அன்பு நிறை ஜெ,
இவ்வாண்டும் விஷ்ணுபுரம் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. அபியின் ஆளுமையை அனைத்துப் பேச்சாளர்களும் தம் தம் கோணத்தில் அணுகினார்கள்.
சங்கரப் பிள்ளை, ஒரு கவிஞனின் கொந்தளிப்புடன் அபி கவிதைகள் குறித்துப் பேசினார். ஏ கே ராமானுஜனின் அக நிலக் காட்சி போல அபி ஒரு அகத் தெருக் காட்சியைப் பாடியவர் ; தெருக்களின் துயரைப் பாடியவர் என்றது அழகு. புறவய உலகில் இருந்து எழுதிய அகநிலைக் கவிஞராக அபியை வகைப்படுத்தினார். நீங்கள் மலையாளத்திலிருந்து சங்கரப் பிள்ளையின் உரையை உடனடியாக மொழிபெயர்த்தது நன்றாக இருந்தது. நீளமான சொற்றொடர்களும் கவித்துவமும் உங்கள் மொழிமாற்றதிறனை சிறப்பாக வெளிப்படுத்தின.
ஆவணப்படம் இன்றும் உள்ளத்தில் சொட்டிக்கொண்டே இருக்கிறது. கே பி வினோத் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
அபி ஏற்புரையில் திகைப்பும் வியப்பும் அடைந்திருப்பதாக (சற்றும் திகைப்பின்றி)ச் சொன்னார். அவருக்கு மாலை அணிவித்தபோது அவரது மாலை கவித்தொடரின் பிள்ளையைப்போல அவருக்குள் நிகழ்வதை அவரே பார்த்துக் கொண்டிருப்பார். இதுவரை எழுதியதை விட சிறப்பாக அமையாமல் அடுத்த கவிதைகளை எழுதுவதில்லை என்றார் அபி. அவருக்கு ஒன்றும் அவசரமில்லை. ஏனெனில் அவரது த்வனியின் ஒரு அலையே பிரபஞ்சம் அளவுக்கு நீளமானது. அந்த அவரோகணம் இன்னும் முடியவில்லை.
ஓர் அரிய கவிஞனை மட்டும் சிறப்பிக்கவில்லை விழா. அறிவுதாகம் கொண்டவர்களை எல்லாம் ஈர்த்து வந்திருக்கிறது. உதாரணமாக எனது நண்பர் சத்யன் அவர்களின் ஆசிரியர் சிவக்குமார் அவர்கள். அவரது ஆசிரியர் அபி. இம்மூவரும் சந்தித்துக் கொண்டது முடிவிலாது நீளும் ஆசிரியர் – மாணவர் உறவின் மேன்மையை உணர்த்தியது
சிறந்த நிர்வாக முறையை நிகழ்த்திக் காட்டிய அனைத்து ஆர்வலர்களுக்கும் நன்றி. மீண்டும் ஒரு விழாமூலம் கோவையைப் பெருமைப்படுத்தியமைக்கு நன்றி.
அன்புடன்
ஆர் ராகவேந்திரன்
கோவை
***
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விழாவில் திரையிடப்பட்ட அபி ஆவணப்படத்தைப் பார்த்தேன். மென்மையான இசையுடன் அழகாக எடுக்கப்பட்டிருந்த படம். அபியின் கவிதைகளை வாசித்தவர்களுக்கானது. அவருடைய நிதானமான கூச்சம் நிறைந்த புன்னகையை காணமுடிந்தது. அவருடைய வீடு. சூழல் எல்லாமே சிறப்பாக அமைந்துவிட்டது.
வினோத் எடுக்கும் ஆவணப்படங்களில் மழை வந்துவிடுகிறது. அதை சிறப்பாகப் பயன்படுத்தவும் அவரால் முடிகிறது. டிசம்பரில் ஆவணப்படம் எடுப்பதனால் என நினைக்கிறேன். அருமையான படம். வாழ்த்துக்கள். இயக்குநர் வினோத் தயாரிப்பாளர் ராஜா சந்திரசேகர் இசையமைப்பாளர் ராஜ் சோமசுந்தரம் ஆகியோருக்கு பாராட்டுக்கள்
டி. சுரேஷ்குமார்
விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி
விஷ்ணுபுரம் 2-ம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி
விஷ்ணுபுரம் விருது விழா முதல் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருது விழா 2-ம் நாள் புகைப்படங்கள் – ஸ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 புகைப்படங்கள் – செந்தில்
முகங்களின் புகைப்படங்கள் – ஆனந்தகுமார்
விஷ்ணுபுரம் விருதுவிழா நாள்-2 புகைப்படங்கள் – ஷிவாத்மா
அபி -ஆவணப்படம்
விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்