புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை

 

பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்கள் எழுதிய ஒரு நூலில் அரசுக்கு எதிரான, ஆதாரமில்லாத செய்திகள் இருப்பதாகச் சொல்லப்பட்டு அவர்மேல் பபாசி நடவடிக்கை எடுத்திருக்கிறது. பபாசியின் புகாரின்பெயரில் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

 

பபாசி பெரும்பாலும் அரசை நம்பி இருக்கும் ஓர் அமைப்பு. இங்கே இத்தகைய பெரிய அமைப்பு எதுவாயினும் அரசை நம்பியே இருந்தாகவேண்டும். அரசு எதிர்நிலை எடுத்தால் அதை நடத்தவே முடியாது. மேலும் இங்கே நூல்விற்பனை என்பது பெரும்பாலும் அரச நூலக ஆணையைச் சார்ந்தது.[அதில் எப்போதுமே அரசியல் உண்டு. மு.கருணாநிதி காலம் முதல் இன்றுவரை என் நூல்களுக்கு நூலக ஆணையே கிடைப்பதில்லை].

 

இப்படி இருந்துகொண்டு பதிப்பாளர்கூட்டமைப்பின் சுதந்திரப்போக்கு பற்றியெல்லாம் பேசுவதில் பயனில்லை.அது ஜனநாயகத்திற்காகப் போராடவேண்டும், புரட்சி செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள் நூல்களே நாட்டுக்குத் தேவையில்லை என்று சொல்லும் அரசியல்தொண்டர்கள். அவர்களுக்கு அந்த முச்சந்தி அரசியலன்றி எதுவுமே தெரியாது.

 

ஆகவே பபாசிக்கு வேறுவழியில்லை. பபாசியை கண்டிக்கலாம், அதன் அமைப்பில் அக்கண்டனத்தைப் பதிவுசெய்யலாம்.  ஆனால் புத்தகக் கண்காட்சியைப் புறக்கணிப்பதில் பொருள் இல்லை. புத்தகக் கண்காட்சி மெல்லமெல்ல பல தடைகளைக் கடந்து உருவாகி வந்த ஒன்று. தமிழில் அது ஒரு எதிர்பாரா பெருநிகழ்வு, ஒருவகை அற்புதம். அது தமிழ் வாசிப்பை வளர்ப்பதில் பெரும்பங்காற்றியது. அது இல்லையேல் நம் வாசிப்பு இன்னமும் கீழே செல்லும். அதை அழிப்பது எளிது.

 

அதை எதிர்ப்பவர் வேறொன்றை உருவாக்கலாம், அதுவே ஆக்கபூர்வமானது. ஆனால் அரசியல்தொண்டர்களும் ,எல்லாவற்றிலும் எகிறிக்குதிக்கும் ரத்தக்கொதிப்பு கொண்ட முகநூலர்களும் அப்படியொன்றை உருவாக்கப்போவதில்லை. அவர்களுக்கு இது தங்கள் வழக்கமான அரசியல்கூச்சல்களுக்குரிய ஒரு களம் மட்டுமே. அவர்கள் கூச்சலிட்டுச் சீரழித்த பல்வேறு களங்களைப் போல் இன்னொன்று.

 

முரண்படும் இலக்கியவாதிகள் ஒருங்கிணைந்தால் ஒருவேளை உருவாக்கக்கூடும். ஆனால் எந்நிலையிலும் அது இதைப்போல இவ்வளவு பெரிதாக இருக்க இயலாது. பல்லாயிரம் பேரை ஆண்டுதோறும் நூல்களின் உலகுக்குள் கொண்டுவர இயலாது. ஒரு சாதாரண புத்தகவெளியீட்டுவிழாவையே முறையாக நடத்தத் தெரியாதவர்கள் நாம். அதில் சண்டைபோட்டு உழக்குக்குள் கிழக்குமேற்காக நிலைகொள்பவர்கள். அமைப்புகளைக் கட்டி நடத்த சிற்றிதழாளர்களால் இயலாது. அது இயல்பானதும்கூட. ஆண்டிகள் மடம்கட்ட முடியாது என்பது தொல்கூற்று.

 

ஆகவே பபாசியை அல்லது புத்தகக் கண்காட்சியைப் புறக்கணிப்பது அல்ல, வெற்றிகரமாக தொடர்ந்து நடத்துவது மட்டுமே நமது கடமை. அதை இப்போது சாக்கு கிடைத்தது என புரட்சிவேடமிட்டுத் தாண்டிக்குதிப்பவர்கள் உணரவேண்டும். இதில் எதிலும் தங்கள் தெருமுனை அரசியலை மட்டுமே காண்பவர்கள் கூச்சலிடுவதை புரிந்துகொள்கிறேன்.  ஆனால் நூல்களை வெளியிடுபவர்கள், வாசிப்பவர்கள் கூட இத்தகைய புறக்கணிப்பில் ஈடுபடுவது அவர்கள் பொதுத்தளத்தில் உருவாக்கப்படும் செயற்கையான, குறுகியகாலக் கொந்தளிப்புகளால் அடித்துச்செல்லப்படுவதையே காட்டுகிறது

 

முதலில் ஒன்றைச் சொல்லியாகவேண்டும். பபாசியின் புத்தகக் கண்காட்சி நெடுங்காலம் அரசியல்சார்பில்லாமல்தான் நடந்துவந்தது. அரசியல்வாதிகளின் ஆதரவு இல்லாமல், அரசு புரவலராக இல்லாமல் தன்னியல்பாக உருவாகி வந்த அமைப்பு அது. சொல்லப்போனால் தமிழக அரசியல் அதற்கு எதிரானதாகவே இருந்து வந்தது. மு.கருணாநிதி கடைசியாக முதல்வராக இருந்தபோதுதான் புத்தகக் கண்காட்சி முதன்முறையாக அரசியல்மயமாக்கப் பட்டது. மு.கருணாநிதியின் படத்தை மட்டுமே அச்சிட்டு புத்தகக் கண்காட்சியின் விளம்பரச் சுவரொட்டிகள் சென்னைநகரெங்கும் ஒட்டப்பட்டன. முழுக்க முழுக்க அவரை மட்டுமே மையப்படுத்தி புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது.

 

மதுரையில் மு.க.அழகிரி பேன்ட் வாத்தியப்பேரோசையுடன் புத்தகக் கண்காட்சிக்கு விஜயம் செய்ய உள்ளே இருந்த அத்தனை வாசகர்களும் வெளியே துரத்தப்பட்டதை நான் பதிவுசெய்திருக்கிறேன். புத்தகக் கண்காட்சி அரங்கில் மு.கருணாநிதி பிறந்த இல்லத்தின் ‘செட்’ அமைக்கப்பட்டிருந்ததை, அவருடைய பெருமைபேசும் அரங்கு அமைக்கப்பட்டிருந்ததை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டோம். அவரும் நிரந்தரப் புத்தகக் கண்காட்சி அமைக்கப்படும், பபாசி உறுப்பினர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு கடை அளிக்கப்படும் என்றெல்லாம் பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு குளிரக்குளிரப் பாராட்டு பெற்றுச் சென்றதும் வரலாறு. அவர் கடைகளைப் பார்வையிட வந்தபோது பதிப்பாளர்கள் வரிசையாக நின்று வணங்கினர். அன்று கடைகள் அனைத்திலுமிருந்து மு.கருணாநிதி அவர்களை எதிர்த்து எழுதப்பட்ட நூல்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டன.

 

அன்றே அது அந்த அமைப்பின் சரணாகதி, ஓர் எல்லைமீறல், அதனால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை என்று நான் எழுதினேன். அதனால் புத்தகக் கண்காட்சியில் அரசியல்வாதிகள் ஊடுருவவே வழி உருவாகும், அங்கே எழுத்தாளர்களுக்கு இருக்கும் இடம் இல்லாதாகும் என்று சொல்லியிருந்தேன். அதைவிட அடுத்த அரசு வரும்போது இதேபோல அவர்களிடம் மண்டியிடவேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தேன்.

 

இன்று அதுவே நிகழ்கிறது. புத்தகக் கண்காட்சிக்கு முதலமைச்சர் வரவேண்டுமென்ற நிலை உருவாகிவிட்டது. அவர் வந்தால் அவரை கும்பிட்டு தரையில் உருளவேண்டியது பபாசியின் கடமை என ஆகிவிட்டது. அவரை விமர்சிக்கும் நூல்களை அகற்றவேண்டியிருக்கிறது. அரசு சொல்வதற்கெல்லாம் ஆடவேண்டியிருக்கிறது. ஓர் அறிவியக்கத்தின் இழிநிலை இது. ஆனால் இதை தொடங்கியவர் இன்றைய முதல்வர் அல்ல. அவர்கள் அனைவரும் ஒரே வார்ப்பு கொண்டவர்கள்தான்.

 

இன்னொன்றும் இங்கே சொல்லவேண்டும், புத்தகக் கண்காட்சி என்பது ஒரு பண்பாட்டுச் செயல்பாடு. அதன் உள்ளடக்கமாக அரசியல் உண்டு என்பது இயல்பானதே. ஆனால் அதை நேரடி அரசியலாக ஆக்குவோம் என்றால் அது அரசியல்களமாக ஆகிவிடுகிறது. அரசியல் செயல்பாடு எதுவாயினும் அதற்கு எதிர்நடவடிக்கையும் இருக்கும். அதன்பின் அங்கே பண்பாட்டு நாகரீகம் பேசமுடியாது. அரசியல் அடிதடிதான் எஞ்சும்.

 

திரு வி.அன்பழகனின் நூல் வெறும் அரசியல் துண்டுப்பிரசுரம். இதை ஒரு முன்னுதாரணமாக ஆக்குவோம் என்றால் இனி தமிழகத்தின் அத்தனை அரசியல்கட்சிகளும் அரங்குகளைக் கைப்பற்றி அவர்களின் துண்டுப்பிரசுரங்களை அளிக்கத் தொடங்கினால் அதன்பின் அங்கே வாசகர்களுக்கு இடமிருக்காது. நேரடியான அரசியல்பிரச்சாரம், அரசியல்பிரச்சார நூல்கள், அவை எவையென்றாலும் தவிர்க்கப்படுவதே நல்லது. புத்தகக் கண்காட்சிக்குக் கூடும் கூட்டம் அரசியல்வாதிகளின் கண்களை உறுத்துகிறது. அதுவே அவர்களின் இலக்கு. இப்போதே புத்தகக் கண்காட்சி குறித்த சலிப்பு மக்களிடம் உள்ளது. இப்படியே அதிகார அரசியல், எதிர் அரசியல் என்று போனால் முழுக்க அரசியல்களமாக அது ஆகும். அங்கே வாசகர்கள் வரப்போவதில்லை.

 

ஏறத்தாழ இதற்கு நிகரான ஒரு வரலாற்று நிகழ்வு நினைவுக்கு வருகிறது. கேரள சாகித்ய பிரவர்த்தக சஹஹரண சங்கம் [எஸ்.பி.சி.எஸ்] கேரள பண்பாட்டில் நிகழ்ந்த ஒரு அற்புதம். ஒருகட்டத்தில் ஆசியாவிலேயே பெரிய பதிப்பகம் அதுதான். எழுபதுகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நூல் என அது வெளியிட்டது. கேரளம் முழுக்க அது விற்பனை மையங்களை நிறுவியது. வாசிப்பை பேரியக்கமாக ஆக்கியது. எழுத்தாளர்களை வருமானவரி கட்டுபவர்களாக ஆக்கியது. இந்தியாவில் அதற்கிணையான ஓர் இயக்கம் வேறில்லை.

 

1945 மார்ச் 15 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது இது. பின்னர் நேஷனல் புக் ஸ்டால் இதனுடன் இணைக்கப்பட்டது. பிரபல விமர்சகர் எம்.பி.பால், சிறுகதையாசிரியர் காரூர் நீலகண்டபிள்ளை ஆகியோர் இதன் நிறுவனர்கள். இதன் முதன்மைச்செயலாளர் டி.சி.கிழக்கேமுறி. 1945ல் ’தகழியின் கதைகள்’ என்னும் நூல் முதலில் வெளிவந்தது.ஒரு காலத்தில் வாசகனாகிய எனக்கு எஸ்பிசிஎஸின் அன்னப்பறவை முத்திரையே உள்ளக்கிளர்ச்சியை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. அந்த முத்திரையே நூலின் தரத்திற்கான சான்றொப்பமாக திகழ்ந்திருக்கிறது.

