எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2

எழுத்தாளன் வாழ்க்கை பற்றிச் சொல்லலாமா? 

நவீனத்துவர் வாழ்க்கையைப்பற்றிப் பேச அஞ்சியதைப்பற்றி மேலும் எண்ணிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பொதுச்சிந்தனை மேலோங்கியிருக்கிறது. முன்பெல்லாம் அது உலகளாவ பரவுவதில்லை. காலனியாதிக்கம் வழியாக உலகம் ஒற்றை கருத்துப்பரப்பாக ஆகியபின்னர் உலகளாவ ஏறத்தாழ ஒரே உளநிலை உருவாகி நிலைகொள்கிறது. அந்த உளநிலை ஆன்மிகசிந்தனை உட்பட அனைத்திலும் ஊடுருவுகிறது.  நவீனத்துவ சிந்தனை அவ்வாறு நம் முந்தைய தலைமுறையினரின் எல்லா பார்வைகளையும் ஆட்கொண்டிருந்தது. இலக்கியம், தத்துவம், ஆன்மிகம் என. பின்நவீனத்துவச் சிந்தனை என்பது அப்படிப்பட்ட ஒரு பொதுப்போக்கு அல்ல. அது நவீனத்துவம் என்னும் பொதுப்போக்கின் எல்லைகளை கண்டுகொண்டு அவற்றை கடந்துவிட்ட நிலை மட்டுமே. அதற்கு பொதுமை என ஏதுமில்லை. அதற்கு மாறா வடிவம், நிலையான வழிகள் என ஏதுமில்லை.

நவீனத்துவம் என நாம் சொல்லும் ஒரு பொதுப்போக்குக்கு சிந்தனைத்துறையில் சில நம்பிக்கைகள் இருந்தன. அதற்கொரு வரலாற்றுப் பின்புலம் உண்டு.அதற்கு முந்தைய ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலம் என்பது தொடர்விவாதங்கள் வழிjiயாக நவீன ஜனநாயக அறத்தை திரட்டி எடுத்தது. அதற்கு முன்பிருந்த கிறிஸ்தவ மதச்சீர்திருத்த காலகட்டத்தின் நீட்சியாக உருவானது அது.  கத்தோலிக்க மதமேலாதிக்கத்திற்கு எதிராக மதசீர்திருத்தவாதிகள் முன்வைத்த முதன்மை வாதங்கள் எல்லாமே ஒழுக்கவியல் சார்ந்தவை. ஆகவே ஐரோப்பிய அறிவொளிக்காலம் முழுக்க ஒழுக்கவியலும் அதன் நீட்சியாக அறவியலுமே பேசப்பட்டன. அக்காலகட்டச் சிந்தனை ‘போதிக்கும்’ ‘,அறிவுறுத்தும்’,  ‘அறைகூவும்’ தன்மைகொண்டதாக இருந்தது. அதற்கு எதிர்வினையாகவே அதற்கடுத்த நவீனத்துவ காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் அறிவுறுத்துதல், அறைகூவுதல் என்பனவற்றுக்கு நேர்எதிரான நிலைபாட்டை எடுத்தனர்.

முதலில் இது இலக்கியப் படைப்புக்களில் ஒர் அழகியல் கொள்கையாக முன்வைக்கப்பட்டது. அதாவது ஒரு படைப்பு நேரடியாக அறிவுறுத்த முற்படும் என்றால் அது தன் பன்முக வாசிப்புத்தன்மையை இழந்துவிடும் என்று சொல்லப்பட்டது. வாசகனே தனக்கான கருத்துக்களைச் சென்றடையவேண்டும், ஆசிரியன் எதையும் வலியுறுத்தலாகாது என்று வலியுறுத்தப்பட்டது. இது கலைக்கொள்கை என்றவகையில் ஓர் எல்லைவரை சரிதான். சிறிய படைப்புக்களில் இது செல்லுபடியும் ஆகும். ஆனால் இது இப்படியே நீட்டிக்கப்பட்டு இலக்கியப்படைப்பில் சிந்தனைகள் இடம்பெறவே கூடாது என்று கொண்டுசெல்லப்பட்டது.

