுச்செயல்பாடோ இல்லாமலாகிவிடும்.
சு.வெங்கடேசன் எம்பி கீழடி பற்றி பேசவந்த இடத்தில் அரசை கண்டித்துப் பேசினார். மிகக் கடுமையான கண்டனம். கூடவே அரங்கிலிருந்தும் கூச்சல்கள். இனி இதை எல்லாரும் செய்வார்கள். கைதட்டல் கிடைக்கும். மேடைகளை கைப்பற்றுவார்கள். இது தவறான முன்னுதாரணம். இனி எல்லாரும் இப்படி பேச ஆரம்பித்தால் அரசு எதிர்ப்பு தெரிவிக்கும். ஒரு போலீஸ் உத்தரவை போட்டலே புத்தகக் கண்காட்சியைக் காலிபண்ணிவிடலாம்.
அதை அஞ்சி இனி இவரைப் போன்றவர்களைக் கூப்பிடாமலிருந்தால் இடதுசாரிகளைப் புறக்கணிக்கிறார்கள் என்று கூச்சல் எழும். எடப்பாடி வந்ததற்கு கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். அவர் தமிழக முதல்வர். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். ஆனால் மதுரை புத்தக விழாவை பார்வையிட அழகிரி ஏன் வந்தார்? அவருக்கு எழுதப்படிக்க தெரியுமா என்ன?
இவர்கள் செய்வதை எதிர்த்து அதிமுகவும் பாஜகவும் இதே புத்தகக் கண்காட்சிக்கு வந்த கூச்சலிட ஆரம்பித்தால் என்ன செய்ய முடியும்? இவர்கள் தங்கள் அரசியலை தெருவில் வைத்துக்கொள்ளட்டும். இங்கே கூட்டம் வருகிறது என்று இங்கே வந்து கூச்சலிடுகிறார்கள். இவர்களின் இந்த அரசியலால் இங்கே எதையுமே பேசமுடியாமலாகி விடுகிறது. இவர்களின் கூச்சலுக்கு ஒத்துபோகாமல் வேறு எதைப்பேசினாலும் இவர்களின் பார்வையில் அது துரோகம்தான். உண்மையில் கருத்துரிமைக்கு எதிரானவர்கள் இவர்கள்தான்.
டி.ராஜ்குமார்
***
அன்புள்ள ஜெ
நீங்கள் புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுதியதை ஒட்டி ஒரு கேள்வி எழுந்து எங்கள் நண்பர் வட்டாரத்திலே பேசப்பட்டது – அரசியல் பேசப்படாத ஒரு தளம் இருக்கமுடியுமா? அரசியல் அண்டாமல் கருத்துச்செயல்பாடு நடைபெற முடியுமா? அது இயல்பாக இருக்குமா?
இல்லை என்றே அரசியல்வாதிகள் சொல்வார்கள். அரசியல் இல்லாத இடமே இல்லை என்பார்கள். அரசியல் இல்லாத இடம் தேவையில்லை, இருக்கவிடமாட்டோம் என்பதே அதன் பொருள்
அரசியல் தேவை. அரசியலுணர்வும்தேவை. ஆனால் அதைத்தவிர வேறேதும் தேவையில்லை என்பது அப்பட்டமான ஃபாஸிஸம். அதுவும் எங்கள் அரசியல் மட்டுமே எங்கும் தேவை என்பது ஃபாஸிசத்தின் உச்சம். அதுவே இங்கே நடைபெறுகிறது.
இங்கே இருப்பது அதிகார அரசியல். இருதரப்பும் வெறிகொண்டிருக்கின்றன. வேறெந்த மூச்சொலியும் கேட்கக்கூடாது என்கின்றன. ஆனால் இந்த அரசியலுக்கு அப்பாலும் சில இடங்கள் இருந்தாகவேண்டும். சில நுட்பமான அந்தரங்கமான இடங்கள்
சுதந்திரப்போர் உச்சத்திலிருந்த காலகட்டத்தில்கூட தத்துவவிவாதம், மொழியாக்கம் எல்லாம் அதனுடன் சம்பந்தமில்லாமல் நடந்துகொண்டிருந்தன. அதைச்செய்தவர்களில் பலர் அன்றைக்கு துரோகிகள் என்றுகூட பழிக்கப்பட்டார்கள். ஆனால் இன்று அவர்களின் சாதனைகளே நின்றுகொண்டிருக்கின்றன. உதாரணம் உவேசா
ஆகவே இந்தக் கூட்டம் எல்லாவற்றையும் தங்கள் அரசியலாக ஆக்குவதை தடுக்கத்தான் வேண்டும். இதற்கு அப்பால் தன் தனியான தேடலையும் தவத்தையும் இயற்றும் ஒரு வெளியை நாம் பேணிக்கொள்ளவே வேண்டும்
எனக்கு பறவையியலில் ஈடுபாடு. அதற்காகத்தான் நான் புத்தகம் வாங்கவந்தேன். [நாம் விசும்பு வழியாக சந்தித்துக்கொண்டோம்] என்னை தடுத்து என் கையில் துண்டுப்பிரசுரம் தருகிறார்கள். நான் கண்டுகொள்ளாமல் போனபோது ஒருவர் என்னை பெட்டை என்று பழித்தார். நான் தலைகுனிந்து நடந்து உள்ளே போனேன். புத்தகம் பார்க்கமுடியாமல் ஒரே கூச்சல். குழப்பம். பல மதங்களின் ஸ்டால்கள். ஆளுக்காள் மதக்கூச்சல். புத்தகக் கண்காட்சியில் மதச்சண்டை தொடங்கினாலும் ஆச்சரியப்படமாட்டேன். மனம் நொந்து வெளியே வந்துவிட்டேன்
ஜெயக்குமார் அர்விந்த் .
[பிகு- க.ரத்னம் அவர்களின் பறவைகளைப் பற்றிய நூலை உங்களுக்கு வாங்கி அனுப்பியிருந்தேன். நீங்கள் ஒரு மதிப்புரை எழுதவேண்டுமென எதிர்பார்த்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு]