எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?

அன்புள்ள ஜெ ,

 

நேற்று நாம் அறையில் பேசியதன் தொடர்ச்சியாகவே இந்த கேள்விகளை முன்வைக்கிறேன்,  வாசகர் நிஷாந்தின் ‘இருத்தலியல்’ பற்றிய  நீண்ட கேள்விக்கும், மாதவனின் ‘டின்னிடஸ்’ பற்றிய கேளிவிக்கும்,அதற்கு முன்னரும் உங்களிடம் கேட்கப்படட சில , கேள்விகளுக்கு, ‘ ‘இலக்கியம் படியுங்கள்’ நாவல் எழுதுங்கள் ‘கவிதை வாசியுங்கள் ‘  என்று மானுட சிக்கல்களுக்கு தீர்வாக  ஒன்றை அல்லது ஒரு செயல்பாட்டை முன் வைக்கிறீர்கள்.    அவ்வாறே, நம் குருகுலங்கள், ஆசிரமங்கள், துறவிகள்,தங்களை நாடிவரும்  ஒவ்வொருவருக்கும் ஒன்றை பரிந்துரை செய்கிறார்கள்.

தன்முனைப்பும், தன்னகங்காரமும்  கொண்ட ஒருவனுக்கு, அவன் அடையப்போகும் சிக்கலில் அல்லது வெறுமையிலிருந்து விடுதலை அடைய , ”சேவையை” அல்லது ”கர்ம யோகத்தை” முன்வைக்கிறார், சுவாமி சிவானந்தர்,  உறவுகள் மற்றும் உணர்ச்சி கொந்தளிப்பும், மிக்க ஒருவருக்கு ‘பக்தி’யை  பரிந்துரைக்கிறார், சுவாமி நிரஞ்சனானந்த சரஸ்வதி, சித்பவானந்தரும், சின்மயானந்தரும் ,மேலும் நம் குருமார்கள் அனைவரும் இந்த மூன்று அல்லது நான்கு வகை யோகங்களையே/அல்லது செயல்களை  பரிந்துரை செய்கின்றனர்.{ பரிகாரங்கள் என்கிற அர்த்தத்தில் நான் இதை கேட்கவில்லை }

உங்களுக்கு ”ஞான யோகம் { இலக்கியம்}” பரிந்துரைக்கப்பட்ட்தும் நம் குரு மரபாலேயே  என்பதை  நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். எங்கள் யோக வகுப்புகளில் அடிக்கடி சொல்லும் ஒன்று உண்டு , ” தொடர்ந்து பயிற்சிகள் செய்து வாருங்கள், இரண்டு மூன்று வருடங்களில் உடலளவிலும் , மனதளவிலும் ‘இதை’ ‘இப்படி உணர்வீர்கள்’  என்று  தீர்மானமாக  ஒன்றை சொல்வோம் , அதை சொல்வதில் ஒருபோதும் தயக்கமோ, சிறு சந்தேகமோ கொள்வதில்லை. ஏனெனில் எங்களுக்கு அப்படிதான் சொல்லப்பட்ட்து.

ஆனால் நாம் விரும்பி படிக்கும் ஓஷோ, மற்றும் ஜிட்டி கிருஷ்ணமூர்த்தி போன்ற ஆளுமைகள், அப்படி தீர்மானமான  ஒன்றை சொல்வதில்லை, பூடகமாக, தத்துவார்த்தமாக ஒன்றை நமக்கு சொல்வதால் நாம் திகைப்பே அடைகிறோம் அதனாலேயே மேலும் அவர்களை தொடர்கிறோம். ஓஷோ கூட ஒரு சில இடங்களில், ”நடனம் ஆடுங்கள் கால்கள், கைகள் ஓயும் வரை நடனம் ஆடி கீழே விழுந்து , உங்களை கவனியுங்கள்” போன்று ஒவ்வொன்றை சொல்கிறார், ஜிட்டு ‘ கவனித்துக்கொண்டு’ இருங்கள் என்பதோடு நிறுத்திக்கொள்கிறார்.

ஒரு தீர்வை நாம் பெறுவதில்லை. இதை எப்படி புரிந்து கொள்வது, தீர்வாக ஒன்றை சொல்வது நம் மரபில் உள்ளது எனில்  ஓஷோவுக்கும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கு  அதை சொல்வதில் என்ன  தயக்கம்,?

