Nancy Devi Italy
நான் உள்ளே நுழைந்தபோது எல்லா ஆன்ஸெல் படுக்கையில் கண்மூடி படுத்திருந்தாள். என் கையிலிருந்த எண்ணைக்குப்பியை கீழே வைத்த ஓசை கேட்டு அவள் விழித்துக்கொண்டாள். என் காலடியோசைகளை பொதுவாக பிறர் கேட்பதில்லை.
அவள் கண்களைத் திறக்க சிரமப்பட்டாள். மூடிய கண்ணிமைகள் இரு பூச்சிகள் போல அதிர்ந்து துடித்தன. பின்னர் விழி பிளந்து அரைநோக்கில் என்னை பார்த்தாள். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து ஆங்கிலத்தில் “யார் நீ?” என்றாள். அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள்.
“நான், வைத்தியன். உங்களுக்கு உழிச்சில் செய்ய வந்தவன்” என்றேன்.
உதிரிச் சொற்களில் என்னால் ஆங்கிலம் பேசமுடியும். அதிருஷ்டவசமாக அவளுக்கும் ஆங்கிலம் தட்டுப்பாடுதான் என தெரிந்தது. பிரெஞ்சுக்காரி என்றார்கள்.
“நீயா? நீயா உழிச்சில் செய்யப்போகிறாய்? நீ ஓர் ஆண்!” என்றாள்.
“ஆம், ஆனால் இது உங்கள் கால்களுக்கு மட்டும்தான்” என்றேன்.
“எதுவாக இருந்தாலென்ன? ஆண் என்னை தொடக்கூடாது” என்று அவள் நடுங்கும் குரலில் சொன்னாள்.
நெடுங்காலப் போதைப் பழக்கம் அளித்த நடுக்கம். முகம் உலர்ந்து, கோடுகள் செறிந்து, உதடுகளையும் விழிகளையும் சூழ்ந்த நுண்ணிய சுருக்கங்களும் தவிட்டுநிறப் புள்ளிகளுமாக இருந்தது. விழிகள் நீர்மைகொண்டு பளபளத்தன.
“இங்கே பாதங்களுக்கான உழிச்சிலை நான் மட்டுமே செய்யமுடியும். உடலை உழிவதற்குத்தான் பெண்கள். அவர்கள் முழுமையான மருத்துவர்கள் அல்ல” என்று நான் சொன்னேன்.
“எனக்கு ஆண் சிகிழ்ச்சை செய்யவேண்டியதில்லை. வெளியே போ” என்றாள்.
“இதோ பாருங்கள் சீமாட்டி, நான் தேர்ந்த மருத்துவன். இதை என்னால்தான் செய்யமுடியும்” என்றேன்.
“நான் சீமாட்டி இல்லை” என்று கூவினாள்.
“சரி, பெண்மணி. இதோ பாருங்கள் கால்பாதம் என்பது எங்கள் வைத்தியமுறையில் மிகமிக முக்கியமான ஒன்று. அத்தனை நரம்புகளும் பாதங்களில் முடிகின்றன. உரிய நரம்பின் முனையைச் சரியாக தொட்டால் உடல்முழுக்க நரம்புத்தூண்டலை அளிக்கமுடியும்”.
அவள் கைநீட்டி “நீ முதலில் வெளியே போ” என்றாள்.
நான் தலைவணங்கி “போவதில் எனக்கொன்றும் இல்லை. நான் இந்த மருத்துவ நிலையத்தின் முதன்மை மருத்துவன். ஒருமுறை வந்தாலே எனக்கு பணம் கொடுத்து விடுவார்கள். ஆனால் நீங்கள் நல்ல நிலையில் இல்லை. உங்களை மீட்க என்னால் முடியும்” என்றேன்.
அவள் என்னை விழிநிறுத்தி நோக்கி “என் பிரச்சினை என்ன? சொல் பார்ப்போம்” என்றாள்.
“தூக்கமின்மை… அதற்காக எடுத்துக்கொண்ட மாத்திரைகள். கூடவே போதைப்பொருட்கள். கேக்கெயின், கஞ்சா, எக்ஸ்டஸி மாத்திரைகள்”
அவள் உதட்டைச் சுழித்து “அதை இருபதடி தொலைவில் ஒரு சாமானியன் கண்டு சொல்லிவிடுவான்” என்றாள்.
“கூடவே கொடுங்கனவுகள். அக்கனவுகளில் நிறைய புழுக்கள்”
அவள் வாய் ஆ என திறந்து நின்றது.
