‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47

பகுதி ஐந்து : விரிசிறகு – 11

சம்வகை இடைநாழியினூடாகச் செல்கையில் எதிரே சுஷமை வந்தாள். அவள் அவளைக் காத்து நின்றிருந்தாள் என்பது தெரிந்தது. விசைகொண்ட காலடிகளுடன் அவள் அருகணைந்தாள். அக்காலடி ஓசை கேட்டு சம்வகை ஒருகணம் குனிந்து அவள் கால்களை பார்த்தாள். அவள் எண்ணியது போலவே அவள் கால்களும் பெரிதாக இருந்தன. இரு குறடுகளும் சிறு பன்றிக்குட்டிகள் என தாவி வந்தன. அருகணைந்து தலைவணங்கி “தாங்கள் சென்று மீள்வதற்குள் இங்கு பிறிதொன்று நிகழ்ந்துவிட்டது. தாங்கள் உடனிருந்தீர்கள் என்று அறிவேன். ஆகவே தாங்கள் அனைத்தையும் அறிந்திருப்பீர்கள் எனினும்…” என்றாள். “கூறுக!” என்று சம்வகை சொன்னாள்.

“இளவரசர்களை அரசர் அடித்துவிட்டார் என்றார்கள். நான் சூதர் பாடல்களிலோ அன்றி செவிவழிச் செய்திகளிலோ அவர் அவ்வண்ணம் செய்ததாக அறிந்ததே இல்லை. ஆகவே அதை நம்ப என்னால் முடியவில்லை. ஆனால் அது நிகழ்ந்தது என உறுதி செய்துகொண்டேன். இரு இளவரசர்களும் முகம் சிவக்க வந்து தங்கள் அன்னையின் அறைக்குள் நுழைந்தனர். அவர்கள் சீற்றத்துடன் உரக்கப் பேசியதை கேட்டேன். அனைவரையும் வெளியே அனுப்பிய பின் அரசி அவர்களிடம் மேலும் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர்கள் மஞ்சத்தறைக்குச் சென்று தாழிட்டுக்கொண்டனர். பிறகு எவரும் அவர்களை இதுவரை பார்க்கவில்லை. அங்கு என்ன நிகழ்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால்…”

சம்வகை தலையசைத்தாள். “தந்தையின் இடத்தில் மூத்தார் என இருந்து மாதுலர் தண்டிப்பதென்பது குடியில் வழக்கம்தான். ஆனால் அரசர் அவ்வாறு இயற்றலாகுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவரது தந்தையை அகற்றி தமையனின் முடியை கைப்பற்றி அரியணையில் அமர்ந்திருப்பவர் அரசர். அவரோ கைம்பெண்ணென இங்கு வந்திருக்கிறார். தந்தையை இழந்த மைந்தரென தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அவர்களின் உளநிலையை என்னால் புரிந்துகொள்ள இயல்கிறது” என்றாள் சுஷமை. “எவ்வண்ணம் இருக்கிறார் அரசி என்று தெரியவில்லை. நான் சென்று பார்க்கிறேன்” என்று சம்வகை சொன்னாள்.

அவள் நடக்க உடன் வந்தபடி “அவரிடம் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே நான் சென்று கதவைத் தட்டி ஏதேனும் தேவையா என்று கேட்கவில்லை. எக்கணமும் அவர் கதவைத் திறந்து வெளிவந்து  தேரைப் பூட்டுக, நாங்கள் கிளம்புகிறோம் என்று கூறக்கூடும் என்று உணர்ந்தேன்” என்றாள். “அவர்கள் உள்ளே பேசிக்கொண்டிருந்த குரலோசை அப்படிப்பட்டது. அதிலிருந்த சீற்றம் அச்சுற வைப்பது.” அவளை நோக்காமல் நடந்தபடி “அவ்வண்ணம் நிகழாது” என்று சம்வகை சொன்னாள். “என்ன நிகழும் என்று பார்ப்போம்” என்றபின் செல்க என்று கைகாட்டி முன்னால் சென்றாள்.

