வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்

வைக்கமும் காந்தியும் 1

வைக்கமும் காந்தியும் 2

அன்புள்ள ஜெ,

உங்களின் வைக்கமும் காந்தியும் 1/2 வாசித்திருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டு சிலரிடம் பேசியிருக்கிறேன். சமீபத்தில் “தமிழ் இந்து” வில் இந்த கட்டுரை வந்து சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது.

வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? பழ அதியமான்

இனிமேல் எதையும் சொல்ல முடியாது, சொல்லி வைத்ததுபோல் மூர்க்கமாக இந்த சுட்டியைக் காட்டுவார்கள்.

நாராயண குருவின் பெயர் எப்படி இந்த கட்டுரையில் மறைக்கப்பட்டுள்ளது என்று கவனித்தீர்களா. அதேபோல் காந்தியும் இறுதியில் தான் வருகிறார்!!,.

“போராட்டத்தின் நிறைவுக் கட்டத்தில் வைக்கம் வந்த காந்தியுடனும் பெரியார் தொடர்பில் இருந்தார். “

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா

***

அன்புள்ள பழனிவேல்,

நான் உணர்ந்தவரை இந்த ‘பெரியாரியம்’ என்பது ஒரு மதம். எல்லா புதிய மதங்களுக்கும் உரிய ஆவேசமான நம்பிக்கை கொண்டது. ஈ.வே.ரா சிலையுடைப்பாளரா என்றால் இருக்கலாம், தனக்கு வசதியான எளிதான சிலைகளை உடைத்தவர். எல்லா சிலை உடைப்பாளர்களையும் போல அவரை சிலையாக்கி கும்பிடுகிறார்கள். அதில் பகுத்தறிவுக்கோ தர்க்கத்துக்கோ இடமில்லை. விமர்சனநோக்கு என்பதே இல்லை. போற்றிப் பாடடி ஒருபக்கம், கூடவே மொட்டை வசையும் திரிபுகளும் மறுபக்கம்.

திரு.பழ அதியமானின் நூலை, அதைப்பற்றிய கட்டுரைகளை வாசித்தேன். மதநூல்கள் முழுக்க முழுக்க அந்த மத நம்பிக்கையாளர்களை நோக்கி திரும்பி நின்று பேசுபவை. அவர்களுக்கு ‘சமாதானம்’ சொல்லும் நோக்கம் கொண்டவை. இதுவும் அப்படியே. இதை ஓர் ஆய்வுநூல் என்று ஆய்வு என்றால் என்ன என்று அறிந்த, ஆய்வில் நேர்மை என ஒன்று உண்டு என்று உணர்ந்த எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவரிடமிருந்து என்றும் அப்படி ஒரு நூல் வரக்கூடும் என நான் எண்ணவுமில்லை.

இத்தகைய நூல்களின் அடிப்படை விதி ஒன்றே. முதலில் எதிர்த்தரப்பை குறுக்குவது, அதை முத்திரையிட்டு தங்கள் வழக்கமான எதிரிகளின் பட்டியலில் சேர்ப்பது. அதன்பின் கைவசமுள்ள எல்லா எதிர்வசனங்களையும் அதன்மேல் பொழிவது. அந்தக் குறுக்கலைத்தான் தப்பாமல் செய்திருக்கிறார் பழ.அதியமான்.“பெரியாருக்கும் வைக்கம் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?” என எவரோ கேட்பதாக திரித்து அதற்கு மாய்ந்து மாய்ந்து பதில் எழுதியிருக்கிறார். இதற்கு முன்னர் எழுதியவர்களும் இதையே எழுதியிருக்கிறார்கள்.

நான் நூறுமுறை சொன்னதையே திரும்பச் சொல்கிறேன்.

அ. ஈ.வே.ரா வைக்கம் போராட்டத்தை ‘தொடங்கியதாக’ தமிழ்நாட்டு பாடநூல்கள் உட்பட பல நூல்களில் எழுதப்பட்டுள்ளது [ Periyar launched Vaikkom struggle ] .

ஆ. வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஈவேரா உரிமைகளை ‘வாங்கிக் கொடுத்ததாக’ பலமுறை எழுதப்பட்டுள்ளது. அத்தகைய சுவரொட்டிகளைக் காணாதவர்களே அரிது.