 

மிகவெற்றிகரமாக நடந்த இந்த அமைப்பின்மேல் இடதுசாரிகள் விலக்கம் கொண்டனர். அவர்களுக்கு எஸ்பிசிஎஸ் மேல் பலவகையான குற்றச்சாட்டுக்கள் இருந்தன. குறிப்பாக அவர்களுடைய இடதுசாரிப் பிரச்சார நூல்களை அவர்கள் தாமதப்படுத்துகிறார்கள் என்ற எண்ணம்.ஆகவே  அவர்கள் பிரபாத் புக்ஹவுஸ் என்னும் இன்னொரு நிறுவனத்தை தொடங்கினர். ஆனால் அது வெற்றிகரமாக நடைபெறவில்லை.

 

எஸ்.பி.சி.எஸ் ஒரு கூட்டுறவு அமைப்பு. அதை கைப்பற்ற இடதுசாரிகள் முற்பட்டனர். ஒரு நூல் வெளியிட்ட எவரும் எழுத்தாளராக எஸ்பிசிஎஸில் உறுப்பினராகலாம் என்பது அதன் நெறி. அதை பயன்படுத்திக்கொண்டனர். ஒரே வாரத்தில் பலநூறு நூல்கள் வெளியிடப்பட்டன. பல ‘எழுத்தாளர்கள்’ உருவாகி எஸ்பிசிஎஸில் உறுப்பினர் ஆயினர். நிர்வாகத்தைக் கைப்பற்றினர்.

 

எஸ்பிசிஎஸின் நிறுவனத் தலைவரும் அதை மாபெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தவருமான காரூர் அவமதிக்கப்பட்டார். அவர் விலகி உயிர்துறந்தார். அதன் மிகத்திறமை வாய்ந்த செயலரான டி.சி.கிழக்கே முறி வெளியேற்றப்பட்டார். ஒரு பதிப்பகம் மிகச்சிறந்த வாசகர்களால் மட்டுமே நடத்தப்பட முடியும். காரூரும் டிஸியும் வெளியேறியதுமே எஸ்பிசிஎஸ் அழியத்தொடங்கியது.

 

டி.ஸி.கிழக்கேமுறி வெளியேறி டி.ஸி.புக்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். மிகவிரைவிலேயே அது வளர்ந்து இன்று ஆசியாவிலேயே பெரிய வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. எஸ்பிசிஎஸ் இடதுசாரி அரசியலுக்கான கருவியாக ஆகியது. இடதுசாரி நூல்கள் முதன்மையாக வெளியிடப்பட்டன. அன்றைய இலக்கியநட்சத்திரங்களான தகழி, பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றவர்களின் நூல்கள் வரிசையில் நிறுத்தப்பட்டன. அவர்கள் வெளியேறி டி.ஸி புக்ஸை நோக்கிச் சென்றனர். எஸ்பிசிஎஸ் அழிந்தது.

 

இன்று எஸ்பிசிஎஸ் ஒரு பெயரளவு பதிப்பகம். அதற்கு நகரங்கள் அனைத்திலும் கடைகள் உள்ளன. அவை ஒப்புக்கு நடத்தப்படுகின்றன. அது நூல்கள் வெளியிடுவது மிகக்குறைவு. அதன் ஊழியர்களின் ஊதியத்தின் பொருட்டு பாடநூல் விற்கும் அமைப்பாக நடத்தப்படுகிறது. எழுத்தாளர்களுக்கு அதனால் எந்த நன்மையும் இல்லை.

 

ஆச்சரியமென்ன என்றால் எஸ்பிசிஎஸ் அழிந்ததும் கேரள எழுத்தாளர்களின் வருவாயும் அழிந்தது. முன்பு தகழி, கேசவதேவ்,பஷீர், எம்.டி வாசுதேவன் நாயர் போன்றவர்களின் நூல்கள் பெருமளவில் விற்கும். அவர்கள் அடையும் உரிமைத்தொகை போக எஸ்பிசிஎஸ் பெறும் லாபம் பிற எழுத்தாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அத்தனை எழுத்தாளர்களுக்கும் உரிமைத்தொகை மாதச்சம்பளம் போல வழங்கப்பட்டது. சராசரியாக ஓர் எழுத்தாளர் அரசூழியருக்கு நிகராக வருவாய் பெற்றார். எழுத்தாளர்கள் எழுத்தை நம்பியே வாழ்ந்த காலம் அது.