சம்வகை துச்சளையின் அறைவாயிலில் தன் வரவை அறிவிக்கும்பொருட்டு ஏவல்பெண்டிடம் சொன்னாள். ஏவற்பெண்டு கதவை பலமுறை தட்டி அதன் பின்னரே உள்ளிருந்து தாழ் திறக்கப்பட்டது. ஏவற்பெண்டு உள்ளே சென்று மீண்டு வந்தபோது முகத்தில் எதுவும் தெரியவில்லை. “உள்ளே செல்க, தலைவி!” என்று அவள் சொன்னபோது சம்வகை உள்ளே சென்றாள். உள்ளே மஞ்சத்தில் சுகதன் துயின்றுகொண்டிருந்தான். அவனுடைய பருத்த உடலும் குழைந்த தோள்களும் அப்போது குழந்தையுடையவைபோல் தோன்றின. வெயில்படாது குகைக்குள் எழுந்த மரம்போல. துச்சளை எழுந்து அவளை நோக்கி வந்து “வருக!” என்றாள். அவள் கன்னத்தில் விழிநீர் உலர்ந்திருந்தது. அதை இரு கைகளால் துடைத்த பின் “கூறுக!” என்றாள்.

“அரசி, என்ன நிகழ்ந்தது என்று தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்று சம்வகை தொடங்க துச்சளை “ஆம், மைந்தர் சொன்னார்கள்” என்றாள். “நானும் உடனிருந்தேன். அத்தருணத்தில்…” என்று சம்வமை தயங்க துச்சளை உரக்க “நீ எதையும் கூற வேண்டியதில்லை. அச்செய்தியை அறிந்த கணமே என் உள்ளம் நிறைவுற்றுவிட்டது. இங்கு நான் வந்தது செல்வத்தின் பொருட்டோ, அரசுகோரும் பொருட்டோ அல்ல. அதற்கப்பால் என் குடியின் முதன்மையென நின்றிருக்கும் ஆண்தகை ஒருவருக்காக. இன்று என் மைந்தருக்குத் தந்தையென்றும் மூதாதை என்றும் எவரும் இல்லை. அங்கு நிலைகொண்டு இவர்களுக்கு ஆணையிடும் குரல் ஒன்றுக்காகத்தான் நான் வந்தேன். இன்று அக்காட்சியை அகத்தில் கண்டபோது மெய்ப்படைந்தேன். தன் மைந்தர் பிழை கண்டு பொங்கி எழும்போதே ஆண்தகை தந்தையாகிறார். இன்று அவர்களின் குடிமூதாதையர் அனைவரும் திரண்டு எழுந்துவந்து தலைதொட்டு வாழ்த்தியதாகவே உணர்கிறேன்” என்றாள்.

அச்சொற்களை அவள் முன்னரே முழுமையாக தன்னுள் கேட்டுவிட்டிருந்தாள் எனினும் சம்வகை மெய்ப்புகொண்டாள். “இன்று அவர்களுக்கு விழுந்த இந்த அடி என்றும் அவர்களின் நினைவில் நிற்கவேண்டும். தாங்கள் யாருமற்றவர்களல்ல, விண்ணிலும் மண்ணிலும் மூதாதையர் சூழ வாழ்கிறோம் என்று அவர்கள் உணரவேண்டும். இதற்கப்பால் நான் இனி இங்கு விழைவதும் மகிழ்வதும் பிறிதொன்றுமில்லை” என்றாள் துச்சளை. அவள் விழிகள் நிறைந்து வழியத்தொடங்கின. “ஆம், அரசி அதையே நானும் உணர்ந்தேன்” என்றாள் சம்வகை. “தந்தையின் இடத்தில் தாய்மாமன் இருப்பார். அவர்கள் அதை உணர்ந்தாகவேண்டும்.” துச்சளை விழிதுடைத்து சிறிய வெண்பற்கள் தெரிய புன்னகைத்து “அதைத்தான் நானும் அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதை உணரும் நிலையில் இன்றில்லை. அவர்கள் அதிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை உணர்வார்கள். ஏனெனில் மெய்யான உணர்வு அவர்களை எப்படியும் சென்றடையும்” என்றாள்.