 

அன்புடன்

சௌந்தர்

 

அன்புள்ள சௌந்தர்,

வெவ்வேறு காலங்களில் இதை வெவ்வேறு வகையில் நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். ஓர் உண்மையான உரையாடலைச் சொல்கிறேன். என்னிடம் ஒருவர் கேட்டார்.  “நீங்கள் சில தனிப்பட்ட ஆலோசனைகளைச் சொல்கிறீர்கள், அதைச்சொல்ல உங்களுக்கு என்ன தகுதி? எழுத்தாளர்கள் ஏன் ஆலோசனைகள் சொல்லவேண்டும்?”

இது இந்தத்தளம் தொடங்கிய நாள்முதலே என்னிடம் கேட்கப்படும் கேள்வி. வழக்கமாக எழுத்தாளர்கள் இதற்கெல்லாம் ஒரு பம்மலுடன் மட்டுமே மறுமொழி சொல்வார்கள். நான் நேரடியாகவே கேட்டேன். “சரி, எவர் ஆலோசனை சொல்லலாம்? அந்த வினாவைக் கேட்டவர் எங்கே செல்லவேண்டும்?. அல்லது ஆலோசனை என்பதே தேவையில்லை என்கிறீர்களா?”

“இல்லை. ஆலோசனை தேவை. பலசமயம் ஆலோசனைகள் மிக எளிதில் ஒருவரை வெளியே வரச்செய்துவிடும். ஆனால் அதை தகுதியானவர்கள் சொல்லவேண்டும்” என்றார். “சரி, தகுதியானவர்கள் எவர்?” என்றேன். “உளவியலாளர்கள். ஆலோசனை சொல்வதற்கான பயிற்சிகளை அடைந்தவர்கள். அவர்கள்தான் சொல்லவேண்டும். எழுத்தாளர்கள் சொல்லக்கூடாது” என்றார்

நான் அவரிடம் சொன்னேன். “நீங்கள் சொல்லும் அந்த உளவியலாளர்கள் அடைந்த அந்தப் பயிற்சி என்ன? ஒரு பட்டம். அந்தப்பட்டம் என்பது வரையறுக்கப்பட்ட சில நூல்களைப் பயில்வது மட்டுமே. சொல்லப்போனால் இருபதுக்கும் குறைவான நூல்கள். அவர் அவற்றை முறையாக கற்றார் என்றே வைத்துக்கொள்வோம். அந்நூல்களிலிருந்து கிடைத்த ஞானம் வாழ்க்கையின் அனைத்து தருணங்களுக்கும் உரிய அகவழிகாட்டல்களை அளிக்கத் தகுதியானவராக அவரை ஆக்குகிறது என நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் என் மீதோ பொதுவாக எழுத்தாளர்கள் மீதோ சொல்லும் குற்றச்சாட்டு அதன் அடிப்படையிலானது”

“நீங்கள் சொல்லும் அந்நூல்களை நான் படித்திருக்கிறேன். அவற்றின் உள்ளடக்கம் என்பது பெரும்பாலும் வெவ்வேறு இலக்கியநூல்களை மூலச்செய்திகளாகக் கொண்டு முன்னோடியான உளவியலாளர்களால் உருவாக்கப்பட்டது. அவ்விலக்கிய நூல்களையும் படித்திருக்கிறேன். அவ்விலக்கியங்களை உருவாக்கிய படைப்பாளிகளிடமே அவர்கள் எழுதிய நூல்களின் சாரம் பற்றி பேசக்கூடாது என்கிறீர்களா என்ன?”

அவரிடம் என்னால் பேசி நிறுவ முடியவில்லை.அவர் நிபுணர்களே உகந்தவர்கள் என்னும் நவீன அறிவியல் –நிர்வாகவியல் நம்பிக்கையில் வேரூன்றியவர். ஆனால் அதைப்பற்றி பின்னர் உடனிருந்த நண்பர்களிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த உளப்பதிவு எப்படி வருகிறது, இலக்கியவாதிகளிடமேகூட அது எப்படி வேரூன்றியிருக்கிறது என்றெல்லாம்.

