யுவால் – கடிதம்

ஹராரியின் கலகச்சட்டகம்

உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா?

இனிய ஜெயம்

தளத்தில் யுவால் அவர்களின் மானுட வரலாற்றுப்பார்வையை சார்ந்து, ஏற்றும் மறுத்தும் வந்த பதிவுகளும்,தொடர்ந்த சுரேஷ் பாபு அவர்களின் பதிவும் கண்டேன். யுவால் அவர்களின் பார்வையில் உள்ள எதிர்மறை அம்சம் பலரை ஒவ்வாமை கொள்ள வைப்பதையும், அதே எதிர்மறை அம்சம் சிலரை புளகம் கொள்ள வைப்பதையும் சமீப காலங்களில் அருகே இருந்து காண முடிகிறது.
பொதுவாக ‘இனிமே அவ்ளோதான் மனுஷன் . எல்லாம் பூட்ட கேஸ். டயத்த வேஸ்ட் பண்ணாம உன் பாடைய நீயே ரெடி பண்ற வேலையப் பாரு’ வகையறா பார்வைக்கு நான் முற்றிலும் ஒவ்வாமை கொண்டே எதிர்வினை செய்வேன். முதல் பார்வைக்கு யுவால் இந்த பூட்ட கேஸ் நிலையின், அழிவின் பாடகராக மட்டுமே எனக்கும் தோன்றினார்.
இந்த முதல்கட்ட உணர்வை மறுதலித்து கொஞ்சம் சமநிலை கொண்டு யோசிக்கும் இடைவெளியை உருவாக்கிக்கொண்டு  சில மாதம் கழித்து சேபியன்ஸ் வாசிக்கையில் யுவால் அவர்களின் பார்வை அவர் எந்த சிக்கலை முன்வைத்து பேசுகிறாரோ அதன் தீவிரத்தை உணர்த்துவதற்கான வெளிப்பாட்டு முறையைக் கொண்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.
உதாரணத்துக்கு அவர் விவசாயப் பரிமாணத்தின் திரும்ப இயலா ஒற்றையடிப் பாதையில் மானுடம் சிக்கிக்கொண்ட இடரை கூறுகையில், இது ஒற்றைப் படையான பார்வை. அதை கலகக் குரலில் முன்வைக்கிறார் என்று தோன்றும். விவசாயம் அதிலிருந்து நிலஉடமை,அதிலிருந்து நிர்வாகம், அதிலிருந்து குடும்பம்,தனிசொத்து,அரசு, உபரி உபரியால் கலை பண்பாடு என மானுடத்துக்கு அது அளித்த நேர்மறை விஷயங்களை யுவால் கணக்கில் கொள்ளவில்லை என தர்க்கிக்கலாம்.
இந்த தர்க்கங்கள் வழியே யுவால் மையமாக சுட்டிக் காட்டும் பிரச்னைகள், இப்போது நடைமுறையில் செயல்பாட்டில் இல்லை என்று நிறுவ இயலாது.
சமீபத்தில் கடலூரில் நடந்தது இது. குறிப்பிட்ட ஏடிஎம் கருவி ஒன்றினில் இருநூறு ரூபாய் கேட்டால் அது ஐநூறு தந்தது. கணக்கில் இருநூறு ரூபாய் மட்டும்  எடுக்கப்பட்டதாகவே காட்டியது.மக்கள் நியாயம்மார்
 இல்லையா, ஒருவருக்கு ஒருவர் ரகசியமாக செய்தி பரிமாறி, யந்திரத்தை காலி செய்தனர். நிர்வாகத்துக்கு மிக தாமதமாக அது கவனத்துக்கு வந்தது. பிரச்னையை எவ்வாறு சரி செய்தார்கள் என தெரியவில்லை. ஆனால் அதே இயந்திரத்திலிருந்து நான் முன்னூறு ரூபாய் எடுத்திருப்பதாக நள்ளிரவு எனக்கு செய்தி வந்தது. நிர்வாகம் யந்திரக் கோளாரினை கை காட்டி, உண்மையும் அதுதான் எனில் இதற்கு எவர் பொறுப்பு? எதற்காக எதோ ஒரு யந்திரம் உருவாக்கிய இந்த நஷ்டத்தை ‘நான்’ அனுபவிக்க வேண்டும்?
கொஞ்சம் யோசித்தால் இது  போன்ற நிலைகளின் தொடர் வலை, எளிய சிக்கல் அல்ல என்று புரியும். இந்த சூழலில் நிற்கும் பல கோடி சாமான்யன் அந்த சூழலுக்கு எவ்வாறு வந்து சேர்ந்தான். இன்று இப்போது இந்த சூழலை எவ்வாறு கையாள்வது? என்பதை முன்வைத்து யுவால் தனது பார்வையை சரியாகவே முன்வைக்கிறார்.  அந்தப்பார்வை ‘இந்த’ குறிப்பிட்ட பிரச்னையை சுட்டும் வண்ணம் ஒற்றைப்படை தன்மை கொண்டதாகவே அமைய முடியும்.
