விழா – வ.சௌந்தரராஜன்

அபி -ஆவணப்படம்

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். சென்ற வருடம் விஷ்ணுபுரம் விழாவிற்கு வந்துவிட்டு எழுதிய கடிதத்தில், அடுத்த வருடம் முதல் அமர்விற்கே தாமதம் இல்லாமல் வருவேன் என்றும், எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு வருவேன் என்றும், Quiz செந்தில் கேள்விக்கு ஒரு பதிலாவது சொல்லுவேன் என்றும் உறுதிமொழிகள் பல எடுத்துக்கொண்டேன். முதல் உறுதிமொழி இலகுவானது, நிறைவேற்றி ஆகிவிட்டது. இரண்டாவது உறுதிமொழி ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்ற வகையில் கொஞ்சம் வீட்டுப்பாடம் செய்துவிட்டு வந்தேன்.

வெண்பா கீதாயனின், நீ கூடிடு கூடலே வாசித்து வாசிப்பனுபவம் எழுதி, யுவன் சந்திரசேகர் பற்றிய கட்டுரைகளையும் காணொளிகளையும் கண்டு, அபியின் கவிதைகளை தளத்தில் வாசித்து என்று தயார் செய்துகொண்டேன். மூன்றாவது உறுதிமொழியை பற்றி பேச என்ன இருக்கிறது. செந்தில் கேட்ட முப்பது கேள்விகளில், மூன்றே மூன்று கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லலாம் போல் எனத் தோன்றியது. நான் வாங்கினால் என்ன, தம்பி அரங்கா வாங்கினால் என்ன என்று கொஞ்சம் ஆறுதல் அடைந்துகொண்டேன். டான் டானென்று பதில் சொல்ல பெரும் இளைஞர் கூட்டம் காத்திருந்தது. இளையவர்களுக்கு வழி விட்டேன் என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

அமர்வுகளுக்கு வருகிறேன். கவிஞர் இசையுடனான முதல் கலந்துரையாடலிலேயே விழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது. அவர் கவிதைகளை நான் அதிகம் வாசிக்கவில்லையெனினும், வாசித்தவர்கள் சிவாஜி, வடிவேலு, வாணிஸ்ரீ என்று அவரது கவிதைகளை புரிந்து கேள்வி கேட்க, உரையாடலில் உடனடியாக ஒன்ற முடிந்தது. ஒவ்வொரு நகைச்சுவைக்கு பின்னரும் ஒரு தத்துவம் , சோகம், கசக்கும் உண்மை இருக்கும் என்ற ‘இசை’ அவர்களின் கூற்று ஏற்புடையதாகவும், சிரிக்க சிரிக்க அவர் பேசியதால் கைதட்டி ரசிக்கும்படியும் இருந்தது. தன்னை பகடிக்கவிஞர் என்று அழைக்காதீர்கள் என்று அவர் கேட்டுக்கொண்டதை , நான் ஆமோதிக்கிறேன்.

‘அவன்’ , ‘இவன்’ , யுவன் என்று உங்களின் மூலமே நான் யுவன் சந்திரசேகரை அறிவேன். ஆங்கில காப்பி ரைட்டிங் நோட்டில் இருக்கும் நான்கு கோடுகளை விட்டுவிட்டு , இடைப்பட்ட இடத்தில் எழுதுபவர் என்று அவரை பற்றிய உங்களது உரையைக் கேட்டும், புகைப்படங்களை அங்கும் இங்கும் மாற்றி வைத்ததுபோல் எழுதுவது தனது கதை சொல்லும் பாணி என்று அவரே அறிமுகப்படுத்திக்கொண்ட காணொளியைக் கண்டும் வந்திருந்தேன். அவரது உரையாடலில் ஒரு துள்ளல், குதூகலம். ‘பிடிக்கிறது எழுதுகிறேன். இசையுடன்தான் தனது காலை ஆரம்பம்’ என அவரது வெளிப்படையான பேச்சு வீட்டில் அமர்ந்து நண்பனோடு பேசுவதுபோல் இருந்தது. கல்லூரியில், இலக்கியத்தை இப்படி கற்றுக் கொடுத்தால், கணினி படிப்பதை விட்டுவிட்டு இலக்கியம் படிப்பார்கள். வங்கியில் சலிக்காமல் ரூபாய் நோட்டுகளை எண்ணியவர், நாம் சலிக்காமல் வாசிக்கும் கதைகளை எழுதும் ஆளுமையை பார்த்து கை குலுக்க அமர்வு முடிவதற்கு காத்திருந்தேன்.