அந்நண்பர் கூறியதையே விரித்தெடுப்போம். ஒர் எழுத்தாளர் எப்படி சமூகம் பற்றி எதையாவது சொல்லமுடியும்? அதற்கு சமூகவியலாளர்கள்தானே தகுதியானவர்கள்?அவர் அரசியல் பற்றிப் பேசவே கூடாது. அதற்கு நிபுணர்கள் இருக்கிறார்கள். கடைசியில் அவர் இலக்கியம்பற்றிக்கூடச் சொல்லக்கூடாது என்று சொல்லலாம், அதற்கும் முறையாக இலக்கியத்தைப் பாடமாகப் படித்தவர்கள் இருக்கிறார்கள். இலக்கியவாதி எதைத்தான் பேசலாம்? எதையுமே பேசக்கூடாது. கதைமட்டும் எழுதலாம். அது கதைதானா என நிபுணர்களிடம் கேட்டுக்கொள்ளலாம்.

நிபுணர்கள் என்பவர் எவர்? எந்த துறையானாலும் முதலில் அத்துறையின் பேசுபொருட்களின் எல்லை திட்டவட்டமாக வரையறை செய்யப்படுகிறது. அதன் வரலாறு உருவாக்கப்படுகிறது. அதன் மூலநூல்கள் தொகுக்கப்படுகின்றன. அதன் செயல்முறைகள், நெறிகள் வகுக்கப்படுகின்றன. அவ்வாறு அது ஒரு ‘துறையாக’ மாறுகிறது. அதில் ஒரு பாடத்திட்டம் உருவாகி வருகிறது. அதைக் கற்றுத்தேறியவர் நிபுணர்

இதில் என்ன முதன்மையான சிக்கல் என்றால், அறிவியல் இவ்வாறு துறைபிரிக்க வகுக்க உகந்தது. ஏனென்றால் அது முழுக்கமுழுக்க புறவயத்தன்மை என்பதை ஒரு நிபந்தனையாகக் கொண்டு செயல்படுவது. உளவியலோ சமூகவியலோ முற்றிலும் புறவயத்தன்மை கொண்டவை அல்ல. அவற்றில் புறவயமான ஓரு பகுதி உண்டு, அகவயமான ஒரு பெரும்பகுதி கூடவே உண்டு. ஆகவே இத்துறைகளில் நிபுணர் என்பவர் இரண்டாம்நிலையினரே.

இந்நிபுணர்களின் அறிதல்கள் இரண்டு எல்லைகளைக் கொண்டவை. ஒன்று அவை முழுக்க முழுக்க புறவயமான தரவுகள் சார்ந்தவை. இரண்டு அத்தரவுகள் எல்லாமே கடந்தகாலம் சார்ந்தவை. ஆகவே அவர்கள் ஒரு சராசரிப்புரிதலை சராசரித்தீர்வையே எல்லாவற்றுக்கும் சொல்லமுடியும். ஒர் உளவியலாளர் அவரிடம் சொல்லப்படும் எந்த பிரச்சினையையும் உணர்வுசார்ந்த ஈடுபாடின்றி அணுகவேண்டும். அதை அவர் வகைப்படுத்தவேண்டும். அந்த வகைப்பாட்டிற்கு அவருடைய துறைசார் அறிவு எந்த தீர்வை பரிந்துரைக்கிறதோ அதைச் சொல்லவேண்டும்.

உண்மையில் மிகமிகப்பெரும்பாலான உளப்பிரச்சினைகளுக்கு இந்த அணுகுமுறையும் தீர்வும் உகந்தவையே. ஆகவே ஒருவர் உளச்சிக்கல் என்றால் அவர்களிடம் செல்வதே சரியானது. அவர்கள் அளிக்கும் அந்த இரும்புச்சட்டக தீர்வில் பெரும்பாலும் எல்லாம் முடிந்துவிடும். நமது சிக்கல் மிகமிக தனித்துவம் கொண்டது என்றே நாம் நினைப்போம். தனித்துவம் உண்டு, ஆனால் அது ஒரு சிறுமுனை மட்டுமே. பெரும்பகுதி மிகமிக வழக்கமானது, ஏற்கனவே துறைசார் ஆய்வாளர்களால் தரப்படுத்தப்பட்டு தீர்வளிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் ஒரு புனைவெழுத்தாளனின், எழுத்தாளனின், கலைஞனின், இலக்கியவாசகனின் சிக்கல் அந்த சராசரிச் சட்டகத்திற்குள் நிற்பது அல்ல. அவனுக்கு அந்தத்தீர்வுகள் எவ்வகையிலும் பொருந்தவும் பொருந்தாது.மெய்மைநாடி அனைத்தையும் துறந்துசெல்லும் ஒரு யோகியை இந்த உளவியலாளர்களிடம் கொண்டுசென்று சேர்த்தால் உடனே இவர்கள் அவரை நோயாளி என வரையறை செய்துவிடுவார்கள் அல்லவா?