 

பதிப்புத்தொழில் டி.ஸி புக்ஸ் போன்ற தனியார் அமைப்புக்களுக்குச் சென்றபோது அந்நிலை மறைந்தது. நட்சத்திர எழுத்தாளர்கள் மட்டும் தொடக்கத்தில் நல்ல பதிப்புரிமைத் தொகை பெற்றனர். ஆனால் மெல்ல மெல்ல அதுவும் குறைந்தது. எஸ்பிசிஎஸ் எழுத்தாளர்களுக்கு நூலின் விலையில் 20 விழுக்காடு பதிப்புரிமைத்தொகை அளித்த நிறுவனம். இன்று டிஸி புக்ஸ் போன்ற பெருநிறுவனங்கள் அளிக்கும் உரிமைத்தொகை 5 விழுக்காடுதான்.இன்று கேரளத்தில் எந்த எழுத்தாளரும் எழுத்தை நம்பி வாழமுடியாது.

 

கேரள எழுத்தாளர்களின் வாழ்க்கையில் இருள்விழச் செய்தது இடதுசாரி அரசியல். கேரளப் பண்பாட்டின் பெரும் இயக்கம் ஒன்றை அழித்தது. தனியாருக்கு வாசல் திறந்திட்டது. ஆனால் அதை அவர்கள் இன்றும் சரியென்றே சொல்கிறார்கள். ‘எல்லா களமும் அரசியல்களமே’ என்ற கோஷம் அவர்களிடமிருந்து எழுகிறது. உயரிய அரசியல் நோக்கத்துடன், அறச்சார்பான எதிர்ப்பின்பொருட்டு அதைச் செய்ததாக அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.

 

அரசியல்வாதிகளின் இயல்பு அது. அவர்களுக்கு கட்சிஅரசியலில் உடனடி எதிரிக்கு எதிரான ஆயுதமே எதுவும். அதிகாரம் நோக்கிய பயணத்தில் எதுவும் படிக்கட்டுதான்.அது இங்கு நிகழக்கூடாது. நம் இன்றைய அரசியல்சார்பால் நாம் அரைநூற்றாண்டாக உருவாகிவந்த ஓர் அமைப்பை அழியவிடலாகாது.

காரூர் நீலகண்ட பிள்ளை

*

டி.சி.கிழக்கேமுறி [டொமினிக் சாக்கோ கிழக்கேமுறி]

ஏற்கனவே எழுதிய ஒன்றை மீண்டும் பதிவுசெய்கிறேன். புத்தகக் கண்காட்சியில் அரசியல்வாதிகளைப்போலவே   மதநிறுவனங்கள், மடங்கள், நவீன குருமார்களின் ஸ்டால்களுக்கு  ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. முழுநேரப் பதிப்பகங்களுக்கு மட்டுமே அங்கே இடமளிக்கப்படவேண்டும். மதநிறுவனங்கள், மதகுருக்களுக்கு இடமளித்தால் அதுவும் இதேபோல ஒட்டகத்தை உள்ளே விடுவதுதான்.

 

ஜக்கி வாசுதேவ் அமைப்போ, கல்கி அமைப்போ, கிறித்தவப் பிரச்சாரகர்களோ இஸ்லாமிய மதப்பிரச்சார நிறுவனங்களோ பதிப்பாளர்கள் அல்ல. அவை மாபெரும் பிரச்சார அமைப்புக்கள். அவர்களுக்கு வேறு இடங்கள் உள்ளன. அவர்கள் தங்கள் பணபலத்துடன் உள்ளே வந்தால் அதன்பின் அங்கே இலக்கியமோ அறிவுச்செயல்பாடோ இருக்கமுடியாது. அத்தகைய பெரிய மதநிறுவனங்களுக்கு இடமளித்துவிட்டு தன்னறம் போன்ற உண்மையான பண்பாட்டுச்செயல்பாட்டாளர்களை துரத்திவிடுவதையே இன்று பபாசி செய்துகொண்டிருக்கிறது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது அது.

