‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40

பகுதி ஐந்து : விரிசிறகு – 4

சுரேசர் பரபரப்பாக ஒலைகளை நோக்கினார். நீண்ட நாள் பட்டறிவால் ஓலையின் சொற்றொடர்களை ஒரே நோக்கில் படிக்க அவர் பயின்றிருந்தார். ஓலையின் செய்தியே ஒரு சொல் என ஆனதுபோல. படித்தபடியே ஆணைகளை கூறினார். அவரைச் சூழ்ந்திருந்த கற்றுச்சொல்லிகள் ஓலைகளில் ஆணைகளை பொறித்துக்கொண்டார்கள். ஓலைகளின் மையச் செய்திகளை மட்டுமே அவர்கள் எழுதினர். முகமன்கள் வாழ்த்துக்கள் முறைமைச்சொற்களுடன் அந்த ஓலைகள் முழுதுருக்கொள்ளும். அந்த அறை கைவிடுபொறியின் உட்புறம் என இயங்கிக்கொண்டிருந்தது.

சம்வகை சுரேசரை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். ஆணைகளை இட்டுவிட்டு இயல்படைந்த சுரேசர் நீள்மூச்சுடன் சாய்ந்து அமர்ந்தார். ஏவலன் இன்நீர் கொண்டுவந்து அவருக்கு அளித்தான். அதை அருந்தியபடி மெல்லிய வியர்வையுடன் “இந்தப் பணிகள் இல்லையேல் நான் என்ன ஆவேன் என்று எண்ணிக்கொண்டேன். ஒரு சொல் உண்டு. ஒவ்வொரு பொருளையும் வானம் எண்புறமும் அழுத்திக் கவ்வியிருப்பதனால்தான் அவை வடிவு கொண்டிருக்கின்றன என்று. நான் பணிகளால் வடிவம் கொண்டவன். இப்பணிகள் நின்றுவிட்டால் எண்புறமும் திறந்து உடைவேன்” என்றார். “நன்றல்லவா?” என்றாள் சம்வகை.

அவர் திகைப்புடன் அவளை நோக்கி உடனே நகைத்து “ஆம், மெய். அதுவே வீடுபேறு” என்றபின் “நீ பேசக் கற்றுக்கொண்ட விரைவுபோல் நான் வியப்பது பிறிதொன்றில்லை. உன் உடலுக்குள் இருந்து வாயில் திறந்து இன்னொருவர் எழுந்து வந்துகொண்டிருப்பதுபோல” என்றார். “என் மூதாதையர்” என்று அவள் சொன்னாள். “நீ தேடிப் பார். உன் குருதியில் எங்கோ அசுரர்குடி உண்டு” என்றார் சுரேசர். “அசுரர் சொல்வலர் என்று நூல்கள் சொல்கின்றன. செயலூக்கமே அசுர இயல்பு. அறச்சார்பைக் கடந்து செல்லும் அச்செயலூக்கமே அவர்களை அழிவை நோக்கி கொண்டுசெல்கிறது. பிரஹ்லாதசூத்ரத்தில் ஒரு சொல் உண்டு. அசுரர் என்போர் வேதமில்லா தேவர் என. எளிய சொல். ஆனால் ஆழ்பொருள் கொண்டது. அவர்கள் மானுடரைவிட மேலானவர்கள்.” சம்வகை புன்னகைத்தாள்.

சுரேசர் இயல்பாகவே உரையாடலை துச்சளை நோக்கி கொண்டுசென்றார். “சிந்துநாட்டு அரசி உன்னை எதன்பொருட்டு வரச்சொன்னார்கள் என்பது தெரியவில்லை. இந்நகரில் என்ன நிகழ்கிறது என்பதை குருதிக்கும் குடிக்கும் அப்பால் உள்ள ஒருவரிடமிருந்து கேட்டு தெரிந்துகொள்ளும் விழைவிருக்கலாம். இங்கிருந்து அவர்களுக்கு ஒற்றுச்செய்திகள் சென்றுகொண்டுதான் இருந்திருக்கும். ஆனால் அவை எல்லாமே தெளிவற்ற செய்திகளாகவே இருந்திருக்கும். ஏனெனில் முன்பிருந்த விரிவான ஒற்றர் அமைப்பு இன்றில்லை. சிந்துநாட்டில் என்ன நடக்கிறது என்பதுகூட நமக்கு தெரியவில்லை. பிற அனைத்தையும் ஒருங்கிணைத்துவிட்டோம். ஆனால் ஒற்றர் அமைப்பை ஒருங்கிணைக்க இன்னும் நெடும்பொழுது ஆகும் என்று தோன்றுகிறது” என்றார்.