இந்நிபுணர்கள் ஒரு சராசரி வாழ்க்கையை உருவகிக்கிறார்கள். அதை நடத்துவதிலுள்ள சிக்கல்களையே நோய் என வரையறைசெய்கிறார்கள். அதற்கு சராசரிகளுக்குரிய மருத்துவத்தை அளிக்கிறார்கள். ஆனால் ஒரு யோகி சராசரி அல்ல. அவன் மீறிச்செல்பவன்.முன்னுதாரணம் அற்றவன். அவனை ஒரு குரு மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். அவர் மட்டுமே தீர்வை அளிக்கமுடியும்

ஏறத்தாழ இலக்கியவாதியும் அப்படித்தான். அவனுடைய பிரச்சினைகள் மிகமிக தனித்துவம் வாய்ந்தவை. அவை அன்றாடவாழ்க்கையை சராசரியினர் போல நடத்தமுடியாமையின் சிக்கல்கள் அல்ல. அவை அறவியல்சிக்கலாக இருக்கலாம். அழகியல் சிக்கலாக இருக்கலாம். அவை ஒன்றோடொன்று கலந்தவை. அவற்றை இலக்கியத்தின் தளத்தில் வைத்தே கையாளமுடியும்.

ஓர் இலக்கியவாதியாக நான் ஒருபோதும் சராசரியினரின் சராசரிப்பிரச்சினைகளை கையாள்வதில்லை. அவற்றை ஆர்வத்துடன் கவனிப்பதுடன் சரி. ஒர் உளவியலாளரை தேடிச்செல்லவே அறிவுறுத்துவேன். அதற்கு அப்பால் செல்லும் சில தனித்துவச்சிக்கல்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். அவை கலையின் சிக்கல்கள். கலைஞனின் சிக்கல்கள். அழகியல், அறவியல் ,தத்துவம் ,மெய்யியல் சார்ந்த சிக்கல்கள். அவற்றை எந்த உளவியலாளனும் கையாள முடியாது. தங்கள் மூர்க்கமான சராசரிப்பார்வையால் அவற்றை அவர்கள் சிக்கலாக்கிக்கொள்ளவே வாய்ப்பு.

அவற்றைப்பற்றிச் சொல்ல எனக்கு என்ன தகுதி என்றால் நான் கலைஞன் படைப்பாளி என்பதனால். ஐயமே இல்லாமல் இத்தலைமுறையின் தலைசிறந்த படைப்பாளி என்பதனால். இன்று உலகமொழிகளில் எதிலும் எனக்கிணையான எழுத்தாளர்கள் மிகச்சிலரே என்பதனால். ஓர் உளவியலாளன் அல்லது சமூகவியலாளனுடன் நான் பேசுவதென்றால்கூட அத்துறையில் எனக்கிணையான முதன்மைகொண்டவருடன் மட்டுமே பேசுவேன்.

இலக்கியவாதியின் இந்தத் தன்னுணர்வு, தன்னம்பிக்கை சென்ற தலைமுறையில் சற்றுக்குறைவாகவே இருந்தது. ஏனென்றால் அது அறிவியல் மேலோங்கி ஒரு மாபெரும் அதிகாரமாக ஆகிவிட்ட காலம். நிபுணர்களே எதைப்பற்றியும் சொல்லவேண்டும் என்னும் நம்பிக்கையின் காலம். அன்று எழுத்தாளர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் கூட எதைப்பற்றியும் உறுதியாகச் சொல்ல தயக்கம் இருந்தது. ஆனால் ஒர் ஆண்டுக்காலம் எந்த துறையிலாவது ஒரு பட்டயப்படிப்பு முடித்தவர் அதைப்பற்றி ஆணித்தரமாக பேசத்துணிவார்.

இலக்கியம் பற்றி எந்தக்கருத்தையும் சொல்ல அசோகமித்திரன் நான்கு தடவை தயங்குவார். வாழ்க்கை பற்றிச் சொல்ல எட்டுமுறை தயங்குவார். இலக்கியத்திலோ உளவியலிலோ முதுகலை முடித்த ஒரு இருபத்துநான்கு வயதுப் பையன் அசோகமித்திரனுக்கே பாடம் எடுப்பான். இது அந்தத் தலைமுறையின் மனநிலை. உண்மையில் நானே கண்டிருக்கிறேன். சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும்  ‘அந்நிபுணர்’களை திகைப்புடன் பார்ப்பதை கண்டு எரிச்சலுற்றிருக்கிறேன்.