இ. வைக்கத்தில் போராட்டத்தை தலைமை தாங்க தலைவர்கள் இல்லை என்பதனால் ஈவேரா அழைக்கப்பட்டதாக அவரே சொன்னார் என மேற்கோள்காட்டி பலமுறை சொல்லப்பட்டுள்ளது

இவை ஈவேரா அவர்களின் பங்களிப்பை மிகையாக்கிப் பரப்பப்படும் பொய்கள். தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக ஈ.வே.ரா எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை, கீழ்வெண்மணி போன்று தலித் மக்களை ஒருங்கிணைத்து இடதுசாரிகள் போராடியபோது எதிராகவே செயல்பட்டார் என்னும் வரலாற்று உண்மையை மழுப்பும்பொருட்டு சொல்லப்பட்ட வெற்றுப்பிரச்சாரம்.

ஈ.வே.ரா வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தார், போராடினார். ஆனால் அவர் அதை தொடங்கவில்லை – நடத்தவில்லை – முடிக்கவில்லை. இதையே நான் சொன்னேன். இப்போதும் இதுவே உண்மை. இது இன்றுவரை எந்த பெரியாரியராலும் மறுக்கப்படவில்லை. மறுக்கவும் முடியாது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின், நான் இப்படி ஒரு விவாதத்தை கிளப்பிய பின், பழ.அதியமான் போன்ற ஒருவர் வைக்கம் போராட்டம் முன்னரே தொடங்கப்பட்டு விட்டிருந்தது என்று ஒத்துக்கொண்டு டி.கே.மாதவன் பெயரைச் சொல்ல நேர்ந்ததை ஒரு வெற்றியாக கொள்கிறேன். அதை முடித்து வைத்தவர் காந்தி என்றும் அதில் கேரளத் தலைவர்கள் பலர் பங்குகொண்டனர் என்றும் தமிழகத்தில் இருந்தேகூட ஈ.வே.ராவுக்கு நிகராக , கோவை அய்யாமுத்து போன்றவர்கள் கலந்துகொண்டார்கள் என்றும் இன்று இவர்கள் சொல்ல வருவதும் வெற்றிதான். கோவை அய்யாமுத்து அன்று ஈவேராவை விட முக்கியமான காந்தியத்தலைவர் – சர்வோதயப் பணியாளர். அவருடைய தன்வரலாற்றை ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம். விடுபட்டுப்போன இன்னொரு பெயர் எம்.வி.நாயுடு.

இவ்வாறு மெட்ராஸ் மாகாண காங்கிரச் சார்பில் இங்கிருந்து சென்றவர்களில் ஒருவர் ஈவேரா. அவரே முதல்வர் என்றோ, இவர்களைவிட ஈவேராவின் பங்களிப்பு சற்றே மேல் என்றோ அவருடைய ஆதரவாளர்கள் சொல்வதில்கூட எனக்கு மாற்றுச்சொல் இல்லை. ஒருவரின் ஆதரவாளர்கள் அவருடைய பங்களிப்பைச் சற்று மிகைப்படுத்துவார்கள். ஈவேரா சிறைசென்றார் என்பது உண்மை, ஆனால் அவரை விட நெடுங்காலம் சிறையிலிருந்தவர்கல் பலர் உண்டு. சொல்லப்போனால் முன்னணிப்போராளிகள் சிறைசென்றமையால்தான் மெட்ராஸ் மாகாணத்தவர் செல்ல நேர்ந்தது.

ஈவேரா வேறு எப்போதும் நீண்ட சிறைவாசம் அனுபவித்தவரல்ல என்பதனால் அவருடைய ‘தியாகவாழ்க்கையை’ இவ்வண்ணம் புனையவேண்டிய தேவைப்  அவர்களுக்கு உள்ளது.ஆனால் மீண்டும் சொல்கிறேன், அவர் அப்போராட்டத்தை தொடங்கவில்லை, நடத்தவில்லை, முடிக்கவில்லை. அவர் அதில் பங்கெடுத்தார். அதுவும் அதன் நடுப்பகுதியில் மட்டும்

வைக்கம் போராட்டம் அது பல படிகள் கொண்ட ஒரு பெரிய அறிவியக்கம் – சமூக இயக்கம். கேரளவரலாற்றின் ஒரு திருப்புமுனை பகுதி அது. பல தலைவர்கள் பங்கெடுத்தது, பலதலைவர்களை உருவாக்கியது. கேரள கம்யூனிஸ்டு இயக்கத்தின் தொடக்கமே கூட அதிலிருந்துதான். அதில் பங்கெடுக்கையில் ஈவேரா ஒன்றும் பெருந்தலைவரும் அல்ல. ஆனால் அதை தங்கள் தலைவருக்கு போற்றிப் பாடுவதற்காக பெரியாரியர்கள் கொச்சைப்படுத்தினர். இனிமேல் குறைந்தபட்சம் மேலே சொன்ன மூன்று பொய்களைச் சொல்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வார்கள் என எண்ணுகிறேன்

வைக்கம் போராட்டத்தைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். அதில் ஒரு தகவல்கூட இன்னமும் மறுக்கப்படவில்லை. நான் பழைய கட்டுரைகளில் ஆதார பூர்வமாக விளக்கமாகச் சொன்னவற்றையே மீண்டும் தொகுத்துச் சொல்கிறேன்.