சம்வகை “அரசி, நான் பிறிதொன்று உரைப்பதற்காக தங்களைத் தேடி வந்தேன்” என்றாள். “கூறுக!” என்றாள் துச்சளை. “இன்று இவ்வரண்மனையின் இல்லமகளென்று தாங்களே இருக்கிறீர்கள். நாளை புலரியில் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அரசி திரௌபதி நகர்நுழைகிறார். தாங்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்று அரியணை அமர்த்தவேண்டிய பொறுப்பில் இருக்கிறீர்கள். அதற்கான முறைமைச்சடங்கு என்ன என்று தங்களுக்குத் தெரியும்” என்றாள். “ஆம், அது நான் செய்ய வேண்டியதுதான். என் பொறுப்பு அது” என்றாள் துச்சளை. “தாங்கள் உளம் சுணங்கக்கூடும் என்று சுரேசர் கூறினார்” என்றாள் சம்வகை.

“ஆம், ஒருவேளை உளம் சுணங்கியிருக்கக் கூடும்” என்று துச்சளை கூறினாள். “பேரரசியாக அவள் வருகிறாள் என்று எனக்குச் சொல்லப்பட்டதுமே என் உள்ளத்தில் சிறு முள் எழுந்தது என்பதை நான் மறைக்கவில்லை. என் தமையனின் தெய்வத்தின் முன் விளக்கேற்றியபோது அது வஞ்சமென வளர்ந்தது. அவள் நிமித்தமே என் தமையன் உயிர்துறந்தான் என்பதை நான் ஒருபோதும் மறக்க இயலாது. இவ்வவையில் அவள் சிறுமைப்படுத்தப்பட்டாள், அதன் பொருட்டு என் கொழுநனையோ என் மூதாதையரையோ நான் பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. ஆனால் அவள் கொண்ட வஞ்சம் என் குடியை முற்றழித்தது. எந்தை கைவிடப்பட்ட தெய்வமென காட்டில் அலைகிறார். எண்ண எண்ண என் குருதி துடிக்கத்தான் செய்கிறது. ஆனால் இன்று என் தந்தையென்றும் மூதாதையென்றும் இருப்பவர் மூத்தவராகிய யுதிஷ்டிரன். இத்தருணத்திற்குப் பின் பிறிதொன்று எண்ணுவதற்கோ மாற்று கருதுவதற்கோ எனக்கு உரிமையில்லை” என்று துச்சளை சொன்னாள்.

“ஆம் அரசி, முற்றளிப்பதே அன்னையர் செய்ய வேண்டியது. ஆராய்வதற்கு அவர்களுக்கு உரிமையில்லை” என்றாள் சம்வகை. துச்சளை மீண்டும் விழிநீரை துடைத்து புன்னகைத்து “அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அன்னையர் விரும்புவது மைந்தர் வளராத குழந்தைகளாக தன் கையில் இருக்கவேண்டும் என்றுதான். வளர்ந்த பின் அவர்கள் ஆற்றும் செயல்கள், கொள்ளும் பொறுப்புகள் அனைத்திற்கும் தந்தையர் பொறுப்பேற்க வேண்டும். அதை ஏதேனும் ஆணிடம் அளித்துவிட்டு முற்றிலும் விடுதலை பெறுகையிலேயே அன்னை தன் அன்பை முழுதளிக்க முடியும்” என்றாள். “இன்று அதன் நிறைவை நான் அடைந்தேன். எவ்வளவு தவித்துக்கொண்டிருந்தேன்! எத்தனை பெரிய விடுதலை… அவர்களின் தந்தை இறந்ததிலிருந்து இதுநாள் வரை என் உள்ளத்தை அழுத்திய எடை இதுதான். இனி கவலையில்லை.”

துச்சளை மேலும் சிரித்து “இன்னும் சில நாட்களில் அவர்கள் பொருட்டு மூத்தவரின் மேல் சினம்கொள்ளவும், மூத்தவரை எதிர்த்துப் பேசவும், அவர்கள் பொருட்டு மூத்தவரிடம் சொல்லாடவும் கூடியவளாக நான் மாறிவிடுவேன்” என்றாள். துச்சளையின் புன்னகை என்றுமிருந்ததைவிட அழகாக இருக்கிறது என சம்வகை எண்ணிக்கொண்டாள். “மூதன்னையாக ஆகும்போது மைந்தரை மைந்தரின் தரப்பில் மட்டுமே நின்று பார்ப்பவர்களாக மாறிவிடுகிறார்கள் பெண்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றாள் சம்வகை. துச்சளை “இன்று நான் துயில்வேன். நாளை எழுகையில் இந்த மாளிகையில் அன்னை இருந்த நிலைக்கு நான் வந்துவிடுவேன். என் மாளிகைக்கு அரசியை வரவேற்கும் உணர்வை அடைந்துவிடுவேன்” என்றாள். சம்வகை “நன்று அரசி, அவ்வாறே ஆகுக!” என்று வெளியே சென்றாள்.