வாசகனாக நாங்கள், அச்சடிச்ச புத்தகத்தை படித்தால்தான் படித்த மாதிரி இருக்கிறது என்பதுபோல், எழுத்தாளனாக உங்களுக்கு, பேப்பரும் பேனாவும்தான், எழுத நல்ல எண்ணோட்டத்தை கொடுக்குமா என்று கேட்டேன். அவருக்கு எழுதும் கையில் பிரச்சனை உள்ளதால், கணினிதான் சிறந்தது என்றும், சிந்தனைக்கும் எண்ணோட்டத்திற்கும் அது தடை இல்லை என்றும் சொன்னார். அவரின் கதைகளை வாசித்து வாசிப்பனுபவம் எழுதுவது 2020-ல் நிறைவேற்ற நான் சேர்த்துவைத்திருக்கும் ஆசைகளில் ஒன்று.

ரவிசுப்ரமணியன் அமர்வு. இதை எடுத்து நடத்திய நண்பர் யோகேஸ்வரன். போனமுறை வந்தபொழுது , அவராக வந்து என்னிடம் அறிமுகம் செய்துகொண்டவர் என்ற முறையில் நன்றாக நினைவில் இருந்தது. அவருக்குள் இருந்த திறமை, ஒரு சின்ன கைகுலுக்கலில் தெரியவில்லை. என்ன கவிதையை , எந்த ராகத்தில் பாட வேண்டும் என்று ரவிசுப்ரமணியத்தை கேட்டது, அந்த அமர்விற்காக அவர் எடுத்துக்கொண்ட உழைப்பை காட்டியது. தமிழ் பாடலை மெட்டமைத்து பாடவேண்டும் என்றால், பாரதி பாட்டைத்தான் பாடவேண்டும் என்ற யூடுயூப் சூழலில், புதுக்கவிதையையும் இசையமைத்து பாடலாம் என்று பாடி காண்பித்த ரவிசுப்ரமணியன், தொடர்ந்து பின்பற்றவேண்டிய ஆளுமைகளில் ஒருவர். இவர் பாடியதை, நான் கேட்காமல் இருந்திருந்தால், ஞானக்கூத்தனைப் போல்தான் நானும் சொல்லியிருப்பேன். எனது ஆதர்சக் கவியான அவர் சொல்வதே சரி என்று ஆமாம் சாமி போட்டிருப்பேன்.

இளையராஜாவிற்கும், அவருக்குமான உரையாடலில், ஒரு சிறு சொல்லானாலும்,இளையாராஜாவுடையது என்பதை அவர் குரல் மாற்றத்தில் காண்பித்தது, குறுநகையுடன் ரசிக்க வைத்தது. அவரது ஆவணப் படங்களை நான் யூடியூபில் பார்த்திருக்கிறேன். ஜெயகாந்தன் பற்றிய ஆவணப் படத்தில், எடுத்தும் படத்தில் வைக்காமல் போன அந்தக் கடைசி பாகத்தை அவர் எழுச்சியுடன் சொல்லி காண்பித்ததால், எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. சில தமிழ் திரைப்படங்களை, இரு முடிவுகளுடன் எடுத்து ரிலீஸ் செய்வார்களே, அந்த மாதிரி, ஜெயகாந்தன் ஆவணப்படத்தையும், கலைஞனுக்கு ஏதடா மரணம் என்று முடிவதை சேர்த்து இன்னொரு முறை ரிலீஸ் செய்ய முடியாதா ?

நண்பர் காளிப்ரசாத், வெண்பா கீதாயனை மல்டிபிள் டிஸார்டர் உள்ள பெண் என்று அறிமுகப்படுத்தினார். அப்படி என்றால் அவரின் எல்லா முகத்தையும் அறிந்தவராக, அமர்வை நடத்த வந்திருந்தார் என்று சொல்லலாம். கல்யாணம் செய்யாமலே வாழ்வதைப் பற்றி அவர் எழுதிய, நீ கூடிடு கூடலே புத்தகமும் , அவரது முகநூல் பதிவுகளும், வாசகர்களின் வித்தியாசமான கேள்விகளுக்கும், எதிர் பார்ப்புகளுக்கும் காரணிகளாக இருந்தன. அவரது அம்மா மனநல மருத்துவர் என்று நீங்கள் சொன்னது, வெண்பாவிற்கு விஷயங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்ற ஒரு புரிதலை கொடுத்தது. வெண்பாவுடனான நேரடி உரையாடலில், அவரது கலிங்கத்துப் பரணியை எதிர் பார்த்து இருக்கிறேன் என்று தெரியப்படுத்தினேன்.