“நான் என்ன கூற வேண்டும்?” என்று சம்வகை கேட்டாள். “அவர்களிடம் எதையும் மறைக்கவேண்டியதில்லை. இது அவர்களின் அரசு. நம் ஐயங்கள், குழப்பங்கள், நிலையின்மைகள் என எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்லலாம். அவர்கள் கூறுவதென்ன என்பதை கேட்டுக்கொள்க!” என்று சுரேசர் சொன்னார். “ஆனால் அந்த முதல் மைந்தர் சற்றே சிக்கலானவர். அவருள் ஜயத்ரதன் வாழ்கிறார். அவருள் ஒருபோதும் அவ்வஞ்சம் அணைய வாய்ப்பில்லை. அது நமக்கு நலம் பயப்பதும் அல்ல.” சற்றே எண்ணி “ஆனால் அதையும் நாம் கருதவேண்டியதில்லை. அதை துச்சளையே அறிந்திருப்பார்” என்றார்.

சம்வகை “அவர்கள் நம்மை நம்பி வந்திருக்கிறார்கள்” என்றாள். “அதனாலென்ன? அது அரசவாழ்க்கையில் இயல்பானதே” என்றார் சுரேசர். “தந்தை மைந்தரில் வாழ்வது என்றுமுள்ளது. கொடிய தந்தை மைந்தரில் மேலும் பேருருக் கொள்கிறார். விசைகொண்ட வஞ்சங்களும் விழைவுகளும் அத்தனை எளிதில் மண்நீங்குவதில்லை.” சம்வகை பெருமூச்சுவிட்டு “அரசி ஆழ்ந்த துயருற்றிருக்கிறார்” என்றாள். “இயல்புதானே? ஆனால் அத்துயர் அவர் கணவரின் பொருட்டு அல்ல. தன் தமையனின் பொருட்டுகூட அல்ல. அவர்கள் பொருட்டு துயருறுபவர் அல்ல சிந்துநாட்டு அரசி” என்றார் சுரேசர்.

“அவர் தன் தமையன் கொல்லப்பட்ட பின்னரும்கூட இவ்வண்ணம் இங்கு வந்தது நன்று. நம் அரசருக்கு அளிக்கப்பட்ட ஒரு நல்லேற்பு, ஒரு வாழ்த்து என்று இதை கருதலாம்” என்று சம்வகை சொன்னாள். சுரேசர் “ஆம், அவர்கள் இங்கு வருகிறார்கள் என்ற செய்தியைக் கேட்டதுமே நானும் அவ்வாறுதான் எண்ணினேன். அரசரும் முகம் மலர்ந்து நன்று, தெய்வங்கள் நம்மிடம் அளியுடன்தான் இருக்கிறார்கள் போலும் என்றார். இவ்வளவு கடந்த பின்னரும்கூட துரியோதனன் முறை மீறி கொல்லப்பட்டதாகவும் கௌரவர்கள் உடன்பிறந்தார் கையால் கொல்லப்பட்டது பிழையே என்றும் சூதர்கள் நாவில் சொல் திகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இது அச்சொல்லில் இருந்து ஒரு சிறு காப்பு” என்றார்.

சம்வகை “ஆனால் இங்கு வந்திருக்கும் புதிய குடிகளுக்கு அவை ஒரு பொருட்டல்ல. அவர்கள் குருக்ஷேத்ரப் போரை தங்களுக்குரிய வகையில் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாடலைக் கேட்கையில் அங்கு நிகழ்ந்தது போரல்ல, ஒரு மாபெரும் விளையாட்டு என்னும் எண்ணம் எனக்கும் ஏற்படுகிறது” என்றாள். சுரேசர் “ஆம், ஆனால் எவ்வண்ணம் இருப்பினும் இந்த வசை அனைத்தும் இங்கு எவ்வண்ணமோ சொல்லில் திகழும். இந்த மக்கள் இந்நகருடனும் இதன் தொல்வரலாறுடனும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பின்னர் இங்குள்ள அறம், அறம் மீறல் ஆகியவற்றைப்பற்றி எண்ணத்தொடங்குவார்கள். அப்போது மாமன்னர் துரியோதனன் மீண்டும் சொல்லில் உயிர்த்தெழுவார்” என்றார்.