“கொடிய புழுக்கள்… பெரியவை… கன்னங்கரியவை. உடலெங்கும் ஊர்ந்து உள்ளே நுழைபவை”
அவள் நெஞ்சில் கைவைத்து “ஆம்” என்றாள்.
“நான் உங்களை மீட்க முடியும். என் தொன்மையான மருத்துவமுறை உங்களுக்கு புதுவாழ்க்கையை அளிக்கக்கூடும்”
அவள் என்னை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள். அவளுக்குள் மெல்லிய நம்பிக்கை உருவாகி தத்தளித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
“உங்கள் மருத்துவமுறை உடலையும் உள்ளத்தையும் வேறுவேறாக பார்க்கிறது. நாங்கள் சூழல், உள்ளம், உடல் ஆகிய மூன்றையும் ஒன்றாகவே எண்ணுகிறோம்” என்றேன். “ஒரு சிறு சான்றைக் காட்டுகிறேன். உங்கள் உள்ளங்காலில் நான் ஒரு சிறு தொடுகையை நிகழ்த்துகிறேன். நீங்கள் இப்போது இருக்கும் உளநிலை மாறுபடுவதைக் காண்பீர்கள்”
அவள் ஐயமாக நோக்கிக் கொண்டிருக்க நான் கீழே அமர்ந்து அவள் காலை மெல்ல பிடித்தேன். என் கைபட்டதும் அவள் கூச்சத்துடன் காலை நெளித்தாள். அவள் உடலே அதிர்ந்தது. பாதத்தின் அடியில் இரு விரல்களுக்கு நடுவே மெல்ல தொட்டு அழுத்தினேன். அவள் கிளுகிளுப்புடன் நகைத்தாள். காலை இழுத்துக்கொண்டு “ஆம்” என்றாள்.
“என்ன உணர்கிறீர்கள்?” என்றேன்.
“சட்டென்று என் உள்ளம் மலர்ந்துவிட்டது. சிறுமிபோல உணர்ந்தேன்”.
நான் “அதுதான் இந்த மருத்துவத்தின் இயல்பு. இதை நான் தொடரலாமா?” என்றேன்.
அவள் “ஆம்” என்றாள். ”வலிக்குமா?
“பெரிதாக வலிக்காது”
நான் அவளை அந்த நீண்ட ஒடுங்கிய படுக்கையில் படுக்கச் செய்தேன். “இயல்பாக இருங்கள். உடலை தளர்த்திக் கொள்ளுங்கள். மூச்சு இயல்பாக ஓடட்டும். நான் செய்வதையே கவனித்துக் கொண்டிருங்கள்” என்றபடி அவள் கால்களை படுக்கையில் இணையாக விரித்து வைத்தேன். உள்ளங்கால் பரப்பை என் கைகளால் மெல்ல வருடிக்கொண்டிருந்தேன்.
“என் கைகளை உங்கள் கால்கள் உணரவேண்டும். பழகி அறியவேண்டும். அதன்பின்னரே அழுத்தங்களை அளிப்பேன். இந்த உழிச்சில் பதினெட்டு நாட்களுக்கு தேவைப்படும். கூடவே நீங்கள் தேய்த்துக் குளிப்பதற்கான எண்ணையையும் தருவேன். உணவுக் கட்டுப்பாடு இங்கே ஏற்கனவே இருக்கிறது” என்றேன். “நீங்கள் நாங்கள் அளிக்கும் கட்டைச் செருப்பை மட்டுமே அணியவேண்டும். கூடுமானவரை நடக்கக்கூடாது”
அவள் “சரி” என்றாள்.
அவள் கால்களை வருடிக் கொண்டிருந்தேன். அவை என் கைகளை ஏற்றுக்கொண்டன. “உங்கள் பெயர் எல்லா ஆன்ஸெல்தானே?” என்றேன். ‘நீங்கள் பிரெஞ்சுக்காரர் அல்லவா?”
“ஆம்” என்றாள். ஆனால் அவள் சற்றுத் தயங்கியது போலிருந்தது.
“உங்கள் கால்கள் நெடுநாட்களாக மண்ணையே தொட்டதில்லை. நீங்கள் என்ன பணியாற்றுகிறீர்கள்.”
அவள் ஒன்றும் சொல்லவில்லை. அந்த அமைதி எனக்கு வியப்பாக இருந்தது.