ஒரு கட்டத்தில் கலைவேறு சிந்தனை வேறு என்றே நவீனத்துவர்களால் கொள்ளப்பட்டது. தல்ஸ்தோய் ,தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ் மன் போன்றவர்கள் மிகவிரிவாகவே சிந்தனைகளை, தத்துவங்களை தங்கள் நாவல்களில் விவாதித்தவர்கள். அவ்விவாதமே பலகோணங்களை திறந்து அப்படைப்புக்களின் பன்முகவாசிப்பை பெருக்கியது. மாறாக சிந்தனையம்சமே இல்லாத காஃப்காவின் கதைகள், காம்யூவின் நாவல்கள் ஒற்றை வாசிப்புத்தளம் மட்டுமே கொண்டவை. சிந்தனையின் முடிவை நோக்கி வலுவாக வாசகனை இழுத்துச்செல்லும் தல்ஸ்தோய், தாமஸ் மன் நாவல்கள் கூட வலுவான சிந்தனைப்புலத்தை உருவாக்கியமையாலேயே ஆழமான பன்முக வாசிப்பை சாத்தியமாக்கின. எந்தச் சிந்தனையும் பேசப்படாமல் பொதுவாக வாழ்க்கைச் சித்திரங்களை மட்டுமே அளித்த காஃப்கா, காம்யூ ஆக்கங்கள் அவற்றின் குறுகல் காரணமாகவே ஒற்றை முடிவைநோக்கிச் செலுத்தின.

ஒரு கதையில் ஒருவர் சற்றே சிந்தனைசெய்தால், கொஞ்சம் தத்துவமாக பேசினால் அது கலைக்குறைபாடு என்று சொல்லும் சோனித்தனமான நோக்கு நவீனத்துவத்தில் இவ்வாறுதான் உருவானது. விளைவாக தத்துவம் நாவலில் இருந்தே அகன்றது. ஹரால்ட் ப்ளூம் சொல்வதுபோல தத்துவம் நாவலில் இருந்து அகற்றப்பட்டதே இருபதாம் நூற்றாண்டின் இலக்கியத்தில் நிகழ்ந்த மாபெரும் பிழை. தத்துவம் எப்போதுமே குறிப்புருவகங்கள், கவியுருவகங்கள் வழியாகவே வலிமையுடன் பேசப்பட முடியும். அவற்றுக்குரிய வாழ்க்கைசார்ந்த களங்களை உருவாக்கியளிப்பவை நாவல்கள். நாவல்களிலிருந்து தத்துவம் விலக்கப்பட்டபோது அது வரண்ட தர்க்கங்களாக மாறியது. நாவல்கள் வாழ்க்கையின் சாரம்நோக்கிச் செல்லாத, ஒட்டுமொத்தநோக்கு அற்ற, பகுப்பாய்வுகளற்ற, பிற அறிவுத்துறைகளுடன் தொடர்பற்ற, வெற்று வாழ்க்கைச்சித்திரங்கல் மட்டுமாக ஆயின.

நவீனத்துவத்தின் உளநிலை என்பது

அ. ஒவ்வொருவரையும் தனிநபராக பார்ப்பது, ஒருவரின் தனித்தன்மைவாய்ந்த வாழ்க்கைக்குள் இன்னொருவர் தலையிடவே கூடாது என்னும் நிலைபாடு கொண்டது.  அந்தரங்கம் என்னும் சொல்லை தமிழ் நவீனத்துவர் திரும்பத்திரும்ப பயன்படுத்துவதைக் காணலாம்.