 

தன் அறைக்குள் அவள் அமர்ந்ததுமே அங்கே சுரதனை எதிர்பார்க்கலானாள். நேரம் செல்லச்செல்ல அந்த எதிர்பார்ப்பு மிகையானதோ என்னும் ஐயமெழுந்தது. அவன் வந்தாகவேண்டும். அவனுக்கென ஒரு நாடகம் இருக்கிறது, அதை ஆடியாக வேண்டும். வாழ்க்கையின் தருணங்களில் தங்களுக்குரிய நாடகத்தை ஆடாமல் அகல்பவர்கள் சிலரே. அதை தானுணர்ந்து தடுத்துக்கொள்ளும் நுண்ணறிவுள்ளவர்கள் யோகியரேதான். அவள் புன்னகைத்தாள். அரசுசூழ்தலும் ஓர் யோகம். நாடகத்தை ஆடாமல் பிறரை நடத்தவிட்டு நோக்கியிருத்தலே அதன் வழிமுறை. அவள் புன்னகைப்பதைக் கண்டு காவலர்தலைவனான காளியன் ஐயத்துடன் திரும்பி நோக்கினான்.

வெளியே காலடியோசை கேட்டதும் அவள் புரிந்துகொண்டாள். ஏவலன் வந்து அறிவித்ததும் முகத்தை செறிவாக்கிக்கொண்டு அவனை அகத்தே வரச்சொன்னாள். அவன் வந்ததும் அமரச்சொல்லி கைகாட்டினாள். அவன் உரத்த குரலில் “நான் அரசகுடியினன். அரசனின் மைந்தன். சிந்துநிலம் இன்னும் என் கையைவிட்டுச் செல்லவில்லை” என்று கூவினான். “அரசகுடியினர் வருகையில் நாலாம்குலத்தோர் அமர்ந்திருந்து வரவேற்பதா அஸ்தினபுரியின் நெறி?” சம்வகை “ஆம்” என்றாள். அந்த ஒற்றைச் சொல்லை புரிந்துகொள்ளாமல் அவன் திகைத்தான். ஒருகணம் கழித்து “என்ன சொல்கிறாய்? எவரிடம் பேசுகிறாய் என்று தெரிகிறதா?” என்று உடைந்த குரலில் கூவியபடி அருகே வந்தான்.

“இது படைத்தலைவியின் அறை. இனி ஒரு மிகைச்சொல் எழுப்புவீர்கள் என்றால் இக்கணமே தலைவெட்டி வீழ்த்த ஆணையிடுவேன்” என்று அவள் அவன் விழிகளை நோக்கி சொன்னாள். அவன் அடிபட்டதுபோல உடல் விதிர்க்க கால் தளர்ந்தான். கைகள் நடுங்க அவற்றை கோத்துக்கொண்டான். “அமர்க!” என்று அவள் சொன்னாள். அவன் அமர்ந்துகொண்டான். “என்ன சொல்ல வந்திருக்கிறீர்கள் என்பதை சொல்க! இது சிந்துநாடு அல்ல, புதிய வேதம் எழுந்த அஸ்தினபுரி” என்றாள். அவன் கைகளை நெஞ்சோடு சேர்த்து கட்டிக்கொண்டான். “இங்குள்ள நெறிகளை புரிந்துகொள்க! அரசுடன் பணிகொள்பவர்கள் யானையுடன் உறவாடுபவர்கள்போல என்று அஜிதநீதி சொல்கிறது. எக்கணமும் எவரையும் கொல்லக்கூடுமென்ற வாய்ப்பை எப்போதும் யானை தன் உடலில் கொண்டிருக்கிறது என்று உணர்க!”