“நீங்கள் எதையும் சொல்லியாகவேண்டும் என்பதில்லை. ஆனால் எங்கள் மருத்துவத்தில் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்வோம். சொல்லப்போனால் உங்கள் நட்சத்திரம், பிறந்த நாள், பொழுது எல்லாமே எனக்குத்தேவை. உங்கள் குலதெய்வத்தைக்கூடக் கேட்பேன்.”
“குலதெய்வம் என்றால்?” என்றாள்.
“நீங்கள் கத்தோலிக்கர் என்றால் உங்களுக்குரிய புனிதர்” என்றேன். “நீங்கள் தாராளவாதி என்றால் நீங்கள் வாக்களிக்கும் அரசியல்வாதி”
அவள் சிரித்துவிட்டாள். “என் நட்சத்திரம் டாரஸ்” என்றாள். “1990 ஜூன் பதினாறு… என் காவலர் புனித செபாஸ்டின்.”
“நல்லது, நான் குறித்துக் கொள்கிறேன்” என்றேன்.
“ஆனால் என்பெயர் எல்லா இல்லை. அது நான் வைத்துக்கொண்ட பெயர்.”
“அப்படியா?”
“ஆம், என் உண்மையான பெயர் எனக்கே நினைவில்லை. எனக்கு நிறைய பெயர்களை வைத்துக்கொண்டேன். இந்தப்பெயர் எனக்குப் பிடித்திருந்தது.”
அவள் தன்னைப் பற்றிச் சொல்ல விரும்புகிறாள் என்று தெரிந்தது. நான் காத்திருந்தேன். விரல்களால் அவள் நரம்புகளை தொட்டறிந்து கொண்டிருந்தேன். மிகமெல்லிய சிலந்தி வலை. ஆனால் பட்டாலானது. யானைகள் ஏறிநின்றாலும் அறாதது. மெல்லிய மூச்சுக்காற்றில் சிதறுண்டு பறப்பதும்கூட.
“என்னைப் பற்றிச் சொன்னால் இந்தச் சிகிழ்ச்சையின் முறையே மாறிவிடும்” என்றாள்.
“எங்கள் சிகிழ்ச்சை ஒவ்வொருவருக்கும் ஏற்ப மாறுவதுதான்” என்றேன்.
“நான் கடைசியாக அமலீ ஃபார்னியர் என்ற பேரில் அறியப்படுகிறேன்” என்றாள்.
அவள் என்ன எண்ணுகிறாள் என எனக்குப்புரியவில்லை. “நடிக்கிறீர்களா?” என்றேன். அவள் காலின் முதல் நரம்பில் என் சுட்டுவிரலை வைத்தேன். வீணையின் நரம்பை தொட்டு அதன் சுருதியை அறிவது அது.
“ஆம்” என்றாள். சிறிய இடைவெளி விட்டு “பாலியல் படங்களில்.”
போர்ன் என அவள் சொன்னது எனக்கு புரியவில்லை. அது ஃபோன் என என் காதில் விழுந்தது. “என்ன வகை படங்கள்?” என்றேன்.
“நான் பதினாறு ஆண்டுகளாக பாலியல் படங்களில் நடிக்கிறேன். அறுநூறுக்கும் மேற்பட்ட படங்கள். அமெரிக்காவிலும் ஃப்ரான்ஸிலும் நான் மிகமிகப் பிரபலம். இந்தியாவில்கூட பிரபலமாகத்தான் இருக்கவேண்டும்”
நான் ஒருகணம் என்னை திரட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. என் சுட்டுவிரல் அவள் காலின் அடுத்த நரம்பை தொடாமல் அரைக்கண, அரையணு இடைவெளியில் நின்றது. பின்னர் அதை அழுத்தினேன். அவிழ்ந்த வீணைத்தந்தி என தளர்ந்திருந்தது.
“வலியை உணர்கிறீர்களா?”
“இல்லை.”
“நான் தொடுவதை உணர்கிறீர்களா?”
“இல்லை…” என்றாள்.
“நரம்புகள் தளர்ந்திருக்கின்றன.”
“உன் பெயர் என்ன?”
“ஸ்ரீதரன்… ஸ்ரீதரப் பொதுவாள்… இங்கே கேரளத்தில் நாங்கள் கோயில்களில் வேலைபார்க்கும் குலம்.”
“நீ பாலியல் படம் பார்ப்பதில்லையா?”
“இல்லை.”
“உனக்கு என்ன வயது?”
“முப்பத்தாறு.”
“திருமணம் ஆகிவிட்டதா?”
“இல்லை.”
“ஸ்ரீ, நீ பாலியல் வேட்கையை தணிக்க என்னதான் செய்கிறாய்?”