 

வி.அன்பழகனின் நூல் மீதான நடவடிக்கை கண்டிக்கத்தக்கதா? ஆம், அது அரசியல்களத்தில் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதை புத்தகக் கண்காட்சியுடன் இணைக்கவேண்டியதில்லை. அவர் ஏற்கனவே இந்த அரசியல்நடவடிக்கையை செய்துவருகிறார். அதன்பொருட்டு சிறைசென்றிருக்கிறார். ஆனால் அது அவருடைய அரசியல் உரிமை. அதை அரசு ஒடுக்குமென்றால் அது ஜனநாயகத்தை மறுப்பது. அதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்படவேண்டும். அவருடைய அந்நூலை பெருந்திரளாக வாங்கி பரப்புவதே அத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக அமைய முடியும். அதை எதிர்க்கட்சிகள் செய்யலாம்.

 

ஆனால் அந்த போராட்டம் புத்தகக் கண்காட்சிக்கு ஊறுவிளைவித்துவிடக்கூடாது. இவர்களின் அரசியல் நிகழும் போர்க்களமாக புத்தகக் கண்காட்சி மாறினால் நாம் பெருமைகொள்ளத்தக்க ஒரே அறிவுசார் இயக்கம் முற்றழியும். இவ்வழிவுப்போக்கை சிலர் அடைந்த சிறு லாபத்திற்காக, சிலருடைய பேராசைநோக்கினால் பபாசி தானே இழுத்துக்கொண்டது, நாம் அதை விரைவு செய்யவேண்டியதில்லை.

 

அரசியல்களத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டியது இந்த அரசுக்குத்தான். இந்திய அரசியல்சட்டம் நிகழும் அரசுக்கு எதிராக மட்டுமல்ல அரசியல் சட்டத்திற்கு எதிராகக்கூட செயல்படுவதற்கான உரிமையை அளிக்கிறது. திகழும் அமைப்பை மாற்றும் கனவை காணவும் அதன்பொருட்டு செயல்படவும் எவருக்கும் உரிமை உண்டு. அதை அனுமதிக்காத அமைப்புக்கள் தேங்கி நாற்றமெடுக்கும். வன்முறையை, உளப்பிரிவினையை தூண்டிவிடாதவரை எந்த கருத்தும் அனுமதிக்கத்தக்கதே.

 

மேற்கண்டவை ஜவகர்லால் நேருவின் வரிகள். அரசுத்துறையில் அரசூழியர்களின் எழுத்துரிமை பற்றி பேச்சு வரும்போது எப்போதும் மேற்கோள் காட்டப்படுபவை. நானே மூன்று முறை மேற்கோள் காட்டியிருக்கிறேன். அன்பழகனுடையது அவதூறு என்றால் அது வேறொரு வழக்கு. அதற்கான சட்டநடைமுறைகள் பல உள்ளன. அதை மேற்கொள்ள எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் பிரசுரிப்பவரை மிரட்டுவது, அவருடைய கடையை காலிசெய்ய வைப்பது, அவர்மேல் வழக்குதொடுத்து சிறையிடுவது போன்றவை நேரடியாகவே கருத்துரிமைக்கு எதிரான செயல்பாடுகள்.

 

கருத்து, அது எவருடையதென்றாலும் அரசால், காவல்துறையால் ஒப்பப்படவேண்டும் என்றிருந்தால் அதன்பின் கருத்துரிமை என்பதே இல்லை. அறிவுச்செயல்பாடு என்பதே இல்லை. நம்மைச்சூழ்ந்திருக்கும் பெரும்பாலான நாடுகளின் நிலை சென்ற ஐம்பதாண்டுகளாக இதுதான். நாமும் அத்திசைநோக்கிச் செல்கிறோம் என்னும் அச்சம் எழுகிறது. அரசின் இந்நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முந்தைய கட்டுரைபத்து நூல்கள் வெளியீட்டுவிழா உரை
அடுத்த கட்டுரைஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020