அமிர்தம் சூர்யாவின் அமர்வை முழுதாகக் கேட்டு முடிந்த பின்பு , அமானுஷ்ய சூர்யா என்று அழைக்கலாம் என முடிவுக்கு வந்துவிட்டேன். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு கதை சொன்னதால், இந்த முற்கால சோழ இளவரசனின் அமர்வு இன்னொருவகைப்பட்டதாக அமைந்து, ஒவ்வொன்றும் ஒரு விதம் என விழாவை பன்முகப்படுத்தி சிறப்பித்தது எனலாம். பெருந்தேவி கலந்துரையாடலின்போது ஒரு கூட்டமே அவரது கூட்டம் என்பதுபோல் வாசகர்கள். உங்களது கவிதைகள் என்னை ஒன்றும் அவ்வளவாக பாதிக்கவில்லை என்பவரையும், ஸ்ரீவள்ளியின் ரசிகையாகவே இங்கு வந்தேன் என்பவரையும் ஒருங்கே எதிர்கொண்ட அவரது ஆளுமை பாராட்டுக்குரியது. அந்த அமர்வை எடுத்து நடத்திய நண்பர், சுஷில்குமார், கவிதைகளின் நுணுக்கங்கள் அறிந்தவராக இருந்தார். இனிமேல் அச்சிடப்பட இருக்கும் அகராதியில், எதிர்க்கவிதை, பகடிக்கவிஞர் போன்ற புது வார்த்தைகள் இருப்பதை பார்க்கலாம். உபயம்விஷ்ணுபுரம் விருது விழா – 2019.

கவிஞர் இசை என்று இல்லை சுரேஷ் குமார இந்திரஜித்தும், சிவாஜியின் நடிப்பை பகடி செய்தார். அவரது writer block- அகற்ற சரோஜாதேவியின் பாட்டு உதவியது என்றார். ஐம்பது வருட வாழ்க்கைக்கு அப்புறமும் கணவனுக்கும், மனைவிக்கும் புரிந்துகொள்ள முடியாத விஷயங்கள் இருக்கும், வாழ்வின் அந்த மர்மமே அவரை எழுதத் தூண்டுகிறது என்று சொன்னார். எங்கள் வீட்டிற்கு வந்த நண்பர் ஒருவர், புதிய இளம் பாடகர் பெயரைச் சொல்லி அவர் ஒவ்வொரு பாடலையும் ஒரே மாதிரி பாடுவதாக சொன்னார். இசையின் நுணுக்கங்களைத் தெரிந்த சுரேஷ்குமார இந்திரஜித்தும் அதேமாதிரி அந்த பாடகரை பற்றி விமர்சனம் செய்ய நானும் ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

கணினியில் கட்டளைகள் எழுத முதன் முதலில் பாடம் படிப்பவனுக்கு, interpreter- க்கும், compiler-க்கும் வித்தியாசம் என்ன என்று சொல்லிக்கொடுப்பார்கள். KG சங்கரப்பிள்ளை பேச பேச , நீங்கள் உள்வாங்கி compiler-ஆக மொழிபெயர்ப்பு செய்து முதலில் கலந்துரையாடலையும், பிறகு அவரது உரையையும் கொஞ்சமும் சிதறாமல் எங்களுக்கு கடத்தியதற்கு நன்றி !

நான், கடலூர் சீனுவின் ஆதர்சமான ரசிகன். அவர் , அபியுடனான உரையாடலை நடத்தியதில் எனக்கு கூடுதல் சந்தோசம். அபியின் கவிதைகள், தத்துவார்த்தமானது. தேடல் நிறைந்தது. இருப்பது என்பது இல்லாமல் இருப்பது எனச் சொல்லுவது. சு. வேணுகோபால் , பெருந்தேவி என பல தலைமுறை ஆளுமைகள் கேள்விகள் கேட்டதால், வானம்பாடி முதல் இன்றைய காலகட்டம் வரை கவிதைகளின் வரலாற்றை அறியும் உரையாடலாக அது அமைந்தது.