ஆ. வகுத்தும் தொகுத்தும் சொல்லப்படும் எதுவும் வெறும் சிந்தனை, அதற்கு வாழ்க்கையில் இடமில்லை என்னும் நம்பிக்கை. தத்துவத்திற்கும் சிந்தனைக்கும் எதிரான அவநம்பிக்கை என அதைச் சொல்லலாம். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் உள்ளிட்ட பெரும்பாலான நவீனத்துவர்கள் தமிழிலும் இந்நம்பிக்கையை வெவ்வேறுவகையில் பதிவுசெய்திருக்கிறார்கள்.

இ. ஒட்டுமொத்த பெருஞ்சித்திரத்தால் வாழ்க்கையை விளக்கிவிடமுடியாது என்னும் நம்பிக்கை நவீனத்துவத்தில் இருந்தது. ஆகவே அவர்கள் வாழ்க்கையின் ஒரு துளியையே கவனப்படுத்தினர். வரலாற்று நோக்கு தத்துவநோக்கு ஆகியவற்றை நிராகரித்தனர்

ஈ. முரண்படுவது என்பது அறிவியக்கத்தின் முதன்மை இயல்புகளில் ஒன்று என நினைத்தனர். இருத்தலியலுக்கு மறுப்புவாதத்துடனும் [nihilism ]ஐயவாதத்துடனும்[skepticism ]உள்ள உறவு மிக அணுக்கமானது. அது முரண்படுவதை ஒரு புனிதச்செயலாக மாற்றியது. விளைவாக எவர் எதைச்சொன்னாலும் எதிர்க்கும் உளநிலையை கட்டமைத்தது. அந்த உளநிலை வாழ்க்கை பற்றி  சொல்வதற்கான தடையாக அமைந்தது.

இவ்வடிப்படையில் இருந்தே ‘தூய்மையான’ ‘புனிதமான’ தனிமனித ஆழம் என்னும் நம்பிக்கை உருவானது. ஒரு கருத்துதான் அது. ஆனால் கிட்டத்தட்ட நவீனத்துவ யுகத்தின் கடவுளுருவகமாகவே அது ஆகியது. ஓர் எழுத்தாளன் எழுத்தில் முன்வைக்கவேண்டியது அதைத்தான் என்றும் வாசகன் வாசிப்பில் முன்வைக்கவேண்டியது அதையே என்றும் வகுக்கப்பட்டது

இந்த வெற்று உருவகம் ஒரு தெய்வநிலையை ஏன் அடைந்தது? எனேன்றால் இது எழுதுபவன் வாசிப்பவன் இருவருக்குமே ஓர் உச்சகட்ட ஆணவத்தை அளிக்கிறது. அவனுக்கு அது அடையாளத்தை உருவாக்கிக்கொடுக்கிறது. அவன் அதில் ஆனந்தமாக திளைக்கிறான்.

அத்துடன் அந்தக் காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவ யுகத்தின் சமூகஉறவுநிலைகள் மாறிக்கொண்டிருந்தன. மனிதர்கள் குடும்ப, குடி, குல, அடையாளங்களை தாண்டி உழைப்பின் – நுகர்வின் அடிப்படை அலகாக வரையறை செய்யப்பட்டார்கள். அவ்வாறு அவர்களுக்கு ஒரு தனியடையாளம், தனியாளுமை வரையறை செய்யப்பட்டது. அதை நவீனத்துவர்கள் தங்கள் ‘சுயம்’ என மிகையாக கற்பனைசெய்துகொண்டார்கள்.

அன்றைய எழுத்தாளர்களிடம் “நான் அன்னியன்” என்ற மனநிலை வெவ்வேறுவகையாக வெளிப்பட்டது. காம்யூவின் அன்னியன் அவர்களுடைய நவீனத் தொன்மம். மேலே சொன்ன எல்லா மனநிலைகளுக்கும் உரிய சரியான சொற்றொடர்களை ஒருவர் ஜே.ஜே.சிலகுறிப்புகள் என்னும் ஒருநூலிலேயே கண்டடைய முடியும்.நவீனத்துவ உளநிலைகளின் பெருந்தொகை அந்நாவல்.