“மன்னிக்கவும் இது உரையாடல் அல்ல. நான் மருத்துவன், நீங்கள் நோயாளி. நான் உங்களைப் பற்றிக் கேட்பது அதற்காகத்தான்.”
“நீ ஆணிலியா?”
நான் அவள் நரம்புமுனை ஒன்றை அழுத்த அவள் “ச்ச்ச்” என்றாள்.
“சற்றே வலிக்கும். எறும்பு கடித்ததுபோல எரிச்சல், அவ்வளவுதானே?”
“ஆம்.”
“நரம்புகள் பட்டுவிடவில்லை. இதயத்திற்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. சில கொடுமுடிச்சுகள், அவ்வளவுதான்…”
“ஸ்ரீ, இதேபோல மருத்துவர் தன் நோயாளியிடம் பரிசோதனை மேஜையிலேயே பாலுறவு கொள்ளும் நிறைய படங்கள் உள்ளன. நானே நடித்திருக்கிறேன்.”
“இந்த நரம்பில் ஒரு மெல்லிய கூச்சம் இருக்கும்.”
“நீ வேண்டுமென்றால் என்னுடன் இப்போது பாலுறவு கொள்ளலாம்.”
“கூசுகிறதா?”
“இல்லை.”
“கண்களை மூடி கவனியுங்கள். இந்த நரம்பில் நான் தொடும்போது உங்கள் உடலில் எங்கெல்லாம் எறும்பு ஊர்வதுபோல உணர்கிறீர்கள்?”
“நான் சொன்னதை நீ தவிர்க்கிறாய். நீ என்னுடன் உறவு கொள்ளலாம். நீ இதற்கு முன் பெண்ணுடன் உறவு கொண்டிருக்கிறாய் அல்லவா?”
“இல்லை.”
“அப்படியென்றால் நல்லது. நான் உன் முதல்பெண்.”
“என்ன உணர்கிறீர்கள்?”
“ஒன்றுமில்லை… நீ என்னுடன் விளையாடுகிறாய்.”
“இப்போது என்ன தோன்றுகிறது?”
“நீ என்னை அவமதிக்கிறாய்.”
“இப்பேச்சை விட்டுவிடுங்கள். உங்கள் கைவிரல் நுனிகளை கவனியுங்கள். அங்கே ஒரு விறுவிறுப்பை உணர்கிறீர்களா? உள்ளிருந்து ரத்தம் வந்து முட்டுவதுபோல?”
அவள் எழுந்து அமர்ந்தாள். முகம் சிவந்திருந்தது. மூச்சு இரைத்தது. “நீ என்னை என்னவென்று நினைத்தாய்? உன்னை புனிதன் என்று காட்டுகிறாயா? நான் சிறுமைப்படுவேன் என நினைக்கிறாயா?”
“உங்கள் உணர்ச்சி புரிகிறது. ஆனால் நான் மருத்துவன்.”
“நீ மட்டுமல்ல இந்த மருத்துவ நிலையத்திலுள்ள அத்தனைபேரும் வந்து என்னை புணர்ந்தாலும் எனக்கு ஒன்றுமில்லை. இந்த நகரத்திலுள்ள அத்தனைபேரும் என்னை புணர்ந்தாலும் ஒன்றுமில்லை. எனக்கு ஆணின் உடல் ஒரு பொருட்டே அல்ல, தெரிகிறதா? எனக்கு ஆண்கள் வெறும் சருகுகள். அர்த்தமில்லாத குப்பைகள்.”
“படுத்துக்கொள்ளுங்கள்… நான் இன்னமும் உங்கள் பாதத்தை நன்கு நோக்கவில்லை”
“என் பத்துவயதில் முதல் ஆணை அறிந்தேன். அந்த விரைப்பான, நீளமான தசையை. அதன்பின் நான் பார்த்ததெல்லாம் அதுதான். அதுதான் என் வாழ்க்கையே.”
அவள் என்னை மீண்டும் கூர்ந்து நோக்கினாள். நான் அவள் விழிகளையே பார்த்தேன். அவள் மெல்ல தணிந்தாள்.
“நீ என் மேல் அருவருப்பு அடைகிறாய். என்னை வெறுக்கிறாய்.”
“இல்லை” என்றேன். ”படுங்கள். படுத்தால் நம் உள்ளமும் அமைதிகொள்கிறது.”
“நான் பாலியல்படத்தில் நடித்தவள் என்று சொல்லாமலிருந்தால் நீ என்மேல் காமம் கொண்டிருப்பாய்.”