அவன் பெருமூச்சுவிட்டான். கண்கள் கலங்கியிருந்தன. முகம் சிவந்து நீல நரம்புகள் துடித்துக்கொண்டிருந்தன. மூச்சு அப்போதும் சீரடையவில்லை. “கூறவந்தவற்றை கூறுக!” என்றாள். “நான் பேரரசி திரௌபதியை வரவேற்க களமுற்றத்திற்கு வரப்போவதில்லை. என் அன்னை வரலாம், அதை என்னால் விலக்க முடியாது. நான் வரமாட்டேன். எனக்கு ஆணையிட எவரையும் ஒப்பப்போவதில்லை” என்று சுரதன் சொன்னான். “ஆணையிட்டால் எவரும் ஒப்பியே ஆகவேண்டும். அன்றி கழுவிலேறவேண்டும்” என்று அவள் அவன் விழிகளை நோக்கி சொன்னாள். அவன் விழிகள் தழைந்தன. “ஆனால் ஆணையிடப் போவதில்லை. பேரரசிக்கு உளம்நிறைந்த வாழ்த்தே அமையவேண்டும் என விழைகிறோம்.”

“அவர் என் தந்தையை கொன்றவர்…” என்று அவன் சொன்னான். “எந்தை தலையறுந்து களம்பட அவரே வழியமைத்தார். நான் அவரை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை.” அவன் குரல் விந்தையாக உடைந்து சிறுவனுடையதுபோல் ஆகியது. விழிகள் பித்துகொண்டு உருளத்தொடங்கின. “அவர்மேல் நான் போரிலிருக்கிறேன். இந்த அஸ்தினபுரி நகர்மேல் போரிலிருக்கிறேன். என்னை இன்று உங்கள் அரசர் அடித்தார். அக்கணமே நான் வாளை உருவியிருக்கவேண்டும். காத்திருக்கிறேன். ஆம், நான் காத்துக்கொண்டிருக்கிறேன். இங்குள்ள எவர் நெஞ்சிலும் என் வாள் பாயலாம். உங்கள் அரசர், அவர் இளையோர், அரசியர். எவராயினும் என் எதிரிகளே. அதை அவர்களும் அறியட்டும். அதை சொல்லவே வந்தேன். நான் வாயில்நின்று உங்கள் அரசியை வரவேற்றால் எந்தை என்மேல் சினம்கொள்வார். என் மூதாதையரின் தீச்சொல் என்மேல் எழும்…”

அவன் உடனே எழுந்துவிட்டான். “அவ்வளவுதானா?” என்று அவள் கேட்டாள். “அவ்வளவுதான், இனி நான் சொல்லவேண்டியதொன்றுமில்லை. நான் செய்துகாட்டவே எஞ்சியிருக்கிறது. அதை நீங்கள் காண்பீர்கள்” என்றபின் அவன் வெளியே சென்றான். அறைவாயிலில் நின்று திரும்பி நோக்கி “ஆனால் ஒன்று உணர்க! அதையும் சொல்லியாகவேண்டும். உன்னை நான் இன்று இவ்வண்ணம் விட்டுச்செல்வது அஞ்சி அல்ல. தயங்கியும் அல்ல. நீ சூதர்குலத்தவள். உன் குருதியால் என் வாள் நனையலாகாது. என்றேனும் என் தலையில் முடி அமையுமென்றால் அன்று உன் தலைகொய்ய என் படைவீரர்களில் இழிந்தோனை அனுப்புவேன்” என்றான். சம்வகை புன்னகைத்தாள். அவன் சிவந்த பித்துக்கண்களால் அவளை நோக்கிவிட்டு வெளியேறினான்.

அவள் எழுந்து தன் கவசங்களை அணியும்பொருட்டு செல்லத் தொடங்கியபோது விசைகொண்ட காலடிகளுடன் சுரேசர் அவள் அறைவாயிலில் வந்து நின்றார். ஏவலன் அவளிடம் செய்தி சொல்ல உள்ளே வருவதற்குள் அவள் வெளியே சென்று அவரை எதிரேற்றாள். வணங்கி “வருக, உத்தமரே!” என்றாள். “அவர் செல்வதை பார்த்தேன், என்ன சொல்கிறார்? அவரால் பேரரசியை எதிர்கொண்டு வரவேற்க முடியாது என்கிறாரா?” என்றபடி அமர்ந்தார். “ஆம், அதை எதிர்பார்த்திருந்தேன்” என்று அவள் சொன்னாள். “அவர் ஏன் அப்படி தன்னை காட்டுகிறார் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.” சுரேசர் சிரித்தபடி “அவர் தன்னை நிறுவிக்கொள்கிறார். நம் முன் அல்ல, தன் முன். தன் இளையோன் முன், அன்னையின் முன்” என்றார்.