இந்த உளநிலைகள் நிறைந்திருந்தமையால் அன்று எழுத்தாளர்கள் வாழ்க்கை பற்றி ஏதும் சொல்லத் தயங்கினார்கள். சொல்லவேண்டிய தருணங்களில் “நான் யார் சொல்ல?” என்றோ “யார் யாரைப்பற்றி என்ன சொல்ல முடியும்?” என்றோ அவர்கள் சொல்வதைக் காணலாம். அதன் நீட்சியாகவே நவீனத்துவச் செல்வாக்கு கொண்ட ஆன்மிகவாதிகளும் “நீயே உனக்கு வழிகாட்டி” “உனக்குள்ளேயே தேடு” என்றெல்லாம் சொல்லத்தலைப்பட்டார்கள். “குரு என ஒருவர் இல்லை’ என்றும் ‘எவரும் எவருக்கும் வழிகாட்டி அல்ல’ என்றும் சொன்னார்கள். ஆலோசனை சொல்வதற்கு எதிரான நூற்றுக்கணக்கான மேற்கோள்கள், நையாண்டிகள், நகைச்சுவைகளை நாம் அக்காலத்தில் காணலாம்

அக்காலத்தை ஆட்சி செய்த சிந்தனைகள் இன்றில்லை. இன்று ஒருவன் “நான் முற்றிலும் தனிமனிதன்”,  என்று சொல்வான் என்றால் அவன் ஒருவகை மனக்குறுகல் கொண்டவன், ஒரு நோயாளி என்றே பொருள். ஒரு மனிதனின் அகத்தில் மிகப்பெரும்பாலான பகுதிகள் எளிமையான பொதுவான இயல்புகளால் ஆனவைதான்.  மனிதனுடைய வாழ்க்கையில் மிகப்பெரும்பாலான பகுதி சூழலால் வகுக்கப்படுவது.எவருக்கும் முழுமுற்றான , வேறெங்குமே இல்லாத ஆழமோ தனித்துவமோ இல்லை. இங்கிருக்கும் ஒட்டுமொத்தத்தின் ஒரு துளியே எவரும். எந்நிலையில் இருப்பவரானாலும் அந்த பேரியக்கத்தின் முன் மிகமிகச்சிறு துளியே. தனித்து நோக்கினால் எந்த முக்கியத்துவமும் எவருக்கும் இல்லை.

ஆகவே நான் தனியன், அரிதானவன், என் வழியை முழுக்கமுழுக்க நானே கண்டடைவேன் என்பதெல்லாம் எழுபது எண்பதுகளின் மூடநம்பிக்கை. இன்று ஒவ்வொரு துறைக்கும் அதற்குரிய ஆலோசனைகள் உள்ளன. அந்த ஆலோசனைகள் எல்லாமே கொள்கைசார்ந்தவை அல்ல, நடைமுறை சார்ந்தவை. பெரும்பாலானவை நம்மைப்போன்ற இன்னொருவரால் சொல்லப்படுபவை. அகவயமானவை, நமக்கும் அகவயமாக உதவுபவை.

பின்நவீனத்துவம் பற்றிய வரையறைகளில் ஒன்று அது didactic தன்மை கொண்டது என்பது. கற்பிப்பது, போதனைசெய்வது. பின்நவீனத்துவம் நேரடியாகவே சிந்தனைகளை, தத்துவங்களை முன்வைக்க தயங்காதது. அதன் எல்லைகளை அறிந்து பயன்படுத்துவது. தன் எல்லைக்குள் அது கருத்துக்களைச் சொல்லிக்கொண்டேதான் இருக்கும். மேற்கோள்களை எடுத்தாளும். ஆகவே நவீனத்துவத்தின் சிந்தனைத்தயக்கம் இன்று தேவையில்லை. இன்றைய இலக்கியவாதி தாராளமாகவே தன் சிந்தனைகளைச் சொல்லலாம்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆலோசனைசொல்ல, வழிகாட்ட தயங்குவார். ஆனால் திருவாவடுதுறை ஆதீனம் அவருடைய அறிதலுக்குள் அவர் தெளிந்ததை வலுவாகச் சொல்ல தயங்கமாட்டார். ஏனென்றால் அவர் நவீனத்துவத்திற்கு முந்தையவர், பழமையானவர். தன் அனுபவங்களிலிருந்து, கற்றலில் இருந்து பெற்றவற்றைச் சொல்லவேண்டியது அவர் கடமை. வழிகாட்டவேண்டியது அவர் பொறுப்பு. அது எதுவாக இருந்தாலும் ஏற்பதும் மறுப்பதும் கேட்பவரின் பொறுப்பு.