“நாம் செய்வதற்கொன்றே உள்ளது” என்று சம்வகை சொன்னாள். “இதோ இங்கு அவர் தங்கை வந்து நம்முடன் இருக்கிறார். குருதியுறவு அகலவில்லை. மாமன்னர் துரியோதனனுக்கு உரிய முறையில் இங்கே நிறைவுபூசனைகள் செய்வோம். நடுகல் நாட்டுவோம். அதை சிந்துநாட்டரசி துச்சளை முன்னின்று செய்யட்டும். நம் அரசரும் தம்பியரும் நிகழ்த்தட்டும்.” சுரேசர் முகம் மலர்ந்து “அரிய எண்ணம்… நான்கூட இவ்வண்ணம் எண்ணவில்லை. இதை செய்தாகவேண்டும். இதன்பொருட்டே சிந்துநாட்டு அரசி இங்கே வந்தார் போலும். நன்று!” என்றார். சம்வகை புன்னகைத்தாள். “நீ இந்நாட்டையே ஆளலாம்” என்றார் சுரேசர். சம்வகை சிரித்துக்கொண்டு எழுந்தாள். “அரசி ஓய்வெடுத்திருக்கக்கூடும்” என்றாள்.

சுரேசர் “நீ அவரிடம் சென்று பேசு. அரசி உளம்விரிந்தவர். மானுடர் அனைவரையும் ஒன்றெனப் பார்ப்பதும், ஒவ்வொருவரிலும் தனிஅன்பு செலுத்துவதும் அவருக்கு குல முறையாக கிடைத்த செல்வம். அவர் தமையர்கள் அவ்வண்ணம் இருந்தார்கள். தந்தை கிளையென கைவிரித்த ஆலமரமெனத் திகழ்ந்தவர். அரசி இங்கு வந்தது பேரரசர் திருதராஷ்டிரரே வந்ததுபோல” என்றார். சம்வகை அகத்தே மெல்லிய உணர்ச்சி அசைவுக்கு ஆளானாள். அதை மறைக்க தலையைத் திருப்பி சாளரத்தை நோக்கினாள். “நன்று, செல்க! செய்தியை எனக்குத் தெரிவி” என்று சுரேசர் சொன்னதும் தலைவணங்கினாள்.

 

சம்வகையை அழைத்துச் செல்ல துச்சளையின் ஏவலன் நின்றிருந்தான். செல்லலாம் என்று அவள் கைகாட்டியதும் அவன் அவளை அழைத்துச்சென்றான். அவள் தன் காலடிகள் ஓங்கி ஒலிக்க அரண்மனையின் இடைநாழியினூடாக நடந்தாள். மரப்பலகைத் தளத்தில் தேய்ந்தவையும் விரிசலிட்டவையுமான பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டு புதிய பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன. புதிய பலகைகளும் பழைய பலகைகளும் ஒன்றெனத் தெரியும்படி அவற்றின் மேல் மரவுரி வண்ண அரக்கு பூசப்பட்டு மெருகூட்டப்பட்டிருந்தது. தேய்ந்த செவ்வண்ணப் புரவியின் முடிப்பரப்பு என அது மின்னிக்கொண்டிருந்தது. தூண்களின் வெண்கலப் பட்டைகளும் குமிழ்களும் புதிதாக மாற்றப்பட்டிருந்தன. அவை பொன்னெனச் சுடர்ந்தன. சுவரிலிருந்த அனைத்து ஓவியங்களும் மீண்டும் தீட்டப்பட்டிருந்தன, அனைத்துத் திரைச்சீலைகளும் புதிதாக மாற்றப்பட்டிருந்தன. ஓரிரு நாட்களுக்கு முன்பு அவள் உள்ளே நுழைந்திருந்தபோது இருந்த அரண்மனை திரை ஒன்று சுருட்டி அகற்றப்பட்டு பிறிதொன்று தோன்றியதுபோல அங்கே அமைந்திருந்தது.