“படுங்கள்… இந்த மிகையான உணர்ச்சிகளால்தான் நரம்புகள் பழுதடைந்துள்ளன”
“நரம்புகள் நாசமாகப் போகட்டும். சொல், நீ என்னை அருவருக்கிறாயா?”
”இல்லை.”
“அப்படியென்றால் காமம் கொண்டிருக்கிறாய். அடக்கிக்கொண்டிருக்கிறாய்.”
“இல்லை.”
“நான் உன் உடலை தொட்டுப்பார்ப்பேன்.”
“தேவையில்லை, என் கண்களை மட்டும் பார்த்தால்போதும்.”
அவள் என்னை கூர்ந்து நோக்கினாள். பின்னர் “ஆம், விந்தைதான்… நீ யார்?” என்றாள்.
“நான் மருத்துவன்.”
“ஆனால் ஆணும்கூட.”
“ஆம், ஆனால் மருத்துவன். நீங்கள் என் நோயாளி… படுத்துக்கொள்ளுங்கள்.”
அவள் பெருமூச்சுவிட்டாள். மீண்டும் படுத்துக்கொண்டாள்.
நான் அவள் பாதங்களை வருடிக்கொண்டே சென்றேன். நரம்புகளினூடாக ஓடுவது ஒரு மெல்லிய சுருதி. மிகமிக மெல்லியது. வீணைத் தந்திகளில் காற்றுபடும்போது உருவாவதுபோல.
“இந்நரம்பில் என் கை படும்போது உங்கள் தலையில் பேன் ஊர்வதுபோல உணரவேண்டும்.”
“ஆம், கூசுகிறது.”
“இப்போது?”
“உச்சந்தலையில் குளிர்கிறது.”
“இப்போது?”
“உள்ளங்கையில் கூச்சம்… கூரிய முனையால் மெல்ல வருடியதுபோல.”
“இப்போது?”
“வயிற்றுக்குள் ஒரு எரிச்சல்.”
“உங்கள் செரிமான அமைப்பே சிக்கலாக ஆகிவிட்டிருக்கிறது… அமிலம் நிறைந்திருக்கிறது குடல்களில். உங்கள் உள்ளங்கால் எரிவதுண்டா?”
“ஆமாம், தீயில் நிற்பதுபோல இருக்கும் சில சமயம்.”
“உணவு முழுக்க நஞ்சு… மீண்டு வரவேண்டும். ஆனால் குடல் நட்பார்ந்தது. தன்னைச் சீர்ப்படுத்திக்கொள்ள தயாராக இருப்பது. நரம்புகள்தான் சிக்கலானவை. ஒன்றை மட்டுமாக சீரமைக்க முடியாது. ஒட்டுமொத்தமாக சீரமைக்கப்படவேண்டும்”
அவள் பெருமூச்சுவிட்டாள்.
“நரம்புகளைப் பொறுத்தவரை நம்மால் எந்த முடிச்சையும் அவிழ்க்க முடியாது. அடையாளம் காணவே முடியாது. மொத்த நரம்புகளையும் எளிதாக்கலாம். உடல் உயிர்வாழ விரும்பினால் நரம்புகளின் முடிச்சுகளை அதுவே அவிழ்த்துக் கொள்ளும்”
அவள் ஒன்றும் சொல்லவில்லை. இமைகள் மூடியிருந்தன. உள்ளே விழி உருள்வது அசைவாகத் தெரிந்தது.
“ஆனால் நம்பிக்கை வேண்டும். உயிர்வாழமுடியும் என்ற நம்பிக்கை. அது உயிர்வாழவேண்டும் என்ற ஆசையிலிருந்து வருவது. அவை இருந்தால் மீண்டுவிட முடியும். அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. நான் தொழில் என்ன என்று கேட்டது அதனால்தான்”
அவள் ஒன்றும் சொல்லவில்லை, கவனித்தாள்.
“அந்த தொழிலை விட்டுவிடுங்கள்.”
“நான் அதை விட்டு இரண்டு ஆண்டுகளாகின்றன.”
“வேறு ஏதேனும் வேலை செய்யலாம். நீங்கள் படித்தவர் அல்லவா?”
“இல்லை, நான் ஆரம்பப் படிப்பு மட்டுமே முடித்திருக்கிறேன்.”
“ஏதாவது பணி கற்றுக்கொள்ளலாம்.”
“எனக்கு பொருளியல்தேவை இல்லை. நிறையப் பணம் வருகிறது.”
“படங்களில் இருந்தா?”