ரவி சுப்பிரமணியனின் இசையில், ஹரிணியின் குரலில், இடை இடையே அபியின் கவிதைகளை ஒலிபரப்பியது விழாநாயகனுக்கு கொடுத்த நல்லதொரு மரியாதை. கவிதையில் அர்த்தம் பார்த்தல் ஆகாது, அனுபவிக்க வேண்டும், அதன் வார்த்தைகள் நிற்காமல் போகலாம், அது கொடுத்த அனுபவம் நிற்கும். கவி நினைத்ததை போல் மொழியில் அப்படியே எல்லாம் வந்துவிடாது. அது வேறொரு கவிதையாகவே இருக்கும் என கவிதைகள் பற்றிய கருத்துக்களை அபி ஏற்புரையில் கூறியது, கவிதைகளை படித்து அனுபவிக்க புதிய வாசகனுக்கு உதவியாக இருக்கும்.

யுவன், இசை, அமிர்தம் சூர்யா, சுரேஷ்குமார இந்திரஜித் அனைத்து ஆளுமைகளும், அவர்கள் அமர்வு முடிந்தும், வாசகர்களாக, ரசிகர்களாக அமர்ந்து கேள்விகள் பல கேட்டு விழாவில் பங்கு கொண்ட அனைவருக்கும் இசை , கவிதை பற்றிய புரிதலை விரிவுபடுத்தினார்கள். மேடையில் அமர்ந்து பேசியவர்கள்தான் ஆளுமைகள் என்றால், பார்த்து கை குலுக்குபவர்களும், தோளில் கைபோட்டு பேசுபவர்களும், ஆளுமைகள் என்பதை விஷ்ணுபுரம் விருது விழாவில்தான் பார்க்கமுடியும்.

கீழ்த்தளத்தில் கைவினை பொருட்கள் விற்கும் ஸ்டாலிற்கு முன்னால், இவரும் சாருடன் மலேசியா சென்றார் என்று ஒரு இளம் பெண்ணை , ஷாகுல் எனக்கு அறிமுகப் படுத்தினார். அப்புறம் பார்த்தால், தனது விமானப் பயணம், வெள்ளை சப்தம், ஹேரி பாட்டரில் ஒரு பாத்திரம் என்று ஒவ்வொன்றையும் உவமைப்படுத்தி அபியின் கவிதைகள் பற்றி ஒரு செறிவான உரையை நிகழ்த்தினார் விருது வழங்கும் விழாவில் அந்த இளம் பெண்ஸ்வேதா ஷண்முகம். ஒரு இடைவேளையில், வறுகடலையை கொறித்துக்கொண்டு வழக்கறிஞர் செல்வராணியுடன் வெஸ்பாவில் நெடும்பயணம் பற்றி உரையாடிக்கொண்டிருந்தபொழுது, ஷாகுல் இடைமறித்து, நாகப்பிராகாஷ் மற்றும் அவரது தோழியை அறிமுகப்படுத்தினார். கைகுலுக்கி முடிக்க முடிக்க, நாகப்பிரகாஷ் சிறுகதைகளை தளத்தில் பார்த்த ஞாபகம் வந்துவிட்டது.

வெண்பாவை நான் கேட்ட கேள்வியை குறிப்பிட்டுச் சொல்லி, விஜயராகவன், அவராகவே வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்புறம்தான் தெரிந்தது, அடுத்த வாரம் சென்னையில் நடக்கும் விழாவில், வெளிவரும் நூல்களில் அவருடைய நூலும் ஒன்று. சாப்பிடும் இடத்தில் பாரியைப் பார்த்தேன். அவரும் அறிவியல் புனைவுகள் எழுதியிருப்பதாக சொன்னார். நாஞ்சில் நாடனை சந்தித்து, “அய்யா, நான் கொங்குதேர் வாழ்க்கை வாசித்துவிட்டு எனது எண்ணத்தை ஒரு மின்னஞ்சலில் அனுப்பினேன். தங்களிடமிருந்து பதில் இல்லை. தவறாக ஏதாவது எழுதிவிட்டேனா?” என்று கேட்டேன். “அப்படியெல்லாம், ஒன்றும் இல்லை. கணினியில் தட்டச்சு செய்து பழகவில்லை. பிறரின் உதவி தேவைஎன்றார்.

