எழுத்தாளனும் பெண்களும்

கார்ல் மார்க்ஸின் தீம்புனல் வெளியீட்டுவிழாவுக்கு சென்றிருந்தபோது ஷாஜி இந்தப் படத்தைப்பற்றிச் சொன்னார். மலையாள எழுத்தாளர் பி.கேசவதேவ் எழுதிய ஆத்யத்தே கத என்ற குறுநாவலின் திரைவடிவம். பெரிய நிகழ்வுக, திருப்பங்கள் ஏதுமில்லை. சாதாரணமாக ஒழுகிச்செல்லும் படம். வெட்டியாக இருந்தால், ஒரு காலகட்டத்தை தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், பார்க்கலாம்

அக்காலத்தைய யதார்த்தவாதம். ஆகையால் கொஞ்சம் நாடகத்தனம். ஆனால் பெரும்பாலும் இயல்பான கதாபாத்திரங்கள், உரையாடல்கள், நடிப்பு. நசீர் இயல்பாக நடித்திருக்கிறார். அன்றைய மலையாள இளைஞர்களின் பாவனைகள். அவருடைய விடுதி, அலுவலகம், அன்றைய சமூகச்சூழல் எல்லாமே படத்தில் உள்ளன.

கதை எழுத விரும்பி ஒரு சிற்றூரில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கும் கதைநாயகனின் வாழ்க்கைச்சந்தர்ப்பங்கள், அவன் சென்று சிக்கும் சிடுக்குகள் வழியாக முதல் கதையை எழுதுவது. இவ்வளவுதான் கதை. முதல்கதை எழுத அவனுக்குத்தூண்டுதலாக  அமைபவர்கள், வேறுயார் பெண்களேதான். பெண்களும் யக்ஷிகளும் சூழ்ந்த ஒரு வாழ்க்கை. அட அட. எழுத்தாளர் என்றால் இப்படியல்லவா வாழ்ந்திருக்கவேண்டும். அந்த வீடு வாடகைக்கு கிடைக்குமென்றால் நானே கூட செல்ல முயன்றிருப்பேன்

கேசவதேவ்

வேடிக்கை என்னவென்றால் மொத்தக் கதையும் ஆசிரியன் தன் முதல் கதையின் முதல்வரியை எழுத எத்தனிக்கும் அந்தச் சரியான தருணத்தில் ஆரம்பிக்கும் நிகழ்ச்சிகளால்தான் நடைபெறுகிறது. எழுதுவதற்கு எதிராகத்தான் உலகமே நிலைகொள்கிறது. பெண்களும். எழுதுபவர்களுக்குத்தான் அந்த துயர் தெரியும்.

எல்லா பெண்களும் நஸீரை கவர முயல்கிறார்கள். எல்லா பெற்றோரும் தங்கள் பெண்களை நசீருடன் பழகவிடுவதில் கவனமாக இருக்கிறார்கள். நஸீர் அழகன் என்பது ஒருபக்கம். அதைவிட முக்கியமானது அன்றைய சமூகச்சூழல். படித்த .அரசு வேலையிலிருக்கும் இளைஞன் என்பவன் ஒரு பெரிய பொக்கிஷம். அவனை கொள்ளையிட நான்குபக்கமும் திருடிகள். அழகிகளும்கூட

1904ல் வடக்குபரவூர் அருகே கெடாமங்கலம் என்ற ஊரில் பிறந்தவர் கேசவதேவ், இயற்பெயர் கேசவபிள்ளை. இளமையிலேயே அன்றைய வைக்கம்போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் நுழைந்தார். வைக்கம் வீரரான சகோதரன் அய்யப்பனின் தொண்டரானார். அவர் நடத்திய மாபெரும் சாதிமறுப்பு- சமபந்தி போஜன நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

வைக்கம் போராட்டத்தை ஒட்டி மதமாற்ற அலை ஒன்றும் எழுந்தது. அதை எதிர்த்து கணிசமானவர்கள் ஆரியசமாஜத்தில் சேர்ந்தனர். கேசவபிள்ளை தன் பெயரை கேசவதேவ் என மாற்றிக்கொண்டார். எழுத்தை மட்டுமே நம்பி வாழ முடிவுசெய்தார். முதலில் காங்கிரஸ் கட்சியிலும் அங்கிருந்து இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியிலும் சேர்ந்து பணியாற்றினார். கடுமையான வறுமை, ஊர் ஊராக அலையும் வாழ்க்கை அவருடையது. ஒருகலகட்டத்தில் தகழி,தேவ்,பஷீர் என மூன்று எழுத்தாளர்களும் மும்மூர்த்திகளாக அறியப்பட்டனர்