அவள் அங்கு நிகழ்ந்திருந்த ஒவ்வொரு மாற்றத்தையாக பார்த்துக்கொண்டு சென்றாள். அவளுடைய காலடிகள் சீரான அழுத்தத்துடன் ஒலித்தது அவளுக்கு நிறைவளித்தது. அது அவளுக்கு மிடுக்கையும் தயக்கமின்மையையும் அளித்தது. அரண்மனையின் ஒவ்வொரு புதிய இடமும் மெல்ல எழுந்துவந்து அவளிடம் பணிந்து தன்னைக் காட்டி பின்சென்றது. முன்பு வெறும் மரப்பரப்பாக இருந்த சுவர்களின்மேல் சுண்ணமும் அரக்கும் பூசப்பட்டு புதிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்களில் பல அப்போதும் வரைந்து முடிக்கப்பட்டிருக்கவில்லை. சில ஓவியங்களுக்கு அருகே மூங்கில் சட்டங்களின் மேல் அமர்ந்து ஓவியர்கள் அவற்றை வரைந்துகொண்டிருந்தனர்.

அர்ஜுனனின் திசைப்பயணங்கள். அவன் நாகருலகில் தலைகீழாக தொங்கிக்கிடந்தான். மூங்கில்கூட்டங்களின் மேல் பறந்தான். நீருள் அலையும் வேர்கள் நடுவே மீன்களுடன் நீந்தினான். இளமையழியாத பார்த்தன். நடனமிடும் பெண் உடல் கொண்டவன். நாகமென கைகள். யோகியரின் விழிகள். இரக்கமற்ற உறுதிகொண்ட உதடுகள். அர்ஜுனனை அவன் உச்சகணங்களில் மட்டுமே கண்ட ஒருவர் வரைந்த காட்சிகள் அவை. தூரிகைகளை வலக்கையில் ஏந்தி வண்ணக்கிண்ணங்களின் தொகையை வயிற்றில் கட்டிக்கொண்டபடி வரைந்தனர். வண்ணம் தொட்ட நாக்குகள் என தூரிகைத்தோகைகள் மெல்ல மெல்ல ஓவியப்பரப்பை நக்கி குழைந்து நெளிந்தன. அந்தத் தொடுகையின் மென்மை விழிகளால் உணர்கையிலேயே மெய்ப்பு கொள்ளச்செய்தது.

வண்ணம் அத்தூரிகையிலிருந்து வரவில்லை, காற்றிலிருந்து, இன்மையிலிருந்து எழுகிறது எனத் தோன்றியது. வண்ணங்கள் வடிவங்களாக ஆயின. புடைப்புகளும் விரிசல்களும் இணைவுகளும் கரவுகளும் குழைவுகளுமாயின. வண்ணங்களே ஒளியும் இருளும் ஆயின. வண்ணங்களில் இருந்து புல்வெளிகள், மரச்செறிவுகள் உருவாயின. அர்ஜுனனும் வண்ணங்களின் கலவையே. வண்ணங்களாக அனைத்தையும் கண் அள்ளிக்கொள்கிறது. வண்ணங்கள் என நினைவு சேமித்துக்கொள்கிறது. வண்ணங்களென வெளிப்படுகிறது. ஒன்றும் குறைவதில்லை. எனில் வெளியே விரிந்திருக்கும் இவையனைத்தும் வண்ணங்கள் அன்றி வேறில்லை. வண்ணங்களே ஒளியென்றாகின்றன. ஒளியே வண்ணமென்றாகிறது. எனில் ஒவ்வொருநாளுமென கதிரவன் வரைந்தெடுக்கும் ஓவியம் இப்புவி. எந்நூலில் உள்ள வரி? அர்க்கபுராணம். அதிலா? ஆம், அதிலுள்ள வரிதான் இது.