“அவர்கள் அயோக்கியர்கள். ஒன்றுமே தரமாட்டார்கள். எனக்கு பணம் வருவது இன்னொரு வகையில். என்னுடைய பொம்மைகளில் இருந்து.”
“பொம்மைகளில் இருந்தா?”
“என் அளவே ஆனவை. என்னைப்போலவே இருப்பவை. பாலிமரால் செய்யப்பட்டவை. கண்ணை மூடிக்கொண்டு தொட்டால் என்னை தொடுவதுபோலவே இருக்கும். தழுவினாலும் என்னை தழுவும் உணர்வு இருக்கும்.”
“நான் கேள்விப்பட்டதில்லை.”
“இந்தியாவில் சட்டபூர்வ விற்பனை கிடையாது… என் பொம்மை கைகளாலும் கால்களாலும் தழுவிக்கொள்ளும். அதற்கு பெண்ணுறுப்பும் அங்கே வெம்மையான தசையும் உயவுத்திரவமும் உண்டு. அதை பெண்ணைப்போலவே புணரமுடியும்”
“அப்படியா?”
“என்னைப்போலவே முனகும். கொஞ்சிப்பேசும். மிகமிக நுட்பமானது. அதனுடன் இருப்பவன் தன் குரலில் சொல்லும் ஆயிரம் சொற்றொடர்களுக்கு செல்லமாகப் பதில் சொல்லும்.” அவள் சிரித்து “அதாவது நான் பேசுவேன்” என்றாள்.
நான் அவள் மறுகாலை கையில் எடுத்தேன். “இதுவும் அதே சோதனைதான். ஆனால் வேறு இடங்களில் எதிர்வினை தெரியும். முன்பு எதிர்வினை வந்த இடங்களின் நேர்எதிரான இடங்களில். சிலசமயம் தொடர்பே இல்லாத இடங்களில்.”
“எப்படி?” என்றாள்.
“அதை நரம்பியலில் விளக்குகிறார்கள். எங்களுடையது அனுபவ மருத்துவம். எப்படி என்று நாங்கள் விளக்குவதில்லை.”
“ஏன்?”
“மூளை என்பது வானம்போல. எத்தனைகோடி நட்சத்திரங்கள். எத்தனை பிரபஞ்சங்கள். யார் அதை முழுக்க விளக்கமுடியும்? விளக்கவேண்டுமென்றால் பராசக்தியையே விளக்கவேண்டும்?” நான் புன்னகைத்து “எங்களுக்குப் பராசக்தியின் பாதங்களே போதும்” என்றேன்.
“பராசக்தி என்றால்?”
“கடவுள்…உங்கள் பிதா, பரிசுத்த ஆவி இரண்டையும் சேர்த்து… இல்லை அதைவிட பெரியதாக. அதாவது இந்த பிரபஞ்சமே ஒர் ஆற்றலின் வடிவம்தான். அந்த ஆற்றலை நாங்கள் ஒரு பெண்ணாக உருவகிக்கிறோம்”
“பெண்ணாகவா?”
“ஆம், அன்னையாக.”
“இங்கே மூன்று தெய்வங்கள் உண்டு அல்லவா?”
“பிரம்மா, விஷ்ணு, சிவன். அவர்கள் படைத்து காத்து அழிக்கும் தெய்வங்கள். அவர்களை ஈன்ற அன்னை என்று நாங்கள் பராசக்தியைச் சொல்கிறோம். அன்னை அவர்களை ஈன்றாள். பிறந்து விழுந்த அவர்கள் திகைத்து நான்குபக்கமும் பார்த்து அழுதபோது வானம் நிறைந்து பல்லாயிரம் இடியோசைபோல ஒரு குரல் எழுந்தது. சர்வகல்வித மேவாகம்,, நான்யாஸ்தி சனாதனம்”.
“என்ன பொருள் அதற்கு?”
“நானே இவையனைத்தும், நானன்றி முதற்பொருள் வேறில்லை.”
“ஆச்சரியமாக இருக்கிறது. நான் வரும் வழியில் நிறைய பெண்தெய்வங்களின் கோயில்களைப் பார்த்தேன். சிறிய கோயில்கள். உள்ளே தெய்வச்சிலைகள் அலங்கரிக்கப்பட்டு விளக்குகளுடன் அமர்ந்திருந்தன.”
”பகவதிகள்… அவர்களெல்லாம் பராசக்தியின் வடிவங்கள். இந்த கேரளம் பகவதிகளின் நாடு.”
”ஆ!”
”சரியாக எங்கே வலிக்கிறது?”