* வைக்கம் போராட்டம் ஒரு குறியீட்டுத்தன்மை கொண்டது. ஒரு தலைமுறைக்கு முன்பு, திவான் வேலுப்பிள்ளை காலகட்டத்தில் வைக்கம் ஆலயத்திற்குள் நுழைவதற்கான ஒரு போராட்டம் நடந்து படுகொலையில் முடிந்தது. ஆகவேதான் அதை டி.கே.மாதவன் முன்னெடுத்தார்.

* அவர் நாராயணகுருவின் மாணவர், ஆனால் காங்கிரஸ்காரர். நாராயணகுரு எதிர்ப்பியக்கங்கள் மேல் நம்பிக்கை அற்றவர். ஆகவே டி.கே.மாதவனின் வைக்கம் நுழைவுப்போராட்டத்தை ஆதரிக்க மறுத்துவிட்டார்.

* டி.கே.மாதவன் முதலில் அன்னிபெசண்டின் உதவியை நாடினார். ஆனால் அன்னிபெசண்டால் ஒரு பெரிய இயக்கத்தை வழிநடத்த முடியாது என உணர்ந்தார்.

* அதன் பின்னரே டி.கே.மாதவன் காந்தியை சந்தித்து ஆதரவு கேட்டார். ஆனால் காந்தி அந்தப் போராட்டத்தால் இந்துக்களிடையே பிளவு உருவாகக்கூடும், அது சுதந்திரப்போருக்கு எதிரானதாக முடியலாம் என அஞ்சினார். ஆகவே ஆதரவு அளிக்கவில்லை.

* டி.கே.மாதவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தவே காந்தி அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். ஆனால் அது உள்ளூர் மக்களால் மட்டும் நடத்தப்படவேண்டும் என்றும், போராட்டத்தின் எல்லா நிலைகளிலும் அதில் உயர்சாதியினரும் கலந்துகொண்டு சிறை செல்லவேண்டும் என்றும் அது வன்முறையற்ற அகிம்சைப் போராட்டமாக நீடிக்கவேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். அதை ஏற்று டி.கே.மாதவன் வைக்கம் போராட்டத்தை தொடங்கினார்.

* காந்தியின் நெறிப்படியே போராட்டம் நடைபெற்றது. அப்போராட்ட வடிவை வகுத்தவர் காந்திதான். ஒவ்வொருநாளும் ஒரு சிறுகுழு தடைமீறி சிறைசெல்வதே அந்த வழிமுறை. அதில் ஈழவர், தலித், உயர்சாதினர் அடங்கியிருப்பார்கள்

* காந்தியின் போராட்ட வழிமுறை என்பது மெல்ல மெல்ல மக்களின் சாதி சார்ந்த கருத்துநிலையை மாற்றுவதும் அனைவரையும் ஆதரவாளர்களாக ஆக்குவதும்தான். வைக்கம் போராட்டம் அதன் மாபெரும் பிரச்சார வல்லமையால் தான் உண்மையான வெற்றியை அடைந்தது. சாதி, மதம் பற்றிய கேரளத்தின் எண்ணங்களை அது மாற்றியது

* வைக்கம் போராட்டத்தை ஒட்டித்தான் கேரளத்தின் இரு நாளிதழ்கள் தொடங்கப்பட்டன. பின்னாளில் தலைவர்களாக எழுந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, ஏ.கே.கோபாலன் போன்ற பலர் மைய அரசியலுக்கு வந்தனர். அது கேரளம்தழுவி நடந்த ஒரு மிகப்பெரிய அறிவியக்கம். அதை நடத்தியது காங்கிரஸ். அதன் பெருந்தலைவர்களான கே.பி.கேசவமேனன், கேளப்பன் போன்றவர்கள். அது ஒரு ஊரில் நடந்த கிளர்ச்சி அல்ல.

