மீண்டெழ உதவுங்கள் – தன்னறம்

2020 சென்னைப் புத்தகக்கண்காட்சி சந்தையில் ‘தும்பி – தன்னறம் நூல்வெளிக்கு’ அரங்கு மறுக்கப்பட்டுள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சி அமைப்பினர் கடந்த மூன்று வருடங்களாக தும்பி மற்றும் தன்னறம் நூல்வெளிக்கு அரங்கு கொடுத்திருந்தார்கள். இந்நிலையில் சில எளிய காரணங்களைச் சொல்லி இம்முறை அரங்குப் பட்டியலிலிருந்து எங்களை நிராகரித்திருக்கிறார்கள். வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைக்காமல், புத்தகக் கண்காட்சி நிர்வாகம் பரிந்துரைக்காக எங்களை அலையவைப்பது தாங்கவியிலாத மனஅயர்ச்சியைத் தருகிறது. ஆனால், ஒவ்வொரு வருடமும் அரங்கைப் பெறுவதற்கு எங்களுடைய செலயல்களைக் காட்டிலும் பரிந்துரைக்காகவே நாங்கள் ஒவ்வொருவராக யாசிக்கவேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் முதலில் நிராகரித்து, சில நண்பர்களின் அழுத்தத்திற்குப் பிறகே இறுதிநாட்களில் அரங்கு முடிவுசெய்து தருவார்கள். இம்முறை அந்த அனுமதிப்பிலிருந்தும் எங்களை விலக்கிவிட்டார்கள்.

இதுவரையில் இருபத்தைந்து தனிநூல்களை தன்னறம் நூல்வெளி வாயிலாக நண்பர்களின் கூட்டுழைப்போடு கொண்டுவந்திருக்கிறோம். சுதந்திரத்தின் நிறம் (கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் வாழ்வுவரலாறு), இன்றைய காந்திகள், வினோபா பாவேயின் ‘கல்வியில் வேண்டும் புரட்சி’, ‘கல்வியில் மலர்தல்’, ஜே.சி. குமரப்பாவின் டிராக்டர் சாணிபோடுமா?, அனுபம் மிஸ்ராவின் ‘குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு’, ‘The ponds are still relevant’, தங்களின் ‘உரையாடும் காந்தி’, ‘தன்மீட்சி’, ‘நலமறிதல்’,நம்மாழ்வாரின் ‘இனி விதைகளே பேராயுதம்’, ‘விதைவழி செல்க’, மசானபு புகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ சாவியின் ‘நவகாளி யாத்திரை’ உள்ளிட்ட புத்தகங்களோடு இன்னும் நிறைய புத்தகங்கள் காந்தியம், கல்வி, சூழல், மருத்துவம் சார்ந்து இதுவரையில் வெளிவந்திருக்கின்றன.

மேலும், ‘தும்பி’ எனும் சிறுவர் மாத இதழை மாதாமாதம் கடந்த மூன்று வருடங்களாக கொண்டுவந்திருக்கிறோம். இதுவரை 33 இதழ்கள் தும்பியில் வெளிவந்திருக்கிறது. ஆனந்த விகடனின் ‘சிறந்த சிறார் இதழுக்கான’ விருது அண்ணன் யூமா வாசுகியின் கைகளால் தும்பிக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னமே கிடைத்தது. முழுவண்ணக் காகிதங்களில் சிறுவர்களுக்கான மாத இதழ் கொண்டுவருவதற்கான பின்னார்ந்த நெருக்கடியை இன்று ஒட்டுமொத்த தமிழ்ச்சூழலும் அறியும். சிறுவர் இதழ்களைத் தொடர்ச்சியாகக் கொண்டுவருதல் என்பது எவ்வளவு சிரமங்களைத் தாங்கியது என்பதை இங்குள்ள ஒவ்வொரு பதிப்பகமும் அறியும். ஆனால், கடந்த 33 மாதங்களாக தும்பி இதழ் தொடர்ச்சியாக வெளிவருகிறது. அதன் வடிவமைப்பு நேர்த்தியை தொட்டுணர்ந்தவர் எவருமே இதன் பின்னான உழைப்பையும் அறிவார்கள்.