மேலும் அது ஒற்றைப்படைத் தன்மை கொண்ட பார்வை தானே அன்றி ‘திரிபு’ கொண்ட பார்வை அல்ல என்பதை கவனிக்க வேண்டும். உதாரணமாக யுவால் விவசாயம் வழியே மானுடம் சிக்கிக்கொண்ட இடர் குறித்து சுட்டுகையில் அது கலகப்பார்வை போல தோற்றம் அளிக்கும் ஆனால் மேலதிகமாக சென்று வாசித்தால் அவர் சொல்வதன் ஆழம் புரியும்.  டேனியல் ஈ லிபர்மன் ஹவார்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் பரிணாமவியலுக்குள் ‘குறிப்பிட்ட’ சூழல் ஒன்றின் மீதான ஆய்வாளர். அவரது ஆய்வுப் புலம் இந்த விவாசாயப் புரட்சி வழியே மானுட உடல் அடைந்ததும் இழந்ததும் என்ன என்பது சார்ந்தது. அது சார்ந்த அவரது நூல் மனித  உடலின் கதை எனும் பெயரில் பல மொழிகளில் வெளியானது. தமிழிலும். ஆய்வுகளின் துணை கொண்ட இந்த நூலினை வாசிப்பதன் வழியே யுவாலின் பார்வைக் கோணத்தை இன்னும் அணுகி அறிய இயலும்.
இவை போக, செயற்கை அறிவு எனும் நிலை மீது யுவால் தர்க்கத்துக்கு வெளியே நின்று  கொஞ்சம் அதிகமாகவே பீதியை கிளப்புகிறார். செயற்கையாக அறிவை மட்டுமே உருவாக்க இயலும். அறிவு எதில் நிலைகொண்டிருக்கிறதோ ‘விவேகம்’ அதை உருவாக்க முடியாது. உதாரணமாக இப்போது கூகிள் ஆங்கிலப் பத்தி ஒன்றை எவ்வாறு தமிழில் மொழிமாற்றம் செய்கிறது என்பதை கண்டதால் அதை புரிந்து கொள்ள முடியும். ஆங்கிலத்தின் வாக்கியத்தில் உள்ள எழுவாய் பயனிலை வரிசையை தமிழில் உள்ள வரிசைக்கு மாற்ற கட்டளைக்கு உட்பட்ட செயற்கைஅறிவால் இயலாது. விவேகம் தேவை. அது பல நூற்றாண்டு பரிணாம வளர்ச்சி கொண்ட மூளை மற்றும் தன்னுணர்வின்பார்ப்பட்டது.  இந்த அம்சம் டிஜிடலாகவோ பைனரியாகவோ மாற்ற முடிந்த ஒன்றல்ல. இல்லை இப்படி சொல்லலாம்.   மனிதனுக்கு எப்போது மூளை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிகழ்த்தப் படுகிறதோ,அப்போதுதான்  மானுடம் செயற்கை அறிவின் கட்டுப்பாட்டில் இருக்கும்.  அதுவரை  நமது சந்ததிகள்  பயம் கொள்ளத் தேவை இல்லை.
இறுதியாக, யுவால் ஒரு சிந்தனையாளரா எனில் இல்லை என்றே சொல்வேன். லாற்றல் திங்கிங் என்பது சிந்தனை அல்ல. அது ஒரு முறை. திருப்பிப் போட்டுப் பார்ப்பதன் வழியே ‘புதியதாக’ ‘தனித்துவம்’ கொண்டதாக எது உருவாக்கி வருகிறதோ அதிலிருந்து அதன் நேர்மறை எதிர்மறை அம்சத்துடன் இணைத்து தனது கருத்துத் தளத்தை உருவாக்கிக் கொள்பவர் எவரோ அவரே சிந்தனையாளர்.  ஜாரட் டைமன்ட் சிந்தனையாளர். யுவால் சிந்தனையாளர் அல்ல. யுவால் சொல்வதை [மனிதன் தான் வினையாக முடுக்கி விட்ட ஆற்றல்களை திரும்பப் பெற வகையின்றி அவற்றின் விளைவில்  சிக்கிக்கொண்டவன் போன்ற நோக்கை] எங்கும் காணலாம். [தற்போது நினைவில் எழும் பெயர் யு ஜி கிருஷ்ணமூர்த்தி] ஜாரட் சொல்வதை அவர் வசமிருந்து மட்டுமே  பெற  இயலும். இதுவே அளவுகோல். தமிழ் நிலம் வரை ஊடுருவிய உரையாடல் ஒன்றினை முன்வைத்தவர் என்ற வகையில் யுவால் முக்கியமானவர்.ஆனால் தீவிர வாசிப்பு சிந்தனை தளத்தில்  பாப்புலர் அறிவுஜீவி ஒருவரின் இடம் எதுவோ அதுவே அவரது இடமும். தீவிரத் தளத்தில் ஒருவருக்கு ஜாரட் ஆதர்சமாக இருக்க முடியும். யுவாலுக்கு அந்நிலை கிடையாது.

கடலூர் சீனு
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59
அடுத்த கட்டுரைதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்