“அவரைப்பற்றி அரசரிடம் விரிவாக சொல்லியாகவேண்டும்” என்று சம்வகை சொன்னாள். “அவர் என்ன நினைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.” சுரேசர் “சிந்துவின் இளவரசர்கள் தன் மைந்தர்களைப்போல என்று அவர் என்னிடம் சற்றுமுன் சொன்னார்” என்றார். “அவ்வாறே அவரால் எண்ண முடியும். இவ்விரு இளவரசர்களும் இங்கே இருப்பார்கள் என்றால் ஆறே மாதங்களில் அவர் இவர்களை இங்கே அரசர்களென மணிமுடி சூட்டி அமரவைக்கவும்கூடும். அவர் உள்ளம் குற்றவுணர்வால் நெகிழ்ந்திருக்கிறது. சொல்லச் சொல்ல விழிநீர் பெருகுகிறது. அவர் களம்பட்ட அத்தனை இளவரசர்களுக்காகவும் இவர்களிடம் நிகர்செய்ய எண்ணுகிறார். இந்த அரண்மனையில் இளையோர் குரல் ஒலித்து எத்தனை காலமாகிறது அமைச்சரே என்றபோது குரல் இடற தலைகுனிந்தார்…”

சம்வகை சுரேசர் எண்ணுவதென்ன என்று நோக்கிக்கொண்டிருந்தாள். “அவர் இவர்களுக்கு ஏதேனும் ஈடுசெய்யவேண்டும். அதை இந்நகரமும் எதிர்பார்க்கும்” என்றார். சம்வகை “ஆனால் இவர்கள் ஜயத்ரதனின் மைந்தர். அதை எந்நிலையிலும் மறக்கலாகாது” என்றாள். “அவர்களை நாம் இப்போது மதிப்பிட வேண்டியதில்லை” என்று மட்டும் சுரேசர் சொன்னார். அவள் அவருள் ஓடுவனவற்றை புரிந்துகொள்ளாமல் குழம்பினாள். “அவர்கள் இருவரும் இங்கே தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வகையிலேனும் அவர்கள் தங்களை வகுத்துக்கொள்ள இவ்வாழ்க்கை அவர்களுக்கு உதவட்டும்” என்று சுரேசர் சொன்னார். “ஆனால்…” என அவள் தொடங்க இடைமறித்து “சில தருணங்களில் இவ்வாறுதான். நாம் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டே ஆகவேண்டுமென்ற நிலை உருவாகிறது. அதை அளிமடம் என்கின்றன நூல்கள்” என்றார் சுரேசர்.

ஏவலன் உள்ளே வந்து வணங்கி “சிந்துநாட்டு இளவரசர் சுரதன்” என்றான். சுரேசர் புன்னகைக்க அதன் பொருள் என்ன என வியந்தபடி “அனுப்புக!” என்று சம்வகை சொன்னாள். அவன் சென்றபின் “மீண்டும் வருகிறார். சில சொற்கள் எஞ்சியிருக்கின்றன போலும்” என்றாள். சுரேசர் அதற்கும் புன்னகைத்தார். உள்ளே வந்த சுரதன் சுரேசரை நோக்கி ஒரு கணம் திகைத்தான். பின்னர் தன்னை திரட்டிக்கொண்டு “நான் பேரரசியை வரவேற்க வருகிறேன். என்ன செய்யவேண்டும்? அன்னையுடன் அரண்மனைமுகப்பில் நிலைகொள்ளவேண்டுமா? அல்லது கோட்டைமுகப்புக்கே செல்லவேண்டுமா?” என்றான். சம்வகை “நீங்கள் இளவரசர். இந்த அரண்மனையில் இன்று அரசகுடி என எஞ்சுபவர்கள் நீங்கள் இருவருமே. கோட்டைவாயிலுக்குச் சென்று வரவேற்பதே முறை” என்றாள். “ஆம், அதை செய்கிறேன்” என்றான் சுரதன்.