புத்தகக் கண்காட்சியில் அரங்கு ஒதுக்கப்படாமைக்கு சொல்கிற காரணங்கள் எதுவுமே எல்லோருக்கும் பொருந்தும் பொதுவிதியாக இல்லாமல் இருப்பதையும் எங்களால் உணரமுடிகிறது. அப்படியானால், மீண்டும் மீண்டும் மனிதர்களை நம்பி நகர்தல் என்ற மனநம்பிக்கையில் தோற்று, அதிகாரத்தை நாடி பரிந்துரை பெற்றுத்தான் அவர்களை அடையவேண்டுமா என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. எங்கள்மீது கடந்த மூன்று ஆண்டும் இல்லாத சந்தேகங்கள் இப்பொழுது எழுந்ததற்கான பின்காரணத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை. வெறும் பெயர்தான் அரங்கு மறுத்த காரணம் என்பதில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. நிறுவனப் பின்புலங்கள் எங்களுக்கு நிறைய இருப்பதாக யாரோ உரைத்த வெற்றுக்காழ்ப்புகளை நம்பி இம்முடிவு அவர்களால் எடுக்கப்பட்டுள்ளது என்பதை அவர்களின் சொற்கள் வாயிலாகவே அறியமுடிகிறது.

ஏதோவொருவகையில் புத்தக அச்சாக்கத்தில் ‘சமரசம்’ என்பதை நாங்கள் தவிர்க்கிறோம். எனவே, புத்தக அச்சாக்கம், புத்தக அட்டை, வடிவமைப்பு, பைண்டிங், அச்சுக்காகிதம், வரி இடைவெளி உட்பட புத்தக உற்பத்தி நேர்த்தியில் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல், காலங்கள் தாண்டி கையிலிருக்கவேண்டிய புத்தகத்துக்கான எங்கள் தரப்பு நியாயத்தை நாங்கள் செய்கிறோம். ‘பிரிண்ட் ஆன் டிமான்ட்’ உள்ளிட்ட முறைகளில் சொற்ப எண்ணிக்கையில் அச்சுப்பதிக்கவும் நாங்கள் முயல்வதில்லை. காரணம், அது புத்தக உருவாக்கத்தின் பரவலாக்க மனநிலையை தடுத்துவிடுவதோடு, எதிர்பார்த்த அழகையும் புத்தகங்களுக்கு வழங்குவதில்லை.

புத்தகக் கண்காட்சி என்பதனை மனிதர்களை சந்திக்கிற கூடுகைக்கான இடமாகவும், மேற்கொண்டு நம்பிக்கையடைந்து பதிப்பின் வழியாக இன்னும் அறத்தை நோக்கி முன்னகர்ந்து போகும் உத்வேகம் தருவதாகவுமே காண்கிறோம். முதல்முறை ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யாவை அழைத்து தும்பி அரங்கைத் திறக்கவைத்தோம். அகவிழி ஓவியரான அவர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு கண்கள் கிடைக்கச் செய்தவர். மேலும், கடந்தமுறை கவிஞர் சுயம்புலிங்கம் அய்யாவை அழைத்து அரங்கைத் திறந்தோம். இத்தகைய சாட்சி மனிதர்கள்தான் எங்களின் பின்புலமே தவிர அவர்கள் கருதும் பிற எதுவுமல்ல. யாசிக்கிற ஒரு கூட்டமாகவே நாங்கள் ஆக்கப்படுகிறோம். அறத்தையும் யாசித்துப் பெறுவதுதான் நெஞ்சறுக்கிறது.

தொடர்ச்சியாக பெரும் நிரூபித்தலுக்குப் பிறகே புத்தகக் கண்காட்சி அரங்குகளை கெஞ்சிப்பெறுவதிலிருந்து எங்களை நாங்களே விலக்கிக்கொள்ள முடிவுசெய்திருக்கிறோம். எதோவொருவகையில் இது இழப்பைத்தரும் முடிவென்றாலும், எங்கள் செயல்நோக்கத்தைப் பாதிக்காத வேறுசில வகைமைகளில் எங்களை தகவமைத்துக்கொள்ள முயல்கிறோம்.

இதுவரை நிகழ்ந்த புத்தகக் கண்காட்சிகள் தந்த நம்பிக்கையில், வாசகர்களிடம் கொண்டுசேர்க்க புதிய புத்தகங்களை இம்முறை கூடுதலான அளவில் பதிப்பு செய்திருக்கிறோம். அதன்பொருட்டு ஒரு கடன்சுமைக்கு எங்களை நாங்களே பழக்கிக்கொண்டிருக்கிறோம். தன்னறம் மற்றும் தும்பியின் அச்சுப்பதிப்பக கடன்சுமையாக இதுவரையில் பதினொரு லட்ச ரூபாய் தொகை நிலுவையாக பெருகிநிற்கிறது. இது வெறும் அச்சக நிலுவைக்கடன். இதுபோக இதற்காக பின்னுழைக்கிற தோழமைகளின் வாழ்வுக்கான தொகையும் இருக்கிறது; ஏதோவொருவகையில், எங்களால் திரட்டமுடிந்த உதவிகளுக்கு அப்பாற்பட்ட பெருஞ்சுமைக்கு வந்தடைந்திருக்கிறோம். எனவே கரங்கொடுக்கும் நண்பர்களுக்கான ஒரு உதவிப்பகிர்வுத் திட்டத்தை முன்வைத்து இந்த இக்கட்டுச்சூழலை கடக்க நினைக்கிறோம். கடக்க இயலுமா என்று தெரியாவிட்டாலும் இதை முயன்றாவது பார்க்கலாம் என்றெண்ணியே இதைத் துணிந்துள்ளோம்.