தனிச்சிறுவனாக மெளனமாக வாழ்ந்த அபியின் தனிமையையும், கவி உள்ளத்தையும் பிரதிபலித்த ஆவணப்படத்தில் ராஜன் சோமசுந்தரத்தின் இசை , அதன் மொழியில் மௌனத்தை தொட முயற்சிக்கும் அபியை ரசிகனுக்கு இனிமையாக அறிமுகப்படுத்தியது. அட்லாண்டாவில் வசிக்கும், நீங்கள் அங்கு வந்த சமயம், மண்டியிட்டு அமர்ந்து, நீலம் நூலில் தங்களின் கையெழுத்தை வாங்கியவருமான நண்பர் சிஜோ மேத்தியூவ், ஸ்ருதி டிவி கபிலனை சந்தித்து தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். விழா முடிந்து எல்லோரும் மேடையேறி குழு புகைப்படம் எடுப்பதற்கு சிறிதே முன்னர், கபிலனிடம் சென்று, சிஜோ எழுதியதை உரக்க வாசித்து காண்பித்தேன்.

விழாவில் ஸ்ருதி டிவி கபிலன் அவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் என் சார்பில் (ஏன், தமிழகத்துக்கு வெளியே வாழும் அனைத்து தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் சார்பிலும்) ஒரு பெரிய நன்றியைத் தெரிவிக்கவும். பிரிதிபலன் பாராமல் இலக்கிய விழாக்களைத் தேடிச் சென்று ஒளி/ஒலி ஆவணங்களாகப் பதிவு செய்யும் அவரது நிறுவனத்தின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது.

அமெரிக்காவில் ஒரு நாள் விஷ்ணுபுரம் விருது விழா நடக்கும் என்று கனவு காணும் நண்பர்கள் கூட்டம் ஒன்று, விழாவில் பாரதிமணியை பார்த்தால், தங்கள் அன்பைத் தெரிவிக்கச் சொல்லியிருந்தார்கள். விழாவில், அவரை நான் காணவில்லை.. ராதாவும், மகள் பார்கவியும், இரண்டாம் நாளன்று இடதுபுறத்தில் நாலு வரிசை தள்ளி அமர்ந்திருந்த நண்பர் மணிவண்ணன் சண்முகத்தை சுட்டிக் காட்டி பவா செல்லத்துரை வந்திருக்கிறார் போல என்றார்கள். அவரிடம் அதை சொன்னதற்கு, இந்த விமர்சனத்திற்கு மிகவும் பழக்கப்பட்டவரனா அவர், அடுத்தமுறை, இன்னும் கொஞ்சம் தாடியை ட்ரிம் செய்துகொள்கிறேன் என்றார்.

விழா முடிந்து , உங்களையும், அரங்காவையும் சந்தித்து , மேலே குறிப்பிட்ட நண்பர்களின் கனவை கோடிட்டு காட்டி விடை பெற்றேன்.

இயலும், இசையும் நல்கி வந்த இந்த விழாவில் , கலந்துரையாடல்களை நாடகங்கள் என எடுத்துக்கொண்டால், முத்தமிழ் விழாவென இதை சொல்லலாம். பம்பரமெனச் சுழன்ற மீனாம்பிகை, கைபேசியை ஓசை இல்லாமல் வைத்துக்கொள்ளவும் எனக் கட்டளை இட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கமைத்த ராஜகோபால், மைக்கை பார்வையாளர்களுக்கு கடத்திய கதிர், யோகேஸ்வரன், ஷாகுல், பார்த்து பார்த்து உபசரித்த செந்தில் என பெயர் தெரிந்தவர்களை நன்றி சொல்ல குறிப்பிட்டுச் சொல்லுகிறேன்.

நேரத்திற்கு அனைத்து நிகழ்வுகளையும் திறம்பட நடத்தி, விருந்தினர்கள் தங்கவும், பசியாரவும் தக்க ஏற்பாடுகள் செய்து விழாவை சிறப்புற நிகழ்த்திய குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்

***

விஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் – 2019

விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

விஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்

முகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்

விஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா

=============================================================================================

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 44
அடுத்த கட்டுரைவிழா கடிதம் – ரவிச்சந்திரன்