* வைக்கம் போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. பஞ்சாபிலிருந்தும் வங்கத்திலிருந்தும் எல்லாம் தலைவர்கள் வந்து கலந்துகொண்டனர். பிரம்மசமாஜம் ஆரியசமாஜம் போன்ற அமைப்புகள் கலந்து கொண்டன.

* தமிழகத்திலிருந்து, காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஈவேரா. அவருடைய பங்களிப்பு அவ்வகையிலேயே. அது அவருடைய அன்றைய இளமைவீச்சால் ஆற்றல் கொண்டதாக இருக்கலாம். ஆனால் அத்தகைய பல பங்களிப்புகள் அதில் உள்ளன. அப்படி பங்களிப்பாற்றிய பலர் ஈவேராவை விட முக்கியமானவர்கள்.

* போராட்டத்தின் பொருட்டு காந்தி இரண்டு முறை வைக்கம் வந்திருக்கிறார். ஆலயநுழைவை எதிர்த்த இண்டன்துருத்தில் நீலகண்டன் நம்பூதிரிப்பாட்டை நேரில் கண்டு பேசமுயன்றிருக்கிறார். நாராயணகுருவை கண்டு ஆதரவு கோரியிருக்கிறார். அய்யன்காளியையும் சந்தித்திருக்கிறார்

.* போராட்டம் இரண்டு புதிய நுழைவுகளால்தான் அறுதிவெற்றியை அடைந்தது. ஒன்று, நாராயணகுரு நேரடியாகவே வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களம் வந்தது. இரண்டு உயர்சாதியினரான நாயர்களின் அமைப்பாகிய நாயர் சர்வீஸ் சொசைட்டி நிறுவனரான மன்னத்து பத்மநாபன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களமிறங்கியது. அன்றும் இன்றும் கேரளத்தின் பிரம்மாண்டமான மக்களியக்கங்கள் இவை. பல லட்சம் உறுப்பினர்கள் கொண்டவை, அமைப்பாக திரட்டப்பட்டவை. இவையிரண்டும் ஆதரவளித்ததுமே கிட்டத்தட்ட போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அவர்களை போராட அழைத்து வந்ததே காந்திய அமைப்புக்களின் வெற்றி

* எந்தப் போராட்டத்தையும் போல வைக்கமும் ஒரு சமரசத்துடன்தான் முடிவுக்கு வந்தது. அது காந்திய வழி. வைக்கம் ஆலயத்தின் மையக் கோபுர வாசல் வழியாக பிறசாதியினர் நுழையமாட்டார்கள் என ஒப்புக்கொண்டார்கள் போராட்டக்காரர்கள். ஆனால் ஓராண்டுக்குள் அந்த உரிமையும் போராடிப் பெறப்பட்டது

* வைக்கம் போராட்டம் தொடர்ந்து காந்தியால் வழிநடத்தப்பட்டது. அத்தனை போராளிகளுடனும் காந்தி தொடர்டபில் இருந்தார். திருவிதாங்கூர் அரசரைச் சந்தித்தார். திருவிதாங்கூர் போலீஸ் தலைவர் காப்டன் டபிள்யூ. எச். பிட் அவர்களுடன் காந்தி நேரடியாக நடத்திய உரையாடல் போராட்டத்தின் வெற்றிக்கு ஒருகாரணம். பிட்-டின் மனமாற்றம் திருவிதாங்கூர் அரசவர்க்கத்தை பணிய வைத்தது

*. பேச்சுவார்த்தை காந்திய வழிகாட்டு நெறிப்படி நடந்தது. காந்தியின் ஏற்பின்படி தேவதாஸ் காந்தி கையெழுத்திட மகாராஜாவின் அறிவிப்பால் முடிவுக்கு வந்தது.

* வைக்கம் போராட்டம் முடிவுக்கு வருவதற்கு முன்னரே ஈவேரா தமிழகம் திரும்பிவிட்டார். இங்கே காங்கிரஸ் கட்சியில் அவருக்கிருந்த பூசல்கள் அவரை இங்கே கொண்டுவந்தன. தன் குருநாதராகிய வரதராஜுலு நாயுடுவுடன் அவர் காங்கிரஸை விட்டு வெளியேறினார். வைக்கம் போராட்டத்தில் அவர் அதன்பின் ஆர்வம் காட்டவில்லை.