துச்சளையின் அறைவாயிலில் அவள் நின்றாள். ஏவற்பெண்டு உள்ளே சென்று அவள் வரவை அறிவித்தாள். கதவிலிருந்த அனைத்து பித்தளைக் குமிழ்களிலும் பொன்னொளிச் சுழிகள். அவற்றில் அவளுடைய உருவம் கருத்துளியென சுருண்டு நெளிந்தது. அவள் தன் கவசமணிந்த உருவை அதில் பார்த்தாள். அது எப்போதும் அவளை வரையறுத்தது. ஆற்றவேண்டியதென்ன, உரைக்க வேண்டியதென்ன என்பதை அதுவே முடிவு செய்தது. அவள் பெருமூச்சுவிட்டாள். கவசங்களின் பளபளப்பில் அச்சூழல் வளைந்து நெளிந்து தெரிந்தது. அவள் அச்சூழலை தன்மேல் தொகுக்கிறாள். அந்த உலோகச் சுழி அவளை அச்சூழலுடன் மீண்டும் தொகுக்கிறது.

கதவைத் திறந்து ஏவற்பெண்டு தலைவணங்கி அவளை உள்ளே அனுப்பினாள். சம்வகை அறைக்குள் சென்று தலைவணங்கி முகமனுரைத்தாள். துச்சளை தன் பயண ஆடையை அகற்றி வெண்பட்டாடை அணிந்திருந்தாள். தாழ்வான மஞ்சத்தில் இரு உருளைத் தலையணைகளை அணை வைத்து கால் நீட்டி அமர்ந்திருந்தாள். அவளருகே இன்னொரு மஞ்சத்தில் சுகதன் அமர்ந்திருந்தான். சுரதன் அப்பால் சாளரத்தோரம் நின்றிருந்தான். அவளிடம் “முதலில் அந்தக் கவசங்களை கழற்று” என்றாள். சம்வகை சற்றே தயக்கத்துடன் “அரசி!” என்றாள். துச்சளை இனிய புன்னகையுடன் “இது அரசமுறை சந்திப்பு அல்ல. உன்னை அக்கவசத்தில் பார்ப்பது எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இப்போது அதிலிருந்து உன்னை வெளியே கொண்டுவர விரும்புகிறேன்” என்றாள்.

“கவசங்களை இப்போது கழற்றுவதென்றால்…” என்று மீண்டும் சம்வகை தயங்க “கழற்றடி” என்று செல்லமாக உரத்த குரலில் துச்சளை சொன்னாள். சம்வகை தன் கால்கவசங்களை கழற்ற குனிய “கழற்றுங்களடி” என்று ஏவற்பெண்டுகளை நோக்கி துச்சளை சொன்னாள். இரு ஏவற்பெண்டுகள் வந்து அவளுடைய கவசங்களின் தோல்பட்டைகளை அவிழ்த்து அவற்றை எடுத்து அப்பால் வைத்தனர். மார்புக்கவசங்களையும் தோளிலைகளையும் எடுத்து அடுக்கி வைத்தனர். சுகதன் உரக்க நகைத்து “ஆமையின் ஓட்டை அகற்றுவதுபோல” என்றான். துச்சளை அவனைப் பார்த்தபின் சிரித்து “சிந்துநாட்டில் ஆமையும் சிப்பியும் முதன்மை உணவுகள் என்று அறிந்திருப்பாய்” என்றாள்.

சம்வகை புன்னகைத்து “ஆம்” என்று சொன்னாள். கவசங்கள் கழற்றப்பட்டதும் அவள் முகம் நாணம் கொண்டது. சுகதன் “ஓடு நீக்கப்பட்ட பிறகு ஆமை உள்ளே துடித்துக்கொண்டிருக்கும்” என்றான். “ஆமைக்கு வலி கிடையாதென்பார்கள்” என்று துச்சளை சொன்னாள். “ஆகவே அதை உயிருடனேயே ஓடு நீக்குவார்கள். உள்ளே அது பிறிதொரு உயிர்போல தசை அதிர்வுடன் இருக்கும்.” சம்வகை உதடுகளை அழுத்தியபடி நிலம் நோக்கிக்கொண்டு தன் கவசங்களை நீக்கினாள். தன் ஆடையை சீரமைத்துக்கொண்டாள். அவளுக்கு சற்று மூச்சுத் திணறியது. “உன் நாணம் அழகாக உள்ளது, பெண்ணாகிவிட்டாய்” என்றாள் துச்சளை. சம்வகை மீண்டும் தன் பெரிய கால்களை பார்த்தாள்.