”வலிக்கவில்லை. காதில் ஏதோ நுழைந்ததுபோல இருந்தது… ஆனால் வெறும் உணர்வுதான்”
“நீங்கள் எளிதில் மீளமுடியும்.”
“நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா?”
“சொல்லுங்கள்.”
“மெய்யாகவே எவரையாவது நான் காதலித்தால், அவனுடன் உறவுகொண்டால் என்னால் மீண்டுவிட முடியும். ஒரே ஒரு முறை போதும். ஆனால் என்னால் அது இயலாது.”
“நீங்கள் திருமணம்கூட செய்துகொள்ளலாம்.”
அவள் முனகினாள்.
“இது கொஞ்சம் வலிக்கும்.”
“ஆமாம்” என்றாள்.
“இந்த உழிச்சல் நரம்புகளுக்கு மட்டும்தான். மொத்தமாக உடலை உழிவதற்குப் பெண்கள் இருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து உங்களை மீட்டுவிடுவார்கள்.”
“நான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை.”
“ஏன்?”
“என் பொம்மைகள் எத்தனை விற்றிருக்கின்றன தெரியுமா?”
“எவ்வளவு?”
“பதினெட்டாயிரத்துக்கும் மேல்… மிகமிக விலை உயர்ந்தவை… ஆகவே எனக்கு உரிமைத்தொகையும் அதிகம்.”
“மேலைநாடுகளில் நிறையச் செலவழிக்கிறார்கள்”
“வீணடிக்கிறார்கள்.”
“நீங்கள் புகழ்மிக்கவர் என நினைக்கிறேன்.”
“ஆம், ஒவ்வொருநாளும் என்னை குறைந்தது பதினெட்டாயிரம் பேர் புணர்கிறார்கள்.. அல்லது அதற்கும் மேலாக…”
நான் அவளை திகைப்புடன் பார்த்தேன்.
“நான் ஒவ்வொருவருடனும் சரசமாடுகிறேன்”
“நீங்கள் அதை நினைக்கவேண்டியதில்லை” என்றேன்.
“மெய்யாகவே நீ என்னை பார்த்ததில்லையா?”
“இல்லை”
“என்னை பார்க்காதவர்கள் குறைவு. ஆனால் நான் கேகெயின் தொடங்கியபிறகு சட்டென்று மாறிவிட்டேன். என் தோற்றமே மாறுவேடம்போல ஆகிவிட்டது…”
“மீண்டுவிடுவீர்கள்”
“திரும்ப இளமையை அடையமுடியுமா என்ன? அந்தப்பொம்மைகள் என் மூன்று வெவ்வேறு வயதுகளைச் சார்ந்தவை. பத்தொன்பது வயது உடல் ஒன்று. இருபத்தைந்தில் ஒன்று. இருபத்தேழில் இன்னொன்று. அவற்றில் நான் வேறுமாதிரி இருப்பேன்.”
“அழகியாகவா?”
“அழகி என்றால்… தெரியவில்லை. நான் என் உடலில் எழுபத்திரண்டு அறுவைசிகிழ்ச்சைகள் செய்துகொண்டேன். என் மார்பகங்களிலும் தொடைகளிலும் பின்பக்கத்திலும் சிலிகான் ஜெல்லி வைத்திருந்தேன். எடுத்துவிட்டேன். என் உதடுகளும் மூக்கும் கன்னங்களும் பலமுறை மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன.”
“இங்கே அப்படி உடலை மாற்றிக்கொண்ட பலர் சிகிச்சைக்கு வருவதுண்டு.. பெரும்பாலானவர்கள் ஐரோப்பியர்கள்.”
“அமெரிக்கர்கள்?”
“அவர்கள் ஐரோப்பாவுக்குச் செல்கிறார்கள்”.
அவள் சிரித்தாள். நான் அவள் இரு கால்களையும் சேர்த்து கட்டிலில் வைத்தேன். தைலத்தை என் கைகளில் ஊற்றினேன்.
“இது என்ன எண்ணை?”
“இதை நாங்கள் சகசராதி தைலம் என்கிறோம்”
“இலைமணம்…கூடவே ஒரு ரசாயனவாடை”
“அது துரிசு மணம்… காப்பர் சல்ஃபைட். இயற்கையான ரசாயனம்தான்”
அதை அவள் கால்களில் பூசினேன். விரல்களை ஒவ்வொன்றாக பற்றி இழுத்தேன்.