ஆலோசனை சொல்லப்பட முடியாத இடம், பிறருடைய சொல் சென்று சேரவே முடியாத ஆழம் என ஒன்று உண்டா? அப்படியெல்லாம் நம் ‘ஆழத்தை’ ‘தனித்தன்மையை’ நாம் கற்பனைசெய்துகொண்டோம் என்றால் அதை எவரும் ஏதும் செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு தனிமனித ஆழம் உண்டு என்பதையே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மானுட இனத்தை முழுக்கத் தழூவிய மேலோட்டமான , பொத்தாம்பொதுவான சிந்தனை, நவீனத்துவம், என நான் நினைக்கிறேன். ஐரோப்பா பதினேழாம் நூற்றாண்டு முதல் உருவாக்கிக்கொண்ட தனிமனிதன் என்னும் கருத்துநிலையின் ஒர் உச்சவடிவம் அது.  மானுட சிந்தனையில் அதற்கு முன்னர் எப்போதும் அப்படி ஒரு உறுதியான நம்பிக்கை இருந்ததில்லை, பிறகும் இல்லை.

ஒவ்வொரு தளத்திற்கும் அதற்குரிய ஆலோசனைகள் வழிகாட்டல்கள் வெளியே இருந்து மட்டுமே வரமுடியும். தொழில், வணிகம் முதல் கலை, அகவாழ்க்கை வரை. அவற்றை முறையாக முயன்று கற்றுக்கொள்ளவும் வேண்டும். அவ்வாறு கற்காதவர்கள் உதிரி உதிரியாக தங்களை அறியாமலேயே கற்றிருப்பார்கள், அவ்வளவுதான். அக்கல்வி குறைபாடு கொண்டதாக இருக்கும். அல்லது மலையைக்கெல்லி எலியைச் சென்றடைந்ததாக இருக்கும்

உலகியலுக்கு அப்பாலுள்ள ஆன்மிகத்திற்கு ஆலோசனை, வழிகாட்டி உறுதியாகத் தேவை. அவ்வாறு ஒரு ஆலோசனை, வழிகாட்டி இல்லாமல் செய்யப்படும் எந்த ஆன்மிகசாதனைகளும் முற்றிலும் பயன்அற்றவை ,வெற்றுத் திசைமாறாட்டங்கள் மட்டுமே. அந்த ஆலோசகரை, வழிகாட்டியையே குரு என்கிறோம். குரு சென்றடைய முடியாத, சென்றடையக்கூடாத ஆழம் என ஏதும் மாணவரில் இருக்கமுடியாது, கூடாது.

ஏனென்றால் எல்லா மானுடரும் தனித்தன்மை கொண்டவர்கள் என்பது எத்தனை உண்மையோ அதேயளவு உண்மை எந்த மானுடரும் அரிதானவர், பிறிதொன்றில்லாதவர் அல்ல என்பது. நான் என் ஆசிரியரைச் சந்தித்தபோது எனக்கும் என் தனித்துவம், என் ஆழம், என் பிறிதிலாத தன்மை பற்றிய பிரமைகள் எல்லாம் இருந்தன.Rene Dubos ன் வரியை நித்யா Each human being is unique , precedented  and repeatable.என்று மாற்றிச் சொன்னபோது அதிர்ச்சியும் அடைந்தேன். அது சொல்லுக்குச் சொல் உண்மை, அது மூவாயிரம் ஆண்டுகளாக இந்நிலத்தில் திகழும் உண்மை என்று பின்னர் கண்டுகொண்டேன்