“அமர்க!” என்று அருகிலிருந்த பீடத்தை துச்சளை காட்டினாள். “அரசி, நான் எக்குலம் எந்நிலை என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றாள் சம்வகை. “அதை அறியவேண்டியது என் பொறுப்பு. என் ஆணை இது!” என்றாள் துச்சளை. சம்வகை அவள் அருகே அமர்ந்துகொண்டாள். “உன் தந்தையை நான் நினைவுகூர்கிறேன்” என்று துச்சளை சொன்னாள். “பல முறை யானைக்கொட்டிலுக்குச் சென்று அவருடம் விளையாடியிருக்கிறேன். என்னை யானைஏற்றம் பயிற்றுவித்தவர்களில் அவரும் ஒருவர். இனியவர். நீ அவர் மகள் என சற்றுமுன்னர்தான் அறிந்தேன். உன்னைக்கூட நான் கண்ட நினைவிருக்கிறது. உன் அன்னை கைக்குழவியாக உன்னை ஒருமுறை அங்கே கொண்டுவந்தாள்.” சம்வகை ஆடையை கால் நடுவே சேர்த்து அமைத்தாள்.

துச்சளை அவளுக்கு இன்நீர் கொண்டுவர ஆணையிட்டாள். அது ஓர் அரசமுறைமை என்றும் இணைக்குலங்களுக்கே அது அளிக்கப்படும் என்றும் சம்வகை அறிந்திருந்தாள். சேடியர் அயல்நாட்டவர் ஆகையால் அவர்களிடம் அது வியப்பெதையும் உருவாக்கவில்லை. இன்நீர் வந்தது. அதை துச்சளையே குடுவையில் ஊற்றி அளித்தாள். சம்வகை துச்சளையின் கைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். மணிக்கட்டும் விரல்தொகையும் மிகச் சிறியவை. குழவியருக்குரியவை. எப்போதும் மெல்லிய வியர்வை ஈரம் கொண்டவை.

துச்சளை “மெய்யாகவே இந்த அரண்மனையை அணுகுந்தோறும் நான் இளமைக்கு மீண்டுகொண்டிருந்தேன். இப்போது சிறுமியாகிவிட்டேன்” என்றாள். அவள் குரல் மிக இளமையானது என்று சம்வகை எண்ணினாள். தன் குரல் மயிலகவல்போல ஆழ்ந்து ஒலிப்பது. துச்சளையின் குரலை மட்டுமே கேட்பவர்கள் அவளை சிறுமி என்றே எண்ணக்கூடும். “எப்போதும் அப்படித்தான். உள்ளே வந்து என் அன்னையை சந்திக்கும்போது இளம் பெண்ணாக இருப்பேன். அதன் பின் தந்தையைச் சென்று சந்திக்கும்போது மகவாகிவிடுவேன். அவருடைய கைகள் என் உடலைத் தொட்டு அலையத் தொடங்கும்போது கைக்குழந்தையாகி அவர் மடியில் கிடப்பேன்.”

அவள் குரல் குழைந்தது. “உண்மையில் கைகளால் முத்தமிடுவதென்பதை அவர் தொடும்போதுதான் உணர்வேன்” என்று சொன்னபோது அவள் ஒரு கணம் விம்மியதுபோல் தோன்றியது. உணர்வெழுச்சியுடன் முகம் சுருங்கி கண்கள் நீர் கோக்க “இவ்வரண்மனை அவர்களால் நிறைந்திருந்தது. எந்தையும் அன்னையும் மூத்தவர்களும் அவர்களின் மைந்தர்களும். இனி ஒருபோதும் அவர்களை பார்க்க இயலாது. வெவ்வேறு திசைகளில் அவர்கள் சென்று மறைந்துவிட்டிருக்கிறார்கள்” என்றாள்.