* .வைக்கம் போராட்டம் ஒரு மாதிரி முயற்சி. .அது முடிந்த சில மாதங்களிலேயே கேரளம் முழுக்க ஆலய நுழைவுப் போராட்டங்கள் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டன. திருவார்ப்பு, குருவாயூர் போராட்டங்கள் தொடங்கி வெற்றிபெற்றன. தமிழ்நாட்டிலும் இந்தியா முழுக்கவும் ஆலயநுழைவு போராட்டங்களை காங்கிரஸ் முன்னெடுத்தது.

ஈவேரா ஒரு தனிமனிதர், அவ்வாறே அவர் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். அவருடைய பங்களிப்பு முக்கியமானதே. ஆனால் அது ஒரு தனிநபர் செயல்பாட்டால் நிகழ்ந்த போராட்டம் அல்ல. அது பல ஆண்டுகள் நீடித்த ஒரு இயக்கம். அதை அமைப்புகளே நடத்தமுடியும். காங்கிரஸும் பின்னர் நாராயணகுருவின் அமைப்பும் கடைசியாக என்.எஸ்.எஸுமே அதை நடத்தின. அவர்களே வெற்றியை ஈட்டினர்.

இந்த தெள்ளத்தெளிவான வரலாற்றை இவர்கள் நமக்கு எப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று மட்டும் பாருங்கள். ஈவேரா வைக்கத்தில் போராடினாரா, அனல்பறக்க பேசினாரா, சிறை சென்றாரா, அவருடைய தியாகம் போற்றப்படுகிறதா என்றல்ல கேள்வி. அது அவர் பங்குகொண்ட போராட்டம், ஆனால் அவர் தொடங்கிய, நடத்திய, வென்ற போராட்டம் அல்ல. அதன் நாயகர்கள் பிறர். அதில் பங்குகொண்டமையால் இன்றும் ஈவேரா மதிக்கப்படுகிறார். ஆனால் அதை அவருடைய போராட்டம் என திரிப்பது அநீதி. அற்பப் பிரச்சாரம். அதையே நான் சுட்டிக்காட்டுகிறேன்.மீண்டும் மீண்டும்.

இன்று வேறுவழியில்லாமல் வைக்கம் போராட்டம் முன்னரே தொடங்கப்பட்டு நடந்தது, அதில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டவர்களில் ஒருவர்தான் ஈவேரா, அதை வெற்றிபெறச் செய்தவர்கள் வேறுதலைவர்கள் என்பதை பெரியாரியர்கள் மழுப்பி மழுப்பி ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அடுத்த திரிபுகளை சந்தடி சாக்கில் செய்கிறார்கள். பழ.அதியமானே அதை செய்து வழிகாட்டுகிறார்.

போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஈழவர்களை மதமாற்றம் செய்யும் முயற்சிகள் தொடங்கின. டி.கே.குஞ்ஞுராமன் என்னும் ஈழவர் தலைவர் ஒட்டுமொத்த மதமாற்றம் என்னும் எண்ணத்தை முன்வைத்ததை ஒட்டி அந்த முயற்சிகள் தொடங்கின. சிலர் சீக்கியர்களாகக்கூட மதம் மாறினர். இந்த மதமாற்றம் வைக்கம் போராட்டத்தை திசை திருப்பியது. அது இந்துமதத்திற்கு எதிராக பிற மதத்தவர் செய்யும் தாக்குதல் என போராட்ட எதிர்ப்பாளர்களால் விளக்கப்பட்டது. வைக்கம் ஆலயத்தில் நுழைய கிறித்தவர்கள் முயல்கிறார்கள் என்று கடுமையான எதிர்ப்பிரச்சாரம் நிகழ்ந்தது.

அதை முறியடிக்க காந்தி ஓர் ஆணையை இட்டார். வைக்கம் போராட்டம் முழுக்கமுழுக்க இந்துக்களால் நடத்தப்படவேண்டும் என்றார். ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் களத்திலிருந்து விலகவேண்டும் என்றார். ஆனால் ஜார்ஜ் ஜோசப்பும் அவருடைய ஆதரவாளராக திகழ்ந்த ஈவேராவும் அதை எதிர்த்தனர். ஆனால் காங்கிரஸ் காந்தியை ஏற்றுக்கொண்டது. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டமையால்தான் இந்துக்கள் பெருவாரியாக வைக்கம் போராட்டத்தை ஆதரித்தனர். என்.எஸ்.எஸ் களத்திற்கு வந்தது.