நண்பர்களும் நலம்விரும்பிகளும் கூடிப்பேசி ஒரு திட்டத்தைச் சொல்லியிருக்கிறார்கள். இதன்படி, 400 வாசகர்கள் தன்னறம் நூல்வெளியின் நம்பிக்கையான நிரந்தர உறுப்பினர்களாக இணைந்து, ரூ 3000 அல்லது ரூ 5000 முன்கூட்டியே செலுத்துவது. அப்படி செலுத்தும் நண்பர்களுக்கு தன்னறம் நூல்வெளியின் சார்பாக ரூ 1000 மதிப்புள்ள புத்தகத்தை கூடுதலாகப் பெறுவது. அதாவது, ரூ 3000 செலுத்தும் நண்பர் ரூ 4000 க்கு புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம் மற்றும் ரூ 5000 செலுத்தும் நண்பர் ரூ 7000 க்கு புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். தொகை செலுத்திய ஒவ்வொருவரும் இரண்டு வருட காலத்துக்குள் தங்களுக்கான புத்தகங்களைப் பெற்றிருப்பார்கள்.

இதை நண்பர்கள் எல்லோரிடமும் நாங்கள் பொதுவேண்டலாக முன்வைக்கிறோம். இதுவரையில் தொடர்ந்து வந்து எங்களுடைய செயல்பாடுகள், இந்த அழுத்தத்தை எங்கள்மீது சுமத்தியிருக்கிறது. நண்பர்களின் ஒவ்வொரு கரத்தினையும் இக்கணம் வேண்டுகிறோம். வெறும் தொகையுதவியாக இல்லாமல், நாங்கள் உருவாகும் புத்தகங்களின் பங்களிப்பில் நண்பர்களும் உறுப்பினராகி உதவுவது, நெருடல் எதுவுமில்லாமல் இச்சமகாலத்தை எங்களைக் கடக்கவைக்கும். தற்போதுள்ள வாசிப்புச்சூழலில், நிரந்தரமான நானூறு பேர்கள் என்பது தொடவியலாத எண்ணிக்கையாக இருந்தாலும், கடந்த இருநாட்களாக அழைத்துப்பேசும் உதிரியான மனிதர்களின் குரல், இந்த இலக்கை நோக்கி எங்களை நகர்த்தியிருக்கிறது.

தன்னறம் மற்றும் தும்பியின் எச்சிறு அசைவாயினும் அது உங்களுடைய தளத்தில் ‘பெயர்தெரிந்த’ பிறகே மிகப்பரவலான கவனத்தை அடைந்திருக்கிறது. எங்களுடைய எல்லா சிறுமுயற்சிகளையும் உங்கள் கரம் தயக்கமின்றி அங்கீகரித்திருக்கிறது. அதற்கான நன்றிக்கடன் வாழ்வுக்குமானது. இந்நிலையில், நாங்கள் எடுத்த இந்தத் தீர்வுமுறையும் உங்கள் தளத்தில் வெளியானால், சிதைந்துகொண்டிருக்கும் எங்கள் நம்பிக்கைகளை நாங்கள் காப்பாற்றிக்கொள்வோம்.

இது வெறும் உதவிகோரல் மட்டுமல்ல, எங்கள் உழைப்பின் மீதான உங்கள் நம்பிக்கையினுக்கு நாங்கள் இன்னும் நேர்மையுற்று முழுமூச்சாக நகர்வதற்கான துணைநிற்றலும் கூட. நெஞ்சகத்து நன்றிகள்!

தும்பி /தன்னறம் வங்கிக்கணக்கு விபரங்கள்:

THUMBI

Current A/c no: 59510200000031

Bank Name – Bank of Baroda

City – ERODE

Branch – Moolapalayam

IFS Code – BARB0MOOLAP (Fifth letter is “Zero”)

UPI ID – “thumbi@upi “

உதவிபகிர விரும்புகிற தோழமைகள் மேற்கண்ட வங்கிக்கணக்கில் தொகை செலுத்திவிட்டு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9843870059 என்ற தொலைபேசி எண்ணிற்கோ உங்களுடைய முழுமுகவரியை அனுப்பவேண்டுகிறோம்.

கரங்குவிந்த நன்றிகளுடன்,

தன்னறம் நூல்வெளி

9843870059

***

முந்தைய கட்டுரைமூன்றுநாட்கள், இரண்டு நூல்வெளியீடுகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 46