அவளால் உணர்வுகளை ஆள முடியவில்லை. உதடுகளைக் கடித்து மூச்சை இறுக்கிக்கொண்டாள். அதை மீறி மெல்லிய விம்மலோசை எழுந்தது. சாளரத்தருகே நின்ற சுரதன் ஒவ்வாமையுடன் சற்றே அசைந்தான். சுகதன் “அன்னை இங்குதான் அழுகிறார். சிந்துநாட்டில் கண்ணீர்விடவே இல்லை. தந்தை மறைந்த செய்தி வந்தபோதுகூட உறுதியுடனேயே இருந்தார்” என்றான். துச்சளையின் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. அவள் தன் சிறிய கைகளால் முகத்தை மூடிக்கொள்ள விரல்களை மீறி விழிநீர் கசிந்தது. ஆனால் மூச்சொலிகளுடன், விசும்பல்களுடன், செருமல்களுடன் அவள் தன்னை நிலைநிறுத்திக்கொண்டாள்.

சம்வகை அப்பேச்சை மாற்றும்பொருட்டு “இங்கு இழப்பில்லாதவர்கள் எவருமில்லை, அரசி” என்றாள். “ஆனால் இந்நகர் அனைத்திலுமிருந்து மீண்டிருக்கிறது. இதன் தெருக்களை பார்த்திருப்பீர்கள். இன்று புதிதென நிகழ்ந்துவிட்டிருக்கிறது.” துச்சளை “ஆம், இந்த வரவேற்பு என்னை முதலில் நிலைகுலைய வைத்தது. கைம்பெண்களுக்கு அரசமுறைமை சார்ந்த வரவேற்பு இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் இவ்வரவேற்பொலி என்னை உளம் நிறையச் செய்தது. இது குடிகளின் வரவேற்பு அல்ல. இந்நகரே என்னை வரவேற்பதுபோலத் தோன்றியது. யானையை அணுகும்போது அது நம்மை அறிந்திருந்தால் எழுப்பும் ஒலி அது. யானை நம்மை அறிந்திருக்கிறது என்பது ஒரு வாழ்த்து” என்றாள்.

அந்த உரையாடல் எங்கோ சுற்றிக்கொண்டிருந்தது. அவள் சொல்ல வந்த எதையோ அணுகமுடியாமல் இருக்கிறாள். சம்வகை அது என்ன என்று எண்ணிப்பார்த்தாள். தன்னை ஒரு தூது என்றே துச்சளை அழைத்திருக்கக்கூடும் என அப்போது தெளிவுகொண்டாள். அது பெண்ணுக்குப் பெண் எனும் பேச்சு அல்ல. அரசமைந்தர் உடனிருப்பதனால் அது அரசப்பேச்சேதான். அதை ஏன் தன்னிடம் சொல்கிறார்? அதைச் சொல்லவேண்டியவர் சுரேசர். ஆனால் அவரிடம் அவருக்கு ஒரு தயக்கம் இருக்கலாம். அந்தணர்களே அரசமந்தணத்திற்கு உகந்தவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் நிலைபாட்டில் வாளென கூர்கொண்டவர்கள்.

என்னை எதன்பொருட்டு தெரிவுசெய்தார்? இது எனக்கு அளிக்கப்படும் பெருமதிப்பு என நான் எண்ணக்கூடும் என எதிர்பார்க்கிறார் போலும். இதன்பொருட்டு நான் மிகையுணர்ச்சி கொள்ளக்கூடும். இச்செயலை தலைசூடி செய்ய முற்படக்கூடும். அந்த விசையில் என்னையறியாமலேயே இவர்களுக்கு உகந்த நிலை கொள்ளக்கூடும். ஆற்றலற்றவர்களே தங்கள் தரப்பை மிகையாக நம்பி அதை சார்ந்திருப்பார்கள். பெண்கள் வெற்றுறுதி கொள்வதன் உட்பொருள் அதுதான். அவள் தன்னுள் புன்னகைத்துக்கொண்டாள். அது முகத்தில் வெளிப்படாமல் அமர்ந்திருந்தாள்.