வைக்கம்போராட்டம் முதன்மையாக வைக்கத்தவரால் நடத்தப்படவேண்டும் என்று காந்தி ஆரம்பம் முதலே சொல்லிவந்தார். அதன் வெற்றி தோல்விகளை வைத்தே பிற ஊர்களில் ஆலயப்பிரவேசம் பற்றி அவர் முடிவெடுக்க எண்ணினார். ஆகவே கூடுமானவரை அயலவர் கலந்துகொள்ளக்கூடாது என்பது அவர் எண்ணம். தான் ஆலயவழிபாட்டாளர் அல்ல என்பதனால் வைக்கம் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை என்று அவர் சொன்னார். வைக்கம் போராட்டம் வென்றபின் திருவார்ப்பிலும் குருவாயூரிலும் தொடங்கிய அகிம்சைப் போரிலும் முதன்மையாக அந்த ஊர் மக்களே கலந்துகொள்ளவேண்டும் என அவர் ஆணையிட்டார். வெளியே இருந்து செல்பவர்கள் ஒருங்கிணைப்பு, பிரச்சாரம் ஆகியவற்றை மட்டுமே செய்யவேண்டும் என்றார். அது வைக்கத்தில் முழுமையாக நிறைவேறவில்லை.

இவ்விரு செய்திகளையும் மழுப்பி திரித்து காந்தி வைக்கம் போராட்டத்தை ஒடுக்க முனைந்தார், தவிர்க்கப் பார்த்தார், ஈவேரா துணிந்து நின்றார் என்னும் வகையில் பொய்யைக் கக்கும் பெரியாரியப் பிரச்சாரத்தைக் கவனியுங்கள். வைக்கம் போராட்டம் முடிந்ததுமே இந்தியநிலம் எங்கும் காந்திய இயக்கம் ஆலய நுழைவை ஆரம்பித்தது, எதிலுமே ஈவேரா கலந்து கொள்ளவில்லை என்பது வரலாற்று உண்மை. இவர்களுக்கு உண்மை என்பதன் மேல் ஏதாவது மதிப்பிருக்கிறதா?

ஆர்வமூட்டும் ஒன்றுண்டு. வைக்கம் போராட்டத்திற்காக கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் வந்த காந்தியை காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் சென்று பார்த்து ஆலயப் பிரவேசத்தை முன்னெடுத்து இந்து மதத்தை அழித்துவிடவேண்டாம் என்று மன்றாடினார். காந்தி அவரை பொருட்படுத்தவில்லை. அவரிடம் தீண்டாமையை ஆதரிக்கும் சுருதிகள் எவை என்று கேட்டார். அதற்கு சந்திரசேகரரால் பதில் சொல்லமுடியவில்லை. காந்தி அன்று கோவையில் நிகழ்ந்த கூட்டத்தில் பெயர் சொல்லாமல் போகிற போக்கில் அச்சந்திப்பைப்பற்றிக் குறிப்பிடுகிறார்

ஆனால் ஐம்பதாண்டுகளுக்குப்பின் காந்திக்கு சந்திரசேகரர் ‘ஆசி வழங்கினார்’ என்று ஒரு பொய் கட்டமைக்கப்பட்டது. டி.எம்.பி. மகாதேவன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட அந்தப்பொய் பேசிப்பேசி நிலைநிறுத்தப்பட்டது. நான் உண்மையில் என்ன நடந்தது என்று விரிவாக எழுதியிருக்கிறேன். இப்போது ஈவேரா பற்றிய உண்மைகளை எப்படி பெரியாரியர்கள் எதிர்கொள்கிறார்களோ அதேபோலத்தான் வைதிகப் பிராமணர்களும் எதிர்கொண்டனர். எந்த வேறுபாடும் இல்லை. செய்திகளை திரிப்பது, அரைகுறை தகவல்கள். எதிர்தரப்பை வசைபாடி திரித்து முத்திரை குத்தி தன் தரப்பை நிறுவும் உத்திகள்.எந்த தர்க்கத்துக்கும் உடன்படாத கண்மூடித்தனமான நம்பிக்கை.

மதநம்பிக்கைகளை போலவே ஒரு நம்பிக்கைதான் பெரியாரியர்களுடையது. இன்னும்பெரிய மூடநம்பிக்கை. அதனுடன் விவாதிக்கவே இயலாது. இதையும் கொஞ்சமேனும் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்காகச் சொல்லி வைக்கிறேன்

ஜெ

***

பெரியார்மதம்

வைக்கமும் ஈவேராவும்

கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு

காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்

சந்திரசேகரரும் ஈவேராவும்

ஈவேரா பற்றி சில வினாக்கள்…

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48