“என் உடல் என்னைப் பார்ப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. பலமுறை மொத்தமாகவே மாறியிருக்கிறேன்… என் மேல் வெறியுடன் இருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்”
“இந்த தொடுகையை நீங்கள் உணர்கிறீர்களா?”
“இல்லை”
“இப்போது?”
“இல்லை”
“இது?”
“இல்லை”
நான் பெருமூச்சுவிட்டேன். மீண்டும் எண்ணையை கைக்குவிவில் ஊற்றி அவள் பாதங்களில் நீவி உருவினேன்.
“ஸ்ரீ, நீ ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?”
”நான் ஒரு வழிபாட்டுமுறையில் இருக்கிறேன்”
“வழிபாட்டுமுறை என்றால்?”
”ஸ்ரீவித்யை என்கிறோம்… நிறைய நோன்புகள் உண்டு”
“அப்படியென்றால்?”
“அதாவது, பழங்காலத்து கிறித்தவத் துறவிகள் போல…”
“பாலுறவே இல்லாமலா?”
”ஆமாம்… என் ஆசிரியர்கள் எனக்கு வழிகாட்டினார்கள்”.
”கிறித்தவத் துறவிகள் ஒதுக்குபுறமான மடங்களில் இருப்பார்கள்… பட்டினி கிடந்து உடலை வருத்திக்கொள்வார்கள். பெண்களை ஏறிட்டுப் பார்க்கமாட்டார்கள்”
“நாங்கள் நன்றாக சாப்பிடுவோம். உடலை பேணுவோம். பெண்களின் அழகை விரும்பிப் பார்த்து மகிழ்வோம்.”
“பார்ப்பது மட்டும்தானா?”
”ஆமாம், பார்க்கையில் சொல்லிக்கொள்வோம். யா தேவி சர்வஃபூதேஷு சக்திரூபேண சம்ஸ்திதா என்று.”
“அப்படியென்றால்?”
“தேவி, உலகம் முழுக்க ஆற்றல் வடிவாக நிறைந்தவளே!”
”ஓ!”
நான் கைகளைக் கழுவிக்கொண்டேன்.
“எனக்கு தூக்கம் வருகிறது” என்று அவள் சொன்னாள். நாக்கும் சற்றே குழைந்திருந்தது.
“ஆம், நீங்கள் தூங்கலாம்… அரைமணிநேரம். அதன்பின் வெந்நீராட்டுக்கு கூட்டிச் செல்வார்கள்”
“இன்று நான் சற்று தூங்குவேன் என நினைக்கிறேன்” என்றாள்.
”கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவிடலாம்… ஆனால் ஆயுர்வேதம் நிறைய காலம் எடுத்துக்கொள்ளும். நம்முள் இருந்து நாம் மீண்டு எழவேண்டும். நிறைய பொறுமை தேவைப்படும்.”
“எனக்கு அந்தப்பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை. பார்ப்போம்”.
“வேறுவழியில்லை” என்றேன்.
“எனக்கு நம்பிக்கை இல்லை.”
”உங்களுக்கு மீண்டுவிடவேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறது. ஆகவேதான் இத்தனை தொலைவு வந்திருக்கிறீர்கள்.”
“ஆமாம், வரும்போது எதையும் எண்ணவில்லை. அப்படியே கிளம்பிவிட்டேன். ஆனால் இப்போது எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு எதிலும் நம்பிக்கை இல்லை.”
“நம்புங்கள்.”
“ஸ்ரீ, ஒன்று சொல்லவா?”
“சொல்லுங்கள்.”
“நீ ஒரு பெண்.”
நான் புன்னகைத்தேன்.
“ஏனென்றால் உன்னுடையது பெண்ணின் தொடுகை.”
நான் “இருக்கலாம்” என்றேன்.
என் தைலப்புட்டிகளை மீண்டும் பையில் வைத்தேன். “நாளை மீண்டும் வருகிறேன். பதினெட்டு நாட்கள். நீங்கள் மனதை சிதறவிடாமலிருந்தால் போதும். ஆயுர்வேதத்திற்கு ஆழ்ந்த நம்பிக்கை தேவை”
“பார்ப்போம். என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.”
“நான் வருகிறேன்.”
“ஸ்ரீ.”
“சொல்லுங்கள்.”
“இப்போது அதைச் சொல்லிக்கொண்டாயா?”
“எதை?”
“அந்தப்பாடலை?”
”ஆம்.”
நான் பையுடன் வெளியேறினேன். அவள் பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டாள்.
***
அந்திமழை பிப்ரவரி 2019 இதழில் வெளிவந்த கதை http://andhimazhai.com/