அவள் மேலும் சொல்லாமல் அவனை நோக்கினாள். “நான் என் வஞ்சத்தை மறக்கவில்லை. ஆனால் இது என் தந்தையின் ஆணை” என்று அவன் சொன்னான். “தந்தை உங்களிடம் சொன்னாரா?” என்று சம்வகை கேட்டாள். “ஆம், நான் என் அறைநோக்கி சென்றேன். ஓர் எண்ணம் எழுந்தது. மீண்டும் சென்று சூதாடுவதல்லவா என் எதிர்ப்பை வலுவாக நிலைநாட்டும் வழிமுறை என்று. ஆகவே நேராக சூதாட்ட அறைநோக்கி சென்றேன். அது பூட்டப்பட்டிருந்தது. வாயிலில் எந்தை நின்றிருந்தார். விழியில்லாத தோற்றம். என்னை உணர்ந்ததும் கைநீட்டி உரத்த குரலில் ஆணைகளை இட்டார். சூதாடாதே, திரும்பிச் செல் என்றார். எந்தையே நான் என்ன செய்யவேண்டும் என்றேன். இப்போது இங்கிருக்கும் எல்லா நெறிகளுக்கும் கட்டுப்படு. யுதிஷ்டிரனுக்கு அணுக்கமானவனாக, அனைவருக்கும் வேண்டியவனாக திகழ்க என்று எந்தை சொன்னார். ஆணை என தலைவணங்கினேன். நேராக இங்கே வந்தேன்.”

“நன்று, இனி சிக்கலேதும் இல்லை” என்று சம்வகை சொன்னாள். “நான் இன்னமும் அதே வஞ்சத்துடன்தான் இருக்கிறேன். என் உள்ளம் எரிந்துகொண்டிருக்கிறது. அதை எவரும் மறக்கவேண்டியதில்லை” என்று சுரதன் சொன்னான். “நான் என் சொற்களில் ஒன்றையேனும் திரும்ப எடுத்துக்கொள்ளவில்லை. அதைக் குறித்த ஐயமே தேவையில்லை.” அவன் சுரேசரை நோக்கிவிட்டு “ஒருபோதும் நான் அந்தணரின் சூழ்ச்சிகளுக்கு ஆட்படப்போவதில்லை. என் அறத்தை என் வாளே முடிவுசெய்யும்” என்றபின் வெளியே சென்றான். சுரேசர் அவன் செல்வதை நோக்கியபின் திரும்பி சம்வகையிடம் “ஒவ்வொருவரும் தங்கள் இடங்களை நடிக்கும்பொருட்டு உரிய உரு கொண்டு, உரிய சொற்கள் கொண்டு அரங்குக்கு வருகிறார்கள்” என்றார்.

சம்வகை அவரை கூர்ந்து நோக்கி “இவர் நடிக்கப்போகும் இடம் என்ன?” என்றாள். “அதை எவரும் இப்போது சொல்லமுடியாது. உண்மையில் அவர் இனிமேல்தான் அதை நமக்கு காட்டவேண்டும். அவரை ஆட்டுவிக்கும் தெய்வங்கள் மட்டுமே அதை இன்று அறியும்” என்றபடி சுரேசர் எழுந்துகொண்டார். “பேரரசி வந்துகொண்டிருக்கிறார். அரசரின் அணிகள் சென்று சேர்ந்துவிட்டன. அணிகளை பார்த்தேன். நன்று. அவ்வெண்ணம் எல்லா வகையிலும் நன்று. பெண்களுக்கு மட்டுமே அவ்வாறு தோன்றும். அரசுசூழ்தலில் எப்போதும் பெண்ணின் இடம் என ஒன்று இருக்கவேண்டும். அதை உணர்ந்ததும் உங்களிடம் சொல்லவேண்டும் என தோன்றியது. ஆகவேதான் வந்தேன்” என்றார். அவள் புன்னகையுடன் “என் நல்லூழ்” என்றாள். அவர் வாழ்த்திவிட்டு கிளம்பினார்.

முந்தைய கட்டுரைஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்