கேசவதேவின் அயல்கார் தமிழில் அண்டைவீட்டார் என்றபேரில் மொழியாக்கம் செய்யப்பட்டு கிடைக்கிறது. பின்னாளில் அவருடைய கதைகள் வெற்றிகரமான திரைப்படங்களாயின. அவை அவரை பொருளியல் வல்லமைகொண்டவராக ஆக்கின. அவருடைய ஓடையில்நிந்நு என்னும் குறுநாவலின் திரைவடிவம் புகழ்பெற்றது. தமிழில் அது பாபு என்றபேரில் படமாக்கப்பட்டது.

கேசவதேவின் முதல்திருமணம் கசப்பில் முடிந்தது. பிறகு பல உறவுகள். ஐம்பத்தேழு வயதில் தன்னைவிட முப்பது வயது குறைவான சீதாலக்ஷ்மியை திருமணம் செய்தார். சீதாலக்ஷ்மி தேவ் ஒரு நாவலாசிரியர். அவர் கேசவதேவை வாசகியாக அறிமுகம் செய்துகொண்டு காதலித்து மணர்ந்தார். அவர்களுக்கு ஒரு மகன் ஜோதிதேவ் புகழ்பெற்ற நீரிழிவுநோய் நிபுணர். 1983ல் கேசவதேவ் மறைந்தார். அப்போது அவருக்கு வயது 78. நான் 1982ல் அவரை திருவனந்தபுரத்தில் நடந்த இலக்கியவிழா ஒன்றில் சந்தித்திருக்கிறேன். அவர் மிகச்சிறந்த பேச்சாளர்.

கேசவதேவ் பலவகையிலும் ஜெயகாந்தனுக்கு நிகரானவர். ஜெயகாந்தனின் நண்பரும்கூட. ஆனால் ஜெயகாந்தனைவிட ‘நிறம்’ மிக்க வாழ்க்கை கொண்டவர். 1957ல் வெளிவந்த அவருடைய தன்வரலாறு ‘எதிர்ப்பு’ பரபரப்பாகப் பேசப்பட்டது. அவர் தன் வாழ்க்கையில் வந்த பெண்களைப் பற்றி [கே, எஸ் என்னும் முதலெழுத்தால் அவர்களை குறித்திருந்தார்] விரிவாக எழுதியிருந்தார். சற்று துணிச்சலான அந்த தன்வரலாறு ஒருவகை பாலியல் எழுத்தாக குமுதம் வார இதழில் சுருக்கி மொழியாக்கம் செய்து அளிக்கப்பட்டிருந்தது.

பின்னர் சீதாலக்ஷ்மி தேவ் தன் கணவரைப் பற்றி எழுதிய  கேசவெதேவினோடொப்பம் சீதா என்னும் நூலும் சற்றே துணிச்சலான தன்வரலாறு. அதையும் தமிழில் அரைப்பாலியல் நூலாக மொழியாக்கம் செய்து வெளியிட்டிருந்தனர். கேசவதேவின் கட்டுக்கடங்காத தன்மையே சீதாலக்ஷ்மியை கவர்ந்திருக்கிறது

இது கேசவதேவின் சொந்த அனுபவத்தைச் சார்ந்து எடுக்கப்பட்ட படம் என்கிறார்கள். கேசவெதேவே அப்படிச் சொல்லியிருக்கிறார். நாற்புறமும் அழகிகள் சூழ அவர் முதற்கதையை எழுத அமர்கிறார். எழுத்தாளனுக்குத்தான் எத்தனை எத்தனை சோதனைகள். அழகிகளின் கன்றுக்குட்டிகளை துரத்திப் பிடிக்க வேண்டியிருக்கிறது.அதிலும் அத்தனை பெண்களும் சேர்ந்து எழுத்தாளனுக்காகச் சண்டை போடும் கனவுக்காட்சி. யதார்த்தம் என்றால் அதுதான். என்ன ஒரு கனவு!

இன்றைய இளம் எழுத்தாளர்களை நினைத்துக்கொண்டேன்.பெண்கள் போகட்டும், அந்த யக்ஷியாவது வந்தால் ஒரு நாவலை எழுதலாமே என்று அவர்கள் ஏங்குவது தெரிகிறது!!!

***

பி.கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’

பி கேசவதேவ் ஓடையில்நிந்நு வாங்க

முந்தைய கட்டுரைஅ.மார்க்ஸ்,சாரு நிவேதிதா, அழகியல்
அடுத்த கட்டுரை‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்