அன்றைய அந்த மனநிலை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முதன்மைகொண்டிருந்தது. ஆகவே ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் நோக்கிய சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் எல்லாரிடமும் அந்த தயக்கம் இருந்தது. ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் ஒருவர் வாழ்க்கை பற்றி ஒரு கேள்விகேட்டால் என்ன சொல்வார்? பொத்தாம்பொதுவாக, மிக மிக சுற்றலாக ஒரு பதில் வரும். எதையும் அழுத்தியோ, அறுதியாகவோ  சொல்லிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் சொல்லப்படுவது. ஆனால் மரபார்ந்த ஒரு மடத்தின் மடாதிபதியிடம் அதைக் கேட்டால் அவர் அறிந்து தெளிந்த ஒரு பதில் வரும்.அழுத்தமாகவும் அறுதியாகவும் சொல்லப்படும். அல்லது அதற்கு தன்னிடம் பதில் இல்லை என்று சொல்லி விலகிவிடுவார்.

அதற்கப்பால், ஒரு தத்துவப் புரிதலாகவும் எதைப்பற்றியும் எதையும் சொல்லிவிடக்கூடாது என்னும் நிலைபாடு அன்று இருந்தது. அது இருத்தலியலை தவறாகப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்டது. இருத்தலியலின் முன்னோடிகளெல்லாருமே திட்டவட்டமாகப் பேசியவர்கள், தர்க்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் இருத்தலியல் இலக்கியத்தில் நுழைந்தபோது வாழ்க்கையைப்பற்றி எதையுமே முடிவாகச் சொல்லிவிடமுடியாது, தர்க்கபூர்வமாக எதையுமே அணுகமுடியாது, கலை இலக்கியம் பற்றிய வரையறைகள் எல்லாமே பிழையானவை, மெய்யியல் உண்மைகள் எல்லாமே பொய்யானவை என்னும் நிலைபாடாக அது மாறியது.

ஒரு தலைமுறை எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் அந்த நிலைபாட்டை எடுத்து எதைப்பற்றிப் பேசினாலும் மென்று விழுங்கியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே அறிவியல் மேல் விசுவாசம் இருந்தது. அறுதியாகச் சொல்லவேண்டியவர்கள் அறிவியலாளர்கள் என்னும் நம்பிக்கை இருந்தது.ஆகவேதான் நவீன ஆன்மிகவாதிகள்கூட வாழ்க்கை பற்றி, மானுட உள்ளம் பற்றி எதையும் சொல்லத் தயங்கினார்கள். அந்தத் தயக்கம் பழைமையான ஆன்மிகவாதிகளிடம் இல்லை. அது முழுக்கமுழுக்க நவீனத்துவ உளநிலை.

ஆனால் பின்நவீனத்துவச் சிந்தனைகள் உருவாகி அவை அறிவியல் என்னும் பெருங்கட்டுமானமே ஒரு பொதுப்புரிதல் வட்டம்தான் என்றும், அதன் தர்க்கங்கள் எல்லாமே அவ்வட்டத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட்வைதான் என்றும், அது ஒரு பெருங்கதையாடல் மட்டுமே என்றும் சொல்லத் தொடங்கிய பின்னரே  ‘அறிவியல் மாயை’ அகன்றது. எல்லா உண்மையும் ஓரளவு அகவய உண்மையே. என்னும் புரிதல் உருவானது ஆகவே அகவய உண்மைக்காக நாணவேண்டியதில்லை என்ற எண்ணம் நிலைகொண்டது.

இன்றைய எழுத்தாளன் நவீனத்துவர்களைப்போல சிந்தனைகளை தவிர்க்க வேண்டியதில்லை. அவற்றை முன்வைக்க தயங்கவேண்டியதில்லை. அவை அகவயமான உண்மைகள், அவை வரையறுக்கப்பட்ட சூழலிலேயே செல்லுபடியாகும் என உணர்ந்தே அவன் தன் அனுபவம் சார்ந்து பேசலாம்.

ஜெ

எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2

அறிவுரைத்தல் பற்றி மீண்டும்

முந்தைய கட்டுரைமீண்டும் சந்திக்கும் வரை…
அடுத்த கட்டுரைதருமபுரி இலக்கிய விழா