ஆகவே மானுடனின் ‘தனித்தன்மையுடன்’ ‘பிறிதொன்றிலாத ஆழத்துடன்’ பேச முற்படும் நவீனத்துவர் உண்மையில் ஒரு மாயையை கட்டமைத்து அந்த மாயைக்குள் நின்றுகொண்டே அவ்வுரையாடலை நிகழ்த்துகிறார்கள். அந்த மாயை அவர்கள் சொல்லும் எதையும் நிலைக்கோள் இல்லாததாக ஆக்கிவிடுகிறது. நான் தனித்தன்மை மிக்கவன் என்று கேட்பவன் கொண்டிருக்கும் வெற்று ஆணவத்திற்குச் சொற்களை வீசிக்கொடுப்பதாக ஆகிவிடுகிறது.. அங்கே நிகழ்வது ஒரு அபத்தமான விளையாட்டு. இன்னின்ன சொற்களில் இருந்து நான் இன்னின்ன ஞானத்தை ‘நானே’ கண்டுகொண்டேன் என்னும் பாவனைகளை சென்றடைய முடிகிறது, அவ்வளவுதான். அந்த ஆணவத்தாலேயே அது குறைப்பட்ட அபத்தமான அறிதலாகவே இருக்கமுடியும்.

உலகியல் அறிவு என்பது ஒரு தொடர்ச்சி. அதில் வளர்ச்சி உண்டு. ஆகவே நேற்றுவரை இருந்தவற்றை கற்றறியவேண்டும். நேற்றுவரை இருந்தவர்களின் வழிகாட்டுதல் அதற்கு இன்றியமையாதது. ஆன்மிக ஞானம் என்பது மாறாதது, என்றுமிருப்பது. அத்தனைமானுடருக்கும் அது பொதுவானது. சென்றடைவது வேறுபடலாம். அதற்கும் வழிகாட்டுதல்கள் இன்றியமையாதவை. எவரும் இன்றுவரை முன்பிலாத ஒன்றை தனக்கென கண்டுகொண்டதில்லை.

நான் என்னை நவீனத்துவத்திற்கு பிந்தைய எழுத்தாளன், பின்நவீனத்துவச் சூழலைச் சேர்ந்தவன் என்றே சொல்வேன். ஆகவே எனக்கு கருத்துக்களை, கவனிப்புக்களை படைப்பில் சொல்ல தயக்கமில்லை. விரிவான தத்துவவிவாதங்களை உருவாக்க உளத்தடையும் இல்லை. நான் எல்லாமறிந்தவனாக எல்லாவற்றையும் பற்றி சொல்லமாட்டேன். ஆனால் வாழ்க்கை, இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் நான் அறிந்த சில உண்டு. அவற்றை அழுத்தமாக, தயக்கமில்லாமல் வகுத்துரைப்பேன். மானுட அறிதல்கள் ,அனுபவங்கள் மிகப்பொதுவானவை. அரிய அறிதல்கள், அரிய அனுபவங்கள் மிகக்குறைவே. ஆகவே என் சொற்கள் வாசகர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்குப் பயனுள்ளதாகவே இருகும்.

நவீனத்துவ எழுத்தாளனைப் போல நான் ‘தனியன்’ அல்ல. ‘அன்னியன்’ அல்ல. மக்களில் ஒருவன், மக்களில் கூர்மையானவன். ஆகவே மக்களை நோக்கிப் பேசுபவன். ஆம், வழிகாட்டுபவன், ஆசிரியன். அங்கேதான் என்னை வைத்துக்கொள்வேன். தொடர்ந்து அதற்கு என்னை தகுதிப்படுத்திக்கொள்வேன்.

அறிவுரைத்தல் பற்றி மீண்டும்

முந்தைய கட்டுரைபத்ம விருதாளர்கள்
அடுத்த கட்டுரைவணங்குதல்