துச்சளை “இங்கே வந்தபின் நான் விடுதலை அடைந்தேன் என்பதை உணர்கிறேன். என் அறை இது. என் நீராட்டறை. என் ஆடைகள். முழுமையாகவே மீண்டுவிட்டேன். ஏதோ சில எஞ்சியிருக்கின்றன என்று உணர்கிறேன். அதன்பொருட்டு உன்னிடமும் அமைச்சர் சுரேசரிடமும் கடன்பட்டிருக்கிறேன்” என்றாள். “இது தங்கள் அரண்மனை, அரசி” என்றாள் சம்வகை. அதை பலமுறை சொல்லிவிட்டோம் என உணர்ந்தாள். சுரதன் பொறுமையிழந்து மெல்ல அசைந்தான். சுகதன் அவனை திரும்பி நோக்கினான். தன் உடல்மேலும் விழிமேலும் முழுக் கட்டுப்பாட்டுடன் அந்த மெல்லிய கலைவை நோக்காமல் அமர்ந்திருந்தாள் சம்வகை.

துச்சளை மைந்தனின் பொறுமையிழப்பால் சற்று எரிச்சல்கொண்டவளாகத் தோன்றினாள். “அங்கே இளைய பாண்டவரின் வெற்றிக்காட்சிகள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் போர்க்களக் காட்சிகள் வரையப்பட்டிருக்குமோ என நான் வரும்போது பதற்றம் கொண்டேன். நல்லவேளையாக இல்லை” என்றாள். “அரசரின் ஆணை அது. இவ்வரண்மனையிலோ நகரிலோ எங்கும் போர்க்களக் காட்சிகள் இருக்காது. போர் குறித்த எந்த அடையாளமும் எஞ்சாது. போர் குறித்த பரணிப்பாடல்களைக்கூட நகரில் எவருமறியாமல் தனி அவைகளிலேயே பாடுகிறார்கள்” என்றாள். சுரதன் “ஆனால் பாரதவர்ஷம் முழுக்க அதையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். அவள் அவன் விழிகளை ஏறிட்டுப் பார்த்தாள். அதிலிருந்த காழ்ப்பு அவளை அச்சுறுத்த அவள் விழிதிருப்பிக்கொண்டாள். “ஆம், ஆனால் அஸ்தினபுரி அப்போரை மறந்துகொண்டிருக்கிறது” என்றாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை.

துச்சளை “அந்த ஓவியங்களெல்லாம் இந்த அரண்மனைமேல் போர்த்தப்பட்ட அணிச்சால்வைகள் என்று தோன்றியது” என்றாள். பின்னர் “ஆனால் அது நன்று. துயர்கொள்கையில் நாம் நல்லாடையும் அணிகளும் அணியவேண்டும் என அன்னை சொல்வதுண்டு. ஆடைகளும் அணிகளும் நம் உளநிலையை மாற்றிவிடுகின்றன என்பதை நானே கண்டிருக்கிறேன். அஸ்தினபுரி களைந்து வீசிவிட்டுச் செல்ல சுமைகள் ஏராளமாக உள்ளன” என்றாள். சுரதன் “ஆனால் அழிக்கப்பட்ட ஓவியங்கள் பிரதீபரும் சந்தனுவும் அடைந்த வெற்றிகளைப் பற்றியவை” என்றான்.

சம்வகை அவனை உறுதியான விழிகளுடன் ஏறிட்டு நோக்கி “ஆம், இனி இது பாண்டவர்களின் அரண்மனை” என்றாள். அவர்களின் விழிகள் சந்தித்தன. அவன் நோக்கை திருப்பிக்கொண்டான். தனக்குள் என “குருக்ஷேத்ரப் போரை தவிர்ப்பது அதில் கொல்லப்பட்டவர்களை தவிர்ப்பதற்கும் கூடத்தான் இல்லையா?” என்றான். சம்வகை “ஆம், அதுவும் உண்மையே” என்றாள். “ஆனால் வெற்றியை எவரும் உதறமுடியாது. வெற்றி என்ற ஒன்று இருக்கும்வரை வென்றவர்களுடன் வெல்லப்பட்டவர்களும் எஞ்சுவார்கள்” என்றான். சம்வகை “ஆம்” என்றாள்.

முந்தைய கட்டுரைநாளை மறுநாள் சென்னையில்..
அடுத்த கட்டுரைவிழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்